புதுவையில் என்.ஆர். காங்கிரசுடன் கூட்டணி: தமிழகத்தில் தனித்து போட்டியிடும் விஜய்!!

புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்து வரும் சட்டசபை தேர்தலை சந்திக்க முன்னோட்டம் போட்டுள்ள த.வெ.க தலைவர் விஜய் தமிழகத்தில் அதிமுக, பாஜகவுடன் கூட்டணி இல்லை என்ற முடிவிலும், காங்கிரஸ் கூட்டணி சேருமா என்ற எதிர்பார்ப்பில் இருப்பதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.

த.வெ.க. கட்சியுடன் கூட்டணி பேச்சு வார்த்தை நடத்த தனது பிரதிநிதியாக தகவல் பகுப்பாய்வு குழு தலைவரும், ராகுல் காந்திக்கு நெருக்கமானவருமான பிரவீன் சக்கரவர்த்தி மூலம் நேரடியாக விஜய்யை சந்திக்க அனுப்பியதும் திமுக மேலிடத்தை கடும் எரிச்சலுக்கு உள்ளாக்கி உள்ளது. ஒருபுறம் தேர்தல் கூட்டணி, சீட்டுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த அறிவாலயத்திற்கு குழுவை அனுப்பிவிட்டு மறுபுறம் நடிகர் விஜய்யை சந்திக்க பிரதிநிதியை ராகுல்காந்தி அனுப்பியதால் மூலம் அதிக சீட்டுகளை பெற தங்களை காங்கிரஸ் மிரட்டும் வகையில் செயல்படுவதாக திமுக மேலிடம் எரிச்சலடைந்துள்ளது. இதுவரை தமிழகத்தில் யாருடன் கூட்டணி என்பதை விஜய் இன்னும் முடிவு செய்யவில்லை என்றே தெரிகிறது.

தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கி ஒன்றரை ஆண்டு காலத்திற்குள் தமிழக அரசியல் வரலாற்றில் முக்கிய இடம் பிடித்துள்ள விஜய் வரும் சட்டசபை தேர்தலில் திமுகவிற்கும், தனக்கும்தான் நேரடி போட்டி என வெளிப்படையாக பேசி வருகிறார். இதன் மூலம் எதிர்க்கட்சியாக உள்ள அதிமுக இந்த தேர்தலில் திமுகவுடன் நேரடியாக போட்டியிடும் அளவிற்கு பலத்துடன் இல்லை என்பதையே மறைமுகமாக பேசியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறிவருகின்றனர்.

கரூரில் நடந்த உயிரிழப்பு சம்பவத்தில் விஜய் மீது ஒட்டுமொத்த பழியையும் போட்டு கட்சியை முடக்க ஆளும்கட்சி தனது ஒட்டுமொத்த செல்வாக்கு, ஆட்சி பலத்தை பயன்படுத்த திமுக தொடங்கியபோது எதிர்பாராதவிதமாக அதிமுக, பாஜக தலைவர்கள் விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்ததால் கைது உள்ளிட்ட நடவடிக்கைகளில் இருந்து தப்பினார்.

இதன் மூலம் அதிமுகவுடன் விஜய் கூட்டணி சேருவார் என்று பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் கட்சியின் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் விஜய்தான் முதல்வர் வேட்பாளர் என தீர்மானம் போட்ட பிறகு அதிமுகவுடனான கூட்டணிக்கு முற்றுப்புள்ளி வைத்தார் விஜய். கரூர் சம்பவத்தின்போது அகில இந்திய காங்கிரஸ் கட்சி முக்கிய நிர்வாகியான ராகுல் காந்தி நேரடியாக விஜய்யிடம் பேசி ஆறுதல் கூறியதன் மூலம் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி சேர வாய்ப்பு இருப்பதாக பரப்பாக பேசப்பட்டது.

