ஒரே பேட்சில் பணியில் சேர்ந்த ஆயிரத்து 200 நேரடி உதவி ஆய்வாளர்களை பணியில் நியமனம் செய்ய உயர் அதிகாரிகள் செய்த மெத்தனம் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு இடையிலான மோதல் காரணமாக ஒரே நேரத்தில் பயிற்சியில் சேர்ந்து முடித்தும் 3 பிரிவுகளாக பதவி வழங்கப்பட்டதால் சீனியாரிட்டியில் சிக்கல் ஏற்பட்டு தங்களுடன் பணியில் சேர்ந்தவர்கள் டி.ஸ்.பிக்களாகவும், தாங்கள் ஆய்வாளராகவும் பணியாற்றும் நிலையில் உச்சநீதிமன்ற உத்தரவை மீறி அரசு சீனியாரிட்டி நியமனம் செய்திருப்பது நீதிமன்ற அவமதிப்பதாகும் என தமிழக அரசு மற்றும் டிஜிபிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
காவல்துறையில் பதவி நியமனம் மற்றும் சீனியாரிட்டி வழங்குவதில் ஏற்பட்டுள்ள பல்வேறு குளறுபடிகள் காரணமாக பதவி உயர்வு உள்ளிட்டவைகளில் பாதிக்கப்பட்டு வருவது பல காவல்துறையினரை மனச்சோர்வுக்கு ஆளாக்கி உள்ளது.
தமிழக காவல்துறையில் கடந்த 1993ம் ஆண்டு முதல் நேரடி எஸ்.ஐ. நியமனங்கள் சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் தொடங்கப்பட்டது. இவ்வாறு தேர்வு செய்யப்பட்டவர்கள் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் கட் -ஆப் மார்க்குகள் வழங்கப்பட்டு பணியில் சேர்க்கப்படுவர். இந்த கட் -ஆப் மார்க்குகள் அடிப்படையில்தான் பணியில் சேர்ந்த எஸ்.ஐ.க்களுக்கு சீனியாரிட்டி வழங்கப்பட்டு பதவி உயர்வு உள்ளிட்டவைகள் தரப்பட்டன. அதிக கட்-ஆப் மார்க்குகள் பெற்ற உதவி ஆய்வாளர்களுக்கு காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப இன்ஸ்பெக்டர்கள் பதவி உயர்வும், பின்னர் டி.எஸ்.பி. பதவி உயர்வும் வழங்கப்பட்டு வந்தது.
இதற்கிடையே சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு காவலர் பயிற்சியில் சேர்ந்து அங்கு நடக்கும் சட்ட தேர்வுகள், உடற்பயிற்சி தேர்வுகள் உள்ளிட்டவைகளில் பயிற்சி பெரும் எஸ்.ஐ.க்கள் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் சீனியாரிட்டி வழங்கப்படுவதாக அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதில் தங்களுக்கு வேண்டப்பட்ட உதவி ஆய்வாளர்கள், ஜாதி ரீதியிலும் பிரிக்கப்பட்டு வேண்டப்பட்டவர்களுக்கு அதிக மார்க்குகளை, எதிர்த்து பேசும் பயிற்சி எஸ்.ஐ.க்களுக்கு குறைவான மார்க்குகளை வழங்கப்பட்டன.
இதில் அதிக மார்க்குகள் பெற்ற உதவி ஆய்வாளர்கள் அடுத்தகட்டமாக ஆய்வாளர்கள், டி.எஸ்.பி.க்கள் மற்றும் கூடுதல் டி.எஸ்.பி.க்கள் என வரிசையாக பதவி உயர்வு பெற்ற நிலையில் இவர்களுடன் பணியில் சேர்ந்த உதவி ஆய்வாளர்கள் அடுத்தகட்ட பதவி உயர்வான இன்ஸ்பெக்டர்கள் மற்றும் டி.எஸ்.பி பதவி உயர்வு மட்டுமே பெற முடிந்தது.
சிலருக்கு டி.எஸ்.பி. பதவி உயர்வு கூட பெற முடியாமல் ஓய்வுபெற்ற ஆய்வாளர்களும் உண்டு. இதேபோல ஒவ்வொரு முறை நேரடி எஸ்.ஐ.க்கள் தேர்வின்போதும் சீனியாரிட்டி நியமனம் தொடர்பாக நீதிமன்ற வழக்குகள் மற்றும் தங்களுக்கு வேண்டப்பட்ட அதிகாரிகள் மூலம் சீனியாரிட்டி நியமனம் பெறுவது என பல்வேறு குளறுபடிகள் தொடர்ந்ததால் நீதிமன்றங்களில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டு நிலுவையில் உள்ளது. இதனால் பலரும் பதவி உயர்வு பெற முடியாமல் தவிக்கும் அவலம் தற்போது வரை தொடருகிறது.
இந்த நிலையில்தான் ஆய்வாளர் ரஞ்சித் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதில் காவலர் சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் அறிவிப்பு வெளியாகி தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்களுக்கு கட் ஆப் மதிப்பெண்கள் அடிப்படையில் சீனியாரிட்டி நியமனம் செய்யப்பட்டது. ஆனால் காவலர் பயிற்சியில் சேர்ந்து அங்கு பெற்ற மார்க்குகள் அடிப்படையில் சீனியாரிட்டி வழங்க அரசு பிறப்பித்த உத்தரவால் பல்வேறு குழப்பங்களும், குளறுபடிகளும் ஏற்பட்டு பலரும் பதவி உயர்வு பெற முடியாத நிலை உள்ளது. எனவே காவலர் சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு எழுதி பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் சீனியாரிட்டி வழங்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இதன்படி சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்பட்ட தேர்வில் பெறப்பட்ட மதிப்பெண்கள் அடிப்படையில்தான் சீனியாரிட்டி நிர்ணயம் செய்யப்பட வேண்டும். பயிற்சி கல்லூரியில் பெற்ற மதிப்பெண்களை கணக்கில் எடுத்துக்கொள்ளக்கூடாது. காவலர் சீருடை பணியாளர் தேர்வாணைய மதிப்பெண்கள் அடிப்படையில் 1995-ம் ஆண்டு முதல் நேரடி எஸ்.ஐ.க்களாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு சீனியாரிட்டி நியமிக்க வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிட்டிருந்தார். இதன்படி கடந்த ஜூன் மாதம் சீருடை பணியாளர் தேர்வாணைய தேர்வில் பெற்ற மார்க்குகள் அடிப்படையில் சீனியாரிட்டி நியமித்து அரசு அரசாணை பிறப்பிக்க வேண்டும் என உச்சநீதிமன்ற டிவிஷன் பெஞ்சு உத்தரவிட்டது. இதன்படி சீனியரிட்டி நியமனம் செய்து அரசு புதிய அரசாணை பிறப்பித்தது.
உச்சநீதிமன்ற உத்தரவின்படி சீருடை பணியாளர் தேர்வாணையம் நேரடி எஸ்.ஐ. தேர்வு செய்வதற்கான அறிவிப்பு வெளியிட்டு அதிக மார்க்குகள் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட எஸ்.ஐ.க்களுக்கு எத்தனை பிரிவுகளாக பயிற்சி வழங்கி பணியில் சேர்த்தாலும் ஒரே சீனியரிட்டிதான் வழங்க வேண்டும் என தெளிவாக உத்தரவு பிறப்பித்தது.
