25 ஆண்டாகியும் எஸ்.பி.யாகவே ஓய்வு வேதனையில் சீனியர் எஸ்.பி.க்கள்

-சிவ. செல்லையா –

தமிழகக் காவல்துறையில் குரூப் 1 தேர்வில் தேர்ச்சி பெற்று 25 ஆண்டாகியும் டிஐஜி பதவியைக் கூட பெற முடியாமல் சீனியர் எஸ்.பி. அந்தஸ்தில் பதவி ஒய்வு பெரும் நிலையில் இருப்பதாக சீனியர் எஸ்.பி.க்கள் வேதனையை தெரிவித்துள்ளனர்.

தமிழகக் காவல்துறை இதுவரை இல்லாத அளவிற்கு பதவி உயர்வு வழங்குவதில் பல்வேறு நிர்வாக சிக்கல்களை சந்தித்து வருகிறது. ஆயுதப் படையில், மாநகரில் பணியில் சேர்ந்தவர்களுக்கு உரிய காலத்தில் எஸ்.ஐ. பதவி உயர்வு வழங்காமல் மாவட்டங்களில் மட்டும் ஆண்டுதோறும் பதவி உயர்வு வழங்கியதால் சிறப்பு எஸ்.ஐ. பதவி உயர்வு பெற்று 8 ஆண்டுகளாகியும் எஸ்.ஐ. பதவியை கூட பெற முடியாமல் தவிக்கும் நிலைமை.

மற்றொருபுறம் நேரடி எஸ்.ஐ. தேர்ச்சி பெற்றவர்களுக்கு யுஎஸ்ஆர்பி தேர்வு சீனியாரிட்டி முறையில் பதவி உயர்வு வழங்காமல் பயிற்சியின் போது நடத்தப்படும் தேர்வுகளில் அதிக மார்க்குகளை பெற்றவர்களுக்கு சீனியாரிட்டி வழங்கியதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால், மீண்டும் சீனியாரிட்டியை மாற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவால் 1996-ம் ஆண்டு நேரடி எஸ்.ஐ.க்களாக தேர்வு செய்யப்பட்டு தற்போது எஸ்.பி. சீனியரிட்டியில் உள்ள 11 பேர் பதவி ஓய்வின் போதாவது எஸ்.பி.யாக பதவி ஒய்வு பெறுவோம் என்ற கனவிற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டது.

இதில் இம்மாதம் 30-ம் தேதியுடன் ஒய்வு பெரும் தூத்துக்குடி காவலர் பயிற்சிப் பள்ளி துணை முதல்வரும், எஸ்.பி. சீனியரிட்டி பட்டியலில் 8-ம் இடத்தில் இருந்து வரும் உன்னிகிருஷ்ணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் ஒய்வு பெறும் நாளில் எஸ்.பி.யாக பதவி உயர்வு வழங்க வேண்டும் என கோர்ட் உத்தரவு பிறப்பித்தும் உச்சநீதிமன்ற தீர்ப்பால் பதவி உயர்வு வழங்க முடியாமல் கூடுதல் டிஎஎஸ்பி யாகவே பதவி ஒய்வு பெறுவ­து அவலம்.

இவர்களை விட கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்று காவல்துறையில் டிஎஸ்பிக்களாக சேர்ந்து 25 ஆண்டுகளாகியும் இதுவரை டிஐஜி பதவியைக்கூட பெற முடியாமல் ஒய்வு பெறும் அவலம் ஒருபுறம். கடந்த 1997-ம் ஆண்டு குரூப் 1 தேர்வுக்கு அப்ளிகேஷன் அனுப்பி தேர்ச்சி பெற்று உச்சநீதிமன்றம் வரை சென்று உத்தரவு பெற்ற 14 பேர் 2001ம் ஆண்டு டி.எஸ்.பி. பணியில் சேர்ந்தனர். இவர்கள் தற்போது ஐ.ஜி.க்களாக பதவி உயர்வு பெற்றிருக்க வேண்டும். ஆனால் தமிழக காவல்துறையில் வரதட்சணை தடுப்புப் பிரிவு என்ற புதிய பிரிவை 1996ஆ-ம் ஆண்டு தொடங்கி முழுக்க முழுக்க பெண் டி.எஸ்.பி.க்களாக 26 பேரை தற்காலிக பதவியை உருவாக்கி நியமனம் செய்தனர். பின்னர் இவர்கள் பதவி நிரந்தரம் செய்யப்பட்டதோடு 2001-ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்ட 14 டிஎஸ்பிக்களுடன் சேர்த்து சீனியாரிட்டி வழங்கப்பட்டது.

