அமைச்சர் நேரு மீதான அமலாக்கத்துறை வழக்கு, மணல் கடத்தல் தொடர்பான வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளும் நீதிமன்ற உத்தரவுக்காக காத்துக்கொண்டுள்ள நிலையில் சென்னையில் அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் குவிக்கப்பட்டு வருவதாக வெளியான தகவல்களால் ஆளும்கட்சி மேலிடம், அமைச்சர்கள் மட்டுமின்றி ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும், காவல்துறை உயர் அதிகாரிகளும் பீதிக்கு உள்ளாகி உள்ளனர். கடந்த அதிமுக ஆட்சியில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தலைமை செயலகத்திற்குள் நுழைந்ததைப்போல இந்தமுறையும் தலைமை செயலகத்திற்குள் அமலாக்க துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தவே சென்னையில் குவிக்கப்பட்டுள்ளதாக ரகசிய தகவல்கள் வெளியாகி உள்ளது.
நகற்றாட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் பதவி நியமனத்தில் 888 கோடி லஞ்ச பணம் வாங்கியது மற்றும் இதே துறையில் கடந்த 2021-ம் ஆண்டு முதல் 2 ஆண்டுகள் விடப்பட்ட பல்வேறு பணிகளுக்கான டெண்டரில் 7.5 சதவிகிதம் முதல் 10 சதவிகிதம் வரை அமைச்சர், ஐ.எஸ்.எஸ். அதிகாரிகள், அமைச்சரின் உதவியாளர்கள், அமைச்சரின் சகோதரர், குடும்பத்தார் பெற்ற ஆயிரத்து 20 கோடிக்கான முக்கிய ஆவணங்கள் அமலாக்கத்துறை சோதனையில் கிடைத்தது. இந்த ஆவணங்கள் அடிப்படையில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தும்படி 258 பக்க ஆதாரங்களுடன் அமலாக்கத்துறை தமிழக டிஜிபி வெங்கட்ராமனுக்கு 2 மாதத்திற்கு முன்பு கடிதம் அனுப்பியிருந்தது.
ஆனால் ஆளும்கட்சி அமைச்சருக்கு எதிராக வழக்கு பதவிவு செய்ய எந்த அதிகரிக்குதான் துணிச்சல் இருக்கும்… எனவே வழக்கம்போல இந்த 2 கடிதங்களையும் டிஜிபி அலுவலகத்தில் கிடப்பில் போட்டு வைக்கும்படி மேலிடம் போட்ட உத்தரவால் கிடப்பில் போடப்பட்டது. ஆனால் அதிமுக சார்பில் அமலாக்கத்துறை அனுப்பிய புகாரில் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்க வேண்டும் என வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளரும், எம்.பி.யான இன்பதுரை சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த தகவல் கிடைத்ததும் அவசரமாக தமிழக அரசு இந்த மனுவை டிஜிபியிடம் இருந்து பெற்று லஞ்ச ஒழிப்புத்துறை முதல்கட்ட விசாரணை நடத்தும்படி பெயருக்கு உத்தரவிட்டது.
உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்ததும் மனு மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என கேள்வி எழும் என்பதால் சட்ட நிபுணர்கள் ஆலோசனைப்படி லஞ்ச ஒழிப்பு விசாரணைக்கு அரசு உத்தரவிட்டது. ஆளும்கட்சி அமைச்சர் மீதான வழக்கு விசாரணை எந்த அளவிற்கு நேர்மையாகவும், விரைவாகவும் லஞ்ச ஒழிப்பு துறையால் எடுத்துக்கொள்ளப்படும் என்பது வெளிப்படையாக தெரிந்த ஒன்றே. முதல்கட்ட விசாரணை நடத்துவதாக கூறி சில மாதங்களை கடத்தினால் மார்ச் மாதம் தேர்தல் அறிவிப்பு வெளியானால் தேர்தலுக்கு பிறகு இந்த விசாரணையை எப்படி மேற்கொள்வது என தேர்தல் முடிவை பொறுத்து முடிவெடுத்துகொள்வோம்.
ஏனென்றால் இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவுசெய்த மறுநிமிடமே அமலாக்கத்துறை வழக்கை தான் எடுத்து சோதனை, விசாரணை, கைது என அடுத்தடுத்த நடவடிக்கைகளில் ஈடுபடும். இதனால் ஆளும்கட்சிக்கு மிகப்பெரிய சிக்கல் ஏற்படும் என்பதால் இந்த கண்துடைப்பு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக டிஜிபி அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இந்த வழக்குதான் திமுகவிற்கு மத்திய பாஜக வைத்துள்ள மிகப்பெரிய செக்.
