தனியார் பால் நிறு­வன மேலாளர் போலீசால் தாக்­கப்­பட்­டா­ரா? திரு­பு­வனத்தை அடுத்து சென்னை மாத­வ­ரத்தில் நடந்த மற்­றொரு கொடூரம்

திருபுவனத்தில் நகை காணாமல் போன சம்பவத்தில் எந்தவித வழக்கும் பதிவு செய்யாமல் தங்கள் பாணியில் போலீசார் நடத்திய விசாரணையில் வாலிபர் அஜித்குமார் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் மறைவதற்குள் அதே பாணியில் மோசடி வழக்கில் எந்த வழக்கும் பதிவு செய்யாமல் தனியார் பால் நிறுவன மேலாளரை விசாரணைக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்திய நிலையில் தானே உயிரை மாய்த்துக் கொண்டதாக போலீசார் வழக்கு பதிவு செய்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம், திருபுவனம் பத்­ர­கா­ளி­யம்மன் கோவி­லுக்கு வந்த நிகிதா என்ற கல்லூரி பேராசிரியை காரில் இருந்து 15 பவுன் நகையை கோயில் தற்காலிக காவலாளி அஜித்குமார் திருடி விட்டதாக கொடுத்த புகாரின்பேரில் உயர் அதிகாரிகளின் அழுத்தம் காரணமாக வழக்கே பதிவு செய்யாமல் எஸ்.பி. தனிப்படை தங்கள் பாணியில் விசாரணை நடத்தினர். இதில் வாலிபர் அஜித்குமார் எதிர்பாராதவிதமாக உயிரிழந்த நிலையில் வழக்கு பெரும் பரபரப்பானது. தனிப்படையை சேர்ந்த 5 போலீசார் கைது செய்யப்பட்டதுடன் மாவட்ட எஸ்.பி. ஆசிஸ் ராவட் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி தமிழக காவல்துறையை மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கடுமையாக கண்டித்தனர்.. வழக்கும் சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் அதே பாணியில் சென்னை மாநகரில் நடந்துள்ள மற்றொரு மர்ம மரணம் போலீசாரை பெரும் சிக்கலில் மாட்ட வைத்துள்ளது. ஆந்திர மாநிலத்தை சேர்ந்த நவீன் பொலினேனி சென்னை மாதவரத்தில் உள்ள வீட்டில் தங்கி, மாதவரம் பொன்னி அம்மன்மேடு பகுதியில் உள்ள திருமலா பால் நிறுவனத்தில் கருவூல மேலாளராக 3 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்தார்.

இவர் நிறுவனத்தின் 45 கோடி ரூபாய் பணத்தை கையாடல் செய்துவிட்டதாக நிறுவனத்தின் சார்பில் மாதவரம் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. பணத்தை கையாடல் செய்துவிட்டதாக நவீன் ஒப்புக்கொண்டதாக தெரிகிறது.இதையடுத்து கையாடல் செய்த பணத்தில் முதல் தவணையாக 5 கோடி ரூபாயை ஜூன் மாதம் 26-ம் தேதி கொடுத்துள்ளார். இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு புழல் பிரிட்டானியா நகரில் உள்ள குடிசை வீட்டில் மேலே போடப்பட்ட கட்டையில் நயிலான் கயிற்றில் உயிரை மாய்த்துக்கொண்ட நிலையில் இருப்பது தெரியவந்தது. இறந்து கிடந்த நவீனின் கைகள் பின்புறம் கட்டப்பட்டிருந்தது.

உயிரை மாய்த்துக்கொள்ள ஸ்டூல் உள்ளிட்ட எதையும் பயன்படுத்தவும் இல்லை. இதனால் புழல் போலீசார் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்திருந்தனர். இதனால் நவீன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என குடும்பத்தார் குற்றம் சாட்டினார். பண மோசடி தொடர்பாக திருமலா நிறுவனம் சார்பில் மாத­வ­ரம் காவல் நிலையத்தில் புகார் மனு கொடுக்காமல் கொளத்தூர் துணை ஆணையர் பாண்டியராஜனிடம் கொடுத்த புகார் மனு அடிப்படையில் வழக்கு எதுவும் பதிவு செய்யாமல் துணை ஆணையர் நேரடியாக விசாரணை நடத்தியதாக தெரிகிறது.

