நிரந்தர டிஜிபி நியமன வழக்கு விசாரணைக்கே வராமல் “மாயம்”

தமிழகத்தில் நிரந்தர டிஜிபி நியமனத்தை அரசு உடனே செயல்படுத்த வேண்டும் வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொது நல வழக்கை நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளாமல் தடுத்ததோடு, மனு தாக்கல் செய்த மனுதாரர்களிடம் சமரசம் பேசியும், மிரட்டியும் மனுவை நம்பர் ஆகாமல் தடுத்து விட்டதாக வெளியாகியுள்ள தகவல் காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக காவல்துறையின் தலைமை பொறுப்பை வகிக்க வேண்டியவர் சட்டம் ஒழுங்கு டிஜிபி. காவல்துறையில் நேரடி ஐ.பி.எஸ். பணியில் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே டிஜிபி பதவி வரை அடைவதற்கான வாய்ப்பு கிடைக்கும். நேரடி ஐ.பி.எஸ். பணியில் சேர்ந்த அனைத்து ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கும் டிஜிபி பதவி என்பது கனவுப் பதவியாகும். காரணம் காவல்துறையை பொறுத்தவரை ஐ.பி.எஸ். படித்து தேர்வில் வெற்றி பெற்றதும் தாங்கள் பெறும் மார்க்குகள் அடிப்படையில் குறிப்பிட்ட மாநில பேட்ச் அதிகாரிகளாக நியமிக்கப்படுவது வழக்கம்.

இவ்வாறு பணியில் சேர்ந்ததும் பயிற்சி ஏஎஸ்பியாக முதலில் பணி வழங்கப்பட்டு பின்னர் உதவி எஸ்.பி.க்களாக குறிப்பிட்ட காவல் சரகங்களில் நியமிக்கப்படுவர். கிட்டத்தட்ட ஒரு ஆண்டு உதவி எஸ்.பி. பணியை முடித்த பிறகு எஸ்.பி. அந்தஸ்து பெற்று மாவட்டங்களிலோ அல்லது யூனிட்டுகளிலோ நியமிக்கப்படுவது வழக்கம். மாவட்ட எஸ்.பி.க்களாக பணியில் சேர்ந்து பணியாற்றும்போதுதான் பொதுமக்களை நேரடியாக தினமும் சந்திக்கவும், பிரச்சினைகளை நேரடியாக களத்திற்கே சென்று பணியாற்றி பேர்வாங்க முடியும்.

இதன் பிறகு குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு பிறகு டி.ஐ.ஜி., ஐ.ஜி., கூடுதல் டிஜிபி என பதவி உயர்வு பெறுவார். பனி ஓய்வு பெறுவதற்கு சில ஆண்டுகளுக்கு முன்புதான் டிஜிபி என்ற இறுதிக் கட்ட பதவி உயர்வு பெற முடியும். சிறிய வயதில் ஐ.பி.எஸ். தேர்வில் வெற்றி பெற்றால் மட்டுமே டிஜிபியாக பதவி உயர்வு பெற்று 4 ஆண்டு முதல் 7 ஆண்டுகள் வரை டிஜிபியாக பணியாற்ற முடியும்.

ஒவ்வொரு ஆண்டும் காவல்துறையில் காலியாகும் காலிப் பணியிடங்களுக்கு ஏற்ப 3 முதல் 4 கூடுதல் டிஜிபிக்கள் டிஜிபிக்களாக பதவி உயர்வு பெறுவது வழக்கம். இவர்களில் 2 ஆண்டு முதல் 3 ஆண்டுக்கு ஒருமுறை காலியாகும் டிஜிபி பணியிடத்திற்கு சீனியரிட்டி அடிப்படை மற்றும் ஆளும் கட்சிக்கு நெருக்கமாக இருந்தால் மட்டுமே சட்டம் ஒழுங்கு டிஜிபி என்ற காவல்துறை தலைவர் பொறுப்பு கிடைக்கும். மற்ற டிஜிபிக்களுக்கு பெரும்பாலும் லஞ்ச ஒழிப்புத்துறை, ஆயுத காவல் படை, போலீஸ் அகாடமி, மின்வாரிய விஜிலென்ஸ் அதிகாரி, தீயணைப்பு துறை டிஜிபி உள்ளிட்ட சில முக்கிய பதவிகள் கிடைக்கும்.

