தமிழகத்தின் தொழில் நகரமான திருப்பூரில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய 8 வங்கதேச நபர்களை டெல்லி போலீசாருக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் திருப்பூருக்கு வந்து கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர். தமிழகத்தின் முக்கிய நகரத்தில் தீவிர ஆதரவு நபர்கள் பல மாதங்களாக தங்கி இருந்தும் இவர்களைப்பற்றி தகவல்களை விசாரிக்காமல் தமிழக தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசாரும், சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசாரும் கோட்டைவிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஊடுறுவும் பயங்கரவாதிகள்: எச்சரிக்கும் மத்திய உளவுப்பிரிவு
தமிழகத்தில் வட மாநிலக் கூலி தொழிலாளர்கள் என்ற பெயரில் தீவிரவாதிகளையும், தீவிரவாத ஆதரவு குழுக்களையும் பாகிஸ்தான் தீவிரவாதிகள் அனுப்பி ஊடுருவ செய்து தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் சதிச் செயலில் ஈடுபட அனுப்பி வைத்திருப்பது குறித்து தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசாரும், சிறப்பு புலனாய்வு போலீசாரும் கண்டு கொள்ளாமல் அசட்டையாக இருப்பதன் மூலம் மிக பெரிய அளவிலான அசம்பாவித சம்பவங்கள் நடக்க பெரும் வாய்ப்புள்ளதாக மத்திய உளவுத்துறை எச்சரித்துள்ளது. தமிழக உளவுத்துறை போலீசார் மிக முக்கியமான சம்பவங்களில் கூட கோட்டைவிட்டு வருவது பெரும் ஆபத்தானது எனவும் எச்சரிக்கின்றனர் மத்திய உளவுத்துறை அதிகாரிகள்.
இந்தியாவில் தஞ்சம் அடைந்த ஷேக் ஹசீனா
இந்தியாவின் பக்கத்துக்கு நாடாகவும், நட்பு நாடாகவும் இருந்த பங்களாதேஷில் கடந்த 2024ம் ஆண்டு ஏற்பட்ட மாணவர்கள் போராட்டத்திற்கு பிறகு அவாமி லீக் கட்சியைச் சேர்ந்த ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை இழந்து இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். இதன் பிறகு இரண்டு நாட்டுக்குமான உறவில் பெரும் விரிசல் விழுந்துள்ளது. இதை பயன்படுத்தி பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் தீவிரவாத அமைப்பான லஷ்கர் இ தொய்பா என்ற தீவிரவாத அமைப்பு பங்களாதேஷில் உள்ள தீவிரவாத குழுக்களுடன் கை கோர்த்துக்கொண்டு இந்தியாவிற்கு எதிரான தீவிரவாத செயல்களை ஊக்குவித்து வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு டெல்லி செங்கோட்டை அருகே நடந்த கார் வெடிகுண்டு சம்பவமும் இந்த தீவிரவாத குழுக்களால் நிறைவேற்றப்பட்ட சதிச்செயல்தான்.
போலி ஆவணங்கள் மூலம் ஊடுறுவல்
பாகிஸ்தான் தீவிரவாத அமைப்பானது இந்தியாவின் பல முக்கிய நகரங்களில் அதிதீவிர சதி செயல்களை நிறைவேற்ற திட்டம் தீட்டி தீவிரவாத குழுக்களையும், ஆதரவு குழுக்களையும் இந்தியாவிற்குள் அகதிகளைப்போலவும், தொழிலாளர்களை போலவும் ஊடுருவ செய்து வருகிறது. இவர்கள் டெல்லி, குஜராத், ஆந்திரா, தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு புலம்பெயர் தொழிலாளர்களைப்போல ஏஜெண்டுகள் மூலம் போலி ஆவணங்களை தயாரித்துக் கொடுத்து ஊடுருவச் செய்து வருகின்றனர்.
வியாபார நிறுவனங்களில் பணிபுரியும்
தமிழகத்தின் தலைநகரான சென்னை முதல் கன்னியாகுமரி வரை தினமும் பல நூறு வடமாநில தொழிலாளர்கள் ரயில்கள் மூலம் வந்து குவிகின்றனர். திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தொழிலாளர்கள் பற்றாக்குறை இருப்பதால் பல ஏஜெண்டுகள் இந்த தீவிரவாத குழுக்களை சேர்ந்தவர்களைப் பற்றி எந்த தகவல்களையும் சேகரிக்காமல் கூலி வேலைக்கு எல்லா மாவட்டங்களுக்கும் அனுப்பி வைத்து விடுகின்றனர். குறிப்பாக திருப்பூரில் லட்சக்கணக்கான வட மாநில தொழிலாளர்களும், தொழிலாளர்களைப் போல தீவிரவாத குழு ஆதரவாளர்களும் பல்வேறு தொழிற்சாலைகள், ஜவுளி நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர்.
அலட்சியம் காட்டும் உளவுத்துறை
இவர்களைப்பற்றி மாநில உளவுத்துறை மற்றும் தீவிரவாத தடுப்பு பிரிவு , சிறப்பு புலனாய்வு பிரிவு மற்றும் கியூ பிரிவு போலீசார் விசாரணை நடத்தி உண்மையில் கூலி தொழிலாளியா? தீவிரவாத குழுவை சேர்ந்தவர்களோ? என தகவல்களை சேகரித்து மேலிடத்திற்கு கொடுக்க வேண்டும். ஆனால் ஏஜெண்டுகளுக்கு ஆதரவாக கூலித் தொழிலாளர்களாக வருபவர்களின் எந்த ஆவணங்களையும் சரிபார்க்காமல் விட்டு விடுகின்றனர். இந்த தீவிரவாத ஆதரவு குழுவினர் திருப்பூரில் தங்கி பாகிஸ்தான் தீவிரவாத குழுக்களுக்கு பல்வேறு தகவலையும் சேகரித்து கொடுக்கின்றனர்.
பரிமாறப்படும் ரகசிய தகவல்கள்
இவ்வாறு திருப்பூரில் ரகசியமாக தங்கியுள்ள வங்கதேசத்தைச் சேர்ந்தவர்களுக்கும், பாகிஸ்தான் தீவிரவாத குழுவான லஸ்கர் இ தொய்பா குழுவினருக்கும் இடையே ரகசிய தகவல்கள் பரிமாறப்பட்டு வருவதை மத்திய உளவு துறையினரும், டெல்லி மாநில அதி தீவிரவாத தடுப்பு படையினரும் கண்டுபிடித்தனர். இவர்களின் செல்போன் எங்களை கண்காணித்து வந்ததில் பாகிஸ்தான் தீவிரவாத குழுக்களுடன் தொடர்பில் இருப்பதை உறுதிப்படுத்தினர்.
திருப்பூரில் முகாம் போட்ட மத்திய உளவுப்பிரிவு
ஏற்கனவே இந்த தீவிரவாத ஆதரவு குழுக்கள் குறித்து தமிழக உளவுத்துறைக்கு மத்திய உளவுத்துறை அதிகாரிகள் தகவல் கொடுத்தும் இதுகுறித்து உளவுத்துறை அதிகாரிகள் விசாரிக்காமல் கிடப்பில் போட்டுள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன. இதையடுத்து டெல்லியில் உள்ள தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீசார் கடந்த வாரம் திருப்பூருக்கு வந்து இங்கு போலி விசா மற்றும் போலி ஆவணங்களுடன் தங்கியிருக்கும் வங்கதேசத்தை சேர்ந்த தீவிர ஆதரவு குழுக்கள் குறித்து ரகசியமாக கண்காணித்து வந்தனர்.
ஆடை நிறுவனங்களில் வங்கதேச பயங்கரவாதிகள்
இதில் 103 வங்கதேசத்தினர் திருப்பூரில் உள்ள ரெடிமேடு ஆடைகள் தயாரிப்பு நிறுவனங்களில் மேற்கு வங்க தொழிலாளர்களை போல போலி ஆவணங்களை தயாரித்து வேலை பார்த்து வருவதை கண்டுபிடித்து கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தியதில் பிடிபட்ட மீஜானூர் ரகுமான், முகமத் ஷாபாத், உமர், முகமது லிட்டன் மற்றும் முகமது குஜால் ஆகிய 6 பெரும் பாகிஸ்தான் ஆதரவு அமைப்புடன் தொடர்பில் இருந்ததை கண்டுபிடித்தனர்.
