ஜூனியர் டிஜிபி “பதவியேற்பு” “பாய்காட்” செய்த சீனியர்கள்

தமிழக பொறுப்பு டிஜிபியாக வெங்கடராமன் பதவி ஏற்பு நிகழ்ச்சியில் ஒட்டுமொத்தமாக சீனியர் டிஜிபிக்கள் அனைவருமே கலந்துகொள்ளாமல் புறக்கணிப்பு செய்ததுடன், சென்னை மாநகர ஆணையரும் புறக்கணிப்பு செய்தது காவல்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சீனியரிட்டியை ஓவர்டேக் செய்து பதவி வழங்கிய நிலையில் உயர் அதிகாரிகள் புறக்கணிப்பு காவல் துறையில் பெரும் பிரச்சினைகளை ஏற்படுத்துவதுடன், புதிய டிஜிபி பல்வேறு சவால்களையும், சங்கடங்களையும் சந்திக்க நேரிடும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்.

தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபியாக பதவி வகித்து வந்த சங்கர் ஜிவால் ஓய்வுபெற்ற நிலையில் புதிய சட்டம் ஒழுங்கு டிஜிபியை நியமிக்காமல் பொறுப்பு டிஜிபியாக தலைமையிட டிஜிபியாக பணியாற்றி வரும் வெங்கட்ராமனுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. டிஜிபி சீனியரிட்டி பட்டியலில் சீமா அகர்வால், சந்தீப் ராய் ரத்தோடு, ராஜீவ்குமார், வன்னிய பெருமாள், வினித் தேவ் வான்கடே உள்ளிட்ட அதிகாரிகள் உள்ளனர். இவர்களில் சீமா அகர்வால், ராஜிவ் குமார், சந்தீப் ராய் ரத்தோடு, வன்னியபெருமாள் ஆகியோர் மிகவும் சீனியர்கள். இவர்களில் ஒருவரை டிஜிபியாக நியமிக்க விடாமல் சீனியரிட்டி பட்டியலில் 7 வது இடத்தில உள்ள வெங்கட்ராமனை பொறுப்பு டிஜிபியாக நியமித்தது காவல்துறை உயர் அதிகாரிகளிடையே பெரும் கொந்தளிப்பையும், சங்கடத்தையும் ஏற்படுத்திவிட்டது.

தமிழக காவல்துறை வரலாற்றில் பொறுப்பு டிஜிபியாக ஏற்கனவே ராமானுஜத்தை நியமித்த போதிலும் அவர் டிஜிபி பட்டியலில் சீனியரிட்டி பட்டியலில் இடம்பெற்று இருந்தார். ஆனால் கடந்த ஆண்டு இறுதியில்தான் டிஜிபி பதவி உயர்வு பெற்ற வெங்கட்ராமன் பொறுப்பு டிஜிபியாக நியமிக்கப்பட்டது சீனியர் அதிகாரிகளை கடும் கொந்தளிப்பிற்கு ஆளாக்கிவிட்டது என்றே கூறலாம். நிரந்தர டிஜிபியை நியமிக்காமல் பொறுப்பு டிஜிபியைதான் நியமிக்க வேண்டும் என டிஜிபி அலுவலகத்தில் பணிபுரியும் சில உயர் அதிகாரிகள், மண்டல உயர் அதிகாரிகளுடன் சேர்ந்து கடந்த பல மாதங்களுக்கு முன்பே திட்டமிட்டு காய் நகர்த்தி தங்கள் திட்டத்திலும் வெற்றிபெற்றுவிட்டனர். ஆனால் இவர்களின் செயலால் ஒட்டுமொத்த காவல்துறையும் இரண்டு பிரிவாக பிரிந்துவிட்டது என்றே கூறலாம். டிஜிபி அலுவலகத்தில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு ஆதரவு கோஷ்டி, எதிர்ப்பு கோஷ்டி என இரண்டு கோஷ்டிகள் உருவாக்கி விட்டது.

