சிவ. செல்லையா
தமிழக காவல் துறையில் குரூப் 1 தேர்வில் வெற்றிபெற்று நேரடி டிஎஸ்பி பதவியில் சேர்ந்து எஸ்.பி. பதவி உயர்வு பெற்று ஓராண்டில் காவல்துறை பணியே தேவை இல்லை என உதறி தள்ளிவிட்டு விருப்ப ஓய்வில் சென்றது தமிழக காவல் துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உயர் அதிகாரிகளின் அழுத்தம் மற்றும் ஆளும்கட்சி பிரமுகர்களின் அடாவடியால் காவல் துறை அதிகாரிகள் கடும் மன அழுத்தத்திற்கு ஆளாகி இருப்பதாக வேதனைப்படுகின்றனர்.
அரசு பணி என்பது தமிழக இளைஞர்களின் பெரும் கனவு. டிஎன்பிஎஸ்சி சார்பில் நடத்தப்படும் குரூப் 4 உள்ளிட்ட அடிப்படை அரசு பணிக்கு கூட பல லட்சம் பட்டதாரி இளைஞர்கள் விண்ணப்பம் செய்து தேர்வுக்காக கடினமாக உழைக்கின்றனர். இப்படிப்பட்ட நிலையில் கடினமான தேர்வாக கருதப்படும் குரூப் 1 தேர்வில் தேர்ச்சிபெற்று காவல் துறையில் நேரடி டிஎஸ்பி பதவியில் சேர்ந்த இளைஞர் படிப்படியாக 11 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றிவிட்டு பதவியே வேண்டாம் என விருப்ப ஓய்வில் சென்ற வேதனையான சம்பவம் நடந்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் பகுதியை சேர்ந்தவர் அருண். இவர் டிஎன்பிஎஸ்சி சார்பில் கடந்த 2012ம் ஆண்டு நடத்திய குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்று டிஎஸ்பி பதவியை தேர்வு செய்தார். பயிற்சிக்கு பிறகு கடந்த 12 ஆண்டாக தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் டிஎஸ்பி மற்றும் கூடுதல் டிஎஸ்பி பதவி வகித்தார். கடந்த 2024ம் ஆண்டு இவருக்கு எஸ்பியாக பதவி உயர்வு கிடைத்தது. இவர் திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறில் உள்ள சிறப்பு காவல் படை 12-வது பட்டாலியன் கமாண்டன்ட் பதவியில் பணிபுரிந்து வந்தார். இதற்கிடையே கடந்த 13-ம் தேதியன்று அருண் விருப்ப ஓய்வில் செல்ல அரசு அனுமதித்துள்ளதாக டிஜிபி சங்கத் ஜிவால் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டது காவல்துறையில் பணியாற்றிய அதிகாரிகள் அனைவரையும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. எதற்காக திடீரென எஸ்பி அருண் இந்த முடிவை எடுத்தார் என விசாரித்தபோது பல அதிர்ச்சிகரமான தகவல்கள் கிடைத்தது.
மக்களுக்கு சிறப்பான சேவையாற்ற வேண்டும். பணியில் நேர்மையுடன் பணியாற்ற வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் அருண் காவல் பணியை தேர்வு செய்தார். இவர் டிஎஸ்பி பதவியில் சேர்ந்த நாள் முதல் நேர்மையாக பணியாற்றி வந்த நிலையில் பல்வேறு சவால்களையும், பிரச்சினைகளையும் துறை ரீதியாகவும், அரசியல் பிரமுகர்கள் மூலமும் சந்திக்க நேர்ந்தது. பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்ட போதெல்லாம் நேர்மையாக பணியாற்ற நினைத்தாலும் ஆளும்கட்சி பிரமுகர்கள் நேரடியாகவோ, தங்களுக்கு வேண்டிய காவல் துறை அதிகாரிகள் மூலமோ தாங்கள் கூறுவதை மட்டுமே செய்ய வேண்டும் என நிர்பந்தம் செய்ததால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்தார். பதவி உயர்விலும் காவல் துறையில் மிகவும் கவுரவமான பதவியாக கருதப்படும் மாவட்ட எஸ்பி பதவியை வழங்காமல் தண்டனை பதவியாக கருதப்படும் பட்டாலியன் பதவியை வழங்கி உயர் அதிகாரிகள் மேலும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.
