சங்கர் ஜிவாலுக்கு கட்டாய ஒய்வு ஏ.கே. சிங்கை டிஜிபியாக்க போட்ட ஸ்கெட்ச்

தமிழக காவல்துறை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு புதிய டிஜிபியை தேர்வு செய்வதற்கான பட்டியலை இறுதி செய்து மத்திய பணியாளர் தேர்வாணையத்திற்கு அனுப்பாமல் யார் டிஜிபி என்ற பரிசீலனை நிலையிலேயே உள்ளது வேதனைக்குரியது என்கின்றனர் காவல்துறை அதிகாரிகள். டிஜிபி பதவிக்கு சீனியாரிட்டி அடிப்படையில் 3 பேர் முன் வரிசையில் இருந்தபோதும் நான்காவது இடத்தில் ஒய்வு பெற 6 மாதங்களே உள்ள அபய்குமார் சிங்கை டிஜிபியாக்க தற்போதைய டிஜிபியை விருப்ப ஓய்வில் செல்லும்படி கட்டாயப்படுத்துவதாக  பரவி வரும் செய்திகளும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக காவல்துறை தலைமை அதிகாரியான சங்கர் ஜிவாலுக்கு வரும் ஆகஸ்ட் மாதம் இறுதிவரை பணியில் தொடர வாய்ப்பு உள்ளது. வழக்கமாக டிஜிபி ஒய்வு பெறுவதற்கு 3 மாதங்களுக்கு முன்பாகவே அடுத்த டிஜிபி யார் என்பதை முடிவு செய்ய தலைமை அலுவலகத்தில் டிஜிபி தலைமையிலான பேனல் கமிட்டி ஆலோசனை கூட்டத்தை நடத்தி முடித்து பட்டியலை தமிழக அரசின் தலைமை செயலாளருக்கு அனுப்பி வைப்பார்கள்.

இந்த பட்டியலில் டிஜிபி அந்தஸ்தில் உள்ள அனைத்து ஐபிஎஸ் அதிகாரிகளின் பட்டியலும் அனுப்பி வைக்கப்படும். தற்போதைய சீனியாரிட்டியின்படி சீமா அகர்வால், சந்தீப்ராய் ரத்தோர், ராஜீவ்குமார், அபய்குமார் சிங், வன்னியபெருமாள், மகேஷ்குமார் அகர்வால், வெங்கட்ராமன், வினித்தேவ் வான்கடே, சஞ்சய் மாத்தூர் ஆகியோர் டிஜிபி அந்தஸ்தில் உள்ள அதிகாரிகளாவர். இவர்களது பட்டியலை தலைமை செயலாளருக்கு 2 மாதங்களுக்கு முன்பே டிஜிபி அலுவலகத்தில் இருந்து அனுப்பி வைத்திருக்க வேண்டும்.

இதில் முதல் 3 இடத்தில் உள்ள சீமா  அக்ரவால், சந்தீப் ராய் ரத்தோர், ராஜீவ்குமார் ஆகியோரை மத்திய உள்துறை தேர்வு செய்து தமிழக அரசுக்கு அனுப்பிய பிறகு இதில் இருந்து ஒருவரை ஆகஸ்ட் மாத இறுதியில் டெல்லியில் மத்திய பணியாளர் தேர்வாணைய தலைவர், மத்திய உள்துறை செயலாளர், தமிழக அரசின் தலைமை செயலாளர், உள்துறை செயலாளர், தற்போதைய டிஜிபி ஆகியோர் கொண்ட கூட்டத்தில்  இறுதி செய்யப்பட்டு அரசுக்கு அனுப்பி வைக்கப்படும். இதில் சீமா அக்ரவால், சந்தீப் ராய் ரத்தோர் ஆகியோரிடையேதான் போட்டி இருப்பதாகவும், இதிலிருந்து ஒருவர் தேர்வு செய்யப்படலாம் என்றும் முதலில் கூறப்பட்டது. திடீரென  தற்போதைய டிஜிபி சங்கர் ஜிவாலுக்கே மேலும் 6 மாதங்கள் பணி நீடிப்பு கேட்டு தமிழக அரசு கடிதம் அனுப்பி தமிழக காவல்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினர்.

