நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் பணி நியமனம் மற்றும் டெண்டர் விடுவதில் 10 சதவிகித கமிஷன் பெற்றதாக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு மீது அமலாக்கத்துறை முழு ஆதாரங்களுடன் அனுப்பிய 2 கடிதங்கள் மீதும் உரிய விசாரணை நடத்தி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவுசெய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என அதிமுக எம்.பி. இன்பத்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பிறகு அவசரமாக வழக்கு குறித்து விசாரணை நடத்தும்படி தமிழக அரசு லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கில் உடனடியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த அமலாக்கத்துறை கடிதம் எழுதி 2 மாதங்களாகியும் கிடப்பில் போடப்பட்டிருந்த நிலையில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதால் அவசரமாக விசாரிக்க உத்தரவிட்டிருப்பது காவல்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்த உடனே அமலாக்கத்துறை வழக்கை கையில் எடுத்து விசாரிக்க தொடங்கும் என்பதால் இந்த பணத்தை பெற்ற மேலிடத்தின் முக்கியப்புள்ளி மற்றும் அமைச்சர், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளும் அமலாக்கத்துறையில் சிக்கிக்கொள்வார்கள் என தகவல் வெளியாகி உள்ளதால் ஆளும்கட்சியினருக்கு பெரும் பீதி ஏற்பட்டுள்ளது.
தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் செயற்பொறியாளர், இளநிலை பொறியாளர், உதவியாளர்கள் என 2 ஆயிரத்து 538 பேரை நியமிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த பதவிக்கான தேர்வுகளை அண்ணாபல்கலை கழகம் சார்பில் நடத்தி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு 2 ஆயிரத்து 538 பேரை கடந்த ஆண்டு ஜூன் மாதம் நியமிக்கப்பட்டனர். முதல்வர் ஸ்டாலின் நியமன உத்தரவையும் வழங்கியிருந்தார். இந்த நியமனத்தில் கிட்டத்தட்ட 400-க்கும் மேற்பட்டோர் தோல்வி அடைந்த நிலையிலும் இவர்கள் தேர்வில் அதிக மார்க்குகள் பெற்றதாக அறிவித்து பணியில் நியமித்துள்ளனர்.
இந்த முறைகேட்டுக்காக ஒவ்வொரு தேர்வாளரிடம் இருந்தும் தலா 25 லட்சம் முதல் 30 லட்சம் வரை லஞ்சப்பணத்தை ரொக்கமாக அமைச்சர் சகோதரர் மற்றும் உறவினர்கள், உதவியாளர்கள் மூலம் வாங்கி பணிநியமனம் நடந்துள்ளது. இவ்வாறு கிட்டத்தட்ட 888 கோடி ரூபாய் அமைச்சர் தரப்பு லஞ்சமாக வாங்கி பல்வேறு இடங்களிலும் முதலீடு செய்துள்ளனர் எனவும், பணத்தை வசூலிக்க 10 ரூபாய் நோட்டில் ரகசிய குறியீடு எண் போட்டு ஹவாலா ப்ரோக்கர்களிடம் நேரிடையாக ரொக்கப்பணமாக கொடுக்கும்படி அமைச்சர் சகோதரர் ரவிச்சந்திரன் மற்றும் உதவியாளர்கள் செல்போன் வாட்ஸ் அப் மூலம் தகவல் அனுப்பியதற்கான ஆதாரங்கள், டிஜிட்டல் ஆதாரங்களையும் அமலாக்கத்துறை தமிழக பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமனுக்கு கடந்த அக்டோபர் மாதம் 27-ம் தேதியன்று 258 பக்க கடிதம் ஒன்றை அனுப்பியது.
