நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வளங்கள் துறையில் டெண்டர் விட்டதில் ஆயிரத்து 20 கோடி கமிஷன் என்ற பெயரில் அமைச்சர், அதிகாரிகள், அரசியல்வாதிகள் மட்டுமின்றி புரோக்கர்களாக செயல்பட்டு பல நூறு கோடியை லஞ்சமாக பெற்று சொத்துக்களை குவித்துள்ள ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை உடனடியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தும்படி சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பெஞ்ச் உத்தரவிட்டு ஒருவாரமாகியும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருப்பதால் தீர்ப்புக்கு பிறகு வழக்குப்பதிவு செய்தால் போதும் என மேலிடம் உத்தரவிட்டுள்ளது.
இதனால் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்யாமல் பதுங்கி உள்ளனர். சென்னை உயர் நீதிமன்றமே உத்தரவிட்ட பிறகும் வழக்கு பதிவு செய்யாத லஞ்சஒழிப்புத்துறை அதிகாரிகள் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவுசெய்ய கூறுவேன் என புகார்தாரரும், அதிமுக வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளருமான இன்பதுரை சார்பில் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதால் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளனர். மேலிட உத்தரவை கேட்பதா? உயர்நீதிமன்ற அவமதிப்பை சந்திப்பதா? என லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் புலம்பிக்கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் அமலாக்கத்துறை இயக்குனர் ராகுல் நவீன் சென்னைக்கு வருகை தருவதோடு 3 நாட்கள் தங்கி இருந்து பல்வேறு வழக்குகள் குறித்து ஆய்வு செய்வதாக வெளியாகி உள்ள தகவல் அமைச்சர், ஆளும்கட்சி மேலிடம் மட்டுமின்றி ஊழலில் துணைபோன ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கும் கடும் பீதியை ஏற்படுத்தி உள்ளது. இவரது வருகையின்போது பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் இருக்கும் என்கிறது அமலாக்கத்துறை வட்டாரங்கள். இதனால் பல்வேறு அதிரடி திருப்பங்களை இனி எதிர்பார்க்கலாம் என்கிறது அரசியல் வட்டாரங்கள்.
நகராட்சி நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு குடிநீர் வழங்கல் துறைக்கு பொறுப்பு வகிக்கும் அமைச்சர் நேருவின் வீடு, குடும்பத்தார் வீடு மற்றும் உதவியாளர்கள் வீடுகளில் வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை சோதனையின்போது பல்வேறு டிஜிட்டல் ஆவணங்கள், கம்ப்யூட்டர்களில் வைக்கப்பட்டிருந்த பல்வேறு ஆவணங்கள், அமைச்சரின் உதவியாளர்கள் மற்றும் அமைச்சரின் வலதுகரம்போன்று செயல்பட்ட முக்கிய நபர்களின் செல்போன் எண்களில் உள்ள வாட்ஸ் அப் உரையாடல்களில் பல்வேறு முக்கிய ஆதாரங்கள் சிக்கியது.
இந்த ஆதாரங்களில் அமைச்சர் நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் தனது சகோதரரின் துறைகளில் நடந்த பதவி நியமனம், தலைமை செயற்பொறியாளர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளின் இடமாற்றம், பல ஆயிரம் கோடி ருபாய் மதிப்புள்ள டெண்டர் விடப்பட்டதில் பல முக்கிய அதிகாரிகள், அரசியல்வாதிகள், தனியார் கான்ட்ராக்டர்களுடன் வைத்திருந்த தொடர்பு, டெண்டர் விட்டதில் பெற்ற பல ஆயிரம் கோடி லஞ்ச பணம் ஆகியவைகளுக்கான உரையாடல்கள், ஆதாரங்களையும் அமலாக்கத்துறை கைப்பற்றியது.
இந்த ஆதாரங்களோடு அமைச்சரின் துறை சார்பாக விடப்பட்ட பல்வேறு டெண்டர்களிலும் ஆளும்கட்சி முக்கிய பிரமுகர்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், கூட்டணி கட்சி தலைவர்கள் ஆகியோரோடு 3 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும், முக்கிய துறைகளில் பணியாற்றும் 3 ஐ.பி.எஸ். அதிகாரிகளும் தலையிட்டு தங்களுக்கு வேண்டப்பட்ட கான்ட்ராக்டர்களுக்கு பல ஆயிரம் கோடி மதிப்புள்ள டெண்டர்களை பெற்றுத்தரும் முயற்சியில் ஈடுபட்டு பல கோடி லஞ்சமாக பெற்றதற்கான ஆதாரங்களும் கிடைத்தது.
இந்த ஆதாரங்கள் அடிப்படையில் 3 கடிதங்களை தமிழக பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமனுக்கு அமலாக்கத்துறை அனுப்பி வழக்கு பதிவு செய்யும்படி கேட்டும் விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின்போது பதில் அனுப்பியது.
இந்த நிலையில்தான் கடந்த வியாழக்கிழமை அதிமுக எம்.பி.யும், அதிமுக வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளருமான இன்பதுரை தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை உடனடியாக வழக்கு பதிவு செய்வதோடு, எந்த அழுத்தமும் இல்லாமல் வழக்கு விசாரணையை தொடங்க வேண்டும் என தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு அதிரடி தீர்ப்பு வழங்கியது.
இதனால் லஞ்ச ஒழிப்புத்துறை உடனடியாக வழக்கு பதிவு செய்யும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஒருவாரமாகியும் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்யாமல் காலம்கடத்தி வருகிறது. இதுகுறித்து லஞ்சஒழிப்புத்துறை வட்டாரத்தில் விசாரித்தபோது உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் தமிழக அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
ஆனால் இந்த வழக்கை உச்சநீதிமன்றம் இன்னும் அனுமதிக்கவில்லை. வழக்கை எடுத்து விசாரணை நடத்தி தீர்ப்பு வழங்க சில வாரங்கள் ஆகும். எனவே உச்சநீதிமன்ற தீர்ப்பு வரும்வரை வழக்கு எதுவும் பதிவு செய்யவேண்டாம் என மேலிடம் டிஜிபி மூலம் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளதாம். இதனால்தான் இதுவரை வழக்கு பதிவு செய்யப்படவில்லை என்கிறது லஞ்ச ஒழிப்புத்துறை வட்டாரங்கள்.
வழக்கை தொடர்ந்த அதிமுக எம்.பி. இன்பதுரை லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் உயர்நீதிமன்றம் அமைச்சர் நேரு உள்ளிட்டோர் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்யும்படி கடந்த வாரமே தமிழக லஞ்ச ஒழிப்பு துறைக்கு உத்தரவு பிறப்பித்தது. ஆனால் இதுவரை லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்யவில்லை. இது உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது. நீதிமன்ற அவமதிப்புக்கு உள்ளக நேரிடும்.
மேலும் அமைச்சர்கள் உள்ளிட்டோருக்கு ஆதரவாக தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் செயல்பட்டு வழக்குப்பதிவு செய்யவில்லை. எனவே சி.பி.ஐ. லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யும்படி நீதிமன்றத்தில் வழக்கு தொடருவேன் என கடிதம் அனுப்பியுள்ளார். ஒருபுறம் வழக்கு பதிவு செய்யக்கூடாது என மேலிடம் நெருக்கடி கொடுத்துவரும் நிலையில் மறுபுறம் சி.பி.ஐ. அதிகாரிகளிடம் புகார் செய்வேன் என எம்.பி. இன்பதுரை அனுப்பியுள்ள கடிதம் லஞ்சஒழிப்புத்துறை அதிகாரிகளை பீதிக்கு உள்ளாக்கி உள்ளது.
இந்த நிலையில்தான் அமலாக்கத்துறை தலைவரும், இயக்குனருமான ராகுல் நவீன் சென்னைக்கு 3 நாள் பயணமாக வருகை தந்துள்ளார். இவர் சென்னை அமலாக்கத்துறை அலுவலகத்தில் 3 நாட்கள் இருந்து ஏற்கனவே அமலாக்கத்துறை சார்பில் தொடரப்பட்ட வழக்குகள் மற்றும் சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பான நிலுவை வழக்குகள் தொடர்பாக ஆய்வு செய்ய வந்திருப்பதாக அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவித்தனர்.
