அமைச்சர் நேருவின் துறையில் ரூ. 365 கோடி லஞ்சம்: அமலாக்கத்துறையின் மற்றொரு கடிதம் “லீக்”

நகராட்சி நிர்வாக துரையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் தலைமை செயற்பொறியாளர் உள்ளிட்டோருக்கான இடமாறுதலில் அமைச்சர் கே.என்.நேரு மற்றும் உறவினர்கள், உதவியாளர்கள் மூலமாக 365 கோடியே 87 லட்சம் லஞ்சமாக பெற்றதற்கான ஆதாரங்களை தமிழக டிஜிபி வெங்கட்ராமனுக்கு அமலாக்கத்துறை ஆதாரங்களுடன் அனுப்பி உள்ளது.

இந்த கடிதத்தில் தரப்பட்டுள்ள ஆதாரங்கள் அடிப்படையில் அமைச்சர் நேரு உள்ளிட்டோர் மீது தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை மூலம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என 3-வது கடிதத்தை அனுப்பி இருப்பது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக சட்டசபை கூட்டத்தில் இருந்து கவர்னர் வெளிநடப்பு செய்துள்ள நிலையில் அமலாக்கத்துறை இந்த கடிதம் அனுப்பிய தகவல் வெளியாகி இருப்பதால் சட்டசபை கூட்டத்தில் பெரும் பிரச்சினை உருவாகும் எனவும் அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் அமைச்சராக பணியாற்றி வருபவர் கே.என். நேரு. இவரது வீட்டில் வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறையினர் கடந்த ஆண்டு அதிரடி சோதனை நடத்தி பல்வேறு முக்கிய ஆவணங்களையும் பறிமுதல் செய்தனர். இதோடு அமைச்சர் வீட்டில் இருந்து லேப்டாப் மற்றும் கம்ப்யூட்டர் ஹார்டு டிஸ்க்குகளையும் பறிமுதல் செய்தனர்.

இந்த நிலையில்தான் கடந்த டிசம்பர் மாதம் அமைச்சர் கே.என். நேருவின் நகராட்சி நிர்வாகம் மற்றும் உள்ளாட்சி துறையில் காலியாக இருந்த 2 ஆயிரத்து 568 பதவிகளை நிரப்புவதற்காக நடத்தப்பட்ட தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளது. தேர்வில் தோல்வி அடைந்தவர்களை வெற்றிபெற்றதாக அறிவித்து கிட்டத்தட்ட 343 பேரிடம் தலா ரூ.25 லட்சம் முதல் 35 லட்சம் ரூபாய் வரை லஞ்சமாக, அதுவும் ரொக்க பணமாக வசூலித்து பதவி வழங்கி உள்ளனர்.

இதற்காக அமைச்சர் மற்றும் குடும்பத்தினர், உதவியாளர்கள், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 888 கோடி ரூபாய் லஞ்சமாக வாங்கி உள்ளனர். தேர்வில் தோல்வி அடைந்து பதவி வழங்கப்பட்டதற்கான கடிதங்கள், வாட்ஸ் அப் தகவல் பரிமாற்றங்கள் மற்றும் லஞ்ச பணத்தை கொடுக்க 10 ரூபாய் நோட்டில் ரகசிய குறியீடு போட்டு அனுப்பியது உள்ளிட்ட 252 பக்க ஆதாரங்களுடன் அமலாக்கத்துறை தமிழக டிஜிபி வெங்கட்ராமனுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தனர். இந்த ஆதாரங்கள் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என அமலாக்கத்துறை அதிகாரிகள் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தனர்.

இந்த கடிதம் பத்திரிக்கைகளில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த கடிதத்தின் அடிப்படையில் விசாரணை நடத்த மேலிடம் அனுமதி வழங்கவில்லை. இதனால் மாத கணக்கில் டிஜிபி வெங்கட்ராமன் கடிதத்தை கிடப்பில் போட்டுவிட்டு அரசின் அனுமதிக்காக அனுப்பி வைத்தார். அனுமதி வழங்க வேண்டிய தலைமை செயலாளர் அனுமதி தராமல் நிறுத்தி வைத்திருந்தார். இந்த நிலையில் மீண்டும் அமைச்சர் நேருவின் துறையில் 3 ஆண்டுகளாக டெண்டர் விடுவதில் கான்ட்ராக்டர்களிடம் இருந்து 7.5 சதவிகிதம் முதல் 10 சதவிகிதம் வரை லஞ்சமாக ஆயிரத்து 20 கோடி ருபாய் லஞ்சமாக பெற்றதற்கான ஆதாரங்களை அனுப்பி இந்த ஆதாரங்கள் அடிப்படையிலும் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என அமலாக்கத்துறை கோரியிருந்தது.