ஆனால் கடந்த 1995-ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டு 3 பிரிவாக பயிற்சி வழங்கப்பட்ட நேரடி எஸ்.ஐ.க்களுக்கு தனி தனியாக சீனியரிட்டி நியமித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது உச்சநீதிமன்ற உத்தரவிற்கு எதிரானதாகும். எனவே ஒரே சீனியாரிட்டி வழங்க வேண்டும். தவறான சீனியரிட்டி வழங்கியது உச்சநீதிமன்ற உத்தரவிற்கு எதிரானது என திருப்பூர் மாவட்டம் உடுமலையை சேர்ந்த ஓய்வுபெற்ற டி.எஸ்.பி. அண்ணாதுரை என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இவர் தாக்கல் செய்துள்ள மனுவில், நான் கடந்த 1994-95ம் ஆண்டு நேரடி எஸ்.ஐ. தேர்வில் பங்கேற்று முதல்கட்டமாக தேர்வு செய்யப்பட்ட பட்டியலில் தேர்வும் பெற்றேன். பின்னர் பயிற்சியில் சேர்ந்து 1996-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் தேதி பணியில் சேர்ந்தேன். சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் தேர்வு அடிப்படையில் பெரும் மார்க்குகள் சீனியாரிட்டிக்கு பொருந்தும் என கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் தேதி உச்சநீதிமன்றம் தெளிவாக உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஆனால் இந்த உத்தரவை மீறி 1996ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்ட நேரடி உதவி ஆய்வாளர்கள் தனித்தனியாக பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்டு பணியில் சேர்ந்த நாட்களை கணக்கில் கொண்டு தனித்தனி சீனியாரிட்டி வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது உச்சநீதிமன்ற உத்தரவை அப்பட்டமாக மீறுவதாகும். நீதிமன்ற அவமதிப்புக்கு அதிகாரிகள் உள்ளாவார்கள்.
உச்சநீதிமன்றம் 1995-ம் ஆண்டு முதல் ஒரே பேட்ஜில் தேர்வு செய்யப்படும் அனைவர்க்கும் ஒரே மாதிரியான சீனியாரிட்டி தான் நியமிக்கப்பட வேண்டும் என உத்தரவு போட்டுள்ளது. ஆனால் இதை மீறி பயிற்சியின்போது பெறப்பட்ட மார்க்குகள் அடிப்படையில் சீனியாரிட்டி நியமனம் செய்யப்பட்டுள்ளது. இந்த உத்தரவை 7 நாட்களுக்குள் வாபஸ் பெறாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பிற்கு ஆளாக நேரிடும் என டிஜிபிக்கு அனுப்பியுள்ள வழக்கறிஞர் நோட்டீஸில் கூறப்பட்டுள்ளது.
இந்த பேட்சில் நடந்த குளறுபடி குறித்து காவல்துறை வட்டாரத்தில் விசாரித்தபோது கடந்த 1993-ம் ஆண்டு நேரடியாக 500 உதவி ஆய்வாளர்களை தேர்வு செய்ய சீருடை பணியாளர் தேர்வாணையம் விளம்பரம் வெளியிட்டது. இதற்கான தேர்வு நடத்தப்படும் முன்பாக அப்போதைய டிஜிபி வைகுந்த் காலிப்பணியிடங்கள் அதிகமாக இருப்பதால் கூடுதலாக 700 உதவி ஆய்வாளர்களை தேர்வு செய்யவேண்டும் என அரசுக்கு பரிந்துரைத்தார்.
இதன்பேரில் கூடுதலாக 700 உதவி ஆய்வாளர்கள் தேர்வு செய்ய அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதனால் ஆயிரத்து 200 பேருக்கு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு நடத்தினர். இதற்கான தேர்வு முடிவுகள் 1995-ம் ஆண்டுதான் வெளியிடப்பட்டது. இந்த தேர்வில் வெற்றிபெற்றவர்களுக்கு ஒரே நேரத்தில் பயிற்சி பெறுவதற்கான உத்தரவு வழங்காமல் 3 பேட்ஜுகளாக பயிற்சி வழங்க உத்தரவு வழங்கப்பட்டது. இதன்படி முதல் பேட்ச் முடித்தவர்களுக்கு உடனே உதவி ஆய்வாளர் பணியிடம் ஒதுக்கப்பட்டது. அடுத்தடுத்து 2 பேட்ஜுகள் முடித்தவர்கள் அடுத்தடுத்த ஆண்டுகளில் பணியில் நேரடி உதவி ஆய்வாளர்களாக பணியமர்த்தப்பட்டனர்.