ஆட்சியாளர்களுக்கு வேண்டப்படாத டிஜிபிக்களுக்கு ஊர்க்காவல் படை டிஜிபி அல்லது கடலோர காவல் படை, மண்டபம் அகதிகள் முகம் உள்ளிட்ட பதவிகள் கிடைத்து ஓய்வுபெறுவது வழக்கம் . சட்டம் ஒழுங்கு பதவியில் நியமிக்கப்படும் டிஜிபி 2 ஆண்டுகள் கட்டாயமாக பதவியில் இருக்க வேண்டும் என்பது மத்திய பணியாளர் தேர்வாணையத்தில் சட்ட விதி. இந்த டிஜிபி பதவி ஓய்வு பெறுவதற்கு 6 மாதத்திற்கு முன்பே புதிய டிஜிபி நியமனத்திற்கான பேனல் தயாரிக்கப்பட்டு மத்திய பணியாளர் தேர்வாணையத்துக்கு அனுப்பி வைக்கப்படும். மத்திய பணியாளர் தேர்வாணையம் இந்த பட்டியலில் இருந்து 3 டிஜிபி பெயர்களை தேர்வு செய்து ஒருவரை முதல்வர் விருப்பமாக தேர்வு செய்து பதவி பெறுவார்.

ஆனால் தமிழக காவல்துறையில் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக பணியாற்றிய சங்கர் ஜிவால் ஆகஸ்ட் மாதம் ஓய்வுபெற்ற பிறகு நிரந்தர டிஜிபி நியமிக்கப்படாமல் நிர்வாகப் பிரிவில் பணியாற்றி ஜூனியர் டிஜிபியான வெங்கட்ராமன் பொறுப்பு டிஜிபியாக நியமிக்கப்பட்டார். இதை எதிர்த்து மதுரை உயர் நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டு மத்திய பணியாளர் தேர்வாணையம் மூலம் 3 பேர் பட்டியலும் 3 மதத்திற்கு முன்பே தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த பட்டியலில் இருப்பவர்கள் மீதும் ஊழல் புகார்கள் இருப்பதால் புதிதாக 3 பேருக்கு கீழே ஜூனியர்களாக உள்ள 5 பேர் பட்டியலை அனுப்பும்படி தமிழக அரசு மத்திய பணியாளர் தேர்வாணையத்துக்கு அனுப்பிய பரிந்துரையும் மறுக்கப்பட்டது. இதன்பிறகும் டிஜிபி பணி நியமனம் செய்யப்படாததால் உச்சநீதிமன்றத்தில் மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் ஹென்றி டிபேன் மற்றும் சென்னையை சேர்ந்த கிஷோர் கிருஷ்ணசாமி ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.

இந்த மனு தாக்கல் செய்யப்பட்டு 2 மாதங்களுக்கு மேலாகியும் இதுவரை விசாரணைக்கு வரவில்லை. வழக்கறிஞர் ஹென்றி டிபேன் தாக்கல் செய்த மனுவில் பிழைகள் இருப்பதாக கூறி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை. பிரபலமான வழக்கறிஞர் ஹென்றி டிபேன் தாக்க செய்த மனுவில் எப்படி தவறுகள் இருந்தது என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில்தான் சென்னையை சேர்ந்த கிஷோர் கிருஷ்ணசாமி என்பவர் தாக்கல் செய்த பொதுநல வழக்கு கடந்த 12-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என கடந்த மாதம் உச்சநீதிமன்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டது. ஆனால் கடந்த 12ம் தேதியன்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.

இதுபற்றி உச்சநீதி மன்றம் மற்றும் டிஜிபி அலுவலகத்தில் விசாரித்தபோது கிடைத்த தகவல் மிகவும் அதிர்ச்சிகரமானது. வழக்கறிஞர் ஹென்றி டிபேன் தொடர்ந்த வழக்கை காவல்துறையில் உள்ள முக்கிய அதிகாரிகள் மூலம் சமரசம் பேசி வழக்கை எடுத்துக் கொள்ளாமல் பார்த்துக் கொண்டனராம் தமிழக அரசு தலைமை வழக்கறிஞர்கள். இதேபோல கிஷோர் கிருஷ்ணசாமி தொடர்ந்த வழக்கு 12ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவிருந்த நிலையில் எதனால் விசாரணை நடக்கவில்லை என விசாரித்தபோது மனுதாரரை அன்பாக மிரட்டி மனுவை எடுக்க விடாமல் தடுத்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த வாபஸ் பின்னணியில் காவல்துறையை சேர்ந்த சில முக்கிய உயர்ரதிகாரிகளும், முதல்வருக்கு நெருக்கமான ஐ.ஏ.எஸ், அதிகாரிகளும் பின்னணியில் இருப்பதும் தெரியவந்துள்ளது. தங்களுக்கு வேண்டப்பட்ட கூடுதல் டிஜிபிக்கு டிஜிபி அந்தஸ்து கிடைக்கு நிலையில் அவருக்கு பொறுப்பு டிஜிபி பதவி கிடைக்க வேண்டும் என்பதற்காகவே நிரந்தர டிஜிபி நியமிக்கப்படவில்லை. பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமனுக்கு எதிர்பாராத விதமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதோடு, தன்னை பொறுப்பு டிஜிபி பதவியில் இருந்து நீக்கும்படி கேட்டுக்கொண்டார்.

