கன்னியாகுமரி அருள்மிகு பகவதி அம்மன் திருக்கோயிலில் குறுக்கு வழியில் சென்று விரைவில் சாமி தரிசனம் செய்ய கோயில் வழக்கத்திற்குள்ளேயே பணம் வசூலித்து பக்தர்களை அனுப்பி வைத்த அறநிலையத்துறை அலுவலரின் கார் ஓட்டுநர் வீடியோ வைரலாகி உள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள பெரிய கோயில்களில் அறநிலையத்துறை ஊழியர்களும், அர்ச்சகர்களும் செய்யும் இந்த அநியாய நடவடிக்கைகளை உயர் அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை. இதனால் கோயிலுக்கு வேண்டுதலுடன் வரும் பக்தர்களிடம் ஆயிரக்கணக்கில் பணம் வசூலித்து தரிசனத்திற்கு அனுப்பி வைத்து வரும் சம்பவங்கள் தொடர் கதையாகி விட்டது.
சமீபத்தில்கூட திருச்செந்தூர் கோயிலில் ஒரு பக்தருக்கு 11 ஆயிரம் பணம் வாங்கிக் கொண்டு குறுக்கு வழியில் அர்ச்சகர் அனுப்பிய வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதேபோல கன்னியாகுமரியில் உலகக புகழ்பெற்ற பகவதி அம்மன் கோயிலுக்குள் செல்ல பணம் வசூலித்த வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி கடற்கரையில் அமைந்துள்ளது உலக புகழ்பெற்ற பகவதி அம்மன் திருக்கோயில். இந்த கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் அதிக அளவிலான பக்தர்கள் குடும்பத்தோடு வந்து வழிபட்டு செல்வது வழக்கம். இதை தவிர கன்னியாகுமரியில் சூரிய உதயத்தை பார்க்க வடமாநிலங்களில் இருந்தும் வருகை தரும் வடமாநிலத்தவரும் தினமும் வருகை புரிந்து பகவதி அம்மனை தரிசித்து செல்வர்.
இதனால் அதிகாலை முதல் இரவு வரை இந்த கோயிலில் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். அம்மனை தரிசிக்க நீண்ட வரிசையில் நின்று பலமணி நேரம் காத்திருந்த பிறகே தரிசிக்க முடியும். ஆனால் கோயில் ஊழியர்கள், அர்ச்சர்கள் மூலம் குறுக்கு வழியில் உள்ளே சென்று சிறிது நேரத்தில் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்படுகிறது. இதற்காக ஒரு பக்தருக்கு இவ்வளவு என கூறி வசூலிப்பதும் வழக்கம்.
அறநிலையத்துறையின் நில அளவை தாசில்தாராக பணியாற்றுபவருக்கு கோயில் வளாகம் அருகில் அலுவலகம் உள்ளது. இவரது கார் ