என் உயிரை வாங்கிட்டு இருக்குறீங்க…!!! வேளாண் அதிகாரிகளுக்கு ஐ.ஏ.எஸ் “டோஸ்”

உங்களால முடியலேன்னா என்கிட்ட சொல்லிருங்க… நான் பார்த்துக்குறேன்… ஜே.டி.ஏ பொறுப்புல இருந்து வெளியில் வந்துருங்க. ரிசைன் பண்ணிருங்க… ஒவ்வொருத்தரும் 25 ஆயிரம் எண்ட்ரீஸ் போட்டிருக்கனும்… என்னங்க முட்டாள் மாதிரி பேசிட்டு இருக்குறீங்க… 320 வில்லேஜ்ல 80 வில்லேஜ் மட்டும் கணக்கு எடுத்துட்டு லொட்டு… லொசுக்குனு கணக்கு சொல்லிட்டு இருக்கிறீங்க…. இவ்வாறு தரம்தாழ்ந்த வார்தைகளால் திட்டுவது ஒரு சாதாரண கடைநிலை ஊழியரை அல்ல… திட்டுவதும் கடை உரிமையாளரும் அல்ல…. திட்டு வாங்குவது விவசாயத்துறையின் கீழ் செயல்படும் தோட்டக்கலைத் துறை மாவட்ட இணை இயக்குனர்… திட்டுவதோ தோட்டக்கலைத்துறையின் இயக்குனரான ஐஏஎஸ் அதிகாரி முருகேஷ்…

மாவட்டம் முழுவதும் உள்ள தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர்களுக்கான வீடியோ கான்பரன்ஸ் ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட அளவிலான அந்தஸ்துல்ல பதவி வகிக்கும் அதிகாரிகளை தரக்குறைவாக திட்டிய இந்த வீடியோவை மீட்டிங்கில் அர்ச்சனை வாங்கிய ஒரு அதிகாரி வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டு பழிதீர்த்துக்கொண்டார் பாதிக்கப்பட்ட அதிகாரி. இதுபோன்று தரக்குறைவாக மரியாதை இல்லாமல் பேசும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்கின்றனர் அரசு ஊழியர்கள்…

மத்திய அரசு விவசாய நிலங்கள், பயிர் வகைகள், விவசாயிகளின் ஆண்டு வருமானம், கடன் மற்றும்காப்பீடு உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் டிஜிட்டல் முறையில் கணக்கெடுத்து துறை இணையதளத்தில் முழு விவரங்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. வழக்கமாக இதுபோன்ற பணிகளை வருவாய்த்துறையினர் மேற்கொள்வது வழக்கம். ஆனால் விவசாயத்துறை தொடர்பான பணிகள் என்பதால் வேளாண்மை துறை அதிகாரிகள் இப்பணியை மேற்கொள்ள வேண்டும் என தலைமைச் செயலர் உத்தரவிட்டுவிட்டார்.

இதனால் வேளாண்மை துறை, இதன் கீழ் செயல்படும் தோட்டக்கலைத்துறை உதவி அலுவலர்கள் இப்பணியை மேற்கொண்டு வருகின்றனர். இப்பணிகளை தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர்கள் கண்காணித்து விவரங்களை விரைந்து பெற்று விவசாயத்துறைக்கு அனுப்ப வேண்டும் என விவசாயத்துறை செயலர் உத்தரவிட்டதன்பேரில் தோட்டக்கலைத்துறை ஆணையர் முருகேஷ் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளார்… இந்த டிஜிட்டல் பதிவு முறைக்கு குறிப்பிட்ட நாளில் இத்தனை பதிவுகள் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும் என இலக்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் வேளாண் அலுவலர்கள், உதவி அலுவலர்கள் இந்த டிஜிட்டல் கணக்கெடுப்பு பணியில் ஆர்வம் காட்டாததால் இலக்கை முடிக்க முடியவில்லை.

இந்த டிஜிட்டல் திட்ட பதிவு ஏன் தாமதமாகிறது என கண்டறிய தோட்டக்கலைத்துறை இயக்குனரான ஐஏஎஸ் அதிகாரி முருகேஷ் கடந்த வாரம் அனைத்து மாவட்ட வேளாண்மைத்துறை இணை இயக்குனர்களின் வீடியோ கான்பரன்ஸ் ஆலோசனை கூட்டத்தை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி நடத்தியுள்ளார். இதில் ஒவ்வொரு மாவட்டத்திலும் எத்தனை சதவீத டிஜிட்டல் பதிவு பணிகள் நடந்துள்ளது என இணை இயக்குனர்களிடம் கேட்டபோது நிர்ணயிக்கப்பட்ட இலக்கான 25 ஆயிரத்துக்குப் பதிலாக 2ஆயிரம், 3 ஆயிரம் என மிக குறைந்த அளவிலான பதிவுகள் மட்டுமே நடந்திருப்பதாக பெரும்பாலான இணை இயக்குனர்கள் பதில் அளித்ததால் கடும் டென்ஷன் அடைந்த இயக்குனர் முருகேஷ் நிதானம் இழந்து இணை இயக்குனர்களை திட்டத் தொடங்கிய காட்சிகள் தான் இவை.

உங்களால் முடிக்க முடியவில்லை என்றால் சொல்லிவிடுங்கள். இணை இயக்குனர் பொறுப்பில் இருந்து வெளியே ரிசைன் பண்ணிட்டு சென்றுவிடுங்கள்.்நான் பார்த்துக் கொள்கிறேன் என பெண் அதிகாரியிடம் சீறினார். நாளைக்குள் முடித்துவிடுகிறேன் என பெண் இணை இயக்குனர் பம்மிக்கொண்டே பதில்கூறியதும் “நாளைக்கு ஒவ்வோரு இணை இயக்குனரும் 25 ஆயிரம் பதிவுகளை முடித்திருக்க வேண்டும். 2 ஆயிரம், 3 ஆயிரம், 4 ஆயிரம்னு என் முன்னாடி காட்டிகிட்டு நிக்காதீங்க… டபுள் டிஜிட் கூட வர முடியலேன்னா என்ன வேலை பாக்குறீங்க?

