வன்முறையில் இறங்கிய தொழிலாளர்கள் போலீஸ் அதிகாரி உள்ளிட்டோர் மண்டை உடைப்பு

மாடிப்படியில் ஏறும்போது கால்தவறி கீழே விழுந்த வடமாநில தொழிலாளிக்கு இழப்பீடு வழங்க கோரி ஆயிரக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் குடியிருப்புகள் மீது கல்வீசியும், தாக்குதலிலும் ஈடுபட்டபோது தடுத்த துணை ஆணையர் உள்ளிட்ட போலீசாரையும் தாக்கி மண்டையை உடைத்தால் தடியடி நடத்தி விரட்டியடிக்க நேரிட்டது. போலீஸ் மீது தாக்குதல் நடத்திய 50-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர். வடமாநில தொழிலார்களின் தாக்குதல் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த கட்டுப்பள்ளியில் எல் அண்ட் டி கப்பல் கட்டும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த கப்பல் கட்டும் நிறுவனத்தில் பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர் . இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்களும் பணியாற்றி வருகின்றனர். இந்த நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளியாக பணியாற்றும் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த அம்ரேஷ் பிரசாத் என்பவர் 2 நாட்களுக்கு முன்பு இரவு வடமாநில தொழிலார்கள் தங்கியுள்ள வீட்டின் மாடியில் ஏறும்போது கால்தடுமாறி கீழே விழுந்துள்ளார். இதில் மண்டை உடைந்த அம்ரேஷ் பிரசாத்தை சிகிச்சைக்காக ஸ்டேன்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். ஆனால் வழியிலேயே அம்ரேஷ் பிரசாத் அதிக ரத்தம் வெளியேறியதால் உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து காட்டூர் போலீசார் வழக்கு பதிவுசெய்து உயிரிழந்த அம்ரேஷ் பிரசத்தின் உடலை கைப்பற்றி உடற்கூராய்விற்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த காட்டூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். உயிரிழந்த தொழிலாளி அம்ரேஷ் பிரசாத்தை உரிய நேரத்தில் சிகிச்சைக்கு அழைத்து செல்லாததால்தான் உயிரிழக்க நேரிட்டது. உயிரிழந்த அம்ரேஷ் பிரசாத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கூறி விசாரணைக்கு சென்ற போலீசாரை ஆயிரத்திற்கு மேற்பட்ட தொழிலார்களும் ஒன்றுகூடி முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். வடமாநில தொழிலாளர்கள் முற்றுகை போராட்டம் நடத்தியது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தரப்பட்டதும் ரெட் ஹில்ஸ் துணை ஆணையர் பாலாஜி தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கும்போதே வடமாநில தொழிலார்களில் ஒரு பிரிவினர் திடீரென போலீசார் மீதும், அங்குள்ள குடியிருப்புகள் மீதும் கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட தொடங்கினர். இவர்களது தாக்குதலில் இருந்து தப்பிக்க தடுப்புகளை போலீசார் அமைத்தபோதும் தொடர்ச்சியாக கற்களை வீசியும், அருகில் கிடந்த கான்க்ரீட் கற்களை வீசியதில் துணை ஆணையர் பாலாஜி உள்ளிட்டோர் கல்வீச்சில் காயமடைந்தனர். செய்தி சேகரிப்பில் ஈடுபட்ட செய்தியாளர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் துணை ஆணையர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்தனர். இதனால் போலீசார் தற்காப்பிற்காக கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இதன்பிறகும் வடமாநில தொழிலார்கள் கலைந்துசெல்ல மறுத்ததால் தடியடி நடத்தப்பட்டது. இதில் கலைந்து ஓடிய தொழிலார்கள் அங்குள்ள குடியிருப்புகள், அலுவலகத்தின் மீது கற்களை வீசி அட்டூழியத்தில் ஈடுபட்டனர். இதனால் போலீசார் தாக்குதலில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலார்களை கைது செய்து வேனில் ஏற்றி சென்றனர். தாக்குதலில் காயமடைந்த போலீசாரையும், வட மாநில தொழிலாளர்களையும் அம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்கு அழைத்துச்சென்றனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் ஆவடி மாநகர ஆணையர் சங்கர், கூடுதல் ஆணையர் பவானீஸ்வரி உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். தாக்குதல் குறித்தும், காயமடைந்தவர்கள் குறித்தும் விசாரணை நடத்தினர். இதையடுத்து பாதுகாப்பிற்கு மேலும் போலீசார் குவிக்கப்பட்டனர். தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது. செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர்களை செய்தி சேகரிக்க கூடாது என போலீசார் விரட்டி அடித்தனர். சென்னை மற்றும் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள தொழில் நிறுவனங்கள் மற்றும் பல்வேறு தனியார் நிறுவனங்களில் மட்டும் பல லட்சம் வடமாநில தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர்.

மாடிப்படியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்த தொழிலாளிக்கு இழப்பீடு வழங்க கோரி வடமாநில தொழிலாளர்கள் வன்முறையில் இறங்கிய சம்பவம் இப்பகுதியில் பெரும் பதட்டத்தை i ஏற்படுத்தி உள்ளது. இந்த வன்முறை பிற பகுதிகளிலும் பிறவாமல் தடுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Comments (0)
Add Comment