இதற்கேற்றாற்போன்று காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தலைவர்கள் சிலர் விஜய்யை சந்தித்து பேசியதோடு விஜயுடனான கூட்டணிக்கு வரவேற்பளித்தனர். இந்த கூட்டணி அமையும் என பேசப்பட்ட நிலையில் திமுகவுடன் தேர்தல் கூட்டணி மற்றும் சீட்டுகள் குறித்து பேச 5 பேர் குழுவை மேலிடம் அமைத்தது. இந்த குழுவும் திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலினை அறிவாலயத்தில் சந்தித்து முதல்கட்ட பேச்சுவார்த்தையை பேசி முடித்துள்ளனர்.

பீகார் மாநில தேர்தலுக்கு முன்பாக தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு குறைந்த பட்சம் 65 சீட்டுகளையாவது ஒதுக்க வேண்டும் என சட்டசபை காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் குமார் பல இடங்களில் பேசி வந்தார். பீகார் மாநிலத்தில் கண்டிப்பாக காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை பிடித்துவிடும். இதன் மூலம் திமுக கூட்டணியுடன் அதிக சீட்டுக்குகளை கேட்டு அழுத்தம் கொடுக்க வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர்கள் திட்டமிட்டிருந்தனர்.

எதிர்பாராதவிதமாக பீகாரில் காங்கிரஸ் கட்சிக்கு விழுந்த பலத்த அடியால் திமுகவிடம் அதிக சீட்டுகளை கேட்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டது. இருப்பினும் தமிழக சட்டசபை தேர்தலில் த.வெ.க போட்டியிடுவதோடு விஜய் செல்லும் இடங்களில் அதிக மக்கள் கூடுவதால் திமுக கூட்டணி கண்டிப்பாக சற்று பயத்தில்தான் உள்ளது. இதை பயன்படுத்தி அதிக சீட்டுகளை கேட்டு பெற வேண்டும் என காங்கிரஸ் மேலிடம் கருதுகிறது.

திமுகவுடனான கூட்டணி பேச்சுவார்த்தையின்போதே ராகுல்காந்திக்கு மிகவும் நெருக்கமானவரும், பகுப்பாய்வு குழு தலைவருமான பிரவீன் குமார் த.வெ.க தலைவர் விஜய்யை பட்டினப்பாக்கத்தில் உள்ள வீட்டில் நேரடியாக சந்தித்து ஒரு மணிநேரத்திற்கு மேலாக பேசியது திமுக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திமுக தனது கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு அதிக சீட்டுகளை தராவிட்டால் த.வெ.க உடன் கூட்டணி சேர தயங்க மாட்டோம் என மறைமுகமாக மிரட்டும் வகையில்தான் இந்த பேச்சு வார்த்தை நடந்துள்ளதாக திமுக மேலிடம் கருதுகிறது.

ஒருவேளை த.வெ.க கட்சியுடன் கூட்டணி சேர்ந்து போட்டியிட காங்கிரஸ் மேலிடம் கருதுகிறதோ என்ற சந்தேகமும் திமுக மேலிடத்திற்கு ஏற்பட்டுள்ளது. எனவே தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர்களின் நடவடிக்கைகளையும், சந்திப்பையும் உளவுத்துறை மூலம் கண்காணிக்க தொடங்கி உள்ளது. காங்கிரஸ் கட்சியும் திமுக உடன் கூட்டணி சேர்வதை விட விஜய்யுடன் கூட்டணி சேர்ந்தால் அதிக சீட்டுகள் கிடைக்கும். அதேநேரம் விஜய்க்கு அதிக கூட்டம் குறிப்பாக இளைஞர்கள் கூட்டம் மிக அதிகமாக வருவதால் விஜய்யுடன் கூட்டணி பெறுவதுதான் கட்சிக்கு மிகப்பெரிய பலமாக இருக்கும் என கருதுகின்றனர்.

