மாமூல் தர மறுத்ததால் சாராயம் பதுக்கி கைது செய்த போலீசாரின் அட்டூழியம்

திருட்டுத்தனமாக டாஸ்மாக் சரக்குகளை விற்பனை செய்து வந்த கணவன், மனைவி இருவரும் விற்பனையை விட்டு விட்டு தண்ணீர் கேன்களை விற்பனை செய்து வந்த நிலையில் மாமூல் நின்று போனதால் ஆத்திரமடைந்த போலீசார் மற்றொரு வியாபாரி மூலம் ஆந்திராவில் இருந்து கள்ள சாராயத்தை வரவழைத்து பெண்ணின் வீட்டுக்குள் மறைத்துவைத்து மறுநாள் அதிரடியாக போலீசார் சோதனை செய்வதுபோல சென்று கணவன், மனைவி இருவரையும் கைது செய்து பழிக்கு பழிவாங்கிய சம்பவம் சென்னையில் நடந்தேறி உள்ளது.

ஆனால் ஆண்டவன் தவறு செய்தவர்களை எப்போதுமே விட்டு வைப்பதில்லை என்பதைப்போல போலீசாருக்கு உதவிய மதுபான விற்பனை வியாபாரி வேறு வழக்கில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாரிடம் சிக்கியபோது போலீசார் நடத்திய கள்ள சாராய நாடகம் வெளியானது. ஆனால் மேலிடம் வரை மாமூலில் திளைத்துப்போய் உள்ளதால் துணை ஆணையரின் தனிப்படை போலீசாரை வெறுமனே இடமாற்றம்செய்த உயர் அதிகாரிகள் மீது பொதுமக்கள் கடுப்பில் உள்ளனர். போலீசாரின் பொய்வழக்கால் தங்கள் குடும்பமே நடுத்தெருவுக்கு வந்துவிட்டதாக கண்ணீர் வடிக்கிறார் பாதிக்கப்பட்ட பெண்.

சென்னை அடையார் மதுவிலக்கை அமலாக்க பிரிவு போலீசார் புத்தாண்டை ஒட்டி திருட்டுத்தனமாக டாஸ்மாக்கை சரக்குகளை வாங்கி பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்யும் வியாபாரிகளை போலீசார் தேடிவந்தனர். அப்போது மயிலாப்பூர் நொச்சிகுப்பதை சேர்ந்த பார்த்திபன் என்பவர் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்ததை கண்டுபிடித்து 100க்கும் மேற்பட்ட மதுபாட்டில்களுடன் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட பார்த்திபனை போலீசார் விசாரித்ததோடு, அவர் பயன்படுத்திய செல் போன் எண்களில் யாரிடம் பேசி வந்தார் என்றும், இந்த மது பாட்டில்களை சப்ளை செய்தது யார் எனவும் ஆய்வு செய்தனர். அப்போது குறிப்பிட்ட சிலரது செல் போன் எண்களில் பார்திபன் தொடர்ச்சியாக பேசியது தெரியவந்தது. அந்த செல் போன் எண்கள் யாருடையது என போலீசார் விசாரித்தபோது மயிலாப்பூர் துணை ஆணையர் கார்த்திக்கின் தனிப்படையை சேர்ந்த பிரகலாதன், செல்வா மற்றும் உளவுத்துறை உதவி எஸ்.ஐ.வினோத் ஆகியோரின் செல்போன் என்பதை அறிந்து போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். தனிப்படை போலீசார் மற்றும் மாநகர உளவுத்துறை உதவி எஸ்.ஐ. செல்போனில் பார்த்திபன் எதற்காக அடிக்கடி பேசிவந்தார் என மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது.

பார்த்திபனிடம் போலீசார் விசாரித்தபோதுதான் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. மயிலாப்பூர் பாபநாசம் சிவன் சாலையில் உள்ள தர்கா அருகில் வசித்து வரும் அப்துல்லா மற்றும் இவரது மனைவி இருவரும் தண்ணீர் கேன் விற்பனை செய்து வருகின்றனர். இவர்கள் இருவரும் ஏற்கனவே மது பாட்டில்களை மொத்தமாக வாங்கி கூடுதல் விலைக்கு வாங்கி விற்பனை செய்து வந்துள்ளனர்.

