திமுக கூட்டணி வேண்டாம்: காங்., கட்சியில் கடும் எதிர்ப்பு

வரும் சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் சேராமல் தமிழக வெற்றிக்கழகத்துடன் சேர்ந்து போட்டியிட வேண்டும் என தமிழக காங்கிரஸ் கட்சியில் எழுந்துள்ள பலத்த குரல் இதுவரை திமுக தயவோடு ஆட்சி, அதிகாரத்தை அனுபவித்து வந்த தமிழக காங்கிரஸ் தலைவர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி சில தலைவர்களின் தவறான வழிகாட்டுதல்களால் தேய்ந்துகொண்டுள்ளது என கரூர் மாவட்ட எம்.பி. ஜோதிமணி வெளிப்படையாக வெளியிட்டுள்ள அறிக்கை காங்கிரஸ் கட்சியில் பெரும் பூகம்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

திமுகவுடன் எக்காரணம் கொண்டும் வரும் தேர்தலில் கூட்டணி சேராமல் விஜய்யுடன் கூட்டணி சேர வேண்டும் என்ற குரல் காங்கிரஸ் கட்சியில் பல மடங்காக அதிகரித்திருப்பது திமுக மேலிடத்திற்கு கடும் எரிச்சலையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பல்வேறு தேர்தல்களிலும் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி தேர்தல் கூட்டணி அமைத்து போட்டியிட்டு வருகிறது. கடந்த தேர்தலிலும் திமுக உடன் கூட்டணி சேர்ந்து எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களை பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியானது வரும் சட்டசபை தேர்தலிலும் திமுகாவுடன்தான் கூட்டணியில் சேரும் என்ற பேச்சுதான் பரவலாக இருந்தது. இதற்கு ஏற்றாற்போல காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வ பெருந்தகை திமுக ஆட்சிக்கு ஆதரவாகவே பேசுவதும், நடந்துகொள்வதுமாக இருக்கிறார். திமுக ஆட்சிக்கு எதிராக எந்த இடத்திலும் செல்வப்பெருந்தகை பேசியதில்லை.

வரும் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு அதிக இடங்கள் ஒதுக்க வேண்டும் என கட்சியின் சட்டசபை தலைவர் ராஜேஷ்குமார் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கருத்து கூறிவந்தபோதும் இதுபற்றி செல்வப்பெருந்தகை வாய் திறந்ததே கிடையாது. இதற்கு காரணம் திமுக ஆட்சியில் காங்கிரஸ் கட்சியில் உள்ள மற்ற தலைவர்களைவிட செல்வப்பெருந்தகை பல்வேறு சலுகைகளை அனுபவித்து வருவதுதான் என்கின்றனர் காங்கிரஸ் தலைவர்கள். இந்த நிலையில்தான் கரூரில் விஜய் கட்சி சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் திமுக கூட்டணி கட்சிகளான கம்யூனிஸ்ட், மதிமுக, விடுதலை சிறுத்தை கட்சி உள்ளிட்டவை நடிகர் விஜய்க்கு எதிராக குரல் கொடுத்தனர்.

குறிப்பிட்ட நேரத்தில் விஜய் கூட்டத்தில் பங்கேற்காததுதான் இந்த உயிரிழப்புகளை காரணம் என குற்றம்சாட்டி பேசினார். ஆனால் காங்கிரஸ் கட்சி முக்கிய தலைவரான ராகுல் காந்தி நடிகர் விஜய்யை தொடர்புகொண்டு பேசி ஆறுதல் கூறியதாக வெளியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டது. ராகுல்காந்தியே விஜய்யுடன் பேசியதாக வெளியான தகவல்களால் தமிழக காங்கிரசார் விஜய்க்கு எதிராக பேசாமல் அமைதிகாத்துவிட்டனர். இது ஆளும்கட்சியான திமுகவிற்கு கடும் கோபத்தை ஏற்படுத்திவிட்டது.