இந்த நிலையில்தான் புதுவையை குறிவைத்து காய் நகர்த்தும் த.வெ.க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தனது கட்சி தலைவர் விஜய்யை புதுசேரியில் பிரச்சாரம் செய்யவைக்க கடந்த பல மாதங்களாகவே முயற்சித்து வந்தார். கரூர் சம்பவத்தினால் சூடுகண்ட பூனையாக விஜய் உஷாராகவே உள்ளார்.

மீண்டும் ஒரு கூட்டத்தில் அசம்பாவித சம்பவம் நடந்தால் தனது அரசியல் எதிர்காலமே முடிவுக்கு வந்துவிடும். எனவே கட்டுக்கடங்காத கூட்டத்தை கூட்டக்கூடாது என கட்சி நிர்வாகிகளுக்கு நிபந்தனை வைத்துள்ளார். இதையும் மீறி புதுசேரியில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரியபோது 5 ஆயிரம்பேருக்கு மேல் கூட்டம் சேரக்கூடாது என காவல்துறை நிபந்தனை விதித்தது. ஆனால் விஜய்யை பார்க்க புதுசேரியிலும் அதிக கூட்டம் கூடி காவல்துறையை திணறடித்துவிட்டனர்.

இந்த கூட்டம் நடத்த புதுசேரி முதல்வரும் என்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவருமான என்.ஆர். ரங்கசாமி அனுமதி அளித்தார். இவர் நடிக விஜய்யின் தீவிர ரசிகராவார். விஜய்யுடன் நல்ல நெருக்கமும் வைத்துள்ளார். எனவே விஜய் கூட்டத்திற்கு அனுமதி வழங்கியதுடன், உரிய போலீஸ் பாதுகாப்பும் வழங்கி பிரமாண்ட கூட்டம் நடத்த உதவியாக இருந்தார்.

இதனால் மகிழ்ச்சி அடைந்த விஜய் கூட்டத்திலேயே என்.ஆர். ரெங்கசாமிக்கு பாராட்டு தெரிவித்ததோடு இவரைப் பார்த்து திமுகவும் ஆட்சி செய்யவேண்டும் என புகழாரம் சூட்டினார். ஏற்கனவே பாஜக உடன் கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைத்தாலும் புதுசேரிக்கு மத்திய அரசு போதுமான நிதி ஒதுக்கவில்லை என்ற மனக்குறை முதல்வர் ரெங்கசாமிக்கு உள்ளது. எனவே வரும் சட்டசபை தேர்தலில் த.வெ.க கட்சியுடன் கூட்டணி சேர்ந்து போட்டியிட்டால் அதிக இடங்களில் வெற்றிபெற்று மீண்டும் முதல்வராகிவிடலாம்.

புஸ்ஸி ஆனந்திற்கு துணை முதல்வர் பதவி கொடுத்தாலும் பிரச்சினை இல்லை என ரங்கசாமி கருதுவதாக தெரிகிறது. இதன் எதிரொலியே விஜய் அவரை வெகுவாக பாராட்டி பேசியது என்கிறது கட்சி வட்டாரங்கள். எனவே புதுசேரியில் என்.ஆர். காங்கிரஸ் கட்சியும், த.வெ.க கட்சியும் தேர்தலில் கூட்டணி சேர்ந்து போட்டியிட வாய்ப்புள்ளது. இந்த கூட்டத்திலேயே மத்திய பாஜக ஆட்சியை பற்றி மீண்டும் விஜய் கடுமையாக தாக்கி பேசியதோடு, தமிழகத்தில் மீண்டும் பிரசார கூட்டம் மேற்கொள்ள ஆளும் திமுக பல்வேறு வகையில் இடையூறு செய்வது கடும் எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது. இதனால்தான் எத்தனை இடையூறுகளை ஆளும் திமுக தனக்கு செய்தாலும் தனது பிரசாரத்தை கட்டுப்படுத்த முடியாது என டுவிட்டர் செய்தி மூலம் திமுகவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் வரும் சட்டசபை தேர்தலில் அதிமுக, பாஜக கூட்டணியுடன் சேராமல் தனித்து போட்டி அல்லது காங்கிரஸ் தனது கூட்டணியில் சேர்ந்தால் கூட்டணி வைத்துக்கொள்வது என்ற முடிவிற்கு விஜய் வந்துள்ளார். சமீபத்தில் நடத்த தேர்தலுக்கு முன்கூட்டிய கணிப்பில் கூட விஜய் கட்சிக்கு 70 சீட்டுகள் வரை கிடைக்கு என்ற செய்தி விஜய்யை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.

