கணவனை வேலைக்கு அனுப்பி விட்டு ஆண் நண்பருடன் உல்லாசமாக இருந்த போது கையும், களவுமாக பிடித்ததோடு இருவரின் தலையையும் வெட்டி பஸ்ஸில் கொண்டு சென்று சிறைச்சாலை போலீசாரிடம் ஒப்படைத்து சரணடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கள்ளக்குறிச்சி அடுத்துள்ள மலைகோட்டாலம் கிராமத்தை சேர்ந்தவர் கொளஞ்சி. 60 வயதான இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். ஏற்கனவே காளியம்மாள் என்பவரை திருமணம் செய்து 3 குழந்தைகள் உள்ளனர். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 3 குழந்தைகளுடன் காளியம்மாள் கணவனை விட்டு பிரிந்து தனியாக வசித்து வருகிறார். இதனால் 2 ஆண்டுக்கு முன்பு கொளஞ்சி நாட்டார்மங்கலத்தை சேர்ந்த 40 வயதான லட்சுமி என்பவரை 2-வது திருமணம் செய்துகொண்டார்.
இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் களஞ்சியின் வீட்டு மொட்டை மாடியில் லட்சுமியும், 55 வயதான நபரும் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தனர். இதைப்பார்த்த அருகில் உள்ளவர்கள் அதிர்ச்சியடைந்து கள்ளக்குறிச்சி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து சென்று உடல்களை கைப்பற்றி விசாரணை நடத்தினர். உயிரிழந்த நபரின் அருகே கிடந்த செல்போனை எடுத்து போலீசார் விசாரித்தபோது உயிரிழந்து கிடந்த நபர் அதே பகுதியை சேர்ந்த 57 வயதான தங்கராசு என்பது தெரியவந்தது.
லட்சுமியுடன் தங்கராசுவின் தலையையும் துண்டித்து கொலை செய்ய வேண்டிய அவசியம் என் வந்தது? தங்கராசு எதற்காக லட்சுமியின் வீட்டிற்கு வந்தார்? என பல்வேறு கேள்விகள் எழுந்தது. போலீசார் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தது.
கொளஞ்சியை திருமணம் செய்த பிறகு அவரது வீட்டில் வசித்து வந்த லட்சுமிக்கும், அதே பகுதியை சேர்ந்த தங்கராசுவிற்கும் திருமணம் தாண்டிய உறவு ஏற்பட்டுள்ளது. கொளஞ்சி கூலி வேலைக்காக அடிக்கடி வெளியூருக்கு சென்றுவிடுவார். அப்போது தங்கராசுவை வீட்டிற்கே வரவழைத்த லட்சுமி திருமணம் தாண்டிய உறவை வைத்துக்கொள்வது வழக்கம். இந்த விவகாரம் கொளஞ்சிக்கு உறவினர்கள் மூலம் தெரியவந்தபோது ஆத்திரம் அடைந்தார். இதுபற்றி மனைவியை கண்டித்த தங்கராசு இருவரின் தொடர்பை விட்டுவிடும்படி கூறினார். ஆனால் லட்சுமி இந்த உறவை கைவிடாமல் தொடர்ந்துள்ளார்.
இதனால் இருவரையும் பழிதீர்க்க கொளஞ்சி முடிவெடுத்தார். இதன்படி 2 நாட்களுக்கு முன்பு வெளியூர் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு பக்கத்தில் உள்ள இடத்தில் மறைந்து இருந்துள்ளார். கணவன் வெளியூர் சென்றுவிட்டதாக கருதிய லட்சுமி இரவில் செல்போனில் தனது ஆண் நண்பரான தங்கராசுவை வரவழைத்துள்ளளார். இருவரும் மொட்டை மாடிக்கு சென்று திருமணம் தாண்டிய உறவில் ஈடுபட்டுள்ளனர்.
மறைந்திருந்து கண்காணித்துக்கொண்டிருந்த கொளஞ்சி ஆத்திரத்தில் கையில் அரிவாளை எடுத்துக்கொண்டு வீட்டின் மொட்டைமாடிக்கு வந்துள்ளார். வெளியூர் சென்றுவிட்டதாக கருதிய கணவன் கையில் அரிவாளுடன் நிற்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த லட்சுமி அங்கிருந்து தப்பி ஓட முயற்சித்தார். இவருடன் இருந்த ஆண்நண்பரான தங்கராசுவும் தப்பி ஓட முயற்சித்தார். ஆத்திரத்தில் இருவரையும் சரமாரியாக வெட்டிய கொளஞ்சி இருவரின் தலைகளையும் துண்டித்து பாலிதீன் பையில் போட்டு வீட்டில் இருந்த இருசக்கர வாகனத்தில் கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார்.
வேலூர் செல்லும் பேருந்தில் ஏறி வேலூர் மத்திய சிறைச்சாலைக்கு இருவரின் தலையுடன் சென்று அங்கிருந்த சிறை காவலர்களிடம் நடந்த சம்பவங்களை கூறி கையில் வைத்திருந்த இருவரது தலைகளையும் காட்டியுள்ளார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சிறைக்காவலர்கள் இதுகுறித்து கொளஞ்சியை அழைத்துக்கொண்டு பாகாயம் காவல் நிலையத்திற்கு சென்றனர்.
போலீசார் கொளஞ்சியை கைது செய்து கள்ளக்குறிச்சி மாவட்டம் வரஞ்சரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் பாகாயம் சென்று கொளஞ்சியை கைது செய்து 2 தலைகளையும் மீட்டு கொண்டுவந்தனர். கொலை செய்யப்பட்ட இருவரது உடல்களையும் மீட்டும் உடற்கூராய்விற்கு கள்ளக்குறிச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகாத உறவால் 3 குழந்தைகளும் அனாதையாகி நிற்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. இந்த இரட்டை கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.