புதிய பொறுப்பு டிஜிபி யார் என்பதைக்கூட கடைசி நாள் வரை அறிவிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. பொறுப்பு டிஜிபியை நியமிப்பது குறித்து சட்ட நிபுணர்களுடன் 29-ம் தேதிவரை காவல்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். இந்த பிரச்சினை தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தால் கண்டிப்பாக அரசுக்கு கடும் கண்டனம் எழுதுவதோடு, புதிய டிஜிபி பட்டியலை தயாரித்து அனுப்பும்படி உச்சநீதிமன்றம் உத்தரவிடும்.இதனால் அரசுக்கு தர்ம சங்கடம் ஏற்படும்.எனவே புதிய டிஜிபி பட்டியலை மத்திய அரசுக்கு அனுப்பி அதிலிருந்து அரசுக்கு ஆதரவான டிஜிபியை நியமித்து விடலாம் என அரசு தலைமை வழக்கறிஞர் தரப்பில் ஆலோசனை கொடுக்கபட்டதாம். ஆனால் டிஜிபி அலுவலக முதல்வர் ஆதரவு வட்ட அதிகாரிகள் பொறுப்பு டிஜிபியைத்தான் நியமிக்க வேண்டும் என மேலிடம் மூலம் கடும் நெருக்கடி கொடுத்து உள்துறை செயலாளரரின் கையெழுத்தையும் பெற்று சங்கர் ஜிவால் ஓய்வு பெறுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்புதான் பொறுப்பு பதவிக்கான உத்தரவை வெளியிட்டனர்.

மதியம் 3 மணிக்கு சங்கர் ஜிவால் ஓய்வு பெற்று பதவியை புதிய பொறுப்பு டிஜிபியிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி டிஜிபி அலுவலகத்தில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் யாரும் எதிர்பாராத வகையில் தற்போது டிஜிபி அந்தஸ்தில் உள்ள பிரமோத் குமார், சீமா அகர்வால், ராஜிவ் குமார், சந்தீப் ராய் ரத்தோடு, வன்னியபெருமாள், அபய்குமார் சிங், வினித் தேவ் வான்கடே உள்ளிட்ட 8 டிஜிபிக்களும் ஒட்டுமொத்தமாக பங்கேற்காமல் புறக்கணித்தது காவல்துறை வட்டாரத்தையே பரபரப்பாகி விட்டது. தங்களைவிட ஜூனியர் அதிகாரியான வெங்கட்ராமன் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க விரும்பாமல் இவர்கள் புறக்கணிப்பு செய்துவிட்டதாக வெளியான தகவலும் காவல்துறை வட்டாரத்தை பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது. இவர்களோடு சென்னை மாநகர ஆணையர் அருணும் விழாவில் பங்கேற்காமல் புறக்கணித்துவிட்டார். கூடுதல் டிஜிபி அந்தஸ்துடன், சென்னை மாநகர ஆணையர் பொறுப்பில் உள்ள அருணும் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்காமல் புறக்கணித்தது ஏன் என்ற கேள்வியும் அதிகாரிகளிடையே எழுந்தது. விநாயகர் சதுர்த்திக்கு சென்னையில் வைக்கப்பட்ட சிலைகளை கடலில் கலக்கும் நிகழ்ச்சி நடப்பதால் பாதுகாப்பு பணி காரணமாக விழாவில் பங்கேற்கவில்லை என காரணம் கூறப்பட்டாலும் இவரது புறக்கணிப்பும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது.

வழக்கமாக டிஜிபி பதவியில் இருந்து ஓய்வு பெரும் அதிகாரியின் மனைவியோடு காரில் அமர வைத்து கயிறு கட்டி அவரை அதிகாரிகள் இழுத்துக்கொண்டு வாசல்வரை வந்து வழியனுப்புவது வழக்கம். ஆனால் சங்கர் ஜிவால் இந்த நிகழ்ச்சி எதையும் ஏற்பாடு செய்ய வேண்டாம் என கூறிவிட்டு சிம்பிளாக பதவி ஓய்வுபெற்று காரில் கிளம்பிவிட்டார். 8 டிஜிபிக்களும் பதவி ஏற்பு நிகழ்ச்சியை புறக்கணித்ததுதான் தற்போது காவல்துறை வட்டாரத்தில் பெரும் ஹாட் டாபிக்காக மாறிவிட்டது. காரணம் இந்த உயர் அதிகாரிகள் ஒத்துழைப்போடுதான் பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமன் வரும் ஒருசில மாதங்கள் தனது பணியை செய்யவேண்டும். ஜூனியர் அதிகாரி உத்தரவிற்கு பணிவதா என்றே பிரச்சினை இப்போதே தொடங்கிவிட்ட நிலையில் இவரால் எப்படி சிறப்பான நிர்வாகம் செய்ய முடியும் என்ற கேள்வி இப்போதே எழுந்துவிட்டது. இதோடு பொறுப்பு டிஜிபி என்பதால் சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளிலும் இவர் எப்படி அதிகாரிகளை கையாளப்போகிறார் என்பதும் இவர் முன்பு எழுந்துள்ள கேள்வி..