இருவர் மீதும் திருட்டுத்தனமாக மதுபாட்டில்களை விற்பனை செய்ததாக மயிலாப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்வதும் வழக்கமாக இருந்துள்ளது. அப்போது மயிலாப்பூர் துணை ஆணையர் கார்த்திக்கின் தனிப்படையை சேர்ந்த பிரகலாதன், செல்வா மற்றும் உளவுத்துறை உதவி எஸ்.ஐ. வினோத் ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டது. இவர்கள் மூவரும் அப்துல்லாவிடம் மாதம்தோறும் மாமூல் வாங்கி செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர். போலீசார் ரெய்டு செல்வதாக இருந்தால் இவர்கள் அப்துல்லாவுக்கு முன்கூட்டியே தகவல் கொடுத்துவிடுவதும் வழக்கம். இதற்காகத்தான் மாமூல் கொடுத்து வந்தார் அப்துல்லா.

இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு அப்துல்லாவிற்கு உடல்நலமில்லாமல் போனது. இதனால் திருட்டுத்தனமாக மதுபாட்டில்களை வாங்கி விற்பனை செய்வதை நிறுத்திவிடலாம் என தம்பதிகள் முடிவெடுத்து, இதற்கு பதிலாக தண்ணீர் கேன்களை வாங்கிவந்து அருகில் உள்ள மாநில உளவுத்துறை போலீஸர் மற்றும் அதிகாரிகள் குடியிருப்பு உள்ளிட்ட இடங்களுக்கு தண்ணீர் கேன் சப்ளை செய்யும் வியாபாரத்தை தொடங்கி உள்ளனர். இதனால் மாதம் தோறும் தனிப்படை போலீசாருக்கும், மயிலாப்பூர் போலீசார் மற்றும் உளவுத்துறை போலீசாருக்கு கொடுத்துவந்த மாமூலை அப்துல்லா தம்பதியினர் நிறுத்திவிட்டனர்.

மாதம்தோறும் கிடைத்துவந்த பெரும்தொகையான மாமூல் நின்றுவிட்டதால் ஆத்திரமடைந்த தனிப்படையினரும், உளவுத்துறை உதவி எஸ்.ஐ.யும் தம்பதியினரிடம் சென்று மீண்டும் மதுபாட்டில்களை வாங்கி வந்து விற்பனை செய்யுங்கள். எங்களுக்கு மாதம்தோறும் மாமூல் வந்துவிட வேண்டும் என மிரட்டியுள்ளனர். ஆனால் இனி பாட்டில் வியாபாரம் செய்யமாட்டோம் என கணவன், மனைவி இருவரும் கூறியதால், அப்படியானால் கஞ்சா விற்பவர்கள் குறித்து தகவல் கொடுக்க வேண்டும். இல்லையேல் உங்கள் மீது மீண்டும் கேஸ் போடுவோம் என மிரட்ட தொடங்கினர். கஞ்சா வியாபாரிகள் குறித்து தகவல் தந்தால் எங்கள் உயிருக்கு ஆபத்து. எனவே தகவல் தர முடியாது என அப்துல்லாவும், வனிதாவும் கண்டிப்புடன் கூறிவிட்டனர்.

இதனால் கணவன், மனைவி இருவர் மீதும் கடும் கோபமடைந்த தனிப்படை போலீசாரும் , உளவுத்துறை உதவி எஸ்.ஐ.வினோத்தும் இருவரையும் சிக்க வைக்க திட்டமிட்டனர். மயிலாப்பூரின் மற்றொரு பகுதியில் மதுபாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்துவந்த பார்த்திபனிடம் சென்று, உனக்கு தொழில் போட்டியாகத்தான் அப்துல்லாவும், வனிதாவும் மதுபாட்டில் வியாபாரம் செய்தனர். அவர்களை எப்படியாவது வழக்கில் சிக்க வைக்க வேண்டும்.

