-சிவ. செல்லையா –
தமிழகக் காவல்துறை கட்டுப்பாடில்லாமல் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. உயர் அதிகாரிகள் பல கோஷ்டிகளாக செயல்பட்டு ஒருவரைப் பற்றி மற்றவர் தகவல்களை லீக் செய்யும் கலாச்சாரம் உள்ளது. காவல் நிலையங்களில் கட்டப் பஞ்சாயத்து அதிகமாக நடப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுவதோடு காவல் நிலையங்களுக்கு செல்லவே அச்சப்படும் நிலையை உருவாக்கி உள்ளீர்கள் என முதல்வர் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் கொந்தளித்ததால்…
யார் யாருக்கு பதவி பறி போகுமா? என்ற அச்சத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் வட்டாரம் உள்ளது.
தமிழகக் காவல்துறை மீது சமீப காலமாக பல்வேறு குற்றச் சாட்டுக்கள் எழுந்து வரும் நிலையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் இன்று (30.6.2025) காலை 11.30 மணிக்கு தொடங்கியது. தலைமை செயலாளர் முருகானந்தம், உள்துறை செயலாளர் தீரஜ் குமார், டிஜிபி சங்கர் ஜிவால் மற்றும் துறைத் தலைவர்கள் இந்த ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். தமிழக காவல்துறையினர் எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்து டிஜிபி சங்கர் ஜிவால் விளக்கிய பிறகு முதல்வர் கோப்புகளை ஆய்வு செய்து பேசும்போது, தமிழகத்தில் போதைப் பழக்கம் இளைஞர்களிடையே அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. பள்ளி, கல்லூரிகள் அருகே போலீசார் தீவிர ஆய்வு நடத்தி போதைப்பொருள் நடமாட்டத்தை முற்றிலும் தடுக்க வேண்டும்.
தமிழகக் காவல்துறையில் உயர் அதிகாரிகளிடையே பல கோஷ்டிகளாக செயல்படுவது எனக்கு கிடைத்த அறிக்கை மூலம் தெரிய வந்துள்ளது. உயர் அதிகாரிகளிடையே ஒருங்கிணைப்பு இல்லை. ஒரு அதிகாரியைப் பற்றி மற்றொரு உயர் அதிகாரி அவரைப் பற்றிய ரகசியங்களை லீக் செய்து செய்தி வர வேண்டும் என முயற்சிக்கின்றனர். உயர் அதிகாரிகள் ஒற்றுமையுடன் இருந்தால்தான் சட்டம் ஒழுங்கு பிரச்சினையை சரிவர கையாள முடியும். ஆனால் அதிகாரிகளிடையே போட்டி, பொறாமை அதிகரித்து கோஷ்டிகளாக செயல்பட்டு வருவது மிகவும் வேதனைக்குரியது. சமீபத்தில் கூட கடத்தல் விவகாரத்தில் கூடுதல் டிஜிபி அந்தஸ்தில் உள்ள அதிகாரி மீது வழக்கு பதிவு செய்திருப்பது காவல் துறையினர் மீதான பொதுமக்களின் மரியாதை குறையும் சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது.
தமிழகக் காவல் நிலையங்கள் கட்டப் பஞ்சாயத்து நிலையங்களாக மாறிவிட்டதாக பொதுமக்கள் அதிகமாக குற்றம் சாட்டுகின்றனர். காவல் நிலையத்திற்கு புகார் அளிக்கச் சென்ற கர்ப்பிணி பெண்ணை உதவி ஆய்வாளர் தாக்கிய வீடியோ வெளியானது எனக்கு கடும் அதிர்ச்சியை தருகிறது. கடந்த ஆட்சியில் பெண்களை காவல்துறை அதிகாரி தாக்கிய சம்பவத்தை எதிர்த்து போராட்டம் நடத்தினோம். ஆனால் நம் ஆட்சியில் இதுபோன்ற சம்பவம் நடந்தது அதிர்ச்சியளிக்கிறது. காவல் நிலையத்தில் பிரச்சினைகளோடு வரும் பொது மக்களிடம் இப்படி நடக்கும், அப்படி நடக்கும் என மிரட்டி பணம் வசூலிப்பதாக அதிகமான குற்றசாட்டுகள் வருகிறது. இனி இது போன்ற குற்றசாட்டுகள் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
சென்னையில் நான் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் சில கல்லூரி மாணவர்கள் நடிகர் படத்தை காண்பித்துள்ளனர். படத்தை காண்பித்த மாணவர்களை கைது செய்வதாக கூறி அழைத்துச் சென்று 8 மணி நேரம் உட்கார வைத்துவிட்டு விடுவித்துள்ளீர்கள். இதன்பிறகு அந்த மாணவர்களை மீண்டும் கைது செய்ய முயற்சித்துள்ளீர்கள். படத்துடன் வந்த மாணவர்களை முறையாக சோதனை செய்திருந்தால் இந்த பிரச்சினையே வந்திருக்காது.
