தமிழக அரசின் உள்ளாட்சி துறையில் சமீபத்தில் பணி நியமனம் வழங்கப்பட்ட 2,538 இன்ஜினியர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கு தலா ரூ.25 லட்சம் முதல் ரூ.35 லட்சம் வரை என கிட்டத்தட்ட 2,888 கோடி ரூபாயை நகர்ப்புற உள்ளாட்சி துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் குடும்பத்தார் லஞ்சமாக பெற்றதற்காக ஆவணங்கள் அமலாக்கத்துறை சோதனையின்போது கிடைத்துள்ளது.
இந்த லஞ்ச ஊழல் வழக்கில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமலாக்கத்துறை தமிழக காவல்துறைக்கு முழு ஆதாரங்களுடன் அனுப்பியுள்ள கடிதம் வெளியானதால் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கை தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்காவிட்டால் நேரடியாக அமலாக்கத்துறை உள்ளே நுழைந்து அமைச்சர் நேரு உள்ளிட்டோரை கைதுசெய்யும் சூழிநிலை உருவாக்கி இருப்பதாழும், ஆளும்கட்சி குடும்பத்தின் முக்கிய புள்ளியும் இந்த வழக்கில் சிக்குவார் என்பதாலும் அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பாகி உள்ளது.
தமிழக உள்ளாட்சி மற்றும் நகராட்சி நிர்வாக துறை அமைச்சராக பணியாற்றி வருபவர் கே.என். நேரு. இவரது சகோதரர் ரவிச்சந்திரனுடன் சேர்ந்து ட்ரூ வேல்யூ ஹோம்ஸ் என்ற பெயரில் கட்டுமான நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தில் அமைச்சர் நேருவின் மகனும், எம்.பி.யான அருண் நேரு உள்ளிட்டோருக்கு பங்கு உள்ளதாக தெரிகிறது. இந்த நிறுவனம் தமிழகம் மட்டுமின்றி இந்தியாவில் பல்வேறு இடங்களில் அடுக்குமாடி நிறுவனங்களை கட்டிக்கொடுத்து வருகிறது.
இந்த நிறுவனம் மேற்கொண்ட பண பரிவர்தனைகளில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், அமைச்சர் நேரு உள்ளிட்டோர் முறைகேடாக சம்பாதித்துவரும் பணத்தை பயன்படுத்தி பல்வேறு வியாபாரங்கள் நடப்பதாகவும், பல ஆயிரம் கோடி வருமான வரி இழப்பு ஏற்படுத்தியதாகவும் புகார்கள் எழுந்தன. இதன்பேரில் வருமான வரித்துறை ஏற்கனவே சோதனை நடத்தி பல்வேறு ஆவணங்களை கைப்பற்றியது. இதில் முறைகேடான பண பரிவர்த்தனை நடந்திருப்பதற்கான ஆவணங்கள் கிடைத்ததால் இதுகுறித்து அமலாக்கத்துறைக்கு தகவல் அனுப்பியது.
இதன்பேரில் அமலாக்கத்துறை அமைச்சர் நேரு, அவரது மகன் அருண் நேரு, மகள், மருமகன் உள்ளிட்டோர் வீடுகள், ட்ரூ வேல்யூ ஹோம்ஸ் நிறுவன அலுவலகங்கள் என 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்க துறை கடந்த ஜூன் மாதம் சோதனை நடத்தியது. இந்த சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கிடைத்ததாக அமலாக்கத்துறை தெரிவித்திருந்தது. ஆனால் எதிர்பாராதவிதமாக கடந்த 27-ம் தேதியன்று அமலாக்கத்துறை தமிழக பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமனுக்கு 4 பக்க கடிதம் ஒன்றையும், 238 பக்க விசாரணை அறிக்கை ஒன்றையும் அனுப்பி இருந்தது. இந்த கடிதத்தில் அமலாக்கத்துறை நிதி மோசடி, போதைப்பொருள் கடத்தல், மனித உறுப்புகள் கடத்தல், சைபர் கிரைம், வங்கி மோசடிகள் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளை விசாரித்து வருகிறது.
