வரும் 2026 சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் அதிக இடங்களை பெற்று காங்கிரஸ் போட்டியிட விரும்புகிறது. மீண்டும் திமுக ஆட்சியை பிடிக்கும் பட்சத்தில் ஆட்சியிலும் பங்கு கேட்போம் என காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் அழகிரி பேசியிருப்பது திமுக வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிக இடங்களும், ஆட்சியில் பங்கு கிடைக்காத பட்சத்தில் கூட்டணி ஆட்சி அமைப்போம் என கூறும் நடிகர் விஜய்யுடன் இணைந்து போட்டியிடுவது என்ன தவறு உள்ளது என காங்கிரஸ் தரப்பில் குரல்கள் எழுந்துள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் வரும் 2026ம் ஆண்டு மே மாதம் நடைபெற உள்ளது. தற்போதைய சூழ்நிலையில் திமுக, அதிமுக தலைமையிலான கூட்டணிகள் தேர்தலில் போட்டியிட தயாராக உள்ளது. கடந்த ஆண்டு த.வெ.க என்ற கட்சியை தொடங்கி மண்டல மாநாடு, பிரச்சாரம் என அதிரடியாக காலத்தில் குதித்துள்ள நடிகர் விஜய் தமிழக அரசியலை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்துள்ளார்.
சமீபத்தில் மதுரையில் நடந்த மண்டல மாநாடு மற்றும் திருச்சியில் நடத்த பிரசார பொதுக்கூட்டத்தில் விஜய்க்கு கூடிய பிரமாண்ட கூட்டம் தமிழகத்தில் உள்ள பெரிய கட்சிகளுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. ஏற்கனவே கட்சியை தொடங்கியதுமே தான் ஆட்சி அமைத்தால் கூட்டணி ஆட்சியைத்தான் அமைப்பேன். தன்னுடன் சேர்ந்து போட்டியிடும் அனைவருக்கும் ஆட்சியில் பங்கு தரப்படும் என விஜய் அறிவித்தது அரசியல் கட்சிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காரணம் மைனாரிட்டி ஆட்சியாக இருந்தபோதே திமுக காங்கிரஸ் கட்சிக்கு ஆட்சியில் பங்கு கொடுக்க மறுத்துவிட்டது.
தற்போதும்கூட திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிதான் பெரிய கட்சி. இருப்பினும் கடந்த 4 ஆண்டுகால ஆட்சியிலும்கூட காங்கிரஸ் கட்சியினருக்கு எந்த முக்கிய பதவிகளும் தராமல் திமுகவே ஆட்சி அதிகாரத்தை முழுமையாக அனுபவித்து வருவது காங்கிரேஸ் தலைவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
திமுக கூட்டணியில் அங்கம் வகித்து வரும் விடுதலை சிறுத்தை கட்சியினர் கடந்த சில ஆண்டுகளாகவே ஆட்சி அதிகாரத்தில் தங்களுக்கும் பங்கு தர வேண்டும். தங்களுக்கும் ஆட்சியில் பங்குபெற உரிமை இல்லையா என கேட்டு ஆளும் கட்சியான திமுகவிற்கு கோபத்தை ஏற்படுத்தி வருகின்றனர். சில மாதங்களுக்கு முன்பு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் சட்டசபை கட்சி தலைவர் ராஜேஷ்குமார் ஆட்சியில் காங்கிரஸ் இடம்பெறுவதில்லை என்ன தவறு என கேள்வி எழுப்பினார்.
இந்த நிலையில்தான் கடலூரில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற காங்கிரேஸ் கட்சி முன்னாள் தலைவர் அழகிரி பத்திரிகையாளர்களிடம் பேசும்போது, வரும் சட்ட சபை தேர்தலில் திமுக கூட்டணியில் சேர்ந்து போட்டியிடுவோம். அதே நேரத்தில் அதிக இடங்களை கேட்டு காங்கிரஸ் போட்டியிடும். இதுவரை கூட்டணியில் இருந்தாலும் பலனை பெரிய கட்சிகள்தான் அனுபவித்து வருகின்றன.