இந்த விசாரணையில் மாதவரம் காவல் நிலைய குற்றப்பதிவு ஆய்வாளர் விஜயபாஸ்கரும், துணை ஆணையரும் நடத்திய விசாரணையில் கடுமையாக தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதன் பிறகு திருமலா பால் நிறுவனத்தை சேர்ந்த நரேஷ், முகுந்த் ஆகியோர் சந்தித்து மிரட்டியுள்ளனர். இதன் பிறகே நவீன் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்துள்ளார்.

எனவே நவீனை போலீசார் விசாரணை என்ற பெயரில் அடித்தே கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகமும், திருமலா நிறுவனத்தினர் கூலிப்படையை ஏவி கொலை செய்திருக்கலாம் எனவும் பல சந்தேகங்கள் எழுந்துள்ளது. திருபுவனம் வாலிபர் அஜித்குமார் மரணத்திற்கு பிறகு வழக்கு விசாரணைக்கு அழைத்து வந்தாலும் வழக்கு பதிவு செய்யாமல் விசாரணை நடத்தக் கூடாது என டிஜிபி, சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி ஆகியோர் கடுமையான உத்தரவை பிறப்பித்த பிறகும் மீண்டும் எந்த வழக்கும் பதிவு செய்யாமல் ஊழியர் நவீனிடம் துணை ஆணையர் பாண்டியராஜன், ஆய்வாளர் விஜயபாஸ்கர் இருவரும் சட்டத்திற்கு விரோதமாக விசாரணை நடத்தியுள்ளனர்.

இதன் காரணமாகவே நவீன் உயிரிழந்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் பெரிதானதால் கொளத்தூர் துணை ஆணையர் பாண்டியராஜனும் , மாதவரம் குற்ற பிரிவு ஆய்வாளர் விஜயபாஸ்கரையும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார். 25 லட்சம் ரூபாய்க்கு மேலான மோசடி வழக்கை காவல் நிலையத்தில் விசாரிக்கக்கூடாது. மத்திய குற்றப்பிரிவு போலீசார்தான் விசாரிக்க வேண்டும் என ஏற்கனவே உத்தரவு பிறப்பித்தும் துணை ஆணையர் தானே நேரடியாக விசாரணை நடத்தியது ஏன்?

துணை ஆணையர் பாண்டியராஜன் திருப்பூரில் கூடுதல் எஸ்.பி.யாக பணியாற்றியபோதுதான் மதுக்கடையை எதிர்த்து போராட்டம் நடத்திய பெண்கள் மீது தடியடி நடத்தியதால் அப்போதைய எதிர்க்கட்சி தலைவராக இருந்த தற்போதைய முதல்வர் ஸ்டாலினால் கண்டிக்கப்பட்டவர். தற்போது அவருடைய தொகுதிக்கு உட்பட்ட கொளத்தூரில் துணை ஆணையராக நியமிக்கப்பட்டது முதல் சர்ச்சை உருவானது. முதல்வர் தொகுதியிலேயே விசாரணைக்கு சென்றவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் சர்ச்சையை உருவாக்கி உள்ளது.

அஜித்குமார் மரண சர்ச்சை முடிவதற்குள் முதல்வர் தொகுதியிலேயே நடந்த மர்ம மரணம் தமிழக காவல்துறைக்கு பெரும் தலை குனிவுதான். சர்ச்சைக்குள்ளான துணை ஆணையர் மீது பெண் தொடர்பான புகாரும் தற்போது எழுந்துள்ள நிலையில் எதற்காக காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்த மரணத்திற்கு அதிமுக, பாஜக உள்ளிட்ட காட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Comments (0)
Add Comment