பொறுப்பு டிஜிபி நியமனத்தை எதிர்த்து சீமா அகர்வாலோ, ராஜீவ்குமாரோ, சந்தீப் ராய் ராத்தோடோ நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தால் கண்டிப்பாக நீதிமன்றத்தின் கண்டனத்திற்கு அரசு ஆளாவதோடு, புதிய டிஜிபியை நியமிக்கும்படி உச்சநீதிமன்றம் உத்தரவை பிறப்பித்துவிடும். ஆனால் அரசுக்கு எதிராக வழக்கு தொடர இந்த டிஜிபிக்கள் முன்வர மாட்டார்கள். ஆனால் ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டு வழக்கு திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவிருக்கும் நிலையில் உச்சநீதிமன்றம் பொறுப்பு டிஜிபி நியமனத்தை ரத்து செய்தாலும் அரசுக்கு சங்கடம்.. இதைப்பற்றி எல்லாம் முன்கூட்டியே யோசித்து முதல்வரிடம் தெரிவிக்க வேண்டிய உயர் அதிகாரிகள் தங்கள் சுய விருப்பு, வெறுப்புகளுக்காக பொறுப்பு டிஜிபியை நியமித்து காவல்துறையில் பெரும் சிக்கலை ஏற்படுத்திவிட்டனர் என்ற கோபம் பெரும்பாலான அதிகாரிகளிடம் வெளிப்பட்டுள்ளது. பதவி ஏற்பு நாளிலேயே புறக்கணிப்பு என்ற தர்மசங்கடத்தோடு பதவியை ஏற்றுள்ள டிஜிபி வெங்கடராமன் இன்னும் என்னென்ன பிரச்சினைகளை சந்திக்க வேண்டுமோ தெரியவில்லை.

தலைமையிட டிஜிபியாக பணியாற்றிய வினித்ததேவ் வான்கடே தமிழ்நாடு காவலர் வீட்டுவசதி வாரிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதால் இந்த பதவி காலியாகிவிட்டது. இந்த பிரிவின் ஐ.ஜி. விஜயேந்திர பிதாரி ஏற்கனவே விடுமுறையில் உள்ளார். டிஜிபி பதவி ஏற்புடன் பல ஐ.பி.எஸ். அதிகாரிகள் மாறுதல் பட்டியலும் தயாரான நிலையில் பட்டியலை முதல்வர் வெளிநாட்டு சுற்றுப்பயணம் முடிந்து திரும்பிய பிறகு போட்டுக்கொள்ளலாம் என கடைசி கட்டத்தில் நிறுத்தி வைத்துவிட்டனர். புதிய டிஜிபியை பொறுத்தவரை இவரால் எந்த ஒரு முடிவும் எடுத்து செயல்பட முடியாமல் வெறும் பொறுப்பை மட்டுமே வைத்துக்கொண்டிருக்க முடியும். ஏற்கனவே கோலோச்சிக்கொண்டிருக்கும் டிஜிபி அலுவலக அதிகாரிகள் முழுமையாக அதிகாரத்தை கையில் எடுத்துக்கொள்வர். இதனால் பல்வேறு பிரச்சினைகளும், சங்கடங்களும் ஏற்படும் என்கின்றனர் ஐ.பி.எஸ். அதிகாரிகள்.. இன்னும் என்னென்ன பாக்கபோறமோன்னு இப்பவே டிஜிபி அலுவலக வட்டார அதிகாரிகள் வட்டத்தில் புலம்பல் கேட்க தொடங்கிவிட்டது.

Comments (0)
Add Comment