தமிழக காவல் துறைக்கு பொறுப்பு டிஜிபியை அவசரமாக நியமிக்க வேண்டிய அவசியம் என்ன? நிரந்தர டிஜிபியை நியமிக்காதது ஏன் என உச்சநீதிமன்றத்தில் தமிழக டிஜிபி நியமனம் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் கிடுக்கி கேள்விகளை தலைமை நீதிபதி அமர்வு எழுப்பியது.
ட்ரிப்யூனலில் அதிகாரி தொடர்ந்த வழக்கு காரணமாகவே நிரந்தர டிஜிபியை நியமிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. டிஜிபி பட்டியலை மத்திய பணியாளர் தேர்வாணையத்திற்கு அனுப்பி வைத்துள்ளோம். மத்தியபணியாளர் தேர்வாணையத்தில் இருந்து பட்டியல் வந்ததும் டிஜிபி நியமனத்தை முடித்துவிடுவோம் என தமிழக அரசு பல்வேறு காரணங்களை கூறி “குட்டு ” வாங்கியதுதான் மிச்சம் என்கிறது டிஜிபி வட்டாரங்கள்.
தமிழக காவல்துறை பொறுப்பு வகிக்கும் டிஜிபி பதவிக்கு நிரந்தரமான டிஜிபியைக்கூட நியமிக்காமல் பொறுப்பு டிஜிபியை நியமித்து காவல்துறை வரலாற்றில் தமிழக அரசு ஒரு கரும்புள்ளியை ஏற்படுத்திவிட்டனர் என்ற பலமான குற்றசாட்டு எழுந்துள்ளது. உச்சநீதிமன்றம் வரை சென்று தமிழக அரசு தலைகுனிய வேண்டிய அவலத்தை உருவாக்கியது முதல்வர் நம்பும் சில ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள்தான் எனவும் அதிகாரிகள் குற்றம்சாட்டுகின்றனர். தமிழக அரசை ஆட்சி செய்வது அதிகாரிகளோ? ஆட்சியாளர்களா என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வெளிப்படையாக கோர்ட்டில் கேள்வி கேட்டதும் இப்போதைய ஆட்சியாளர்களிடம்தான்.
காரணம் முதல்வர் நம்பும் முதல்வரை சுற்றி நெருக்கமாக முக்கிய பதவிகளில் உள்ள சில ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளின் சுயநலத்தால் ஐ.எஸ்.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளிடையே பெரும் கொந்தளிப்பான சூழ்நிலை உருவாக்கி இருப்பதாக கோட்டை வட்டாரங்களும் கிசுகிசுக்கிறது.
தங்களுக்கு வேண்டப்பட்ட அதிகாரிகளுக்கு மட்டும் மிக முக்கியமான பதவிகளை இந்த உள்வட்ட அதிகாரிகள் வாரி கொடுப்பதாகவும், தகுதியான அதிகாரிகளை இவர்கள் புறக்கணிப்பதாகவும் கடந்த 4 ஆண்டுகளாகவே குற்றசாட்டுகள் இருந்து வருகிறது. இதனால் பல சீனியர் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கூட மத்திய அரசு பணிக்கு பறந்து சென்றுவிட்டனர்.
இதேபோல சீனியர் ஐ.பி.எஸ். அதிகாரிகளும் கடந்த 4 ஆண்டுகளாகவே மத்திய அரசு பணிக்கு சென்றுவிட்டனர். இதற்கு காரணம் திறமையான அதிகாரிகளுக்கு சட்டம் ஒழுங்கு பதவிகள் வழங்காமல் ஜாதி, மதம் அடிப்படையில் காவல்துறையிலும் நியமனங்கள் நடப்பதாக குற்றசாட்டுகள் பலமாக எழுந்துள்ளன. இந்த குழப்பங்களுக்கு நடுவே தமிழக காவல்துறை டிஜிபியாக 2 ஆண்டுகள் பணியாற்றிய சங்கர் ஜிவால் ஆகஸ்ட் 31-ம் தேதியன்று ஓய்வு பெற்றார். வழக்கமாக டிஜிபி ஓய்வுபெறுவதற்கு 3 மாதங்களுக்கு முன்பே மத்திய பணியாளர் தேர்வாணையத்துக்கு அனுப்ப வேண்டிய சீனியர் டிஜிபிக்கள் பட்டியலை டிஜிபி சங்கர் ஜிவால் ஓய்வு பெறுவதற்கு 2 நாட்களுக்கு முன்புதான் அனுப்பி சாதனை படைத்தனர் டிஜிபி அலுவலக அதிகாரிகள்.