அமைச்சர் நேரு மற்றும் உறவினர்கள் வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்களை வாங்கி குவித்ததாகவும், வருமான வரி ஏய்ப்பு நடத்திருப்பதாகவும் 2 ஆண்டுகளுக்கு முன்பு வருமான வரித்துறை நடத்திய சோதனையின்போதும், இதன்பிறகு அமலாக்கத்துறை நடத்திய சோதனைகளின்போதும் இந்த ஆதாரங்களை எடுத்ததாகவும் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தனர். இந்த ஆதாரங்கள் அடிப்படையில் அமைச்சர் நேரு மற்றும் ஐ.ஏ.எஸ் . அதிகாரிகள், அமைச்சரின் சகோதரர், உதவியாளர்கள், உறவினர்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தும்படி கடிதத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் குறிப்பிட்டிருந்தனர்.
இந்த கடிதம் பத்திரிகைகளில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் இந்த குற்றசாட்டு பொய்யானது. தன்னை பழிவாங்கும் நோக்கில் அமலாக்கத்துறை இந்த குற்றசாட்டை கூறியிருப்பதாக அமைச்சர் நேரு பதிலளித்திருந்தார். இந்த கடிதத்தை தொடர்ந்து நவம்பர் மாதம் அமலாக்கத்துறை டிஜிபிக்கு அனுப்பியிருந்த மற்றொரு கடிதத்தில் அமைச்சர் நேரு துறையில் நடந்த பல்வேறு டெண்டர் பணிகளில் டெண்டர் திறக்கப்படும் முன்பே தங்களுக்கு வேண்டப்பட்ட கான்ட்ராக்டர்களுக்கு வேலைகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதற்காக ஒவொரு கான்ட்ராக்டர்களிடம் இருந்தும் 7.5 சதவிகிதம் முதல் 10 சதவிகிதம் கமிஷன் தொகை பெறப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 3 ஆண்டுகளில் மட்டும் ஆயிரத்து இருப்பது கோடி ருபாய் லஞ்சமாக பெற்று இந்த பணத்தை வெளிநாடுகளில் ஹவாலா ப்ரோக்கர்கள் மூலம் முதலீடு செய்யப்பட்டதற்கான ஆவணங்கள் இருப்பதாக கூறி மற்றொரு கடிதத்தில் அமலாக்கத்துறை குறிப்பிட்டிருந்தது.
இந்த 2 கடிதங்கள் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு பதிவு செய்ய அரசு அனுமதி வழங்க வேண்டும். எனவே விசாரணை நடத்தி வழக்கு பதிவு செய்ய அரசு அனுமதி வழங்கும்படி டிஜிபி வெங்கட்ராமன் கடந்த மாதமே தலைமை செயலாளருக்கு கடிதம் அனுப்பி இருந்தார். ஆனால் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்த மறுநிமிடமே அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து ஒட்டுமொத்த விசாரணையை தனது கையில் எடுத்துக்கொள்ள முடியும் என்பதால் இந்த கடிதம் மீது எந்த நடவடிக்கையையும் எடுக்க வேண்டாம் என மேலிடம் தலைமை செயலாளருக்கு அறிவுரை வழங்கியதாக தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அமலாக்கத்துறை கடிதம் அனுப்பி 2 மாதங்களாகியும் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெறுமனே வழக்கு பதிவு செய்யும்படி அறிக்கை அனுப்பிவிட்டு பிரச்சினையை கண்டுகொள்ளாமல் இருந்தது பெரும் சர்ச்சையை எழுப்பியது. இந்த வழக்கின் அடிப்படையில் அமலாக்கத்துறை உள்ளே நுழைந்துவிட்டால் அமைச்சர் மட்டுமின்றி, இந்த முறைகேட்டுக்கு துணைபோனதாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மற்றும் இந்த பணத்தை அமைச்சர் கண்டிப்பாக மேலிட முக்கிய பிரமுகரிடம்தான் கொடுத்திருப்பார் என்பதால் அவரையும் தங்கள் வளையத்துக்குள் கொண்டுவந்து கைதுவரை செல்லமுடியும்.
