மது போதையில் ஆட்டம் போட்ட ஆளும்கட்சி பிரமுகர்கள் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை

தீபாவளி பண்டிகையின் போது மது போதையில் பட்டாசு வெடித்து கொண்டிருந்த பொதுமக்களை மிரட்டி தாக்குதல் நடத்தியதோடு தங்கள் காலில் விழ வைத்த திமுக பிரமுகர்கள் மீது போலீசில் புகார் கொடுத்ததும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். ஆளும்கட்சி பிரமுகர்கள் என்பதால் காவல்துறை கைகட்டி வேடிக்கை பார்ப்பதாகவும் குற்றசாட்டு எழுந்துள்ளது.

தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் கடந்த 20-ம் தேதி வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. தீபாவளி வரை மலை பெய்துவந்தாலும் மலைக்கு வருணபகவான் சற்று இடைவெளி விடும்போது பொதுமக்கள் பட்டாசுகளை வெடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதுவரை இல்லாத அளவிற்கு சிவகாசியில் 17 ஆயிரம் கோடி அளவிற்கு பட்டாசு விற்பனை நடந்து பட்டாசு தயாரிப்பாளர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை கொடுத்துள்ளது. இதேபோல துணிக்கடைகள் உள்ளிட்டவைகளில் வியாபாரம் களைகட்டியதாக வியாபாரிகள் மகிழ்ச்சியுடன் கூறுகின்றனர்.

இதே மகிழ்ச்சியோடு மதுரை பொன்மேனி பகுதியில் தீபாவளியை கொண்டாடிய பொதுமக்களுக்கு ஆளும்கட்சி பிரமுகர்கள் மூலம் ஏற்பட்ட பிரச்சினைகள் தீபாவளி கொண்டாட்டத்தையே களைஇழக்க செய்துவிட்டதாக புலம்பி தவிக்கின்றனர். மதுரை பொன்மேனி பகுதியில் முதல் தெருவில் உள்ள பொதுமக்களும் தீபாவளி பண்டிகையை கொண்டாடும் வகையில் தங்கள் தெருக்களில் பட்டாசு வெடித்து கொண்டாடிக்கொண்டிருந்தனர். அப்போது மது போதையில் வந்த 68-வது வட்ட திமுக பொறுப்பாளர் பாலு மற்றும் பொறுப்பு குழு உறுப்பினர் பொன். முனியாண்டி இருவரும் தெருவில் பட்டாசு வெடித்துக்கொண்டிருந்த பொதுமக்களை மிகவும் ஆபாசமான வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதை எதிர்த்து கேட்ட சிலரையும் ஆளும்கட்சி பிரமுகர்கள் என்ற மமதையில் அடித்து, உதைத்ததாகவும் கூறப்படுகிறது .

திமுக பிரமுகர்களான பாலு, பொன். முனியாண்டி இருவரும் பொதுமக்களை தரக்குறைவான வார்த்தைகளால் திட்டியும், தாக்கிய வீடியோ தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த வீடியோவில் திமுக பிரமுகர்கள் இருவரும் முழு போதையில் தகாத வார்த்தைகளால் திட்டுவதோடு, போலீஸ் எங்களை ஒன்றும் செய்ய முடியாது என எகத்தாளமாக கூறுவதும் பதிவாகி உள்ளது.

இதை தட்டிக்கேட்ட சிலரை அடித்து காலில் விழ சொல்லி மிரட்டும் காட்சிகளும் இந்த வீடியோவில் பதிவாகி உள்ளது. தாக்குதலுக்கு உள்ளான பொதுமக்களில் சிலர் மதுரை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட எஸ்.எஸ். காலனி போலீசில் புகார் அளித்தனர். ஆனால் இந்த புகார்கள் மீதும் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்காததோடு, ஆளும்கட்சி பிரமுகர்களை விசாரணைக்கு அழைக்காதது இப்பகுதி மக்களை கடும் அதிருப்திக்குள்ளாக்கி உள்ளது. இதன்மூலம் தங்களை போலீஸ் ஒன்று செய்ய முடியாது என இருவரும் மிரட்டியது உண்மையாகிவிட்டது.

ஆளும்கட்சி பிரமுகர்கள் என்பதால் போலீசார் கைகட்டி வேடிக்கை பார்க்கின்றனர். இதேபோன்று சாதாரண பொதுமக்கள் தகராறு செய்திருந்தால் அடித்து, உதைத்து வழக்கு போட்டு சிறைக்கு போலீசார் அனுப்பி இருப்பார்கள் என குற்றம் சாட்டுகின்றனர். இதுவரை பொதுமக்கள் கொடுத்த புகார் மீது வழக்கு கூட பதிவு செய்யாமல் போலீசார் காலம் தாழ்த்திவருவதாவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். தற்போது இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி இருப்பதால் இனியாவது போலீசார் நடவடிக்கை எடுப்பார்களா என கேட்கின்றனர் போலீசார்.

Comments (0)
Add Comment