-சிவ. செல்லையா –
தமிழகம் முழுவதும் உள்ள ஆயுதப்படையில் பணியாற்றும் காவலர்களுக்கு 25 ஆண்டுகள் எந்த தண்டனையும் பெறாத நிலையில் பதவி உயர்வு வழங்கி சப் இன்ஸ்பெக்டர்களாக நியமிக்க பட்டனர். தற்போது இவர்கள் இன்ஸ்பெக்ட்டர்களாக பதவி உயர்வு பெறுவதற்கான சீனியரிட்டியை பெற்றுவிட்ட நிலையில் இவர்களோடு சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு பெற்ற சென்னை மாநகர காவல்துறையின் கட்டுப்பாட்டில் பணியாற்றும் 500 -க்கும் மேற்பட்ட சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் இன்னும் சப் இன்ஸ்பெக்டர்கள் பதவி உயர்வைகூட பெற முடியாமல் 7 ஆண்டுகளாவே தவித்துவரும் அவலம் தொடர்கிறது.
தமிழக காவல் துறையில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆயுதப்படை போலீசார் பல்வேறு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். சட்டம் ஒழுங்கு பிரச்சினை, முக்கிய திருவிழாக்கள், முக்கிய பிரமுகர்களின் வருகையின்போது ஆயுதப்படையில் பணியாற்றும் காவலர்கள்தான் 10 மணி நேரத்திற்கும் மேல் கால் கடுக்க பாதுகாப்பு பணியில் நிறுத்தப்படுவது வழக்கம். சமீப காலமாக முதல்வர் வருகையின்போது கூட ஆயுதப்படடை போலீசார் பல மணி நேரம் சாலையில் பாதுகாப்பு என்ற பெயரில் அவசர தேவைகளுக்கு கூட ஒதுங்க முடியாமல் நிறுத்தப்படுவது வேதனை. ஆயுதப்படையில் சேர்ந்து படிப்படியாக பதவி உயர்வு பெற்று தலைமை காவலர் பதவியை அடைந்து 25 ஆண்டுகளாக எந்த தண்டனையும் பெறாதவர்களுக்கு சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் பதவி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது.
சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் பதவி உயர்வு பெற்றவர்களுக்கு ஆண்டுக்கு ஒருமுறை மாவட்டங்களில் ஜூன் மாதங்களில் போர்டு வைத்து சப் இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு வழங்கி சில வாரங்கள் பயிற்சிக்கு பிறகு காவல் நிலையங்கள் மற்றும் போக்குவரத்து பிரிவுக்கு அனுப்பி வருகின்றனர். இதனால் கடந்த 2017 மற்றும் 2018 ஆண்டுகளில் ஆயுதப்படையில் பணியாற்றி தற்போது பல்வேறு காவல் நிலையங்கள் மற்றும் பிரிவுகளில் பணியாற்றும் ஆயுதப்படை சப் இன்ஸ்பெக்டர்கள் இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு பெரும் தகுதியை அடைந்துவிட்டனர். ஆனால் சென்னை மாநகர காவல் ஆயுதப்படையில் பணியாற்றி கடந்த 2018 ம் ஆண்டு சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு பெற்றவர்கள் மட்டும் கிட்டத்தட்ட 7 ஆண்டுகளாக சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கலாகவே பணியாற்றும் அவலநிலை தொடர்வதாக குமுறுகின்றனர்.
சென்னை மாநகர ஆணையராக அருண் பொறுப்பேற்ற பிறகு பாதிக்கப்பட்ட ஆயுதப்படை சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் ஆணையரை சந்தித்து தங்கள் பிரச்சினைகளை எடுத்து கூறியதும் பதவி உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்கும்படி சூப்பிரெண்டுகளுக்கு உத்தரவிட்டார். ஆனால் வழக்கை காரணம் காட்டி அலுவலக சூப்பிரெண்டுகள் பதவி உயர்வு வழங்குவதை தடுத்துவிட்டனர். வழக்கை விரைந்து முடித்து தங்களுக்கு சப் இன்ஸ்பெக்டர்கள் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பதே பாதிக்கப்பட்ட ஆயுதப்படை சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் கோரிக்கை.
மாவட்டங்களில் ஆண்டுதோறும் ஜூன் மாதங்களில் மாவட்டங்களில் போர்டு மூலம் பதவி உயர்வு வழங்க படுவதை போல சென்னை மாநகரத்தில் பதவி உயர்வு வழங்க வேண்டும். கடந்த 7 ஆண்டுகளாக சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வின்றி தவித்தாலும் சப் இன்ஸ்பெக்டர்களுக்கான வேலையை மட்டும் உயர் அதிகாரிகள் பெற்றுவிட்டு பதவி உயர்வு பெறுவதில் மட்டும் ஆர்வம் காட்டுவதில்லை. மற்ற பதவிகளில் கூட குறிப்பிட்ட ஆண்டுகள் பணியாற்றினால் சீனியரிட்டி வழங்கி ஊதிய உயர்வு வழங்க படும். ஆனால் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்களாக பதவியில் இருப்பதால் குடியிருப்பு கோட்டா உள்ளிட்ட எந்த சலுகையும் பெற முடியாமல் தலைமை காவலருக்கான அந்தஸ்த்தில்தான் பணியாற்றி வருகிறோம் என வேதனையுடன் தெரிவிக்கின்றனர் சென்னை மாநகர ஆயுதப்படை சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள். இந்த உத்தரவால் 1986 -ம் ஆண்டு சென்னை மாநகர ஆயுத படையில் சேர்ந்தவர்கள் கூட சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்களாகவே ஓய்வும் பெற்றுவிட்டதாகவும் வேதனைப்படுகின்றனர். இவர்களது வேதனையை போக்க அதிகாரிகள் முன்வருவார்களா…??????