ஆனால் தமிழக அரசின் கோரிக்கையை மத்திய உள்துறை நிராகரித்து  புதிய டிஜிபி பட்டியலை அனுப்பும்படி கூறிவிட்டனர். தமிழக அரசு திடீரென இந்த முடிவை ஏன் எடுத்தனர் என காவல்துறை வட்டாரத்தில் விசாரித்தபோது டிஜிபி பதவிக்கான ரேஸில் முதல் இடத்தில இருக்கும் சந்தீப் ராய் ரத்தோர் இப்பதவிக்கு வருவதில் முதல்வர், துணை முதல்வர் தரப்பில் ஆதரவு இருந்தாலும் இவர் டிஜிபி ஆவதில் மேலிடத்திற்கு நெருக்கமான சில காவல் துறை அதிகாரிகளுக்கு துளியும்  விருப்பம் இல்லையாம்.

இதனால் சந்தீப் ராய் ரத்தோரை டிஜிபியாக நியமித்தால் சட்டம் – ஒழுங்கு பணியை சிறப்பாக கவனிக்க முடியாது என்ற ரீதியில் மேலிடத்திற்கு அறிக்கை கொடுத்ததால் மாற்று ஏற்பாட்டில் மேலிடம் இறங்கியது தெரியவந்தது. ஆனால் பணி நீடிப்பு முயற்சி தோல்வி அடைந்ததையடுத்து தற்போதைய  டிஜிபிக்களில் சீனியராக உள்ள ஒரு அதிகாரியை பொறுப்பு டிஜிபியாக நியமித்துவிட்டு ஜனவரி மாதத்தில் டிஜிபி அந்தஸ்து பெரும் அதிகாரியான டேவிட்சனுக்கு சிறப்பு டிஜிபி பதவி கொடுத்து தேர்தலை சந்திக்கலாம் என திட்டம் வகுக்கப்பட்டது.

தற்காலிக டிஜிபி பதவிக்கும் மத்திய உள்துறை அனுமதி வழங்காததால் அடுத்தகட்டமாக நடத்தப்பட்ட மூவ் தான் காவல்துறையினரே எதிர்பாராத டுவிஸ்ட்டாகிவிட்டது. கடந்த வியாழனன்று டிஜிபி அலுவலக வட்டாரம் முழுவதும் பேசப்பட்ட செய்தி தற்போது மாநில ஊழல் தடுப்பு பிரிவு டிஜிபியாக உள்ள அபய்குமார் சிங்கையே புதிய டிஜிபியாக நியமிக்க மேலிட ஆதரவு அதிகாரிகள் தரப்பு அதிரடி முடிவெடுத்துள்ளதாக வெளியானதுதான் இந்த ஷாக் தகவல். ஆனால் அபய்குமார் சிங் வரும் ஜனவரி மாதம் ஓய்வுபெற உள்ளார்.

புதிய டிஜிபி தேர்வு செய்ய ஒய்வு பெறுவதற்கு 6 மாதங்கள் வரை மட்டுமே இருந்தால்தான் புதிய டிஜிபி பட்டியலில் சேர்க்க முடியும். ஆனால் தற்போதைய டிஜிபி சங்கர் ஜிவால் ஆகஸ்ட் மாதம் ஒய்வு பெற்றால் அபய்குமார் சிங்கிற்கு 5 மாதம் மட்டுமே பணிக்காலம் உள்ளது. எனவே அவரால் டிஜிபி பட்டியலில் இடம்பெற முடியுமா என்ற கேள்வி எழுந்தது. அப்போதுதான் மேலிட அதிகாரிகள் தரப்பு போட்ட அதிரடி திட்டம் குறித்த தகவல் வெளியாகி காவல்துறை அதிகாரிகளையே உலுக்கிவிட்டது.