சட்டசபை தேர்தல் அறிவிப்பு வெளியிட 2 மாதங்களே உள்ள நிலையில் இந்த பிரச்சினையில் மேலிட முக்கிய பிரமுகர், அமைச்சர் உள்ளிட்டோர் சிக்கினால் இதை பிரச்சாரம் ஆக்கி திமுக அரசு லஞ்ச லாவண்யத்தில் திளைத்துப்போன அரசு என்பதற்கான ஆதாரங்களுடன் சிக்கிக்கொண்டதாக விவகாரத்தை பெரிதாக்க பாஜக மேலிடம் திட்டமிட்டது. தாங்கள் நேரடியாக தலையிட்டால் பழிவாங்கும் நடவடிக்கை என திமுக மேலிடம் திசைதிருப்பிவிடும். எனவே அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இப்பிரச்சினையை கையில் எடுக்க வேண்டும் என பாஜக மேலிடம் வற்புறுத்தி வந்தது.
இந்த நிலையில்தான் மத்திய அமைச்சர் அமித்ஷா கடந்த வாரம் மதுரை, திருச்சிக்கு வந்து சென்ற நிலையில் அதிமுக எம்.பி.யும், சட்ட பிரிவு செயலாளருமான இன்ப துரை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த வழக்கில் தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் கடந்த ஆண்டு நடந்த பணி நியமனத்தில் ஒரு பதவிக்கு 25 லட்சம் முதல் 35 லட்சம் வரை லஞ்சமாக பெற்று முறைகேடாக பணி நியமனம் நடந்துள்ளது. இவ்வாறு லஞ்சமாக அமைச்சர் தரப்பு 888 கோடியை ரொக்கமாக பெற்றதற்கான முழு ஆதாரங்களுடன் அமலாக்கத்துறை 2 கடிதத்தை டிஜிபிக்கு அனுப்பி லஞ்சஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தும்படி கேட்டும் டிஜிபி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே லஞ்சஒழிப்பு துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார். இந்த மனு மீதான விசாரணை தேதி அறிவிக்கும் முன்பே தமிழக அரசு இந்த கடிதம் குறித்து விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்பு துறைக்கு அனுமதி வழங்கிவிட்டதாக தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் கண்டிப்பாக அரசு எடுத்துள்ள நடவடிக்கை என்ன என்பது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படி நீதிபதிகள் உத்தரவு பிறப்பிப்பார்கள். இதனால் குறிப்பிட்ட நாட்களுக்குள் இந்த கடிதத்தின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அரசு அறிக்கை தாக்கல் செய்வதோடு, குறிப்பிட்ட நாட்களுக்குள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும்படி உத்தரவு பிறப்பிக்கும். இதனால் அரசுக்கு தர்மசங்கடமும், சிக்கலும் ஏற்படுவதோடு உடனடியாக அமலாக்கத்துறை வழக்கு பதிவுசெய்து மேல்நடவடிக்கையை தொடங்கிவிடும். எனவே அமலாக்கத்துறை உடனடியாக உள்ளே நுழையாமல் தடுக்க லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்தும்படி அரசு உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது. லஞ்ச ஒழிப்புத்துறை வரும் சட்டசபை தேர்தல் வரை விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யாமல் அரசை காப்பாற்ற முயற்சிக்கும்.
ஆனால் இந்த வழக்கு விசாரணைக்கு வரும்போது அமலாக்கத்துறையும் அறிக்கை அளிக்கும்படி நீதிமன்றம் உத்தரவிடும். அப்போது விரிவான ஆதாரங்களுடன் அமலாக்கத்துறையும் வழக்கை பதிவு செய்யும்படி 2 மாதங்களுக்கு முன்பே கடிதம் அனுப்பியும் டிஜிபி நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றசாட்டை எடுத்துவைக்கும். எப்படி இருந்தாலும் ஜனவரி, பிப்ரவரி மாதத்திற்குள் லஞ்சஒழிப்புத்துறை இந்த கடிதம் அடிப்படையில் அமைச்சர் நேரு உள்ளிட்டோர் மீதும் வழக்கு பதிவு செய்தேயாக வேண்டும்.