வரும் சட்டசபை தேர்தலில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக, பாஜக கூட்டணியைவிட திமுகவையும், அக்கட்சி தலைவரும், முதல்வருமான ஸ்டாலினை கடுமையாக விமர்சித்து வருவது விஜய்தான். மேலும் விஜய்க்கு சேரும் அதிக கூட்டம் ஓட்டாக மாறினால் வரும் சட்டசபை தேர்தலில் திமுக ஆட்சியை பிடிப்பதில் பெரும் சிக்கல் ஏற்படும் என உளவுத்துறை கொடுத்த அறிக்கையால் கரூர் சம்பவத்தை வைத்து விஜய் பிரசாரம் மற்றும் கட்சி நடவடிக்கைகளை முடக்கிப்போடும் நடவடிக்கையில் ஆளும்கட்சி தீவிரம் காட்டியது. ஆனால் கூட்டணி கட்சியான காக்ரேஸ் கட்சி ஆளும்கட்சிக்கு ஆதரவாக குற்றம் கொடுக்காமல் அமைதி காத்தது மேலிடத்திற்கு கடும் எரிச்சலையும், சந்தேகத்தையும் ஏற்படுத்தி இருந்தது.

இந்த நிலையில்தான் கடந்த 2 மாதங்களாக ராகுல் காந்திக்கு நெருக்கமான முக்கிய நபர்கள் நடிகர் விஜய்யை சந்தித்து பேசிவருவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. வரும் சட்டசபை தேர்தலில் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றி கலக்கம் கட்சியுடன் தேர்தலை சந்திக்க ராகுல் காந்தி விரும்புவதாக வெளியான தகவல் திமுக மேலிடத்திற்கு அதிர்ச்சியையும், கோபத்தையும் உருவாக்கி உள்ளது. தங்களுடன் கூட்டணி பேச ஒருபுறம் குழுவை அமைத்து முதல்கட்ட பேச்சுவார்தையையும் முடித்துவிட்டு மறுபுறம் ராகுல்காந்திக்கு நெருக்கமானவர்கள் விஜய்யை தொடர்ச்சியாக சந்தித்து பேசுவது ஏன்? என பேச்சுவார்த்தை குழுவில் முக்கிய பங்காற்றும் முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரம் உள்ளிட்ட தலைவர்களிடம் கொந்தளித்தது திமுக மேலிடம்.

இதனால் தர்மசங்கடத்திற்கு ஆளான ப. சிதம்பரம் உள்ளிட்டோர் வரும் தேர்தலிலும் திமுக கூட்டணியுடன்தான் தேர்தலை சந்திக்க போவதாக பேட்டியளித்தார். இதன்பிறகும் கூட ராகுல்காந்தியின் நண்பரான பிரவீன் சக்கரவர்த்தி என்பவர் தமிழகம் இந்தியாவில் அதிக கடன்பெற்ற மாநிலமாக மாறி அதிக வட்டி செலுத்தும் மாநிலமாக மாறிவிட்டது என பேட்டியளித்தார். இதனால் கடும் ஆவேசமடைந்த திமுக மேலிடம் திமுக பேச்சாளர் மூலம் பிரவீன் சக்கரவர்த்திக்கு கடுமையான வார்த்தைகளால் பதிலடி கொடுக்க வைத்தனர்.

இந்த நிலையில்தான் கரூர் மாவட்ட காங்கிரஸ் எம்.பி.யான ஜோதிமணி வெளியிட்ட அறிக்கையில் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் நிலைமை மிகவும் மோசமாகிக்கொண்டே செல்கிறது. சில கட்சி தலைவர்களின் நடவடிக்கைகளால் காங்கிரஸ் கட்சி தனது செல்வாக்கை பெருமளவு இழந்துவிட்டது என அறிக்கை ஒன்றை வெளியிட்டது ஆளும்கட்சியிலும், காங்கிரஸ் காட்சியிலும் பெரும் பூகம்பத்தை ஏற்படுத்திவிட்டது. ஒரு சிலரின் சுயநலத்துக்காக, தமிழக காங்கிரஸ் கொஞ்சம் கொஞ்சமாக அழிவின் பாதையில் சென்று கொண்டிருக்கிறது’ என, கரூர் காங்கிரஸ் எம்.பி., ஜோதிமணி ஆவேசமாக குற்றம் சாட்டி அறிக்கையில் கூறியுள்ளார்.