தற்போதைய டிஜிபி சங்கர் ஜிவாலை ஜூலை மாதமே விருப்ப ஓய்வில் அனுப்பிவிட்டால் அபய்குமார் சிங்குக்கு 6 மாத பணிக்காலம் இருக்கும். இதன்மூலம் டிஜிபி பட்டியலில் 3 பேர் பட்டியலில் இடம்பிடித்து விடுவார். இதனால் புதிய டிஜிபியாக அபய்குமார் சிங்கை தேர்வு செய்வதில் எந்த இடையூறும் இருக்காது. சங்கர் ஜிவால் விருப்ப ஒய்வு கடிதம் கொடுத்தால் அவருக்கு டி.என்.பி.எஸ்.சி. தேர்வாணைய தலைவர் பதவி வழங்கப்படும் என்றும் தகவல் வெளியானது.

புதிய டிஜிபியாக அபய்குமார் சிங் நியமிக்கப்பட்ட பிறகு வரும் ஜனவரி மாதம் டிஜிபி அந்தஸ்து பெரும் டேவிட்சனுக்கு சிறப்பு டிஜிபி பதவியை கொடுத்துவிடலாம் என்பதே   இந்த அதிகாரிகளின் திட்டம். இந்த திட்டத்தை கேட்ட காவல்துறை அதிகாரிகள் அனைவருக்குமே கடும் அதிர்ச்சிதான். காரணம் குறிப்பிட்ட அதிகாரிக்கு டிஜிபி பதவி கிடைத்துவிட கூடாது என்பதற்காக மேலிட ஆதரவு பெற்ற ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்.அதிகாரிகளின் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் தவறான முன்னுதாரணம் ஆகிவிடும்.

டிஜிபி பதவிக்கு கூட ஒரு அதிகாரியை அரசால் தேர்வு செய்யமுடியாத நிலை உருவாக்கி விட்டதே. ஏற்கனவே ஐ.பி.எஸ். டிரான்ஸ்பர் பட்டியல் தயாரித்தால் கூட அதில் தங்கள் விருப்பம்போல் பல மாறுதல்களை செய்து பட்டியல் குறிப்பிட்ட நாளில் வெளியாக முடியாமல் பல நாட்கள் தாமதம் வருவது காவல்துறை வட்டாரத்தில் பெரும்  கேலிக்கு உள்ளான நிலையில் டிஜிபி தேர்வு செய்வதிலும் அதிகாரிகளுக்குடையிலான கோஷ்டி பூசல்களால் இவ்வளவு தாமதமாகி வருகிறது. இது காவல்துறைக்கு நல்லதல்ல என்கின்றனர் அதிகாரிகள்.

திமுக அரசு பொறுப்பேற்ற உடன் பதவியில் இருந்த திரிபாதி 2 மாதம்  பதவியில் நீடித்தார். இவருக்கு  பதிலாக புதிய டிஜிபியை தேர்வு செய்யும்போது கூட அப்போது டிஜிபி அந்தஸ்தில் இருந்த சஞ்சய் அரோரா, சைலேந்திர பாபு உள்ளிட்ட அதிகாரிகளை ஓவர் டேக் செய்து திமுக ஆதரவு அதிகாரியாக கருதப்படும் ஜாபர்சேட்டை டிஜிபியாக்க பல்வேறு முயற்சிகள் நடந்தது. ஆனால் ஜாபர்சேட் மீது வழக்குகள் இருந்ததால் இவரை 3 பேர் பட்டியலில் கூட சேர்க்க மத்திய உள்துறை மறுத்துவிட்டதால் வேறுவழியின்றி சைலேந்திர பாபுவை டிஜிபியாக தேர்வு செய்தனர்.

இதன்பிறகும் சஞ்சய் அரோரா முதல் இடத்தில் இருந்தும் கூட சங்கர் ஜிவாலுக்கு பதவி கிடைக்க ஓவெர்டேக் செய்து பதவி வழங்கினார். தற்போதும் அதே பாணியில் சீனியர் அதிகாரிக்கு வழங்காமல் தடுக்க காவல்துறையில் நடக்கும் இந்த தில்லாலங்கடி தான் ஹாட் டாபிக்காகிவிட்டது. எப்படியும் ஓரிரு நாளில் சங்கர் ஜிவால் ராஜினாமா செய்வாரா ? அல்லது புதிய பட்டியல் அனுப்பப்படுமா என்ற சஸ்பென்ஸிற்கு ஒரு முடிவு வந்துவிடும்.

Comments (0)
Add Comment