தமிழக காவல்துறையில் பொறுப்பு அதிகாரிகளை நியமித்து பொறுப்பு காவல்துறையாக மாற்றும் முயற்சியில் உயர் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளது காவல்துறை அதிகாரிகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.தமிழக காவல்துறை டிஜிபியாக பணியாற்றும் சங்கர்ஜிவால் இந்த வாரம் ஓய்வுபெற உள்ள நிலயில் புதிய டிஜிபியை நியமிப்பதற்கான எந்த நடவடிக்கையையும் டிஜிபி அலுவலக அதிகாரிகள் மேற்கொள்ளவில்லை. மதுரை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட பிறகு பெயருக்கு டிஜிபி பேனல் பட்டியலை உள்துறைக்கு அனுப்பி முதல்வர் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்துவிட்டனர். உச்சநீதிமன்றத்தில் செப்டம்பர் மாதம் ஓய்வுபெற உள்ள ஊர்காவல்படை டிஜிபி பிரமோத் குமார் தன்னையும் டிஜிபி பேனல் பட்டியலில் இணைக்க வேண்டும் என மனு ஒன்றை தாக்கல் செய்தார். கோவை பாசி நிதி நிறுவன மோசடி தொடர்பான தன்மீதான குற்றசாட்டுகளை உயர்நீதிமன்றம் நிறுத்திவைத்துவிட்டதால் சீனியர் அதிகாரியான தனது பெயரையும் டிஜிபி பேனல் பட்டியலில் சேர்ப்பதோடு தனக்கு டிஜிபி பதவி வழங்க வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிட்டிருந்தார். ஆனால் பாசி நிதிநிறுவன வழக்கில் சிபிஐ அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்ட ப்ரோமோத் குமார் திடீரென டிஜிபி பதவி கேட்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர பின்னணி என்ன என காவல்துறை வட்டாரரத்தில் கேள்வி எழுந்தது.
தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் பதவி ஓய்விற்கு பிறகு புதிய டிஜிபியை நியமிக்காமல் பொறுப்பு டிஜிபியை நியமிக்க வேண்டும் என்ற முடிவோடு புதிய பட்டியல் தயாரிப்பது முதல், மத்திய அரசுக்கு அனுப்பாமல் தடுப்பது வரை கடந்த சில மாதங்களாகவே செயல்பட்டு வரும் ஒருசில முதல்வ ஆதரவு காவல்துறை உயர் அதிகாரிகள்தான் பிரமோத் குமார் மனு தாக்கல் செய்ததன் பின்னணியில் இருப்பதாக கூறுகிறது காவல்துறை வட்டாரங்கள். இவரது பெயரையும் சேர்க்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தால் புதிய டிஜிபி நியமனத்தை தள்ளிப்போட்டுவிடலாம். உச்சநீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் பொறுப்பு டிஜிபியை நியமித்து டிசம்பர் மாதம்வரை தொடர வேண்டும் என்பதே இவர்களது திட்டம். ஆனால் உச்சநீதிமன்றத்தில் டிஜிபி பிரமோத் குமாரின் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் புதிய டிஜிபிக்கான பேனல் பட்டியலையே மத்திய உள்துறைக்கு அனுப்பாமல் கிடப்பில் போட்டுவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த வரமே பட்டியல் மத்திய அரசுக்கு அனுப்பிவிட்டதாக கூறிவந்த நிலையில் பட்டியல் சென்று விட்டதா? இல்லையா ? என்ற பட்டிமன்றமே தற்போது காவல்துறையில் ஹாட் டாபிக்காக உள்ளது.
முதல்வர் ஆதரவு அதிகாரிகளின் திட்டப்படி நிர்வாக பிரிவு டிஜிபி வெங்கட்ராமனை டிஜிபி பொறுப்பு அதிகாரியாக நியமிக்க வேண்டும். இந்த மாதமே தமிழ்நாடு காவலர் வீட்டுவசதி வாரிய தலைவர் பதவியில் உள்ள சைலேஷ் குமார் யாதவும் ஓய்வுபெறுகிறார். இவரது பதவிக்கு டிஜிபி அலுவலக தலைமையிட டிஜிபி வினித் தேவ் வான்கடே நியமிக்கப்பட உள்ளார். இதனால் தமிழக காவல் துறையில் சட்டம் ஒழுங்கு டிஜிபி, தலைமையிட டிஜிபி, நிர்வாக பிரிவு டிஜிபி என முக்கிய பதவிகள் அனைத்துமே பொறுப்பு பதவிகளாகவே இருக்கும். வரும் செப்டெம்பர் மாதம் ஊர்காவல்படை டிஜிபி பிரமோத் குமாரும் ஓய்வுபெறும் நிலையில் 4 டிஜிபி பதவிகள் காலியிடங்களாக இருப்பதோடு இந்த பதவிகள் அனைத்துக்குமே பொறுப்பு அதிகாரிகள்தான் பணியாற்றுவார்கள்.
நிர்வாக பிரிவு டிஜிபி பதவியானது சட்டம் ஒழுங்கு டிஜிபி பதவியை போன்றே மிக முக்கியமான பதவியாகும். இடமாறுதல், உயர் அதிகாரிகள் முதல் காவலர்கள் வரையிலான இடமாற்றம், தண்டனை விதிப்பது, தண்டனை நீக்குவது, மருத்துவ விடுப்பு உள்ளிட்ட அனைத்து பணிகளையும் இந்த பிரிவு அதிகாரிகள்தான் கவனிக்க வேண்டும். தினமும் டிஜிபியை பார்க்க வரும் காவலர்களைவிட நிர்வாக பிரிவு டிஜிபி, ஐ.ஜி. உள்ளிட்ட அதிகாரிகளிடம் மனுகொடுக்க வரும் காவலர்கள் அதிகம். பல்வேறு டிஎஸ்பிக்கள் மற்றும் காவலர்களுக்கு கொடுக்கப்பட்ட தண்டனை, சம்பள பிரச்சினை உள்ளிட்ட பணிகளையும் நிர்வாக பிரிவு டிஜிபிதான் கண்காணிக்க வேண்டும். இதேபோல குடியிருப்பு உள்ளிட்டவைகளை தலைமையிட டிஜிபி உள்ளிட்ட அதிகாரிகள் கவனிக்க வேண்டும். இதுபோன்ற முக்கிய பதவிகளை எல்லாம் பொறுப்பு அதிகாரிகளை நியமித்து காவல்துறை நிர்வாகத்தை சீரழிக்க முடிவெடுத்துவிட்டார்கள் என்றே தோன்றுவதாக டிஜிபி அலுவலக அதிகாரிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
புதிய டிஜிபியை நியமிக்காமல் பொறுப்பு டிஜிபியை நியமிப்பது என்பதில் இந்த அதிகாரிகள் கிட்டத்தட்ட வெற்றிபெற்றுவிட்டனர் என்றே கூற வேண்டும். தற்போதைய டிஜிபி சங்கர் ஜிவால் ஓய்வுபெறும் நாளில் புதிதாக உருவாக்கப்பட்ட தீயணைப்புத்துறை கமிஷனர் என்ற பொறுப்பில் 2 ஆண்டுகள் பணியாற்ற நியமிக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. பொறுப்பு டிஜிபியாக வெங்கட்ராமன் நியமிக்கப்பட்ட பிறகு வரும் ஜனவரி மாதம் தேர்தல் ஆணையத்தால் புதிய டிஜிபி நியமிக்கப்படுவார். இதன் பின்னர் முதல்வர் ஆதரவு அதிகாரிக்கு டிஜிபி அந்தஸ்து வழங்கப்பட்டு உளவுத்துறை டிஜிபி பதவியோடு, சட்டம் ஒழுங்கு டிஜிபி பொறுப்பு வழங்கப்படும். இவர்கள் மூலம் தேர்தலை சந்தித்தால் காவல்துறை முழு ஒத்துழைப்பு கிடைக்கு என்பதே மேலிடத்திற்கு கூறப்பட்ட உறுதிமொழி . இதையே மேலிடமும் நம்புவதால் புதிய டிஜிபி நியமனத்தில் இவ்வளவு சர்ச்சைகள் எழுந்த பிறகும் எதையுமே கண்டுகொள்ளவில்லை முதல்வர் என்கின்றனர் அதிகாரிகள்.
தங்கள் சுய விருப்பத்திற்காக காவல்துறை தலைமை பொறுப்புக்கே பொறுப்பு அதிகாரியை நியமித்து சட்டம் ஒழுங்கை சீரழிக்க போகிறார்களா? எனபதே ஐபிஎஸ் அதிகாரிகளின் கேள்வி. காவல்துறையில் ஐ.பி.எஸ். தேர்வில் வெற்றிபெற்ற அனைவருக்குமே சட்டம் ஒழுங்கு டிஜிபி பதவி என்பது ஒரு கனவு. உரிய காலத்தில் இந்த பதவி கிடைத்து ஓய்வுபெற்றால் தங்களுக்கு மிகவும் கவுரவம் என ஐ.பி.எஸ். அதிகாரிகள் எண்ணம். ஆனால் ஒரு சிலரது சுய விருப்பு, வெறுப்புகளுக்காக காவல்துறை தலைமை பொறுப்பையே பொம்மலாட்டம் போல ஆடவைத்துவிட்டனர் இந்த அதிகாரிகள். இந்த பதவி மாறுதலோடு தீயணைப்புத்துறை டிஜிபி சீமா அகர்வால் உள்ளிட்ட பல உயர் அதிகாரிகளின் பதவி மாற்றமும் இருக்கும் என்கிறது காவத்துறை வட்டாரங்கள்.