ஆனால் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்த மறுநிமிடமே அமலாக்கத்துறை இந்த வழக்கில் உள்ளே புகுந்து தங்கள் சார்பில் அந்நியச்செலாவணி முறைகேடு பிரிவில் அமைச்சர் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்வதோடு கைது நடவடிக்கைகளிலும் ஈடுபடும். அமைச்சர் கைதோடு நிற்காமல் பணத்தை மேலிட முக்கிய பிரமுகரிடம் கொடுத்ததற்காக ஆதாரங்களையும் அமலாக்கத்துறை கைப்பற்றி உள்ளதால் மேலிட குடும்ப உறுப்பினரும் சிக்கிக்கொள்வார் என்பதால் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை மூலம் வழக்கு பதிவுசெய்ய அனுமதி வழங்காமல் ஆளும்கட்சி மேலிடம் தடுத்து வைத்திருந்தது. இந்த 2 கடிதங்கள் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என அதிமுக வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளரும், எம்.பி.யான இன்பத்துறை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

உடனே தமிழக அரசு இந்த இரண்டு கடிதங்கள் அடிப்படையில் முதல்கட்ட விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்பு துறைக்கு அனுமதி வழங்கியது. ஆனால் இதுவரை லஞ்ச ஒழிப்புத்துறை எந்த வழக்கும் பதிவு செய்யவோ, விசாரணை நடத்தவோ முன்வரவில்லை. இந்த நிலையில்தான் தமிழக டிஜிபி வெங்கட்ராமனுக்கு அமலாக்கத்துறை மூன்றாவது கடிதம் ஒன்றை கடந்த 14-ம் தேதி அனுப்பி உள்ளது. இந்த கடிதத்தில் அமைச்சர் நேருவின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் தலைமை செயற்பொறியாளர் மற்றும் உதவி செயற்பொறியாளர் பதவிகளில் இடமாற்றம் செய்ய அதிகாரிகளிடம் இருந்து தலா 25 லட்சம் முதல் ரூ.1 கோடிக்கு மேல் லஞ்சமாக பெற்று இடமாற்றம் செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளது.

அமைச்சர் நேருவின் உதவியாளர்கள் மற்றும் சகோதரர், குடும்பத்தார் செல் போன் எண்களில் இருந்து இடமாற்றம் செய்யவேண்டிய செயற்பொறியாளர் பட்டியலும், இதற்கு பெறப்பட்ட லஞ்ச பணம் குறித்த தகவல்களும் இடம்பெற்றுள்ளன. இந்த தகவல் பரிமாற்றம் செல்போன் வாட்ஸ் அப் தகவல் மூலம் நடந்துள்ளது. இதன்மூலம் கிட்டத்தட்ட ரூ. 365 கோடியே 87 லட்சம் ரொக்க பணமாக பெற்று சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்த பணத்தை அமைச்சர் நேரு குடும்பத்திற்கு சொந்தமான டிவிஎச் கட்டுமான நிறுவனம் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் மூலம் 223 கொடியும், முதலீடுகள் வழியாக 36 கோடியும், பினாமி நிறுவனங்கள் மூலம் 58 கோடியும், தங்க முதலீடு வழியாக 2 கோடியே 33 லட்சமும், வெளிநாட்டு சொத்துக்கள் மூலம் 44 கோடியும், ஆடம்பர செலவினங்களுக்கு 75 லட்சம் என மொத்தம் 365 கோடியே 87 லட்சம் ருபாய் சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்யப்பட்டதற்கான ஆவணங்கள் கிடைத்துள்ளது.

