பொறுப்பு டிஜிபிக்கு 21 நாள் பதவி! சீனியர் ஐபிஸ் அதிகாரிகள் வேதனை

பொறுப்பு டிஜிபி வெங்­கட்­ரா­ம­னுக்கு பதி­லாக அடுத்த பொறுப்பு டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ள லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர் அபய்குமார் சிங் வரும் ஜனவரி மாதம் 3-ம் தேதி ஓய்வு பெறுவதால் இவர் 21 நாட்களுக்கு மட்டுமே பொறுப்பு டிஜிபி பதவியில் இருப்பார் என்கிறது டிஜிபி அலுவலக வட்டாரங்கள்.

அதிகார மையத்தை சேர்ந்த உயர் அதிகாரிக்கு பொறுப்பு டிஜிபி பதவி கிடைக்க வசதியாக தற்காலிகமாக பொறுப்பு டிஜிபி பதவியில் நியமித்துள்ளார். காவல்துறைக்கு நிரந்தர டிஜிபியை நியமிக்கும் வரை காவல்துறை செயல்பாடுகளை நிர்வாகம் செய்வது மிக கடினம் என்பது தெரிந்தே இந்த அதிகாரிகள் சுய லாபத்திற்காக செயல்படுவது நிர்வாக சீர்கேடு என்பதை முதல்வர் எப்போது அறிவார் என்கின்றார் ஐ.பி.எஸ். அதிகாரிகள்.

தமிழக காவல்துறை டிஜிபியாக பணியாற்றி வந்த சங்கர்ஜிவால் ஆகஸ்ட் மாதம் 31-ம் தேதியன்று ஓய்வுபெற்ற பிறகு நிரந்தர டிஜிபியை நியமிக்காமல் நிர்வாக பிரிவு டிஜிபியாக வெங்கட்ராமனை பொறுப்பு டிஜிபி பதவியில் நியமித்தனர். இந்த நியமனத்தில் பின்னணியில் சில உயர் அதிகாரிகளின் பழிவாங்கும் நடவடிக்கைகளும், சுயநலனும் அடங்கியிருப்பது பின்னர் தெரிய வந்தது. ஆளும் கட்சி மேலிடத்திற்கு மிகவும் நெருக்கமான ஐ.ஏ.எஸ். அதிகாரியுடன் நெருக்கமாக இருக்கும் காவல்துறை உயர் அதிகாரிக்கு வரும் ஜனவரி 1-ம் தேதி முதல் டிஜிபி அந்தஸ்து கிடைக்கவிருப்பதால் இவரை பொறுப்பு டிஜிபியாக நியமித்து தேர்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

அப்போதுதான் ஆளும்கட்சிக்கு தேவையான உதவிகளை காவல்துறை மூலம் செய்து முடிக்க உதவியாக இருக்கும் என முதல்வரிடம் பேசி இந்த உயர் அதிகாரிக்கு டிஜிபி பொறுப்பு பதவி கிடைக்கும்வரை டம்மி டிஜிபியாக வெங்கட்ராமன் இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்த நியமனம் நடந்ததாம். நேர்மையான அதிகாரியான வெங்கட்ராமனால் இந்த அதிகாரிகளின் நேர்மையற்ற செயல்களுக்கும், தவறான நடவடிக்கைகளுக்கும் ஒத்துப்போக முடியாமலும், எதிர்த்து தைரியமாக செயல்பட முடியாமலும் தவித்து வந்ததாக தெரி­கி­ற­து.

கரூர் உயிரிழப்பு சம்பவம், அமலாக்கத்துறை கடிதம், திருப்பரங்குன்றம் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு முக்கியமான விஷயங்களில் தனக்கு கீழே பணியாற்றும் முக்கிய அதிகாரிகள் தவறான முடிவுகளை செய்யும் படி காவல்துறை மண்டல மற்றும் சரக அதிகாரிகள், மாவட்ட அதிகாரிகளுக்கு நிர்பந்தம் செய்தும் இவரால் ஏதும் செய்ய முடியாமல் வெறுமனே வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது. ஆனால் ஒட்டு மொத்த அவப்பெயரும் டிஜிபி வெங்கட்ராமனுக்கே சென்றடைந்ததால் மிகவும் மன உளைச்சலுக்கும், வேதனைக்கும் உள்ளாக்கப்பட்டார்.

இதனால் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருதயத்தில் 3 அடைப்புகள் ஏற்படும் அளவிற்கு மன அழுத்தத்தால் தவித்தார். தற்போது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் 2 ஸ்டண்ட் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது. ஓரிரு நாளில் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு திரும்பிவிடலாம் என்றாலும் ஒரு சில மாதங்கள் கழித்து மேலும் 2 ஸ்டண்ட் கருவிகளை பொறுத்தவேண்டி இருப்பதால் இவர் மேலும் சில மாதங்கள் விடுமுறையை தொடர்வார் என்கிறது மருத்துவமனை வட்டாரங்கள்.