சிக்கிய போலி சிம்கார்டுகள்
ஏற்கனவே டெல்லியில் பயங்கரவாத குழுக்களுக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டிய இருவரை டெல்லி போலீசார் கைது செய்திருந்தனர். இவர்களிடம் விசாரணை நடத்தியதில் திருப்பூரில் பிடிபட்ட 6 பேருடன் தொடர்பில் இருந்தவர்கள் என்பது தெரிய வந்தது. இதையடுத்து கைது செய்யப்பட்ட 6 பேரையும் டெல்லிக்கு அழைத்துச் சென்று ரகசிய இடத்தில் விசாரணை நடத்தினர். இவர்களிடம் இருந்து போலி பெயரில் வாங்கப்பட்ட சிம்கார்டுகள், போலி இந்திய ஆவணங்களை கைப்பற்றினர். இவர்களை டெல்லிக்கு சென்று தமிழக சிறப்பு புலனாய்வு போலீசார் கைது செய்து அழைத்துவந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜி பே மூலம் பணப்பரிமாற்றம்
இதேபோல மேற்குவங்கத்தில் அகதிகளைப்போல தங்கியிருந்த 2 தீவிரவாத ஆதரவு நபர்களை போலீசார் கைது செய்தனர். இவர்கள் 8 பேரும் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத குழுக்களுடன் தொடர்பில் இருந்தது கண்டுபிக்கப்பட்டது. இவர்கள் பல்வேறு பணம் பெறும் அப்ளிகேஷன்கள் மூலம் பணம் பெற்று தீவிரவாத செயல்களுக்கு தகவல் சேகரித்து கொடுத்து வந்ததை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
ஹபீஸ் சயீத்துடன் தொடர்பு
கைது செய்யப்பட்டவர்களில் 2 பேர் பாகிஸ்தான் தீவிரவாத அமைப்பான லஷ்கர் தொய்பா அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீத் மற்றும் மூத்த தளபதியான ஜாக்கி உர் ரகுமான் ஆகியோருடன் நேரடி தொடர்பில் இருந்ததையும் தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசை கண்டுபிடித்துள்ளனர். இவர்கள் தீவிரவாத குழுக்களுக்கு ஸ்லீப்பர் செல்களைப் போல செயல்பட்டு வந்துள்ளனர். தேவைப்பட்டால் இவர்களை வைத்தே குண்டுவெடிப்பு உள்ளிட்ட சதிச்செயல்களில் ஈடுபட மூளைச்சலவை செய்து வைத்திருப்பதையும் கண்டுபிடுத்துள்ளனர்.
கோட்டை விட்ட தமிழக உளவுப்பிரிவு
பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பினர் தமிழகம் வந்து திருப்பூரில் பல மாதங்களாக தங்கி இருந்ததை தமிழக உளவு துறையினரும், சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார், தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் கியூ பிரிவு போலீசாரும் கோட்டை விட்டுள்ளனர். பலமுறை திருப்பூரில் வங்கதேசத்தில் இருந்து வந்துள்ள பலரும் அகதிகள் பெயரில் எந்த ஆவணங்களும் இன்றி பல்வேறு ரெடிமேட் ஆடை நிறுவனங்களில் பணியாற்றுவதாக உளவுத்துறையினருக்கு மத்திய உளவுத்துறை போலீசார் தகவல் கொடுத்தாலும் இதைப்பற்றி கவலைப்படாமல் விட்டுவிடுவதாக குற்றசாட்டு எழுந்துள்ளது.
முந்திக் கொண்ட மத்திய உளவுப்பிரிவு
டெல்லியைப்போல தமிழகத்திலும் இவர்கள் பயங்கரவாத சதிச் செயல்களில் ஈடுபட வாய்ப்பிருப்பதாகவும் மத்திய உளவுத்துறை போலீசார் எச்சரிக்கின்றனர். இதை உணர்ந்து தமிழக உளவுத்துறை போலீசார் இந்த சிறப்பு பிரிவு போலீசாரை முடுக்கிவிட்டு தமிழகத்தில் தீவிரவாதிகள், ஆதரவு குழுக்கள் பதுங்கியுள்ளாரா என கண்டுபிடித்து கைது செய்யவேண்டும். இல்லையேல் அசம்பாவித சம்பவங்கள் நடந்த பிறகு பதறுவதில் எந்த பயனும் இல்லை என்கிறது மத்திய உளவுத்துறை…