இந்த தாமதத்திற்கும் சில காவல்துறை உயர் அதிகாரிகளின் சுயநலம் என்கின்றனர் ஐ.பி.எஸ் அதிகாரிகள். தற்போது டிஜிபி சீனியரிட்டி பட்டியலில் உள்ள ஷீமா அகர்வால், சந்தீப் ராய் ரத்தோடு, ராஜிவ் குமார் ஆகிய 3 பேரும் நிரந்தர டிஜிபியாக அமரக்கூடாது. ஜனவரி மாதம் டிஜிபி அந்தஸ்து பெறும் அதிகாரிக்கு பொறுப்பு டிஜிபி பதவியை கொடுக்க வேண்டும் என்பதற்காக முதல்வருக்கு வேண்டப்பட்ட ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளின் திட்டம். இதற்காகவே சீனியரிட்டி பட்டியலை தாமதப்படுத்தி தாங்கள் சொல்லும்படி கேட்க பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமன் நியமனதையும் முடித்தனர்.
ஏற்கனவே டிஜிபி நியமனம் தொடர்பாக உச்சநீதிமன்றம் தெளிவான உத்தரவை பிறப்பித்தபோதும் அதையெல்லாம் தூக்கி வீசிவிட்டு பொறுப்பு டிஜிபியை நியமித்தபோதே பெரும் சர்ச்சையும், காவல்துறை அதிகாரிகளிடையே பெரும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது. கண்டிப்பாக இந்த நியமனம் பெரும் சிக்கலை ஏற்படுத்தும் என சட்ட நிபுணர்களும் எச்சரித்தபோதும் எதையும் காதில் போட்டுக்கொள்ளாமல் தாங்கள் நினைத்த காரியத்தை முடித்தனர் இந்த உள்வட்ட அதிகாரிகள்.
பதவி நியமனத்திற்கு முன்பே மதுரை உயர்நீதிமன்றத்தில் டிஜிபி நியமனம் தொடர்பான வழக்கு தொடரப்பட்ட நிலையில், இதையும் மீறி நியமனம் நடந்திருப்பதாக கூறி உச்சநீதிமன்றத்தில் 2 வழக்குகள் தாக்கலானது. மதுரையை சேர்ந்த மக்கள் கண்காணிப்பகம் அமைப்பின் தலைவரும், வழக்கறிஞருமான ஹென்றி டிபேன் தொடர்ந்த வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி கவாய் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நித்ய ராமகிருஷ்ணன் மற்றும் பிரசன்னா ஆகியோர் தமிழக அரசு உச்சநீதிமன்ற உத்தரவுக்கு மாறாக பொறுப்பு டிஜிபியை நியமித்துள்ளது. இது நீதிமன்ற அவமதிப்பதாகும். எனவே புதிய டிஜிபியை நியமிப்பதற்கான உத்தரவை உச்சநீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும் என வாதாடினார். மேலும் குறிப்பிட்ட காலத்திற்குள் டிஜிபி நியமனத்தை முடிக்க மத்திய பணியாளர் தேர்வாணையத்துக்கு கால நிர்ணயம் செய்யவேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.
தமிழக அரசின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, டிஜிபி பதவிக்கான அதிகாரிகள் பட்டியலை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்துக்கு தமிழக அரசு ஏற்கனவே அனுப்பி வைத்துவிட்டது. மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் என்பது அரசியல் சாசன அமைப்பு. அந்த அமைப்பு தனது பொறுப்புகளை நன்கறியும். எனவே மனுதாரரின் கோரிக்கையை ஏற்று தேர்வாணையத்துக்கு கால நிர்ணயம் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட கூடாது என வாதிட்டார்.