சட்டவிரோத பண பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் பல்வேறு வழக்குகளையும் அமலாக்கத்துறை பதிவுசெய்துள்ளது. வங்கி மோசடி தொடர்பாக சென்னை சி.பி.ஐ. அலுவலகம் நடத்திய சோதனை அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கு குறித்து அமலாக்கத்துறை விசாரித்தது. இதில் கிடைத்த தகவல் அடிப்படையில் கடந்த ஏப்ரல் மாதம் சென்னை, திருச்சி, கோவை உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையின்போது கிடைத்த டிஜிட்டல் ஆவணங்களை ஆய்வுசெய்தபோது தேர்வு ஒன்றில் மோசடி செய்து அதிகாரிகள், ஊழியர்கள் தேர்வில் முறைகேடுகள் நடந்திருப்பதற்கான ஆர்வங்களும் சிக்கியது.
தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம், நகர்ப்புற வளர்ச்சி மற்றும் குடிநீர்வடிகால் வாரியத்தில் 2 ஆயிரத்து 638 என்ஜினீயர்கள் மற்றும் ஊழியர்கள் நியமனத்தின்போது நடந்த முறைகேடுகள் தொடர்பான ஆவங்கள்தான் இவை. இந்த துறை சார்பில் தேர்வு செய்யப்பட்ட 2 ஆயிரத்து 638 பேருக்கும் கடந்த ஆகஸ்ட் மாதம் 6-ம் தேதியன்று முதல்வர் ஸ்டாலின் கையால் பணி நியமன ஆணைகளும் வழங்கப்பட்டுள்ளன. இந்த டிஜிட்டல் ஆவணங்களில் உள்ள புகைப்படங்கள், வாட்டஸ் அப் தகவல்களை ஆய்வு செய்தபோதுதான் நகர்ப்புற நிர்வாகம் மற்றும் குடிநீர் வளங்கள் துறையில் நியமனம் செய்யப்பட்ட தேர்வில் பல்வேறு முறைகேடுகளும், பல கோடி பணம் கைமாறியிருப்பதற்கான ஆவணங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
பணி நியமனம் செய்யப்பட்டவர்களிடம் இருந்து 25 லட்சம் ரூபாய் முதல் 35 லட்சம் ருபாய் வரை லஞ்சமாக பெற்றிருப்பதற்கான ஆதாரங்களும் கிடைத்துள்ளது. 232 பக்க ஆவணங்களில் பணப்பரிமாற்றம் தொடர்பான பல்வேறு முக்கிய ஆதாரங்கள் கிடைத்துள்ளது. நகராட்சி நிர்வாக துறை சார்பில் நடத்தப்பட்ட தேர்வில் பல அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகளுடைய முக்கிய கூட்டாளிகள், தனி நபர்கள், தேர்வு எழுதியவர்களும் இந்த மோசடியில் தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்களும் கிடைத்துள்ளது. இவர்களில் பெயர் பட்டியலும் இணைக்கப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு கிட்டத்தட்ட ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதிய நிலையில் தேர்வு செய்யப்பட்ட 2,638 பேரிடம் இருந்து லஞ்சப்பணம் பெறப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது.