அவரது அறிக்கையில் எந்த ஒரு அரசியல் கட்சியும், தன் கட்சி எம்.பி.,யை, தேர்தல் நேரத்தில், தேர்தல் கமிஷனுக்கு, ஓட்டுச்சாவடி முகவர் பட்டியலைக்கூட கொடுக்க விடாமல் முடக்க நினைக்காது. ஆனால், காங்கிரஸ் கட்சியில் அது நடக்கிறது. தமிழக காங்கிரசில் நடக்கும் விஷயங்கள், மிகுந்த கவலை அளிப்பதாக உள்ளன. கொள்கை நிலைப்பாடுகளை, அரசியல் செயல்பாடுகளை நீர்த்து போகச் செய்ய நடக்கும் முயற்சிகள், மிகுந்த வேதனை அளிக்கின்றன. தினமும், தமிழக காங்கிரஸ், மக்கள் பிரச்னைகள் அல்லாத தவறான காரணங்களுக்காகவே செய்திகளில் அடிபடுகிறது. தமிழகம் எந்த காலத்திலும் இல்லாத ஒரு பேராபத்தை, மதவாத, பிரிவினைவாத, வன்முறை சக்திகளிடம் எதிர்நோக்கி உள்ளது.இந்த சூழலில், வரும் சட்டசபை தேர்தலை மிகக் கவனமாக கையாள வேண்டிய பொறுப்பு, அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் உள்ளது.

ஆனால், காங்கிரஸ் கட்சி அந்த மாபெரும் பொறுப்பை சரியாக உணர்ந்துள்ளதா என்கிற கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை. தமிழக காங்கிரசில் எவ்வித கட்டுப்பாடும் இல்லாமல் தொடரும் உட்கட்சி பிரச்னைகள், மிகுந்த மனச்சோர்வை ஏற்படுத்துகின்றன. சித்தாந்த ரீதியான அரசியலை வலுவாக முன்னெடுக்கவில்லை. மக்கள் பிரச்னைகள் குறித்து பேசாமல், வெறும் கூட்டல் – கழித்தல்களை மட்டுமே செய்து, ஒரு சிலரின் சுயநலத்துக்காக, தமிழக காங்கிரஸ் கொஞ்சம் கொஞ்சமாக அழிவின் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. இதை தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பு, நம் அனைவருக்கும் உள்ளது என்பதை, உண்மையான காங்கிரஸ் தொண்டர்கள் உணர வேண்டிய நேரம் இது. ராகுலின் தன்னலமற்ற, கொள்கை பிடிப்பு மிகுந்த, அச்சமற்ற அரசியலுக்கு, நேர் எதிரான பாதையில் தமிழக காங்கிரஸ் சென்று கொண்டிருக்கிறது. அவரது கடின உழைப்புக்கும், ஒப்பற்ற தியாகத்துக்கும், நாம் துரோகம் செய்ய முடியாது என அறிக்கையில் கூறியுள்ளார்.

இது முழுக்க முழுக்க தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மற்றும் முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரத்திற்கு எதிரான கருத்துக்கள்தான். இருவரும்தான் திமுகவுடன் மட்டுமே கூட்டணி என்ற முடிவில் உள்ளனர். ஆனால் தமிழகத்தில் திமுகவிடம் குறைந்த சீட்டுக்களை மட்டுமே பெற்று தேர்தலில் போட்டியிட்டால் கட்சியை வழக்க முடியாது. அதிக சீட்டுக்களை பெற்று ஆட்சி அதிகாரத்திலும் பங்குபெற வேண்டும். வரும் தேர்தலில் தமிழக வெற்றி கழகத்தின் தாக்கம் கண்டிப்பாக இருக்கும்.