இவருக்கு பதிலாக நிரந்தர டிஜிபியை நியமிக்காமல் ஓய்வு பெற ஒரு மாதமே உள்ள டிஜிபி அபய்குமார் சிங்கை மீண்டும் பொறுப்பு டிஜிபி பதவியில் நியமிக்க வைத்து விட்டனர். இதன் மூலம் ஜனவரி மாதம் பதவி உயர்வு பெரும் கூடுதல் டிஜிபிக்களில் ஒருவருக்கு சிறப்பு டிஜிபி பதவியோ, பொறுப்பு டிஜிபி பதவியோ வழங்கி அழகு பார்ப்பதே முதல்வர் அதிகார வட்டாரத்தில் உள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரியின் திட்டம். இதன்படியே உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாததோடு, பொறுப்பு டிஜிபியும் நியமிக்கப்பட்டுள்ளாராம்.

இதன்மூலம் டிஜிபி சீனியரிட்டியில் முதல் 3 இடத்தில் இருக்கும் சீமா அகர்வால், சந்தீப்ராய் ரத்தோர், ராஜீவ்குமார் ஆகியோருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. இவர்களில் சீமா அகர்வால் ௨௦­௨௬ ஜூன் மாதமே ஓய்வு பெறுவதால் டிஜிபி செலக்சன் பட்டியலில் இருந்தும் நீக்கப்பட்டு தீயணைப்புத்துறை இயக்குனராக இருந்து ஓய்வுபெற வேண்டிய நிலை. மற்ற இரண்டு அதிகாரிகளும் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர் பார்த்திருந்த நிலையில் அங்கும் இந்த அதிகாரிகள் குரூப் தங்கள் செல்வாக்கை பயன்படுத்தி வழக்கே விசாரணைக்கு வராமல் தடுத்து விட்டனர்.

மற்ற மாநிலங்களில் இதுபோன்ற சூழ்நிலை ஏற்பட்டால் பாதிக்கப்பட்ட டிஜிபிக்களே நேரடியாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தங்களுக்கு அநீதி விளைவிக்கப்பட்டதாக தெரிவித்தால் உச்சநீதிமன்றம் கட்டாயமாக இவர்களில் ஒருவருக்கு நிரந்தர டிஜிபி பதவி வழங்க உத்தரவிடும். ஆனால் ஆட்சியாளர்களை எதிர்த்து வழக்கு போட்டு பதவி பெற்றாலும் தங்களுக்கு மற்ற அதிகாரிகள் ஒத்துழைப்பு தரமாட்டார்கள்.

மேலும் தங்களை எதாவது ஒரு பிரச்சினையில் சிக்க வைத்து விடுவார்கள் என்ற அச்சம் இந்த மூத்த காவல்துறை அதிகாரிகளுக்கு உள்ளது. எனவேதான் முதல்வர் கருணை பார்வை தங்கள் பக்கம் திரும்பாதா என காத்துக் கொண்டுள்ளனர். ஆனால் முதல்வருக்கு நெருக்கமாக உள்ளவர்களே இந்த சீனியர் டிஜிபிக்களுக்கு எதிராக செயல்படுவதால் பொறுப்பு டிஜிபியை வைத்தே சில மாதங்கள் ஆட்சி நடக்கும். ஆனால் எப்படி இருந்தாலும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் பொறுப்பு டிஜிபியை நீக்கிவிட்டு தேர்தல் சிறப்பு டிஜிபி நியமனம் நடக்கும். இதன் பிறகு இதே ஆட்சி தொடர்ந்தால்தான் பொறுப்பு டிஜிபி பதவியே தொடரும். ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் நிரந்தர டிஜிபி நியமிக்கப்படுவர். வரும் 2026ம் ஆண்டும் மே மாதம் வரை நிரந்தர டிஜிபி நியமனத்திற்கு வாய்ப்பில்லை என்கிறது டிஜிபி அலுவலக வட்டாரங்கள்…

Comments (0)
Add Comment