ரூ. 50 லட்­சம் ஓய்வூதிய மோசடி: ஊழலில் ஈடு­பட்ட 13 அரசு ஊழி­யர்­களை கைது செய்ய தடா போட்ட ஐஏஎஸ் அதி­காரி

இறந்த தந்தையின் ஓய்வூதியத்தை 10 ஆண்டுகளாக போலி சான்றிதழ் கொடுத்து 49 லட்சத்து 69 ஆயிரம் ரூபாயை மோசடி செய்ததாக மகன், மகள் மீது வழக்கு பதிவு செய்து ஓராண்டுக்கு பிறகும் பணத்தையும் திரும்ப செலுத்தாததோடு, எந்த மேல் நடவடிக்கையும் எடுக்க விடாமல் ஐ.ஏ.எஸ். அதிகாரியே தடுப்பதாக திடுக்கிடும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தமிழகம் முழுவதும் இறந்த ஓய்வூதியர்களின் பல ஆயிரம் கோடி ருபாய் பல்வேறு முறைகேடுகளால் சுருட்டப்பட்டு வருவதோடு, பணத்தை மீட்க அரசு உயர் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மவுனம் காத்து வருவது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை மாவட்டம் பொள்ளாச்சி சார் கருவூலத்தில் பணியாற்றி வந்த முகேஷ் குமார் என்பவர் இறந்துபோன ஓய்வூதியரின் ஓய்வூதிய பணத்தை போலி வாழ்நாள் சான்றிதழ் கொடுத்து 20 லட்சம் மோசடி செய்ததாக கைது செய்யப்பட்டார்.

இந்த மோசடி செய்தி வெளியாகி ஓய்வூதியர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் துறையூர் சார்க்கருவூல அலுவலகத்தில் இதே போன்று தந்தை இறந்து 9 ஆண்டுகள் சென்ற பிறகும் அவரது ஓய்வூதிய பணத்தை போலி சான்றிதழ் கொடுத்து மோசடி செய்த மகன், மகள் மீது வழக்கு பதிவு செய்து ஓராண்டுக்கு மேல் ஆகியும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி மாவட்டம் துறையூர் மாரடி ரெட்டியார் தெருவில் வசித்து வந்தவர் ரங்கராஜன். ஆசிரியரான இவருக்கு ஜெயதேவன், ஜெயக்கொடி ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த 1987-ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதியன்று ரங்கராஜன் ஓய்வு பெற்ற நிலையில் 2023-24ம் ஆண்டுக்கான வாழ்நாள் சான்றிதழை துறையூர் சார்நிலை கருவூலத்தில் வழங்கவில்லை.

இதனால் துறையூர் சார்நிலை கருவூலத்தில் 2024ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் ஓய்வூதியம் வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டது. அதன்பிறகு ஓய்வூதியத்தை ரங்கராஜன் ஒரு மாதமாகியும் கோராததால் துறையூர் மாரடிக்கு கருவூலத்துறை அதிகாரிகள் நேரடியாக சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் ரங்கராஜன் 2015ம் ஆண்டு நவம்பர் மாதம் 26-ம் தேதியே உடல்நல குறைவால் உயிரிழந்து விட்டது தெரியவந்தது. 2015-ம் ஆண்டு உயிரிழந்த ரங்கராஜனுக்கு ஜூன் 2024-ம் ஆண்டுவரை ஓய்வூதியம் அனுப்பப்பட்டு வந்ததும், இந்த பணத்தை வங்கியில் இருந்து எடுத்திருப்பதும் விசாரணையில் தெரியவந்தது.