எனவே ஆந்திராவில் இருந்து கள்ளசாராயத்தை வாங்கி வந்து வனிதாவின் வீட்டுக்குள் வைத்துவிட்டால் அவர்களை பொய் வழக்கில் கைது செய்து குண்டர் சட்டத்தில் உள்ளே தள்ளிவிடலாம் என ஐடியா கொடுத்தனர். ஏற்கனவே தொழில் போட்டி இருந்ததால் பார்த்திபனும் இதற்கு சம்மதித்து ஆந்திராவில் இருந்து ரயில் மூலம் கள்ளசாராயத்தை வரவழைத்து தண்ணீர் கேனில் நிரப்பி வைத்து இரவில் அப்துல்லாவின் வீட்டுக்குள் வைக்கப்பட்டுள்ள தண்ணீர் கேனுடன் சேர்த்து வைக்கும்படி ஐடியா போட்டு கொடுத்தனர் . இதன்படி பார்த்திபனும் கள்ளச்சாராய கேனை அப்துல்லாவின் வீட்டுக்குள் தண்ணீர் கேனுடன் சேர்த்து வைத்துவிட்டார்.

மறுநாள் காலையிலேயே மயிலாப்பூர் போலீசார் வனிதாவின் வீட்டுக்கு சென்று கள்ளச்சாராயம் விற்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. வீட்டில் சோதனையிட வேண்டும் என கூறியுள்ளனர் . தான் கள்ள சாராயம் எதுவும் விற்பதில்லை என வனிதா கண்ணீர் விட்டு மன்றாடியும் அதை காதில் போட்டுக்கொள்ளாமல் தண்ணீர் கேன்களை சோதனையிட்டனர். அந்த கேனுக்குள் வைக்கப்பட்டிருந்த 20 லிட்டர் கள்ள சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்வதாக கூறியதோடு வனிதா, அப்துல்லா மற்றும் இவரது நண்பரான மணிகண்டன் ஆகிய 3 போரையும் கைது செய்து மயில்லாப்பூர் இன்ஸ்பெக்டர் அம்பேத்கார் முன்பு நிறுத்தியுள்ளனர். தாங்கள் எந்த வியாபாரமும் செய்யவில்லை என தம்பதிகள் கதறியும் கேட்காமல் அவர்களை இன்ஸ்பெக்டர் அம்பேத்கார் சரமாரியாக தாக்கியதோடு, வழக்குப்போட்டு சிறைக்கும் அனுப்பி வைத்துள்ளார்.

இதன்பின்னர் சில நாட்கள் கழித்து அப்துல்லாவும், வனிதா உள்ளிட்ட 3 பேரும் ஜாமீனில் வெளிவந்ததாக பார்த்திபன் மதுவிலக்கு அமலாக்கத்துறை போலீசாரிடம் கூறியுள்ளார். இந்த திட்டத்தை செயல்படுத்தவே தனக்கு தனிப்படை போலீசார் புதிதாக சிம்கார்டு வாங்கி கொடுத்ததாவும் கூறியுள்ளார். இதை கேட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு கடும் அதிர்ச்சி ஏற்பட்டது. காரணம் மயிலாப்பூர் போலீசார் ஆந்திராவில் இருந்து கடத்திவந்த கள்ள சாராயத்தை பறிமுதல் செய்ததால் அப்துல்லா உள்ளிட்ட 3 பேரையும் மதுவிலக்கு போலீசார் எப்படி இதை கோட்டை விட்டனர் என உயர் அதிகாரிகள் கேட்டதோடு, இதற்கு விளக்கம் தர வேண்டும் எனவும் சார்ஜ் கொடுத்துள்ளனர்.