மேலும் 50 கோடி ரூபாய்க்கு ஹோட்டல் வாங்குவது, அமெரிக்காவில் 34 ஏக்கரில் 70 கோடிக்கு சொத்து வாங்குவதற்கான ஒப்பந்தம் உள்ளிட்டவைகள் நடந்துள்ளதற்காண ஆவணங்களும் கிடைத்துள்ளது. எனவே சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்ய வேண்டும். வழக்கு பதிவு செய்வதில் லஞ்சஒழிப்பு துறை தாமதம் காட்டினால் குற்றவாளிகள் ஆதாரங்களை அளிப்பதற்கு அவகாசம் கொடுத்ததுபோலாகிவிடும் என கடிதத்தில் அமலாக்கத்துறை கூறி உள்ளதாம்.

இந்த கடிதத்தில் இடம்பெற்றுள்ள வாசகங்களும் பத்திரிக்கைகளில் வெளியாகி தமிழக அரசியலில் மீண்டும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உளள்து என்றே கூறலாம். தமிழக சட்டசபை கூட்டம் கவர்னர் உரையுடன் தொடங்கியது. சட்டசபையில் தேசிய கீதம் இசைக்க வேண்டும் என கவர்னர் கேட்டபோது சபாநாயகர் அப்பாவு மறுத்ததால் கவர்னர் உரையை படிக்காமல் புறக்கணித்து சட்டசபையை விட்டு கவர்னர் ஆர்.என்.ரவி புறக்கணிப்பு செய்தார்.

இந்த நிலையில்தான் அமலாக்கத்துறை அமைச்சர் நேரு மீதான 3-வது ஊழல் புகார் கடிதத்தை ஆதாரங்களுடன் வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கவர்னர் உரை மற்றும் 110 சட்ட விதிகளின் கீழ் முதல்வர் ஸ்டாலின் முக்கிய அறிவிப்புகளை சட்டசபை தேர்தலை ஒட்டி வெளியிட்டு தேர்தல் பிரச்சாரமாக மாற்ற திட்டமிட்டிருந்த நிலையில் அமலாக்கத்துறை சட்டசபை கூட்டத்தை போர்க்களமாக மாற்றும் வகையில் இந்த கடிதத்தை லீக் செய்துள்ளது. ஏற்கனவே ஆயிரத்து 920 கோடி ருபாய் அளவிற்கு லஞ்சம் வாங்கிய கடிதங்கள் லீக்கான நிலையில் தற்போது 365 கோடிக்கு லஞ்சம் வாங்கி வெளிநாட்டில் சட்டவிரோதமாக முதலீடு செய்யப்பட்டதற்கான ஆதாரங்களையும் வெளியிட்டுள்ளது.

இதனால் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை இந்த ஆதாரங்கள் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்காவிட்டால் டிஜிபி உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அமலாக்கத்துறை உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தை அணுகும். நீதிமன்றங்களும் இந்த ஆதாரங்கள் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டதும் அமலாக்கத்துறையும் வழக்கை கையில் எடுத்து கைது உள்ளிட்ட நடவடிக்கைகளை ஈடுபடும்.

சட்டசபை கூட்டத்திலும் இந்த பிரச்சினை கண்டிப்பாக எதிரொலிக்கும். அமைச்சர் நேரு மீதான ஊழல் புகார் குறித்து சட்டசபையில் அதிமுக, பாஜக மற்றும் கூட்டணி கட்சிகள் பிரச்சினையை எழுப்பி வழக்கு பதிவு செய்யும்படியும், அமைச்சர் நேரு பதவியை உடனே ராஜினாமா செய்யும்படியும் கோரிக்கை வைப்பார்கள். இதற்கு அரசு மறுப்பதோடு, இவர்களை குண்டுக்கட்டாக வெளியில் தூக்கி வீசும் சம்பவங்களும் நடந்தேறும். வரும் 24ம் தேதி வரை சட்டசபை கூட்டம் நடத்தப்பட உள்ள நிலையில் இப்பிரச்சினையால் சட்டசபையும் போர்க்களமாக மாறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆளும்கட்சிக்கு அமலாக்கத்துறை மூலம் அதிர்ச்சி வைத்தியம் கொடுக்க மத்திய அரசு தயாராகிவிட்டதையே இது காட்டுவதாகவும், இது ஆளும்கட்சிக்கு பெரும் பின்னடைவாகவே முடியும் எனவும் அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

Comments (0)
Add Comment