இல்லாவிட்டால் அந்த மாணவர்களை வெளியே அழைத்துச் சென்று எச்சரித்து உடனே விடுவித்திருக்க வேண்டும். ஆனால் பல மணி நேரம் உட்கார வைத்து விடுவித்துவிட்டு மறுபடியும் கைது செய்ய முயற்சித்துள்ளீர்கள். மாணவர்களை கைது செய்திருந்தால் மாணவர்கள் ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடத்தி பிரச்சினை உருவாக்கி இருக்கும். பிரச்சினை வந்ததும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி இருக்க வேண்டும். நாமே எப்போதும் ஆளும் கட்சியாக இருக்க முடியாது. ஒரு வேளை எதிர்க்கட்சியாகி போராட்டம் நடத்தினால் இதேபோல நம்மையும் கைது செய்ய நாமே முன் உதாரணமாகி இருப்போம்.
சில அதிகாரிகள் தங்கள் இஷ்டம்போல யார் கட்டுப்பாட்டிலும் இல்லாமல் சில முடிவுகளை எடுத்து செயல்பட்டு வருகின்றனர். காவல்துறை யார் கட்டுப்பாட்டில் உள்ளது என்பதே தெரிந்து கொள்ள முடியாத நிலை இருப்பது வேதனைக்குரியது. சென்னையில் புகார் கொடுக்க வந்த பெண்ணிடம் ஒரு உயர் அதிகாரி போனில் பேசிய ஆடியோ வெளிவந்துள்ளது.
இதனால் காவல்துறை மீது பொதுமக்களின் நம்பிக்கை பறிபோகும். சில அதிகாரிகள் நன்றாக வேலை செய்வார்கள் என்ற பரிந்துரை அடிப்படையில்தான் முக்கிய இடங்களில் பணியமர்த்தப்பட்டனர். ஆனால் முக்கிய நகரங்களிலேயே இந்த அதிகாரிகளால் பல பிரச்சினைகள் உருவாக்கி வருவது வேதனையானது. சட்டம் -ஒழுங்கு பிரச்சினையில் எக்காரணம் கொண்டும் சமரசம் செய்யக்கூடாது. பிரச்சினைகள் வருவதற்கு முன்பே தடுக்க வேண்டும். தமிழகம் அமைதியான மாநிலமாக இருக்க நீங்கள் அனைவரும் ஒத்துழைப்பு தரவேண்டும் என காட்டமாக பேசியுள்ளதாக அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முதல்வராக ஸ்டாலின் பதவி ஏற்றபிறகு நடந்த ஆய்வு கூட்டத்தில் இவ்வளவு காட்டமாக பேசியிருப்பது இதுவே முதல்முறை எனவும் கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரிகள் அதிர்ச்சியுடன் தெரிவித்துள்ளனர். காவல்துறை அதிகாரிகள் ஆய்வுக்கூட்டம் நடப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு சிவகங்கை மாவட்டம் திருபுவனத்தில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட வாலிபர் விசாரணையில் அடித்து கொல்லப்பட்டதால் தமிழகம் முழுவதும் கொந்தளித்த சம்பவத்தால் முதல்வர் கடும் ஆத்திரத்தில் இருந்து வருகிறார்.
லாக் அப் மரணமே கடந்த ஒரு ஆண்டாக இல்லை என கடந்த சில வாரங்களுக்கு முன்புதான் டிஜிபி அறிக்கை வெளியிட்ட நிலையில் இந்தச் சம்பவம் நடந்ததும் முதல்வரை கோபப்படுத்தி உள்ளது. இப்பிரச்சினையை தன்னுடைய கவனத்திற்கு உடனடியாக கொண்டு வராததோடு, பிரச்சினை பூதாகரமாக வெடிக்கும் அளவில் உயர் அதிகாரிகள் கையாண்ட தகவல்களும் முதல்வரை பொங்கி எழுந்து கண்டிக்கும் நிலைக்கு சென்று விட்டதாகவும் அதிகாரிகள் கூறுகின்றன. முதல்வரின் இந்த ஆவேசத்தால் பல முக்கிய அதிகாரிகளின் பதவிகள் பறிபோகும் என கூறப்படுவதால் முக்கிய அதிகாரிகள் பதவி பறிபோகும் பீதியில் உள்ளனர். முதல்வரின் கண்டிப்பு காவல்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது….