கண்ணா மூச்சி காட்டும் காங்கிரஸ்: சந்தேகப் பார்வையில் ஆளும் கட்சி

தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கி விட்டது. த.வெ.க தலைவர் விஜய்யுடன் காங்கிரஸ் மேலிட தலைவர்கள் நடத்தும் ரகசிய பேச்சுவார்தைகளால் திமுக மேலிடம் வரும் தேர்தலில் காங்கிரஸ் நம்முடன் கூட்டணியில் பெறுவார்களா? த.வெ.க கூட்டணிக்கு ஜம்ப் அடித்துவிடுவார்களா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாம்.

திமுகவுடன் கூட்டணி சேர்ந்து குறைந்த சீட்டுக்களை பெறுவதை விட விஜய் கட்சியுடன் கூட்டணி சேருவதால் அதிக சீட்டுகள் கிடைப்பதுடன் அதிக இடங்களில் வெற்றியும் பெற முடியும். புதுச்சேரியிலும் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை பிடிக்க வாய்ப்புள்ளது என காங்கிரஸ் மேலிட தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியிடம் தொடர்ந்து வற்புறுத்தி வருவதும் திமுக மேலிடத்திற்கு டவுட் ஏற்பட்டுவிட்டதாம்.

தமிழக சட்டசபை தேர்தல் வரும் 2026ம் ஆண்டும் ஏப்ரல் அல்லது மே மாதம்தான் என்றாலும் இப்போதே தேர்தல் ஜுரம் வந்து விட்டது என்றே கூறவேண்டும். தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்குவதில் வழக்கம் போல திமுக முந்திக்கொண்டது என்றே கூறலாம். முதல்கட்டமாக காங்கிரஸ் கட்சி தேர்தல் மேலிட பார்வையாளர்களுடன் முதல்கட்ட பேச்சுவார்த்தை முடித்து விட்டனர்.

இருப்பினும் காங்கிரஸ் தேர்தல் வரை தங்கள் கூட்டணியில் இருப்பார்களா என்ற சந்தேகம் தற்போது திமுக மேலிடத்திற்கு வந்துவிட்டதாம். காரணம் கடந்த ஒரு ஆண்டாகவே காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தமிழக சட்டசபை தலைவர் ராஜேஷ்குமார், காங்கிரஸ் எம் .பி. கார்த்தி சிதம்பரம், காங்கிரஸ் முன்னாள் தலைவர் அழகிரி உள்ளிட்ட பல தலைவர்களும் வரும் சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் குறைந்தபட்சம் 60 தொகுதிகளையாவது கேட்டுப்பெற வேண்டும். ஆட்சியிலும் பங்கு தர வேண்டும் என பேசி வருகின்றனர்.

இதனால் பதறிப்போனது என்னவோ தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகைதான். காரணம் ஆளும்கட்சியோடு மிகவும் நெருக்கமாக இருப்பதோடு பல்வேறு சலுகைகளையும் ஆளும்கட்சி மூலம் பெற்றுவரும் நிலையில் கூட்டணியை முறித்துவிடுவதுபோல காங்கிரஸ் தலைவர்கள் பேசி வருவது செல்வப்பெருந்தகைக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி வருகிறது. தாங்கள் அதிக சீட்டுகளை கேட்டோ, ஆட்சியில் பங்கோ கேட்கவில்லை என பல இடங்களிலும் பேசிவந்தாலும் கரூர் சம்பவத்திற்கு பிறகு ஆளும்கட்சி மேலிடத்திற்கு காங்கிரஸ் மீது சந்தேகம் உருவாகிவிட்டது.

கரூர் சம்பவத்தில் த.வெ.க கட்சியை முற்றிலும் முடக்கிப்போட வேண்டும் என ஆளும்கட்சி பல்வேறு வகையிலும் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆட்சி, அதிகாரத்தை பயன்படுத்தி முட்டுக்கட்டை போட்டுவந்த வேலையில் த.வெ.க தலைவர் விஜய்யுடன் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரான ராகுல்காந்தி போனில் பேசியதாக வெளியான தகவல்தான் இந்த சந்தேகத்திற்கு காரணம். இந்த சம்பவத்திற்கு பிறகு காங்கிரஸ் மேலிட தலைவர்களும், ராகுல் காந்திக்கு நெருக்கமான தலைவர்களும் விஜய்யை பலமுறை சந்தித்து பேசி வருகின்றனர்.

ஒருபுறம் தங்களுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திவிட்டு மற்றொருபுறம் விஜய்யுடன் பேசிவருவதுதான் தற்போது திமுகவின் சந்தேகத்திற்கு முக்கிய காரணமாகிவிட்டது. இந்த நிலையில்தான் கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்த கிருஸ்துமஸ் விழாவில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சி எம்.பி.க்கள், தலைவர்கள் கலந்துகொள்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இதே நிகழ்ச்சியில் த.வெ.க. முக்கிய நிர்வாகிகளான அருண்ராஜ் உள்ளிட்டோரும் இதே நிகழ்ச்சியில் பங்கேற்றதால் காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த் உள்ளிட்டோர் இந்த விழாவில் பங்கேற்காமல் புறக்கணித்தனர்.