ஆந்திராவில் இருந்து கள்ள சாராயத்தை அனிதாவும், அப்துல்லாவும் எப்படி கடத்தி வந்தார்கள் என மதுவிலக்கு போலீசார் ரகசியமாக விசாரித்து வந்துள்ளனர். அப்போதுதான் எதிர்பாராதவிதமாக பார்த்திபன் மதுபாட்டில்களை விற்பனை செய்த வழக்கில் சிக்கி கள்ளச்சாராயம் கடத்தியதாக அப்துல்லா, வனிதாவை மயிலாப்பூர் போலீசார் சிக்க வைத்த நாடகம் வெளியானது. இதுகுறித்து தங்கள் உயர் அதிகாரிகளுக்கு மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் அறிக்கை அனுப்பினார்.

மேலும் மயிலாப்பூர் துணை ஆணையர் மற்றும் சென்னை மாநகர ஆணையர் உள்ளிட்டோருக்கு தனிப்படை போலீசாரின் இந்த தில்லாலங்கடி குறித்து அறிக்கை அனுப்பினார். உடனே அவசர அவசரமாக தனிப்படை போலீசார் பிரகலாதன், செல்வா மற்றும் உளவுத்துறை உதவி எஸ்.ஐ. வினோத் ஆகியோரை இடமாற்றம் செய்து வேறு காவல் நிலையத்திற்கு அனுப்பிவிட்டு துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளனர்.

மாமூல் தரததற்காக ஆந்திராவில் இருந்து கள்ளசாராயத்தை கடத்திவர செய்து பொய் தகவல் கொடுத்து கைதும் செய்த பிறகும் இவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்வதற்கு பதிலாக வெறுமனே துணை ஆணையர் தனிப்படையில் இருந்து நீக்கி ஸ்டேஷனுக்கு அனுப்பியது பொதுமக்களை கொந்தளிக்க வைத்துள்ளது. சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் கஞ்சா உள்ளிட்டவை இல்லை என சுகாதார துறை அமைச்சர் ஒருபுறம் அறிக்கை கொடுக்க, சென்னையில் கள்ள சந்தையில் மதுபாட்டில்களை விற்க போலீசாரே அனுமதியும் கொடுத்து மாமூல் பெற்ற விவகாரம் வெளியாகியுள்ள உயர் அதிகாரிகள் வாய்மூடி மவுனிகளாக இருப்பது என் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதுகுறித்து போலீஸ் வட்டாரத்தில் விசாரித்தபோது சென்னையில் போதை பொருட்கள், போதை மாத்திரைகள் விற்பனையும், கள்ள சந்தையில் மதுபாட்டில் விற்பனையும் கொடிகட்டி பறக்கிறது. இருப்பினும் மாதம்தோறும் கீழ்மட்டம் முதல் மேல்மட்டம் வரை லட்சக்கணக்கில் லஞ்சம் செல்வதால் பெயரளவில் வழக்குபோட்டுவிட்டு இந்த முறைகேடான விற்பனையை கண்டுகொள்வதில்லை.

மேலும் அனுமதியற்ற மதுபார்கள் மற்றும் மசாஜ் பார்லர்கள், பப்புகள், பாலியல் தொழில் என கொடிகட்டி பறக்கிறது. இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்க வேண்டிய மாநகர உளவுத்துறை முதல் சட்டம் ஒழுங்கு அதிகாரிகளுக்கு பல லட்சம் மாமூல் சென்றுவிடுவதால் எதுவுமே இல்லத்தைப்போல போலீசார் நாடகமாடுகின்றனர். மேலும் திருந்தி வாழ நினைத்த தம்பதிகளை மாமூல் தராததற்காக பொய்வழக்கில் மாட்ட வைத்துள்ளனர். குற்றவாளிகளை திருத்த நினைப்பதற்கு பதில் மீண்டும் தவறு செய்ய தூண்டும் போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்காமல் தவறுக்கு உடந்தையாக இருந்தும் கடும் நடவடிக்கை எடுக்க உயர் அதிகாரிகள் தயங்குவது ஏன்? என்றே கேள்வியும் எழுந்துள்ளது

Comments (0)
Add Comment