அடுத்ததாக ராணிப்பேட்டை இணை இயக்குனரை பேச இயக்குனர் அழைத்ததும் ” நேத்து 4 ஆயிரம் பிளான் பண்ணி வச்சிருந்தோம் சார்.. என்றதும் இயக்குனர் முருகேஷ், டபுள் டிஜிட்தாங்க வேணும். வெறும் 80 வில்லேஜ் மட்டும்தான் கவர் பண்ணிருக்குறீங்க… மொத்தம் எத்தனை வில்லேஜ் ராணிப்பேட்டையில் உள்ளது என கேட்டதும் இணை இயக்குனர் 326 வில்லேஜ் என்றார். 326 வில்லேஜ்ல 80 வில்லேஜ்தான் கவர் பண்ணியிருக்குறீங்க என கேட்டதும் “கொஞ்சம் ஹெவி ரெயின் பெய்துகொண்டிருந்த்தாக இணை இயக்குனர் அசட்டையான பதிலை கூறியதால் உச்சகட்ட கோபத்திற்கே சென்றுவிட்டார் இயக்குனர் முகேஷ்.

” என்னங்க முட்டாள்தனமா பேசிட்டு இருக்குறீங்க… திரும்ப திரும்ப ஹெவி ரெயின்னு சொல்லிட்டு இருக்குறீங்க…்போன வருஷம் மழையிலதான நாம செய்தோம்… குடையைப் புடிச்சுட்டு குழந்தைங்க எல்லாம் போய் நிக்கலியா? இல்லைனா ஏஓஎஸ்-ஐ (உதவி அலுவலர்கள்) வீடுகளுக்கு போகச் சொல்லுங்க… 320 வில்லேஜ்ல 80 வில்லேஜ் மட்டும் கணக்கெடுத்துட்டு வாய் பேசிட்டு இருக்குறீங்க… 2 ஆயிரம் எண்ட்ரி மட்டும் போட்டுட்டு்லொட்டு லொசுக்குனு கதை சொல்லிட்டு இருக்குறீங்க? நான் திரும்பத் திரும்ப சொல்றேன்… நீங்க ஈட்டிங் தி டேஸ்… நொண்டிச் சாக்கு சொல்றீங்க… நாக்குல தின்னுட்டு இருக்குறீங்க பன்னி மாதிரி… என் உயிரை வாங்கிட்டு இருக்குறீங்க…. போன சனிக்கிழமைல இருந்து சொல்லிட்டு இருக்குறேன்… உயிரை எடுத்துட்டு இருக்குறீங்க…. எந்த டிஸ்டிரிக்ட்ல ஏ.ஓ.ஸ் வேலை பாக்கலியோ சொல்லுங்க. அவங்களை சஸ்பண்ட் பண்ணுங்க…. 17பி சார்ஜஸ் போட்டு அனுப்புங்க என்றெல்லாம் ஆவேசத்தில் திட்டித் தீர்த்துவிட்டார்….

பணிகள் நடக்கவில்லை என்பதற்காக திட்டுவது உயர் அதிகாரிகளின் வாடிக்கை…. ஆனால் வீடியோ கான்பரன்ஸ் மீட்டிங்கில் இணை இயக்குனர்களுக்கு விழுந்த திட்டுக்களை அருகில்நிஅன்று கேட்டுக் கொண்டிருந்த அதிகாரிகள் வெலவெலத்துப் போய்விட்டனர்… மற்றோரு அலுவலரோ இதை தன்னுடைய செல்போனில் வீடியோ எடுத்து சக அலுவலர்களுக்கு அனுப்பியுள்ளார். இந்த வீடியோ கசிந்து சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது…

வேலை செய்யவில்லை என்பதற்காக இணை இயக்குனர் அந்தஸ்தில் உள்ள விவசாய அதிகாரியை இவ்வளவு தரக்குறைவாக திட்டியது துறை அலுவலர்களை கொந்தளிக்க வைத்துவிட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்புதான் தலைமை செயலகத்தில் நிதித்துறை இணை செயலாளர் பிரிவு அதிகாரிகளை கெட்ட வார்த்தையால் திட்டியதால் தலைமை செயலக ஊழியர் சங்கத்தினர் நிதித்துறை செயலாளர் உதயசந்திரன் அறை முன்பு கூடி ஐஏஎஸ் அதிகாரியை கண்டித்து முற்றுகை போராட்டம் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது வேளாண்மை துறையின் ஐஏஎஸ் அதிகாரி தரக்குறைவாக திட்டி மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார்….. ஐஏஎஸ் அதிகாரிகளாக இருந்தாலும் கண்ணியமாக திட்டுவது நல்லது.. மிக கேவலமான வார்த்தைகளால் தொடர்ந்து பேசுவது அரசு ஊழியர்களின் போராட்டத்தை தூண்டிவிடும். எனவே தலைமை செயலாளர் இதுபோன்ற அதிகாரிகளை கண்டித்து அரசு ஊழியர்கள், பொதுமக்களிடம் கண்ணியமாக நடந்துகொள்ளும்படி அறிவுறுத்த வேண்டும் என்கின்றனர் பாதிக்கப்பட்ட அதிகாரிகள்….

Comments (0)
Add Comment