அதே நேரம் அருண்ராஜை குமாரி மாவட்ட காங்கிரஸ் மேற்கு மாவட்ட தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள் சந்தித்து வெகுநேரம் பேசிய தகவல் திமுக மேலிடத்திற்கு கிடைத்தது. எனவே த.வெ.க.வுடன் தேர்தல் கூட்டணி வைப்பதில் காங்கிரஸ் கட்சி முக்கிய தலைவர்கள் ஆர்வமாக இருப்பது திமுக மேலிடத்திற்கு உறுதியாகிவிட்டது.

மற்றொருபுறம் அதிக சீட்டுகள் கேட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைமையும் நெருக்கடி கொடுத்து வருகிறது. த.வெ.க கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி வைத்தால் 3 மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிக்கு அதிக பலன்கள் கிடைக்கும். புதுசேரியில் ஆண்ட காங்கிரஸ் தனது அதிகாரத்தை பறிகொடுத்துள்ள நிலையில் விஜய்யுடன் கூட்டணி சேர்ந்தால் கண்டிப்பாக மீண்டும் ஆட்சியை பிடித்துவிட முடியும். கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களிலும் விஜய்க்கு அதிக செல்வாக்கு உள்ளது.

மேலும் த.வெ.க.வுடன் கூட்டணி சேர்ந்தால் தங்களுக்கு அதிக சீட்டுகள் கிடைப்பதோடு இளைஞர்கள் வாக்குகளும் அதிகம் கிடைக்கும். இதன்மூலம் அதிக எம் .எல்.ஏ.க்களை தமிழகத்திலும், பிற மாநிலங்களிலும் பெற முடியும் என ராகுல் காந்தியிடம் வலியுறுத்தி வந்த காங்கிரஸ் தலைவர்கள் தற்போது பிரியங்கா காந்தியிடமும் இதையே கூறி விஜய்யுடன் சந்திக்க வைக்கவும் ரகசிய நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனராம்.

இந்த தகவல்கள் திமுக மேலிடத்திற்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியதால் காங்கிரஸ் அகில இந்திய தலைவர் மல்லிகா அர்ஜுன் கார்கேயிடம் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால்தான் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலினை சந்தித்து பேசியதாக காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகின்றன. ஆனால் இதுவரை திமுகாவுடன்தான் கூட்டணி என்பதால் காங்கிரஸ் தெளிவுபடுத்தவில்லை. எனவே எந்த நேரத்திலும் காங்கிரஸ் கட்சி விஜய் கட்சியுடன் கூட்டணி சேர வாய்ப்புள்ளது என்பதே திமுக மேலிடத்தின் சந்தேகமாம்.

தற்போதைய சூழ்நிலையில் அகில இந்திய அளவில் பாஜக கட்சி உறுதியாக கால் ஊன்றிவிட்ட நிலையில் காங்கிரஸ் கட்சி ஆதரவு இருந்தால் மட்டுமே பாராளுமன்றத்தில் தங்கள் ஆட்சிக்கு ஏற்பட்டுள்ள பல்வேறு பிரச்சினையை பெரிதாக்க முடியும். தங்களை ஆட்சியை விட்டு எப்படியாவது நீக்க பல்வேறு வகையிலும் பாஜக முயலும் என்பதை அறிந்திருக்கும் திமுக மேலிடம் காங்கிரஸ் கட்சியை எந்த காரணம் கொண்டும் விட்டுவிட கூடாது. தேவைப்பட்டால் கூடுதல் சீட்டுகளை கூட கொடுத்துவிடலாம் என்று திமுக மேலிடத்திற்கு முக்கிய தலைவர்கள் ஆலோசனை கூறியுள்ளாராம்.

வரும் மாதங்களில் பாஜக தனது முழு பலத்தையும் தங்களுக்கு எதிராக பயன்படுத்தி டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவாலை ஆட்சியை விட்டு அகற்றியதைப்போல தங்களுக்கு எதிராக வருமான வரித்துறை, அமலாக்கத்துறை உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்களை கையில் எடுக்கும். திருப்பரங்குன்றம் விவகாரத்தை தமிழகம் முழுவதும் பாஜக சமூக ஊடகங்கள் மூலம் கொண்டுசென்று தாங்கள் பெரும்பான்மை இந்துக்களுக்கு எதிரானவர்கள் என்ற நிலையை உருவாக்கி விட்டனர்.

தற்போதைய ஒரே பலம் சிறுபான்மையினரின் ஒட்டுமொத்த வாக்குகள்தான். ஏற்கனவே விஜய்க்கு ஆதரவாக சிறுபான்மையினர் ஓட்டுக்கள் திரும்பிவரும் நிலையில் காங்கிரஸ் கட்சியும் அக்கட்சியுடன் கூட்டணி சேர்ந்தால் தங்களுக்கு வர வேண்டிய சிறுபான்மை ஓட்டுக்கள் அப்படியே விஜய் கூட்டணிக்கு சென்று தங்கள் ஆட்சிக்கே பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் திமுக மேலிடம் கருதுகிறது. எனவே ராகுல் காந்தி மூலம் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணி தொடர முயற்சி செய்யும் என்கிறது அரசியல் வட்டாரங்கள்..

Comments (0)
Add Comment