கொ ** பழியை மகனுக்காக ஏற்று சரணடைந்த தாயின் தியாகம்…

திருமணம் நிச்சயிக்கப்பட்ட மகன் குடிபோதையில் தினமும் தகராறு செய்து வந்த தம்பியை ஆத்திரத்தில் வெட்டி கொலை செய்துவிட்டதால் மகனுக்கு பதிலாக தானே கொலை செய்ததாக காவல் நிலையத்தில் அரிவாளுடன் சரணடைந்தார். உடற்கூறு பரிசோதனையில் கிடைத்த அறிக்கையால் கொலை செய்த அண்ணனை கூட்டாளியுடன் போலீசார் கைது செய்த அதிர்ச்சி சம்பவம் நடந்தேறி உள்ளது.

சூளைமேடு பெரியார் பாதை பகுதியை சேர்ந்தவர் 47 வயதான பிரமிளா. இவரது கணவர் ராமச்சந்திரனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் 17 ஆண்டுகளுக்கு முன்பே பிரிந்து சென்றுவிட்டார். இவருக்கு 30 வயதில் வசந்த குமார் என்ற மூத்த மகனும், 21 வயதில் ராஜப்பிரபா என்ற இரண்டாவது மகனும், 19 வயதேயான முகில் என்ற இளைய மகனும் இருந்தனர். கணவனை விட்டு பிரிந்த பிரமிளா தனது பெற்றோர் கொடுத்த 2 மாடி வீட்டில் வசித்து வந்ததோடு, அப்பகுதியில் 7 வீடுகள் மற்றும் 3 கடைகளை கட்டி வாடகைக்கு விட்டு வாடகை பணத்தில் 3 மகன்களையும் கடும் போராட்டத்துக்கிடையே வளர்த்து வந்தார். மூத்த மகன் வசந்த குமார் கட்டிட சென்ட்ரிங் வேலை பார்த்து வருகிறார். இரண்டாவது மகன் ராஜப்பிரபா கூலி வேலை செய்து வருகிறார். மூன்றவது மகனான முகில் படிக்க பள்ளிக்கும் செல்லாமல் சிறுவயது முதலே ஊர் சுற்றி வருவதை வழக்கமாக வைத்திருந்தார்.

வேலைக்கு செல்லாததோடு மதுப்பழக்கம், கஞ்சா உள்ளிட்ட போதை பழக்கத்திற்கு ஆளாகினார் . மது போதையில் நண்பர்களுடன் சேர்ந்து திருட்டு, அடிதடியில் ஈடுபட்டு வடபழனி, கோடம்பாக்கம், கொரட்டூர் உள்ளிட்ட காவல் நிலையங்களில் வழக்குகளும் பதிவு செய்யப்பட்ட்டிருந்தது. சமீபத்தில்கூட கோடம்பாக்கத்தில் கஞ்சா போதையில் அடிதடியில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டு ஜாமீனில் சில நாட்களுக்கு முன்புதான் விடுதலையானார். மதுப்பழக்கத்திற்கு அடிமையான முகில் குடிப்பதற்கு பணம் கேட்டு தாயிடமும், சகோதரர்களிடமும் தினமும் தகராறில் ஈடுபடுவது வழக்கம். தான் கேட்டபடி பணம் தராவிட்டால் தாயையும், சகோதரர்களையும் கொலை செய்வதாக மிரட்டுவாராம்.

இவரது ரவுடித்தனத்தால் மூத்த மகன் வசந்தகுமாருக்கு யாரும் பெண் கொடுக்க முன்வரவில்லை. இதனால் சில மாதங்களுக்கு முன்பு வசந்தகுமார் கோடம்பாக்கம் டிரஸ்ட்புரம் 10வது தெருவில் உள்ள தன்னுடைய நண்பர்களுடன் ரூமில் குடியிருந்து வேலைக்கு சென்று வந்தார். இந்த நிலையில் வெள்ளிக்கிழமையன்று காலை 6.30 மணியளவில் பிரமிளா கையில் ரத்தம் தோய்ந்த அரிவாளுடன் வடபழனி காவல் நிலையத்திற்கு வந்தார். ரத்தக்கறையுடன் காவல் நிலையத்திற்கு வந்த பிரமிளாவை பார்த்த போலீசார் கடும் அதிர்ச்சி அடைந்தனர். அவரிடம் விசாரித்தபோது தன்னுடைய இளைய மகன் முகில் தினமும் குடித்துவிட்டு வந்து தன்னை கொலை செய்துவிடுவதாக மிரட்டுவது வழக்கம். இதேபோல வியாழக்கிழமையன்று வீட்டுக்கு வந்த முகில் தன்னிடம் பணம் கேட்டு மிரட்டியதுடன், பணம் தர மறுத்ததால் வெட்டி கொலை செய்வேன் என மிரட்டிவிட்டு தூங்க சென்றான்.