இதனால் சந்தேகமடைந்த கருவூல துறை அதிகாரிகள் துறையூரில் உள்ள கனரா வங்கி கிளைக்கு சென்று விசாரித்தனர். இவரது வங்கி கணக்கில் இருந்து மாதம் தோறும் ரங்கராஜனின் மகன் ஜெயதேவன் மற்றும் மகள் ஜெயக்கொடி இருவரும் ரங்கராஜன் கையெழுத்திட்ட வங்கி செக் கொடுத்து பணத்தை எடுத்து சென்றது வங்கி அதிகாரி மூலம் தெரியவந்தது. இவர் உயிரோடு இருப்பதாக 2022ம் ஆண்டு மாராடி கிராம நிர்வாக அலுவலர் ஹேமலதா என்பவர் கொடுத்த சான்றிதழும் கருவூல துறையில் சமர்பிக்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது.

எனவே ஓய்வூதியர் ரங்கராஜன் ஓய்வூதிய பணத்தை எடுப்பதில் பெரிய சதி நடந்திருப்பதாக மாவட்ட கருவூல அலுவலர் பாபு திருச்சி மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் 2024ம் ஆண்டு நவம்பர் 13-ம் தேதியன்று புகார் மனு கொடுத்தார். இதன்பேரில் திருச்சி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது.

ஆசிரியர் ரங்கராஜன் 2015-ம் தேதியன்று உடல்நல குறைவால் உயிரிழந்துள்ளார். இவர் உயிரிழந்ததும் துறையூர் கருவூலத்துறைக்கு மகன் ஜெயதேவனும், மகள் ஜெயக்கொடியும் எந்த தகவலும் கொடுக்கவில்லை. மாதம்தோறும் துறையூர் சார் கருவூல அலுவலகம் மூலம் ரங்கராஜன் வங்கி கணக்கிற்கு பணம் வந்துகொண்டுள்ளது.

இதை ரங்கராஜன் போன்றே செக் புத்தகத்தில் கையெழுத்திட்டு ஜெயதேவனும், ஜெயக்கொடியும் அவரது ஓய்வூதிய பணத்தை எடுத்து வந்துள்ளனர். ஆண்டுதோறும் ஓய்வூதியர் துறையூர் சார் கருவூல அலுவலகம் சென்று தான் உயிரோடுதான் இருப்பதாக நேரில் ஆஜாரானதும் அவரது கைரேகையை பதிவு செய்வது வழக்கம். இல்லையேல் அரசு பதிவு பெற்ற அலுவலரின் சான்றிதழை சார் கருவூல அலுவலரிடம் வழங்கினால் சான்றிதழ் பென்சன் புத்தகத்தில் ஒட்டி வைக்கப்படும்.

ஆனால் 2015-ம் ஆண்டு உயிரிழந்த ஆசிரியர் ரங்கராஜனின் ஓய்வூதிய பணம் 9 ஆண்டுகளாக எவ்வாறு கருவூல அதிகாரிகளால் வாழ் நாள் சான்றிதழ் பெறாமலும், கைரேகை பதிவு செய்யாமலும் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டது. தந்தையின் ஓய்வூதிய பணத்தை விட்டுக்கொடுக்க மனமில்லாமல் ஜெயதேவனும், ஜெயக்கொடியும் போலியான வாழ்நாள் சான்றிதழை துறையூர் கருவூல அலுவலகத்தில் சமர்ப்பித்து ஓய்வூதிய பணத்தை பெற்று மோசடி செய்துள்ளனர்.

இதற்கு கருவூலத்துறை அலுவலகத்தில் புரோக்கராக செயல்பட்டு வந்த ஒருவரும் மோசடிக்கு துணை போயுள்ளார். கிட்டத்தட்ட 9 ஆண்டுகளில் 49 லட்சத்து 69 ஆயிரத்து 279 ரூபாயை இவர்கள் மோசடியாக பெற்று வந்துள்ளனர் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது .

2022ம் ஆண்டு மட்டும் மாரடி கிராம நிர்வாக அலுவலர் ஹேமலதாவிடம் தந்தை உயிரோடு இருப்பதாக போலியான சான்றிதழை கருவூல அலுவலகத்தில் கொடுத்து மோசடி செய்துள்ளனர். இந்த மோசடிக்கு கிராம நிர்வாக அலுவலர் ஹேமலதாவும் உடந்தையாக இருந்துள்ளார். தந்தை உயிரோடு இருப்பதாக சான்றிதழ் கேட்டதும் கிராம நிர்வாக அலுவலர் ஹேமலதா நேரில் சென்று ஆய்வு செய்யாமல் பணத்தை வாங்கிக் கொண்டு சான்றிதழை கொடுத்துள்ளார். இந்த சான்றிதழ் மூலம் 3 ஆண்டுகள் வரை ஜெயதேவனும், ஜெயக்கொடியும் மோசடி செய்து ஓய்வூதிய பணத்தை எடுத்து வந்துள்ளனர்.

ஓய்வூதிய பணத்தை போலி சான்றிதழ் கொடுத்து 49 லட்சத்து 69 ஆயிரம் ருபாய் மோசடி செய்தது உறுதியானதை அடுத்து ஜெயதேவன், இவரது தங்கை ஜெயக்கொடி, போலி சான்றிதழ் கொடுத்த கிராம நிர்வாக அலுவலர் ஹேமலதா ஆகிய 3 பேர் மீதும் திருச்சி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் 2024ம் ஆண்டு நவம்பர் 25-ம் தேதி மோசடி உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

வழக்கமாக இதுபோன்ற மோசடி சம்பவங்களில் மோசடி செய்தவர்களை போலீசார் கைது செய்வது வழக்கம். ஆனால் 49 லட்சம் மோசடி செய்தும் போலீசார் பணத்தை திரும்ப பெறவோ, கைது செய்யவோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்கு காரணம் ஜெயதேவனின் நெருங்கிய உறவினர் உத்தரபிரதேச மாநில கேடர் ஐ.ஏ.எஸ். அதிகாரி என்பதால் இவர் ஜெயதேவன் உள்ளிட்ட இருவர் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்க விடாமல் தடுப்பதாக கூறப்படுகிறது.

இந்த மோசடியை தடுக்க தவறியதாக துறையூர் சார் கருவூலத்துறை அலுவலர் உள்ளிட்ட 13 அதிகாரிகள் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க கருவூலத்துறை உயர் அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.

பணத்தை மோசடி செய்த ஜெயதேவன், ஜெயக்கொடி பணத்தை செலுத்தாவிட்டால் சம்பந்தப்பட்ட கருவூல அலுவலர்கள் சம்பளம் அல்லது ஓய்வூதியத்தை பிடித்தம் செய்யவும் உயர் அதிகாரி உத்தரவிட்டுள்ளாராம். இதனால் கருவூலத்துறை அதிகாரிகள் கடும் கொந்தளிப்பில் உள்ளனர். இந்த குளறுபடிகளுக்கும் , குழப்பங்களுக்கும் 2021ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட வாழ்நாள் சான்றிதழ் வழங்கும் முறையில் அரசு கொண்டுவந்த மாற்றம்தான் காரணம் என்கின்றனர் கருவூலத்துறை அதிகாரிகள்.

கடந்த 2021ம் ஆண்டுக்கு முன்பாக ஆண்டுதோறும் மார்ச் மாதத்தில் இருந்து ஜூன் மாதத்திற்குள் ஓய்வூதியம் பெறுபவர் நேரில் ஆஜராக வேண்டும். வர முடியாவிட்டால் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்கலாம். ஆனால் 2021ம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு ஓய்வூதியருக்கு நன்மை செய்வதாகவும், அவர்கள் வயதான காலத்தில் அலைச்சலுக்கு உள்ளாகாமல் தடுக்கவும் ஓராண்டுக்குள் எப்போது வேண்டுமானாலும் நேர்காணல் செய்யலாம் என அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதனால் ஒருவர் மார்ச் மாதமே உடல்நல குறைவால் இறந்திருந்தாலும் குடும்பத்தினர் தானாக வந்து உடனே தகவல் கொடுத்தால் மட்டுமே ஓய்வூதியத்தை கருவூல துறை அதிகாரிகள் நிறுத்தி வைக்க முடியும். ஆனால் பலரும் ஓய்வூதியர் இறப்பு குறித்து உடனே தகவல் தராததால் மாதம்தோறும் பணம் அனுப்பி வைக்கப்படுகிறது.

தாமதமாக தகவல் கிடைத்தாலும் முழு ஓய்வூதிய தொகையை பிடித்தம் செய்ய முடியாமல் போய்விடுகிறது. அதிகமாக செலுத்தப்பட்ட பணத்தை கருவூலத்துறை அதிகாரிகள் திரும்ப பெற வேண்டும். இல்லையேல் அவர்களது ஊதியத்திலிருந்து பிடித்தம் செய்யவேண்டும் என அதிகாரிகள் உத்தரவு போட்டுவிடுகின்றனர்.

மேலும் இறந்த ஓய்வூதியரின் வாழ்நாள் சான்றிதழை கருவூல ஊழியரோ, குடும்பத்தினரோ போலியாக சமர்ப்பித்து பல லட்சம் பணத்தை பெற்று சென்று விடுகின்றனர். இதை மீண்டும் திரும்ப பெற முடியவில்லை. தமிழகத்தில் 7 லட்சத்திற்கும் மேற்பட்ட ஓய்வூதியர்கள் மாத ஓய்வூதியம் பெறுகின்றனர். இவர்கள் குறிப்பிட்ட மாதத்திற்குள் நேரில் வந்து ஆஜராகினால் 3 மாதத்திற்குள் வேலை முடிந்துவிடும்.

ஆனால் ஒரு ஆண்டுக்குள் வரலாம் என புதிய உத்தரவு பிறப்பித்ததால் பெரும் குளறுபடி ஏற்பட்டுள்ளது. கருவூலத்துறை அதிகாரிகளின் பணி சுமை அதிகரித்துவிட்டது. இதனால் சான்றிதழ் சரியா? நேரில் ஆஜரானார்களா? என்பதை முறையாக ஆய்வுசெய்ய முடியவில்லை. ஓய்வூதியத்தில் கூடுதலாக வழங்கப்பட்டால் ஓய்வூதியரிடம் இருந்தது பிடித்தம் செய்ய கூடாது. கருவூல துறை அதிகாரிகளிடம் பிடித்தம் செய்யவேண்டும் என உத்தரவிட்டதால் இந்த பிரிவில் வேலை செய்ய தயங்குகின்றனர்.

இந்த மோசடியில் துணை போன துறையூர் உதவி பெண் கருவூல அதிகாரியை தஞ்சை மாவட்டத்துக்கு மாற்றப்பட்டார். அங்கும் முறைகேட்டில் ஈடுபட்டதால் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ஆனால் மீண்டும் திருச்சி மாவட்டத்திலேயே தற்காலிக பணிநீக்கம் றது செய்து மீண்டும் திருச்சி மாவட்டத்திலேயே பணி வழங்கி குளறுபடியை ஏற்படுத்தி உள்ளனர். இந்த மோசடிக்கு சென்னையில் உள்ள தலைமை அலுவலக நிர்வாக பிரிவு பெண் அதிகாரிதான் துணை போய் உள்ளாராம்.

மேலும் துறையூர் சார் கருவூல அலுவலகத்தில் புரோக்கராக வேலை பார்த்து வந்த நபரிடம் இன்னும் விசாரணை நடத்தவில்லை. 50 லட்சம் ரூபாய் மோசடி நடந்தும் மோசடி செய்தவர்களை காப்பாற்ற ஐ.எஸ்.எஸ். அதிகாரியே முனைந்தால் யார்மீது நடவடிக்கை எடுப்பது என காவல்துறையினரும், கருவூலத்துறை அதிகாரிகளும் புலம்பி தவிக்கின்றனர். இது சம்பந்தப்பட்ட துறையின் உயர் அதிகாரிகள் காதில் விழுந்தால் சரிதான்.

Comments (0)
Add Comment