முதல் பேட்ஜ் பணியில் சேர்ந்தவர்களுக்கு சீனியாரிட்டியில் முதல் இடமும், மூன்றாவதாக பணியில் சேர்ந்தவர்களுக்கு பின்வரிசையில் சீனியாரிட்டியும் வழங்கப்பட்டது. இதிலும் 98 பேரை தேர்வு செய்யாமல் நிறுத்தி வைத்துவிட்டனர். இவர்கள் 2000-ம் ஆண்டில் முதல்வராக இருந்த கருணாநிதியிடம் முறையிட்ட பிறகே பயிற்சிக்கான உத்தரவு வழங்கப்பட்டு பின்னர் பணியில் சேர்ந்தனர். இதனால் ஒரே பேட்ஜில் தேர்வில் வெற்றி பெற்றவர்களில் 500 பேர் முதலிலும், 602 பேருக்கு அடுத்தகட்டமாகவும் ஆய்வாளர்கள், டி.எஸ்.பி.க்களாக பதவி உயர்வு கிடைத்தது. முதலில் பணியில் சேர்ந்த 500 பேரில் சிலர் மட்டும் கூடுதல் டி.எஸ்.பி.க்களாக பதவி உயர்வு பெற்று ஓய்வும் பெற்றனர். ஆனால் 2000ம் ஆண்டில் பயிற்சியில் தாமதமாக சேர்க்கப்பட்ட 98 பேர் மட்டும் இன்னும் ஆய்வாளர்களாகவே பணியாற்றி வருகின்றனர்.
இவ்வாறு தனித்தனியாக சீனியாரிட்டி வழங்கியது தவறு என்பதுதான் தற்போது எழுந்துள்ள பிரச்சினையை. உச்சநீதிமன்ற உத்தரவின்படி 1995-ம் ஆண்டு தேர்வு எழுதி வெற்றிபெற்ற அனைவர்க்கும் ஒரே சீனியாரிட்டி வழங்க வேண்டும். இதன்படி 20 ஆண்டுகளாகவே ஆய்வாளர்களாகவே பணியாற்றி வரும் தங்களுக்கும் 1995 சீனியாரிட்டி வழங்கி டி.எஸ்.பி. பதவி உயர்வு வழங்க வேண்டும் என டிஜிபியிடம் மனு கொடுத்துள்ளனர். உச்சநீதிமன்றம் தெளிவான உத்தரவு பிறப்பித்த பிறகும் சீனியாரிட்டி நியமனத்தில் சென்னை உயர்நீதிமன்றம் தனித்தனி உத்தரவுகளை பிறப்பிப்பதுதான் இந்த குழப்பங்களுக்கு முக்கிய காரணம்.
இதை காவல்துறை டிஜிபி உயர்நீதிமன்றத்தில் தெளிவாக வாதாடி ஒரே நேரத்தில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ஒரே மாதிரியான சீனியரிட்டிதான் தான் வழங்கப்படும் என்பதை தெளிவுபட உத்தரவு பெற வேண்டும். ஒவொரு பேட்ஜும் தனித்தனியாக உத்தரவு பெற்று பதவி உயர்வு பெறுவதால் ஒரே பேட்சில் பணியில் சேர்ந்தவர்களில் ஒருசிலர் 2 படி பதவி உயர்வும், சிலருக்கு முதல்படி பதவி உயர்வு மட்டுமே கிடைக்கிறது. எனவே டிஜிபி உயர்நீதிமன்ற நீதிபதிகளுடனும், சட்ட ஆலோசர்களுடனும் ஆலோசித்து சீனியாரிட்டி மற்றும் பதவி உயர்வு வழங்குவதில் ஒரே மாதிரியான அரசாணை பிறப்பிக்க வேண்டும் என்கின்றனர் பாதிக்கப்பட்ட நேரடி உதவி ஆய்வாளர்கள்.