தினமும் கொலை மிரட்டல் விடுப்பதால் பயந்துபோய்தான் தூங்க செல்வேன். எப்போது என்னை கொலை செய்வானோ என்ற பயத்திலேயே வாழ்ந்து வந்தேன். வெள்ளிக்கிழமை அதிகாலையில் எழுந்து வீட்டில் இருந்த அரிவாளால் தூங்கிக்கொண்டிருந்த முகிலை மகன் என்றும் பார்க்காமல் வெட்டி கொலை செய்துவிட்டேன். எனவே காவல் நிலையத்தில் சரணடைய வந்ததாக கூறியுள்ளார். அரிவாளை பறிமுதல் செய்த போலீசார் பிரமிளாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். வீட்டிற்கு சென்று பார்த்தபோது கழுத்து, தலை முழுவதும் வெட்டு காயங்களுடன் முகில் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடப்பது தெரிந்தது. அவரது உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக கே.கே.நகர் ஈ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

உடற்கூறு அறிக்கையில் முகிலின் உடலில் ஆழமான வெட்டுக்காயங்கள் விழுந்திருப்பதாக கூறப்பட்டிருந்தது. ஒரு பெண்ணால் இந்த அளவிற்கு அரிவாளால் பலமாக வெட்ட முடியாது எனவும் உடற்கூறு செய்த மருத்துவர்கள் போலீசிடம் தெரிவித்தனர். இதைக்கேட்ட போலீசாருக்கு பலத்த குழப்பம் ஏற்பட்டது. இதுபற்றி பிரமிளாவிடம் விசாரித்தபோது தான்தான் முகிலை கொலை செய்ததாக உறுதியாக கூறிவிட்டார். இதையடுத்து பிரமிளாவின் வீட்டின் அருகே வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது பிரமிளாவின் மூத்த மகன் வசந்தகுமார் அதிகாலை 4.30 மணிக்கு தன்னுடைய வீட்டிற்கு வரும் காட்சிகள் பதிவாகி இருந்தது. பின்னர் வெளியே சென்று தன்னுடைய நண்பரை அழைத்து வீட்டிற்கு வந்துவிட்டு அதிகாலை 5.20 மணிக்கு வெளியே செல்வதும் பதிவாகி இருந்தது.

எனவே வசந்தகுமாரைப் பிடித்து போலீசார் தங்கள் பாணியில் விசாரித்தபோது திடுக்கிடும் தகவல் கிடைத்தது. சிறுவயது முதலே மது மற்றும் போதை பழக்கத்திற்கு அடிமையான முகில் தினமும் குடித்துவிட்டு வந்து சகோதரர்களிடமும், தாயிடமும் தகராறு செய்வது வழக்கம். இவர் மீது பல அடிதடி, திருட்டு வழக்குகள் இருந்ததால் வசந்தகுமாருக்கு பெண் கொடுக்க யாரும் முன்வரவில்லை. சில மாதங்களுக்கு முன்பு கோடம்பாக்கத்தில் உள்ள நண்பன் அறைக்கு சென்று தங்கிய பிறகு திருமணம் நிச்சயமானது. நண்பர்களது அறையில் தங்கி வேலை பார்த்து வந்த நிலையில் தினமும் தாயிடம் குடிபோதையில் தகராறு செய்து கொலை செய்வதாக மிரட்டுவதாக பிரமிளா மகனிடம் கூறியுள்ளார். வழக்கம்போல வியாழன்றும் முகில் யாருடனோ தகராறு ஈடுபட்டு சண்டைபோட்டு அரிவாள் வெட்டு வாங்கிய நிலையில் குடித்துவிட்டு வந்து தாயிடம் தகராறு செய்ததை மகனிடம் பிரமிளா கூறினார். இதனால் ஆத்திரமடைந்த வசந்தகுமார் அதிகாலையில் தன்னுடன் அறையில் தங்கியிருந்த கண்ணன் என்ற நண்பரை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு சென்றுள்ளார்.

தூங்கிக்கொண்டிருந்த முகிலை வீட்டில் இருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார். இதை பார்த்த வசந்தகுமாரின் நண்பன் கண்ணன் அலறியடித்து வீட்டை விட்டு ஓட்டம் எடுத்தார். ஆத்திரத்தில் தம்பியை வசந்தகுமார் கொலை செய்துவிட்ட நிலையில் அதிர்ச்சியடைந்த பிரமிளா திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட மகன் கொலை செய்தது தெரிய வந்தால் அவனது திருமண வாழ்க்கை நின்றுபோய் எதிர்காலமே பாதித்துவிடும். எனவே மகனுக்கு பதிலாக தானே கொலைப்பழியை ஏற்றுக்கொள்ள தீர்மானித்த பிரமிளா மூத்த மகன் வசந்தகுமார் கொலை செய்ய பயன்படுத்திய அரிவாளை வாங்கிக்கொண்டு வடபழனி காவல் நிலையத்தில் சரணடைந்தது தெரிய வந்தது. இதையடுத்து முகிலை கொலை செய்த வசந்தகுமாரையும், கொலைக்கு உடந்தையாக இருந்த கூட்டாளி கண்ணன் மற்றும் கொலையை மறைக்க முயன்ற தாய் பிரமிளா ஆகிய 3 போரையும் வடபழனி போலீசார் கைதுசெய்தனர்.

இளையமகன் கொலை செய்யப்பட்டாலும் தன்னுடைய மூத்த மகனின் வாழ்க்கை வீணாகிவிட கூடாது என்பதற்காக தானே கொலைப்பழியை தாய் ஏற்றுக்கொண்ட சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குடிபோதையில் தகராறு செய்ததால் மகனை கொலை செய்ததாக கைதுசெய்யப்பட்ட நிலையில் மகனுக்காக கொலைப்பழியை தாய் ஏற்றுக்கொன்று காவல் நிலையத்தில் சரணடைந்த சம்பவம் இப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்திவிட்டது. மகனுக்காக தன்னுடைய வாழ்க்கையை தியாகம் செய்ய தாய் முன்வந்தது தாயின் உண்மை அன்பை வெளிப்படுத்திக்கிறது என்றே கூறலாம்.

Comments (0)
Add Comment