வரும் சட்டசபை தேர்தலில் திமுக ஆட்சியை பிடிக்கும்பட்சத்தில் ஆட்சியில் காங்கிரஸ் பங்கு கேட்கும். இதில் என்ன தவறு உள்ளது என கேள்வி எழுப்பியுள்ளார். இது திமுக மேலிடத்திற்கு கடும் கோபத்தையும், சந்தேகத்தையும் ஏற்ப்படுத்தி உள்ளது. காரணம் காங்கிரஸ் கட்சியில் உள்ள பல தலைவர்களும் வரும் சட்டசபை தேர்தலில் விஜய் கட்சியுடன் கூட்டணி சேர்ந்து போட்டியிட வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளனர்.
காரணம் விஜய் ஆட்சியில் பங்கு தருவதாக ஏற்கனவே அறிவித்துவிட்டார். விஜய் கட்சியுடன் சேர்ந்து போட்டியிட்டால் குறைந்த பட்சம் 50 சீட்டுகளையாவது பெற முடியும். தற்போது ஆட்சியாளர்கள் மீதான அதிருப்தியால் விஜய் கட்சிக்கு அதிக ஓட்டுகள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. விஜய் கட்சிக்கு சிறுபான்மை ஓட்டுகளும் கிடைக்கும். தற்போது அதிமுக பாஜக கூட்டணியில் இருப்பதால் ஒட்டுமொத்த சிறுபான்மை ஓட்டுகளும் திமுக கூட்டணிக்கு கிடைத்து வந்தது. விஜய் போட்டியிடும் பட்சத்தில் சிறுபான்மை ஓட்டுகள் விஜய்க்கு செல்ல வாய்ப்புகள் உள்ளது.
கடந்த சில நாட்களாக விஜய் கட்சிக்கு கூடும் கூட்டம் இதுவரை அரசியல் கட்சிகளுக்கு கூட திரட்ட முடியாத அளவில் உள்ளது. எனவே விஜய் கட்சியுடன் கூட்டணி சேர்ந்தால் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் போட்டியிடுவதோடு, ஆட்சியிலும் பங்கு கேட்க முடியும். எனவே விஜய் கட்சியுடன் சேர்ந்து போட்டியிடலாம். தற்போதைய நிலையில் தேமுதிக, பாமக உள்ளிட்ட காட்சிகளையும் விஜய் கட்சியுடன் சேர்த்து போட்டியிட்டால் கண்டிப்பாக திமுக, அதிமுக கூட்டணிக்கு இணையான சீட்டுகளில் வெற்றிபெற முடியும் என காங்கிரஸ் தலைவர்கள் டெல்லி மேலிடத்திற்கு தகவல் கொடுத்து வருகின்றனர்.
அகில இந்திய அளவு காங்கிரஸ் கட்சியுடன் ஸ்டாலின் நல்ல உறவு வைத்துள்ளதால் தமிழகத்தில் கூட்டணியில் இருந்து வெளியேற சோனியா, ராகுல் ஆகியோர் சற்று தயக்கம் காட்டி வருகின்றனர். ஆனால் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி வளர வேண்டுமானால் விஜய் கட்சியுடன் சேர்ந்து போட்டியிட்டு ஆட்சியில் பங்குபெற வேண்டியது அவசியம் என பெரும்பாலான தலைவர்கள் மேலிடத்தை வலியுறுத்தி வருகின்றனர். இந்த கூட்டணி அமையுமா என்பது தேர்தலின்போது தெரியும். ஆனால் விஜய் கட்சியுடன் காங்கிரஸ் உள்ளிட்ட காட்சிகள் சேர்ந்தால் திமுக, அதிமுக கட்சிகளுக்கு பலத்த அடிதான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.