எனவே வரும் தேர்தலில் தமிழக வெற்றி கழகத்துடன் சேர்ந்து போட்டியிட்டால் அதிக சீட்டுக்களை பெறுவதோடு, ஏற்கனவே விஜய் ஆட்சியிலும் பங்கு என வெளிப்படையாக கூறியிருப்பது கட்சியை வழக்க உதவும். எனவே வரும் தேர்தலில் விஜய்யுடன் கூட்டணி சேர வேண்டும் என்ற பல தலைவர்களின் விருப்பதையே இந்த அறிக்கையில் ஜோதிமணி தெரிவித்திருப்பதாக கட்சி நிர்வாகிகள் கூறுகின்றனர்.

ஆனால் எத்தனை சீட்டுக்கள் கொடுத்தாலும் வரும் தேர்தலில் திமுகவுடன் சேர்ந்துதான் தேர்தலை சந்திக்க வேண்டும் என்பதில் முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரம், தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வ பெருந்தகை, அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் உறுதியாக உள்ளனர். இவர்கள் ராகுலை கண்டிப்பாக திமுக கூட்டணிக்கு சம்மதிக்க வைத்துவிடுவார்கள் என நம்புகின்றனர். ஆனால் எம்.பி. ஜோதிமணி உள்ளிட்டோரோ பிரியங்கா காந்தி மூலமாக விஜய்யுடன் பேச்சுவார்த்தை நடத்தி தேர்தல் கூட்டணி அமைத்து போட்டியிட வேண்டும். இதன்மூலம் ஆந்திரா, புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட தென்மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி மீண்டும் அதிகாரத்தை கைப்பற்ற வாய்ப்பு கிடைக்கும் என வலியுறுத்தி வருகின்றனர்.

காங்கிரஸ் கட்சி தலைவர்களுக்கிடையே யாருடன் வரும் சட்டசபை தேர்தலை சந்திப்பது என்ற பிரச்சினை பல மடங்காகிவிட்டது. அதிக அளவிலான காங்கிரஸ் நிர்வாகிகள் விஜய்யுடன் கூட்டணி பெறுவதையே விரும்புவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஒருசிலரின் சுயலாபத்திற்காக காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சியை அடகு வைப்பதாக ஜோதிமணி கூறி இருப்பதும் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகையை குறிவைத்துதான் என்கிறது காங்கிரஸ் வட்டாரம். இந்த மோதல் நாட்கள் செல்ல செல்ல இன்னும் அதிகரிக்கும். இந்த விவகாரத்தால் கட்சியின் சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் கட்சியிலிருந்து விலகுவதாக கூறியுள்ளதோடு, விஜய்க்கு இளைஞர்கள் ஆதரவு பலமடங்கு அதிகரித்திருப்பதாக அறிக்கை வெளியிட்டிருப்பதும் ஆளும்கட்சி மேலிடத்திற்கு கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சண்டை இன்னும் அதிகரிக்கும். தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகைக்கு அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மட்டும்தான் ஆதரவாக உள்ளார். விஜய் கூட்டணியை எதிர்த்தால் இவரையே மற்ற ராகுல்காந்தி தயக்கம் காட்ட மாட்டார். கண்டிப்பாக விஜய்யுடன்தான் கூட்டணி என்பதில் காங்கிரஸ் உறுதியாக இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எம்.பி. ஜோதிமணியின் அறிக்கை திமுக மேலிடத்திற்கு கடும் அதிர்ச்சியையும், எரிச்சலையும் ஏற்படுத்தி உள்ளது. இது விரைவில் வெடிக்கும் என்கின்றனர் திமுக மேலிடத்தினர்.

Comments (0)
Add Comment