இந்த வழக்கில் அனைத்து ஆவணங்களும் ஏற்கனவே அமலாக்கத்துறை கைவசம் உள்ளதால் சோதனை நடத்திவிட்டு அமைச்சர் கைது மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கைது, அமைச்சர் குடும்பத்தினர், உதவியாளர்கள் கைது மற்றும் லஞ்சம் கொடுத்த காண்ட்ராக்டர் கைது என தொடர் கைது சம்பவங்களில் அமலாக்கத்துறை மாஸ் காட்டத்தொடங்கிவிடும். இதன் மூலம் ஆளும்கட்சி மிகப்பெரிய சிக்கலுக்கும், அவப்பெயருக்கு உண்டாகும் என மத்திய பாஜக தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
இந்த நிலையில்தான் கடந்த 2 நாட்களுக்கு முன்பே டெல்லியில் இருந்து அமலாக்கத்துறை, வருமான வரித்துறை உள்ளிட்ட பல்வேறு துறையில் இருந்து உயர் அதிகாரிகள் கொண்ட பெரிய அளவிலான அதிகாரிகள் சென்னைக்கு வந்து குவிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இவர்களில் ஒரு பிரிவினர் அமைச்சர் வீடு, உறவினர்கள் வீடுகள் , டெண்டர் உள்ளிட்ட பல்வேறு அரசு விஷயங்களிலும் பணத்தை வாங்கி பல்வேறு இடங்களில் குவித்து வைத்துள்ள ஆளும்கட்சி மேலிடத்தின் குடும்ப உறுப்பினர்கள் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தப்போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
மற்றொரு குழு மத்திய போலீசார் உதவியுடன் தலைமை செயலகத்தில் அமைச்சர், அதிகாரிகள் அறைகளில் அதிரடி சோதனை நடத்தப்போவதாகவும் மிக முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. எந்த நேரத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தலைமை செயலகத்தில் சோதனை நடத்த திட்டமிட்டுள்ளதாக மத்திய அதிகாரிகள் மூலம் தமிழகத்தில் உள்ள சில உயர் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.
இது ஒட்டுமொத்த தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மற்றும் சீனியர் ஐ.பி.எஸ். அதிகாரிகளை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. நகராட்சி நிர்வாக துறையில் நடந்த ஊழலில் சீனியர் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கும், முதல்வர் அலுவலக அதிகாரிகள் சிலருக்கும் தொடர்பு இருப்பதையும் அமலாக்கத்துறை கண்டுபிடித்துள்ளது. எனவே இந்த அதிகாரிகளின் அலுவலகங்கள், வீடுகளிலும் சோதனை நடத்தப்படும் எனவும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.
திமுக ஆட்சியை பொறுத்தவரை முதல்வர், அமைச்சர்கள் ஆட்சி நிர்வாகத்தை நடத்துவதற்கு பதிலாக முதல்வரின் உதவியாளர், முதல்வர் அலுவலக செயலர்கள், தலைமை செயலாளர், நிதித்துறை செயலாளர், காவல்துறையில் உள்ள 3 சீனியர் அதிகாரிகள்தான் வழிநடத்திச்செல்வது வெளிப்படையாக தெரிந்த ஒன்று. அமைச்சர்களைவிட இந்த அதிகாரிகள் சொல்வதைத்தான் முதல்வர் கேட்டு நடப்பதாகவும் ஏற்கனவே புகார்கள் எழுந்ததுண்டு.
எனவே இந்த மோசடிகளும் இவர்கள் துணை இல்லாமல் நடந்திருக்காது. எனவே இந்த ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளும் இந்த லஞ்சம் மற்றும் கமிஷன் விவகாரத்தில் சிக்குவது உறுதி. உயர்நீதிமன்றம் இந்த வாரத்தில் வழக்கு தொடர்பாக விசாரணையை தொடங்கி வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டதும் இந்த அதிரடி சோதனையும் தொடங்கும்.
இந்த சோதனையோடு டாஸ்மாக், மணல் கடத்தல் உள்ளிட்ட வழக்குகளிலும் உச்சநீதிமன்றத்தின் உள்ள தடை உத்தரவை நீக்கி தொடர்ச்சியாக சோதனைகளும், கைது நடவடிக்கைகளும் 3 மாதங்களுக்கு பஞ்சமிருக்காது என்கின்றனர் மத்திய உளவுத்துறை உயர் அதிகாரிகள்…. எனவே வரும் 3 மாதங்களும் தமிழகத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கும் உறங்கா இரவுகள்தானோ…..