இதன்பிறகு அமலாக்கத்துறை வழக்கை கையில் எடுத்து அமைச்சர் உள்ளிட்டோர் மீது கைது உள்ளிட்ட நடவடிக்கைகளில் இறங்கும். அமைச்சர் உள்ளிட்டோரிடம் பெறப்படும் வாக்குமூலம் அடிப்படையில் மேலிட முக்கிய பிரமுகரையும் தங்கள் வளையத்திற்குள் கொண்டுவந்து ஆளும்கட்சிக்கு பெரிய அளவில் சிக்கலை ஏற்படுத்தும். இதற்கான முதல் கட்ட நடவடிக்கையில் பாஜக மேலிடம் இறங்கிவிட்டது என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள் .
அமலாக்கத்துறையிடம் மேலிடத்தின் முக்கிய 2 பிரமுகர்களும், தனது மாவட்டத்தை சேர்ந்த இளம் அமைச்சரும் சேர்ந்துதான் முழு ஆதாரங்களையும் அமலாக்கத்துறைக்கு போட்டுக்கொடுத்துள்ளனர். இதனால் தன்னை மட்டும் பலிக்கடாவாக்க மேலிட பிரமுகர்கள் திட்டம்போட்டு செயல்பட்டுள்ளனர். தன்னை சிக்க வைத்துவிட்டதால் மேலிடத்தையும் கண்டிப்பாக போட்டுக்கொடுப்பேன். டெண்டர் உள்ளிட்டவைகளில் பெற்ற பணத்தில் பெரும்பகுதி மேலிட முக்கிய பிரமுகரிடம்தான் கொடுக்கப்பட்டுள்ளது. இதை அமலாக்கத்துறை விசாரணையில் கண்டிப்பாக ஆதாரங்களுடன் கூறுவேன்.
என்னை சிக்க வாய்த்த மேலிடமும் இதில் வசமாக சிக்கிக்கொள்ளும் என கொந்தளிப்பில் உள்ளாராம் அமைச்சர் நேரு. தேர்தல் நெருங்கும் இந்த நேரத்தில் பாஜக தனது உள்ளடி வேலையை தொடங்கியதோடு, நேரடியாக மேலிட முக்கிய பிரமுகர்களை சிக்க வைத்துள்ளது ஆளும்கட்சி மேலிடத்திற்கு, முக்கிய அமைச்சர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறை எப்படி விசாரிக்கும் என்பது அனைவருக்கும் தெரியும்.
குறிப்பாக இந்த மாதம் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர் அபய்குமார் சிங் ஓய்வுபெற உள்ள நிலையில் இந்த பதவியில் சமீபத்தில் டிஜிபியாக பதவி உயர்வு பெற்றுள்ள “பாதர்” என காவல்துறை அதிகாரிகளால் செல்லப்பெயர் கூறி அழைக்கப்படும் அதிகாரியை நியமிக்க மேலிடம் திட்டமிட்டுள்ளது. இவர் மூலம் ஆதாரங்களை மறைத்து ஆளும்கட்சி மேலிடத்தை காப்பாற்ற முயற்சி நடக்கும் என்கிறது காவல்துறை. ஆனால் அனைத்து ஆதாரங்களையும் அமலாக்கத்துறை ஏற்கனவே கைப்பற்றிவிட்டதால் இந்த வழங்கி அமைச்சர் நேரு மட்டுமின்றி, ஆளும்கட்சி மேலிடமும் வசமாக சிக்கிக்கொண்டது என்றே கூறவேண்டும் என்கின்றனர் காவல்துறை அதிகாரிகள். இந்த வழக்கு ஆளும்கட்சிக்கு பெரும் சிக்கலாகவும், சவாலாகவும் இருக்கும். இதில் இருந்து எப்படி தப்பிக்கப்போகிறார்கள் என்பதுதான் தற்போது எழுந்துள்ள கேள்வி.