ஓய்வுபெற்று வயது மூப்பு மற்றும் உடல்நல குறைவால் உயிரிழந்த தமிழக அரசு ஓய்வூதியர்கள் ஓய்வூதிய பணத்தை மோசடி சான்றிதழை சமர்ப்பித்து 15 லட்சத்துக்கு மேல் மோசடி செய்த கருவூலத்துறை அலுவலரை போலீசார் கைது செய்தனர். ஊழியரை காப்பாற்ற துறை அதிகாரிகள் முயற்சித்த நிலையில் “தி நியூஸ் நவ் ” செய்தி எதிரொலியால் கைது செய்யவேண்டிய சூழ்நிலை உருவானது.
மதுரை மாவட்டம் ஆத்திகுளம் மகாலட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர் முகேஷ்குமார். கருணை பணி அடிப்படையில் இவர் மதுரை கருவூல துறையில் கருவூலத்துறையில் பணியில் சேர்ந்தார். ஓய்வூதியர்கள் சம்பளம் தொடர்பான பிரிவில் பல ஆண்டுகளாக பணியாற்றி வந்த நிலையில் மதுரையில் இருந்து கோவை மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இவர் பணியாற்றிய அலுவலகத்தில் ஓய்வூதியம் பெறுவோருக்கு 8 மாதங்கள் வரை முதல் 10 மாதங்களுக்கு ஓய்வூதியம் நிறுத்தப்பட்டு திடீரென மொத்தமாக வரவு வைக்கப்பட்டு வருவதாக உயர் அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றன. கோவையை சேர்ந்த ஓய்வூதியர் முத்துலட்சுமி என்பவர் கணக்கில் வழங்கப்பட வேண்டிய ஓய்வூதிய தொகையான 8 ஆயிரத்து 320 ருபாய் நிறுத்தப்பட்டது. 2024ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் வாழ்நாள் சான்றிதழ் வழங்கப்படவில்லை என கூறி நிறுத்தப்பட்டிருந்தது. சில மாதங்கள் கழித்து மின்னணு வாழ்நாள் சான்றிதழை சமர்பித்துள்ளதாக கூறி முத்துலட்சுமியின் வாங்கி கணக்கில் 7 லட்சத்து 72 ஆயிரம் ருபாய் செலுத்தப்பட்டிருந்தது. ஓரிரு நாளில் முத்துலட்சுமியின் வங்கி கணக்கில் இருந்து மதுரை கே. புதூரை சேர்ந்த ரவிக்குமார் என்பவரது வாங்கி கணக்கிற்கு மாற்றப்பட்டது.
இதனால் சந்தேகமடைந்த கோவை மண்டல கருவூலத்துறை இணை இயக்குனர் அலுவலகத்திற்கு ஆய்விற்கு சென்றார். ஆய்வில் முத்துலட்சுமி கொடுத்திருந்த மின்னணு வாழ்நாள் சான்றிதழ் போலியானது என்பது ஆய்வில் உறுதியானது. இந்த மோசடி சான்றிதழை யார் கொடுத்தது என விசாரித்தபோது கருவூல அலுவலர் முகேஷ் குமார்தான் சமர்ப்பித்து மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதேபோல 4 ஓய்வூதியர்கள் வாழ்நாள் சான்றிதழை போலியாக கொடுத்து 15 லட்சத்து 49 ஆயிரம் ரூபாயை 4 மாதங்களில் முகேஷ் குமார் மோசடி செய்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த மோசடி குறித்து மாவட்ட கருவூல அலுவலர் குமரேசன் கோவை மாநகர ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல் வெளியானது.
மதுரை கருவூல துறையில் முகேஷ்குமார் பணியாற்றியபோது உயிரிழந்தவர்களின் வாழ்நாள் சான்றிதழை குறிப்பிட்ட மாதத்திற்குள் வழங்கவில்லை என கூறி ஓய்வூதிய தொகையை சில மாதங்களுக்கு நிறுத்தி வைத்திருப்பார். குறிப்பிட்ட மாதங்கள் கழித்து வாழ்நாள் சான்றிதழ் கொடுத்துவிட்டதாக இவரே போலி சான்றிதழை கொடுத்து நிலுவை பணத்துடன் மொத்தமாக வங்கி கணக்கில் வரவு வைத்து நண்பர் வங்கி கணக்கிற்கு மாற்றி மோசடி செய்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் தனது மோசடி வெளியே தெரிந்துவிட கூடாது என்பதற்காக கோவை கருவூல துறைக்கு ஏப்ரல் மாதல் இடமாறுதலில் சென்றுள்ளார். வேறு பிரிவில் நியமிக்கப்பட்டிருந்த முகேஷ் குமாரை ஓய்வூதியர் பிரிவிற்கு மாற்ற சென்னையில் உள்ள உயர் பெண் அதிகாரி கொடுத்த அழுத்தம் காரணமாக அப்பிரிவிற்கு மாற்றப்பட்டார். ஓய்வூதியர் பிரிவிற்கு வந்ததும் இதேபோல போலி ஆவணங்களை கொடுத்து பல லட்சம் மோசடி செய்தது விசாரணையில் தெரிய வந்தது.