இந்த லஞ்ச பணம் முழுவதும் ஹவாலா முறையிலும், ரொக்க பணமாகவும் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு பணம் வாங்கப்பட்ட விவரம் முக்கிய அரசியல் பிரமுகர்களுக்கும் தெரிந்துள்ளது. பெரும்பாலும் பணம் முழுவதும் ஹவாலா பணம் அனுப்பும் முறையிலேயே வாங்கப்பட்டுள்ளது. இந்த மோசடியில் அரசியல் பிரமுகர்கள், அதிகாரிகள் அனைவருக்கும் பங்கு உள்ளது. பணம் கொடுத்தவர்கள் தேர்வில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டு வேலைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
வசூல் செய்யப்பட்ட பணம் முழுவதும் பல்வேறு வங்கிகள் மூலம் தனி நபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் முறையாக தேர்வு எழுதி வெற்றிபெற்ற விண்ணப்பதாரர்களளுக்கு வேலை வழங்காமல் மோசடி செய்யப்பட்டது உறுதியாகி உள்ளது. பல ஆண்டுகளுக்கு பிறகு தங்களுக்கு அரசு வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தவர்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர். இந்த ஆவணங்கள் மூலம் பணி நியமனத்தில் ஊழல், மோசடி மற்றும் சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்திருப்பது உறுதியாகி உள்ளது. வேறு ஒரு வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை சோதனை நடத்தியபோது இந்த பணி நியமன மோசடி தொடர்பான முக்கிய ஆதாரங்கள் சிக்கியது.
எனவே இந்த மோசடி குறித்து தமிழக காவல்துறை உரிய வழக்கு பதிவு செய்து இந்த வழக்கில் தேர்வில் மோசடி செய்தவர்கள் பணிக்கு தேர்வானது எப்படி? தேர்வில் எவ்வாறு முறைகேடு நடந்தது? இந்த மோசடியில் தொடர்புடைய அண்ணா பல்கலை கழக அதிகாரிகள், ஊழியர்கள் பற்றியும் விசாரிக்க வேண்டும். இந்த மோசடியில் ஈடுபட்ட விண்ணப்பதாரர் யார்? முறையாக தேர்வு எழுதி வெற்றிபெற்ற எத்தனைபேர் வேலையில் நியமிக்கப்படவில்லை? இந்த மோசடியில் தொடர்புடைய அரசு அதிகாரிகள் எத்தனை பேர்? இந்த வேலைவாய்ய்ப்பு மோசடியில் ஈடுபட்ட புரோக்கர்கள் யார்? யார்? என்பது குறித்து தமிழக காவல்துறை விசாரிக்க வேண்டும். சட்டவிரோத பண பரிவர்த்தனை குறித்து அமலாக்கத்துறை வழக்கு பதிவுசெய்து விசாரித்து வருகிறது.
வேலைவாய்ப்பு மோசடி, தேர்வு மோசடி, இந்த மோசடிக்கு துணைபோனவர்கள் குறித்து காவல்துறைதான் வழக்கு பதிவு செய்து உரிய விசாரணை நடத்த வேண்டும். உடனடியாக சம்பந்தப்பட்ட நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும். சட்ட விரோத பண பரிவர்த்தனை குறித்து அமலாக்கத்துறை பதிவு செய்துள்ள எப்.ஐ.ஆர். நகல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என அமலாக்கத்துறை அதிகாரிகள் டிஜிபிக்கு அனுப்பியுள்ள 4 பக்க கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் இந்த பணி நியமனத்தில் எந்த மோசடியும் நடக்கவில்லை என நகராட்சி நிர்வாகம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு அண்ணா பல்கலைக்கழகம் மூலம் தேர்வு நடந்தது. ஒளிவு மறைவற்ற முறையில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு 2,638 பேர் வேலையில் சேர்ந்துள்ளனர். அமலாக்கத்துறையின் களங்கம் கற்பிக்கும் முயற்சி எக்காலத்திலும் வெற்றி பெறாது. அரசியல் நோக்கத்தோடு மேற்கொள்ளும் இதுபோன்ற நடவடிக்கைகளை வன்மையாக கண்டிப்பதோடு, இவற்றை முறியடிக்க தேவையான அணைத்து சட்டபூர்வ நடவடிக்கைகளையும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை மேற்கொள்ளும் என திட்டவட்டமாக தெரிவித்துக்கொள்கிறோம் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்த மோசடி தொடர்பாக முக்கிய ஆவணங்கள் அமலாக்கத்துறையில் கிடைத்துள்ளது. இதை விலாவாரியாக 232 பக்க ஆதாரங்களையும் டிஜிபிக்கு அமலாக்கத்துறை அனுப்பி வைத்துள்ளது.