எனவே காங்கிரஸ் தன்னுடன் கூட்டணி பெறாவிட்டாலும் தனித்து போட்டியிட்டு வெற்றிபெறலாம் என்ற நம்பிக்கை விஜய்க்கு ஏற்பட்டுள்ளது. இதற்காக தமிழகம் முழுவதும் தீவிர பிரசாரம் மேற்கொள்ளவும் திட்டமிட்டுள்ளார். வரும் 16ம் தேதியன்று சமீபத்தில் கட்சியில் சேர்ந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஏற்பாட்டில் ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் நடத்த திட்டமிட்டிருந்த பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை மூலம் மீண்டும் அனுமதி மறுத்துள்ளது.

மற்றொரு இடத்தில் 18-ம் தேதியன்று பொதுக்கூட்டம் நடத்த செங்கோட்டையன் ஏற்பாடு செய்தாலும் கொங்கு மண்டலத்தில் கூட்டம் சேர்ந்தால் தனக்கு ஆபத்து என கருதி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் தனது பங்கிற்கு நெருக்கடி தருவதாக கூறப்படுகிறது. கொங்கு மண்டலத்திற்கு கரூர் மாவட்ட வி.ஐ.பி.தான் பொறுப்பாளர் என்பதால் பெருந்துறையில் மீண்டும் பெரிய கூட்டத்தை விஜய் கூட்டினால் தனது பொறுப்பில் உள்ள கொண்டு மண்டலத்தில் ஆளும்கட்சிக்கு சிக்கல் ஏற்படுத்திவிடும் என கருதி காவல்துறை மூலம் அனுமதி தராமல் இழுத்தடிப்பதாக த.வெ.க நிர்வாகிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

காவல்துறை அனுமதி தர மறுத்தால் உயர்நீதிமன்றத்தை அணுகி அனுமதி பெறுவோம். ஏற்கனவே பொதுக்கூட்டங்களுக்கு 15 நாட்களுக்கு முன்பே அனுமதி கேட்டால் உடனடியாக தர வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையே காரணமாக கூறி அனுமதி பெற்று விஜய்யை கொங்குமண்டலத்தில் பொதுக்கூட்டம் நடத்த வைப்போம் என சவால் விடுகின்றனர் த.வெ.க நிர்வாகிகள்.

மீண்டும் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் நீதிமன்ற அனுமதியோடு பொதுக்கூட்டங்களை நடத்தி ஆளும்கட்சியின் ஊழல்கள் குறித்தும், அராஜகம் குறித்தும் காரசாரமாக பேசி மக்களை தன்பக்கம் இழுத்துவிட வேண்டும் என தயாராகி வருகிறார் விஜய். இன்னும் ஓரிரு மாதங்களில் கூட்டணி பற்றி முடிவெடுத்து விஜய் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தினால் தமிழக தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த முடியும். ஆனால் எந்த முடிவையும் மிகவும் தாமதப்படுத்தாமல் விரைந்து எடுக்க வேண்டும் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். ஆளும்கட்சியோ விஜய்யின் சுற்றுப்பயணத்தை தடுத்தேயாக வேண்டும் என்பதற்காக காவல்துறை, நீதிமன்றம் மூலம் தடைபோட தீவிரம் காட்டி வருகிறது. இதையும் மீறி விஜய் பிரசாரம் செல்வாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Comments (0)
Add Comment