காவல் நிலையத்தில் விசாரணை நடத்தியபோது மோசடி செய்ததை ஒப்புக்கொண்டதும் அவரிடம் இருந்து பணத்தை மட்டும் வாங்கி கொடுத்தால் போதும் என கருவூலத்துறை அதிகாரிகள் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். இதனால் 20 லட்சம் ருபாய் கருவூலத்துறைக்கு பல்வேறு வங்கிகளில் இருந்து முகேஷ் குமார் செலுத்தினார். இவரை கைது செய்ய வேண்டாம் என கருவூலத்துறை அதிகாரிகள் கூறியிருந்த நிலையில் இது தொடர்பான மோசடி நமது “தி நியூஸ் நவ் ” சேனலுக்கு தெரியவரவே பணத்தை முகேஷ் குமார் கருவூலத்துறையில் செலுத்தியதற்கான ரசீதுடன் செய்தி வெளியிட்டோம். செய்தி எவ்வாறு வெளியே தெரிய வந்தது என கருவூல துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். காரணம் கோவை மாவட்ட செய்தியாளர்களிடம் முகேஷ்குமார் மீதான புகார் குறித்து போலீசார் மூச்சுவிடவில்லை. தி நியூஸ் நவ் சானலில் செய்தி வெளியானதும் அவசரமாக 15 லட்சம் மோசடி செய்ததாக வழக்கு பதிவு செய்து முகேஷ் குமாரை போலீசார் கைது செய்தனர்.
15 லட்சம் மோசடி செய்ததாக புகார் கொடுத்துவிட்டு அவரிடம் இருந்து 20 லட்சத்து 3 ஆயிரத்து 64 ரூபாயை பெற்றுக்கொண்ட ரசீது கொடுத்தது ஏன்? முகேஷ் குமாரின் மோசடிக்கு துணை போன அதிகாரிகள் யார்? மதுரை மாவட்டத்திலும் இதேபோல பல லட்சம் ரூபாயை முகேஷ் குமார் மோசடி செய்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் மதுரை கருவூல துறையில் மண்டல அதிகாரிகள் விசாரணை நடத்தி மோசடி குறித்து கண்டுபிடிக்காதது ஏன்? இதேபோன்று பல்வேறு மாவட்டங்களிலும் ஓய்வூதியர்கள் ஓய்வூதிய பணம் பல கோடி மோசடி நடந்திருப்பதாக குற்றசாட்டுகள் உள்ளது. இந்த குற்றசாட்டுகள் மீது இதுவரை உரிய விசாரணை நடத்தி குற்றச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? என பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளது. இந்த மோசடியில் உயர் அதிகாரிகள் முதல் மேலிடத்திற்கு வேண்டப்பட்டவர் வரை துணை போயிருப்பதால் உயர் அதிகாரிகள் அடக்கி வாசிப்பதாகவும் கூறப்படுகிறது.
காரணம் மதுரையில் மோசடி செய்து சிக்கி கொள்ளாமல் இருக்க முகேஷ் குமார் கோவை கருவூல துறைக்கு தானே இடமாறுதல் கேட்டு வந்துள்ளார். இதற்காக சென்னையில் உள்ள கருவூலத்துறை தலைமை அலுவலகத்தில் பணியாற்றும் பெண் அதிகாரி மூலம் அமைச்சரின் உதவியாளர் உதவியுடன் இடமாறுதல் பெற்றுள்ளார். இதற்காக 10 லட்சம் ருபாய் வரை லஞ்சமாக முகேஷ் குமார் கொடுத்ததாக சக அதிகாரிகளிடம் கூறியதாக தெரிகிறது. கோவை கருவூல துறைக்கு மாற்றப்பட்டு வேறு பிரிவில் நியமிக்கப்பட்ட முகேஷ்குமாரை ஓய்வூதியர் பிரிவில் நியமிக்கும்படி இந்த பெண் அதிகாரிதான் பரிந்துரைத்ததாகவும் கூறப்படுகிறது. எனவே இதுபோன்ற மோசடியில் கருவூல அலுவலர்கள் மட்டுமின்றி கருவூலத்துறை உயர் அதிகாரிகளுக்கும் தொடர்பு உள்ளது. உயர்மட்ட அளவிலும், காவல்துறை மூலமாகவும் முறையாக விசாரணை நடத்தினால் பல கோடி மோசடியை கண்டுபிடிக்க முடியும் என்கின்றனர் கருவூலத்துறை அதிகாரிகள்.