ஆனால் உயர்நீதிமன்றம் அமைச்சர் நேரு மற்றும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டுள்ள நிலையில் வழக்கு பதிவு செய்யப்பட்டால் அமலாக்கத்துறை செயல்பட வேண்டிய முக்கிய பணிகள் குறித்து ஆய்வு செய்து முக்கிய உத்தரவுகளை பிறப்பிக்கவே இவர் சென்னைக்கு வருகை தந்துள்ளதாக அமலாக்கத்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.
தற்போதைய சூழ்நிலையில் இவரது வருகை மிகவும் முக்கியத்துவம் பெற்றதாக கருதப்படுகிறது. கண்டிப்பாக அமலாக்கத்துறை மூலம் தமிழக அரசுக்கும், ஆளும்கட்சி மேலிடம், அமைச்சர் தரப்பு மட்டுமின்றி இந்த மெகா ஊழல்களுக்கு துணைபோன ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் உள்ளிட்டோர் மீது கடும் நடவடிக்கைகள் பாயும். உள்துறை அமைச்சர் அமித்ஷாவே இந்த வழக்கில் நேரடியாக கண்காணித்து வருவதாகவும் உள்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.
மேலும் தற்போது அமலாக்கத்துறை தென்மண்டல அலுவலகத்தில் பணியாற்றும் சில உயர் அதிகாரிகள் ஆளும்கட்சி அமைச்சர்கள் மற்றும் மேலிடத்திற்கு ஆதரவாக செயல்பட்டுவருவதாகவும், அமலாக்கத்துறை எடுக்கும் நடவடிக்கைகள் மேலிடத்திற்கு முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டுவிடுவதால் மேலிடமும், அமைச்சர்களும் முந்திக்கொண்டு தப்பித்துவிடுகின்றனர்.
எனவே தென்மண்டல உயர் அதிகாரிகள் உள்ளிட்டோரை கூண்டோடு வேறு மாநிலங்களுக்கு மாற்றிவிட்டு அமைச்சர் நேரு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளிலும் குஜராத்தில் பணியாற்றும் உயர் அதிகாரிகள் சிலரை தமிழகத்திற்கு இடமாற்றம் செய்து வழக்கில் அதிரடி நடவடிக்கையை எடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதனால் தமிழக ஆளும்கட்சி மேலிடம் மட்டுமின்றி இந்த மெகா ஊழலுக்கு துணைபோய் பல நூறு கோடியை அல்ல பல ஆயிரம் கோடியை சம்பாதித்துள்ள ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளும் ஆடித்தான் போயுள்ளாராம்.
உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்க செய்யப்பட்டாலும் இந்த வழக்கில் தடையுத்தரவு கிடைக்க வாய்ப்பில்லை. கண்டிப்பாக உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் தீர்ப்பின்படி உடனே வழக்கு பதிவு செய்ய்வதுடன், குறிப்பிட்ட காலத்திற்குள் அறிக்கையை தாக்கல் செய்யும்படி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கும். இதனால் ஆளும்கட்சி மேலிடத்தின் அமைச்சர் மற்றும் குடும்பத்தார், உதவியாளர்கள், ப்ரோக்கர்களாக செயல்பட்ட ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளும் அமலாக்கத்துறை பிடியில் சிக்கி சின்னாபின்னமாவது உறுதி என்றும் அமலாக்கத்துறை வட்டாரங்கள் பரபரப்பான தகவல்களை கூறியுள்ளது. இனி வரும் வாரம் அதிரடி வாரம் என்றே கூறலாம். தேர்தல் அறிவிப்பு வெளியாக உள்ள நிலையில் அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சி.பி.ஐ. உள்ளிட்ட துறைகளின் நடவடிக்கைகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என்கிறது கோட்டை வட்டாரங்கள்….