குறிப்பாக தேர்வு எழுதி அரசியவாதிகள், அதிகாரிகள் மற்றும் ப்ரோக்கர்கள் மூலம் அமைச்சர் அலுவலகத்தை அணுகியதும் பணத்தை குறிப்பிட்ட இடத்தில் கொடுக்க 10 ரூபாய் நோட்டுகளில் ரகசிய குறியீடுகளை எழுதி தேர்வாளர்களிடம் உதவியாளர்கள் கொடுத்துள்ளனர். இந்த 10 ருபாய் நோட்டை குறிப்பிட்ட இடத்தில் கொண்டுபோய் கொடுத்ததும் பணத்தை பெற்றுக்கொண்டு அவர்கள் ஒரு நோட்டை கொடுத்து உதவியாளரிடம் கொடுக்கும்படி அனுப்பியுள்ளனர். இந்த நோட்டை பெற்றுக்கொண்டதும் பணம் கிடைத்துவிட்டதாக அர்த்தமாம்.
இவ்வாறு கொடுத்தனுப்பிய 10 ருபாய் நோட்டுகளை வாட்டஸ் அப் மூலம் சம்பந்தப்பட்ட நபருக்கு அமைச்சர் உதவியாளர் அனுப்பிய ஆதாரங்கள், பணம் பெற்றுக்கொண்ட நபர் அனுப்பிய 10 ருபாய் நோட்டின் புகைப்படம் உள்ளிட்டவைகள் அனைத்தையுமே அமலாக்கத்துறை கைப்பற்றியதுடன், இந்த ஆதாரங்களையும் டிஜிபிக்கு அனுப்பியுள்ளது. இதனால் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை மூலம் வழக்கு பதிவு செய்து கைது உள்ளிட்ட நடவடிக்கைகளை டிஜிபி எடுக்காவிட்டால் அமலாக்கத்துறை நீதிமன்றம் மூலம் அனுமதிபெற்று நடவடிக்கைக்கு தயாராகிவிடும்.
இதனால் அமைச்சர், உதவியாளர்கள், துறையின் முக்கிய ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், அமைச்சரின் குடும்பம், அரசியல்வாதிகள், பணம் கொடுத்தோர் என அனைவரும் சிக்கிக்கொள்வது உறுதி. கிட்டத்தட்ட 2,888 கோடி ரூபாயை லஞ்சமாக பெற்றிருப்பதாக இந்த ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது. இந்த பணத்தில் மேலிடத்திற்கு எவ்வளவு கைமாறியது? இந்த பணம் எந்தெந்த இடங்களில் முதலீடாக மாற்றப்பட்டுள்ளது என்பதை அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ., வருமான வரித்துறை உள்ளிட்டவை களத்தில் குதித்து விசாரிப்பதோடு பல முக்கிய பிரமுகர்களும் கைதாவது உறுதி. இதனால் ஆளும்கட்சி மேலிடம் மிகப்பெரிய சிக்கலுக்கு ஆளாகி இருப்பதாக கோட்டை வட்டாரங்கள் கூறுகின்றன.
தேர்தல் நெருங்கிவரும் வேலையில் மத்திய அரசு இந்த முதல் அதிரடி வேட்டையை தொடங்கி உள்ளது. ஏற்கனவே போதை பொருள் வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்தை, கிருஷ்ணா உள்ளிட்டோருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ள நிலயில் முக்கிய அமைச்சரின் துறையில் 2,888 கோடி ருபாய் லஞ்சம் வாங்கியிருப்பதாக அமலாக்கத்துறையிடம் ஆதாரம் சிக்கியது பெரும் பரபரப்பையும் , ஆளும்கட்சி மற்றும் அமைச்சர் தரப்பில் பதட்டத்தையும் ஏற்படுத்தி உள்ளது.