இதைக்கேட்ட தலைமை நீதிபதி கவாய் தமிழக காவல்துறைக்கு புதிய டிஜிபியை நியமிப்பதற்கான பட்டியலை மத்திய பணியாளர் தேர்வாணையம் பரிசீலித்து விரைந்து அனுப்ப வேண்டும். புதிய டிஜிபியை நியமிப்பதற்கு முன்பாக பொறுப்பு டிஜிபியை நியமிக்க அரசு என் எவ்வளவு அவசரம் காட்ட வேண்டும்? புதிய டிஜிபியை நியமிக்க கால நிர்ணயம் செய்யாவிட்டாலும் விரைந்து பட்டியலை பரிசீலித்து தமிழக அரசுக்கு அனுப்பி நியமனம் செய்ய மத்திய பணியாளர் தேர்வாணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற அதிரடி உத்தரவை பிறப்பித்தனர்.
இந்த உத்தரவால் டிஜிபி சீனியர் பட்டியலில் உள்ள அதிகாரிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தாலும் பட்டியலை தாமதபடுத்திய அதிகாரிகள்தான் கலக்கம் அடைந்துள்ளனர். வரும் ஜனவரி மாதம் வரை புதிய டிஜிபியை நியமிக்காமல் காலம் தள்ளிவிட்டால் தங்களுக்கு வேண்டிய அதிகாரி கையில் இந்த பொறுப்பை கொடுத்து தங்கள் இஷ்டம்போல ஆட்டம் போடலாம் என கருதி இருந்தனர்.
உச்சநீதிமன்றம் மத்திய பணியாளர் தேர்வாணையத்துக்கு கண்டிப்பான உத்தரவை பிறப்பித்துள்ளதால் ஓரிரு நாளில் பட்டியல் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுவிடும். இந்த பட்டியலில் இருந்து 3 பேர் பட்டியலை தமிழக அரசு கட்டாயமாக தேர்வு செய்து அனுப்பி புதிய டிஜிபியை தேர்ந்தெடுக்க வேண்டும். இந்த பணிகள் இந்த மாதத்திற்குள் முடிந்து புதிய டிஜிபி நியமிக்கப்பட போவது உறுதி. புதிய டிஜிபி பட்டியலை அனுப்பாமல் தாமதம் செய்ததால் ஏற்கனவே இந்த அதிகாரிகள் மீது கடும் கோபத்தில் இருக்கும் சீனியர் டிஜிபி கண்டிப்பாக பதவி ஏற்றதுமே இந்த அதிகாரிகள் மீது கடும் நெருக்கடி கொடுத்து தற்போதைய பதவியை பறித்துவிடுவார். இதனால் நினைத்ததும் நடக்காமல் போய் தங்கள் பதவிக்கும் ஆபத்து வந்துவிடுமோ என்ற அச்சம் உருவாக்கி விட்டது.
உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுவதாக தகவல் வந்ததுமே இந்த அதிகாரிகள் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞருடன் அவசர ஆலோசனையை நேற்று காலையிலேயே நடத்தினர். அப்போது தலைமை வழக்கறிஞர் புதிய டிஜிபியை விரைவில் நியமிப்பது நல்லது. இல்லையேல் உச்சநீதிமன்றத்தில் கண்டனத்திற்கு ஆளாக நேரிடும். முதல்வருடன் ஆலோசனை நடத்தி நல்ல முடிவை எடுங்கள் என கூறிவிட்டாராம். இதனால் அடுத்து என்ன செய்வது என்ற தீவிர ஆலோசனை இந்த அதிகாரிகளிடையே நடந்து வருகிறது. மேலும், மேலும் அரசுக்கும், முதல்வருக்கும் சிக்கலை ஏற்படுத்தாமல் புதிய டிஜிபியை விரைந்து நியமிப்பது நல்லது என்கின்றனர் சீனியர் ஐ.பி.எஸ். அதிகாரிகள். நடக்குமா?