இவர்களுக்கு முன்பாக குரூப் 1 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களோடு சேர்த்து 26 பெண் அதிகாரிகளுக்கும் பதவி உயர்வு வழங்கப்பட்டு தற்போது அனைவருமே ஐ.ஜி. பதவியில் உள்ளனர். ஆனால் 2001 தேர்வில் வெற்றி பெற்று பணியில் சேர்ந்த 14 டிஎஸ்பிக்களுக்கும் 2009-ஆம் ஆண்டுதான் கூடுதல் எஸ்பி.க்களாகவும், 2012ம் ஆண்டு எஸ்.பி. பதவி உயர்வும் கிடைத்தது. பின்னர் 2012ம் ஆண்டுதான் ஐபிஎஸ் அந்தஸ்தும் வழங்கப்பட்டது.

கடந்த 13 ஆண்டுகளாக எஸ்பி பதவியிலேயே இருந்து வந்த நிலையில் 2025-ம் ஆண்டு ஜனவரியில்தான் சீனியர் எஸ்.பி. அந்தஸ்து வழங்கினர். இதனால் வரும் 2026-ம் ஆண்டு ஜனவரி மாதம்தான் டிஐஜி பதவி உயர்வை பெற முடியும். ஆனால் தற்காலிக பதவியை உருவாக்கி நியமிக்கப்பட்ட பெண் அதிகாரிகளில் 6 பேரும் தற்போது ஐ.ஜி.க்களாக பணியாற்றி வருகின்றனர். இவர்களில் ஒரு சிலருக்கு ஒருசில ஆண்டுகளில் கூடுத டிஜிபி பதவி உயர்வும் பெற உள்ளனர். ஆனால் இவர்களோடு பணியில் சேர்ந்த 15 எஸ்.பி.க்களில் ஆவடி காவல் ஆணையரகத்தில் மத்தியக் குற்றப்பிரிவு துணை ஆணையராக பணியாற்றும் பெருமாள் இம்மாதம் 30-ம் தேதியுட டிஐஜி பதவி உயர்வை கூட பெற முடியாமல் சீனியர் எஸ்.பி. பதவியோடு ஒய்வு பெற உள்ளார்.

இவர்களுடன் ஆவடி காவல் ஆணையரகத்தில் தலைமையிட துணை ஆணையராக பணியாற்றும் மகேஸ்வரன் டிஐஜி பதவி உயர்வு பெற்று 4 மாதங்களில் ஒய்வு பெற்றுவிடுவார். மற்ற 12 பேரில் 2026 அக்டோபர் மாதம் ஒரு எஸ்.பி. பதவி ஒய்வு பெற உள்ளார். 14 எஸ்.பி.க்களில் விழுப்புரம் எஸ்.பி. சரவணன் உள்ளிட்ட 3 பேர் மட்டுமே ஐ.ஜி. பதவி உயர்வு பெற்று ஓய்வில் செல்ல முடியும்.

ஒரே ஆண்டில் பணியில் சேர்ந்த அதிகாரிகள் ஐ.ஜி.க்களாக பணியாற்றும்போது அவர்களுக்கு கீழ் எஸ்.பி.க்களாக பணியாற்ற வேண்டிய நிலை இவர்களுக்கு. உரிய காலத்தில் தங்களுக்கும் பதவி உயர்வு சீனியாரிட்டி வழங்கியிருந்தால் அனைவரும் ஐ.ஜி. பதவியை பெற்று ஒய்வு பெற்றிருப்பர். குரூப் 1 தேர்ச்சி பெற்று 25 ஆண்டுகளாகியும் எஸ்.பி.க்களாகவே பணியாற்ற வேண்டி உள்ளது. சீனியாரிட்டி மற்றும் பதவி உயர்வில் பாரபட்சம் காட்டாமல் ஒரே மாதிரியான பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பதுதான் பாதிக்கப்பட்ட அதிகாரிகளின் கோரிக்கை. இதை டிஜிபியும், தமிழக முதல்வரும் கண்டுகொள்வார்களா?

Comments (0)
Add Comment