இதனால் கடந்த 3 மாதங்களுக்கு முன்பே தனது பதவியை ராஜினாமா செய்வதாகவும், விருப்ப ஓய்வில் செல்ல விரும்புவதாகவும் ஆயுதப்படை கூடுதல் டிஜிபி ஜெயராமனிடம் கடிதம் கொடுத்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த ஏடிஜிபி ஜெயராம் அழைத்து பேசி ராஜினாமா செய்ய வேண்டாம். தேவைப்பட்டால் சில மாதங்கள் மருத்துவ விடுப்பில் சென்று விட்டு மீண்டும் பணிக்கு வரும்படி அறிவுரை கூறியுள்ளார். ஆனால் தனது விருப்ப ஒய்வு முடிவில் எஸ்பி அருண் உறுதியாக இருந்ததால் ராஜினாமா கடிதத்தை டிஜிபிக்கு அனுப்பி வைத்தார். 3 மாதங்கள் வரை அவகாசம் கொடுத்ததும் அருண் தனது முடிவை மாற்றிக்கொள்ளாததால் கடந்த 13ம் தேதியன்று இவரது விருப்ப ஓய்வை ஏற்பதக்கக் டிஜிபி உத்தரவு பிறப்பித்தார்.
தமிழக காவல் துறையில் தற்போது பெரும்பாலான உயர் அதிகாரிகள் முதல் கீழ்மட்ட போலீசார் வரை கடும் மன உளைச்சலில்தான் இருந்து வருவதாக காவல்துறை வட்டாரங்கள் கூறுகின்றன. காரணம் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு அதிமுக ஆதரவு அதிகாரிகள் என கூறி பலரை டம்மி பதிவியில் அமர வைத்துவிட்டனர். ஆனால் அதிமுக ஆட்சியில் இருந்துகொண்டே திமுக மேலிடத்துடன் தொடர்பில் இருந்த அதிகாரிகள் மட்டும் தொடர்ந்து முக்கிய பதவியில்தான் இருந்து வருகின்றனர்.
கொலை, சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட சம்பவங்கள் நடந்ததும் டிஜிபி, சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி, உளவுத்துறை ஐ.ஜி., மண்டல ஐஜி, டிஐஜிக்கள் வரை அனைவருமே நேரடியாக மாவட்ட எஸ்.பி.க்களிடம் விளக்கம் கேட்டு நீண்ட மெஸேஜை அனுப்பி விடுகின்றர். மாவட்ட எஸ்பி நேரடியாக சென்று விசாரிக்க நேரம் இல்லாமல் சிறப்பு பிரிவு அதிகாரிகள் அளிக்கும் அறிக்கை அடிப்படையில் பதில் அனுப்புவதற்குள் ஒரு நாள் பொழுது சென்றுவிடுகிறது. சிறிய சம்பவங்களுக்கு கூட இது போன்று விளக்கம் கேட்பது உயர் அதிகாரிகளின் வாடிக்கையாகிவிட்டது. இதை தவிர மாவட்ட அமைச்சர்களுக்கு நெருக்கமானவர்கள், மேலிடத்திற்கு நெருக்கமானவர்கள் என கூறி மணல் கடத்தல், கனிமவளங்கள் கடத்தல் உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபடுபவர்களை கூட தன்னிச்சையாக மாவட்ட எஸ்.பி.க்கள் கைது செய்ய முடியாதபடி அதிகாரிகளும், அரசியல் பிரமுகர்களின் தலையீடு அதிகமாகி விட்டதாகவும் புலம்பல் அதிகமாக உள்ளது.
தவறை தட்டி கேட்கும் அதிகாரியை உடனடியாக அரசியல் பிரமுகர்கள் தங்கள் மேலிட செல்வாக்கை பயன்படுத்தி டம்மி பதவிக்கு மாற்றி விடுவதால் நேர்மையான அதிகாரிகள் மாவட்ட எஸ்.பி. பதவிக்கு செல்ல விரும்புவதில்லை. உயர் அதிகாரிகளின் தவறுக்கு மாவட்ட எஸ்.பி.க்கள் பலிகடாவாகின்றனர். இதனால் தற்போது பல உயர் அதிகாரிகள் கூட கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். இவர்களைவிட டிஎஸ்பிக்கள், இன்ஸ்பெக்டர்களும் வேலையை விட்டுவிட்டால் கூட பரவா இல்லை என்ற மன வேதனையில் இருப்பதாகவும் காவல்துறை வட்டாரங்கள் கூறுகின்றன. எனவே உயர் அதிகாரிகள் தனக்கு கீழே பணிபுரியும் அதிகாரிகளுக்கு கூடுதல் மன உளைச்சலை அளிக்காமல் சுதந்திரமாக பணியாற்ற அனுமதித்தால் சட்டம் ஒழுங்கை சிறப்பாக காப்பாற்ற முடியும் என்கின்றனர் பாதிக்கப்பட்ட அதிகாரிகள்.