இந்த நிலையில்தான் தன்னால் பொறுப்பு டிஜிபி பதவியில் தொடர முடியாது என வெங்கட்ராமன் தெளிவாகவும், உறுதியாகவும் கூறிவிட்டதால் அவசரமாக லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபியாக அபய் குமார் சிங்கை பொறுப்பு டிஜிபியாக அரசு நியமித்தது. கண்டிப்பான அதிகாரியான இவரும் நிரந்தர டிஜிபி பதவிக்கான ரேஸில் இருந்தவர்தான். ஆனால் ஓய்வுபெற்ற டிஜிபி சங்கர் ஜிவால் ஆகஸ்ட் மாதம்தான் ஓய்வுபெற்றார். அபய்குமார் சிங்கோ ஜனவரி மாதம் 3-ம் தேதியுடன் ஓய்வுபெற வேண்டும். பொதுவாக நிரந்தர டிஜிபியாக நியமிக்கப்ப­ட வேண்டியவர் ஓய்ட பெற 6 மாதங்கள் முழுமையாக இருக்க வேண்டும்.

ஆனால் அபய்குமார் சிங்கிற்கு 5 மாதங்கள் மட்டுமே இருந்ததால் டிஜிபி பேனல் பட்டியலில் இடம் பெறவில்லை. இதனால் சங்கர் ஜிவாலை ஜூலை மாதமே ஓய்வு பெற வைத்து அபய்குமார் சிங் பெயரை பேனல் பட்டியலில் சேர்க்க அதிகார மையம் முயற்சித்தது. இதற்கு சங்கர் ஜிவால் ஒப்புக்கொள்ள மறுத்ததுடன் ஜூலை மாதம் இறுதியில் ஆன்மீக பயணம் மேற்கொள்வதாக கூறி 10 நாட்கள் விடுமுறையில் சென்றுவிட்டதால் அதிகார மையத்தின் திட்டம் பலிக்காமல் போனது.

டிஜிபி வெங்கட்ராமன் திடீரென உடல்நல குறைவினால் விடுமுறையில் சென்றதால் இவருக்கு பொறுப்பு டிஜிபி பதவி தேடி வந்தது. ஜனவரி மாதம் 3-ம் தேதியன்று இவர் ஓய்வுபெற்றாலும் ஜனவரி மாதம் முழுவதும் டிஜிபி பதவியில் தொடரலாம் என்கிறது டிஜிபி அலுவலக வட்டாரங்கள். ஆனால் பொறுப்பு டிஜிபியில் இவர் 21 நாட்கள் அதாவது வரும் ஜனவரி முதல்தெதி வரைதான் தொடருவார்.

ஜனவரி மாதம் டிஜிபி அந்தஸ்து பெரும் 3 கூடுதல் டிஜிபிக்களில் ஆட்சியாளர்களுக்கு மிகவும் வேண்டிய அதிகாரிக்கு பொறுப்பு டிஜிபி பதவி வழங்கப்பட்டுவிடும். தேர்தல் மார்ச் மாதம் இறுதியில் அறிவிக்கப்படும் வரை பொறுப்பு டிஜிபி பதவியில் இருப்பார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் சீனியர் டிஜிபிக்களில் ஒருவர் தேர்தல் பிரிவு டிஜிபியாக நியமிக்கப்பட்டு ஒட்டுமொத்த சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட அனைத்து பிரிவுகளுக்கும் தலைவராக நியமிக்கப்படுவார்.

தேர்தல் முடிவுகள் மே மாதம் வந்த பிறகு இதே ஆட்சி தொடர்ந்தால் பொறுப்பு டிஜிபிக்கு மீண்டும் அதே பதவி கிடைத்துவிடும். அதுவரை நிரந்தர டிஜிபி பதவியை நிரப்புவதாக ஐடியா இல்லை எனவும் டிஜிபி அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தங்களது சுய லாபத்திற்காகவும், பதவிக்காகவும் இதுபோன்று பொறுப்பு டிஜிபிக்களை நியமித்து சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களிலும் பிரச்சினைகள் ஏற்பட்டு அரசுக்கு அவப்பெயர் ஏற்படுவதை முதல்வர் உணருவாரா?

பொறுப்பு டிஜிபியால் தனக்கு கீழே பணியாற்றும் அதிகாரிகளை கட்டுப்படுத்த முடியாததால்தான் கடந்த 3 மாதங்களில் கரூர் சம்பவம், திருப்பரங்குன்றம் சம்பவம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளில் அரசுக்கு அவப்பெயர் கிடைத்துள்ளது. எனவே சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் மற்றும் அதிகாரிகள் நியமனத்தில் முதல்வர் எந்த பரிந்துரையையும் ஏற்காமல் நேர்மையான அதிகாரிகளை நியமித்து அரசுக்கு நல்லபெயர் கிடைக்க வழிவகை செய்யவேண்டும். இல்லையேல் காவல்துறையில் நடக்கும் பல்வேறு சீர்கேடுகள் அரசுக்குத்தான் பெரிய அளவில் சிக்கலையும், அவப்பெயரையும் பெற்றும் தரும் என்கின்றனர் ஐ.பி.எஸ். அதிகாரிகள்.

Comments (0)
Add Comment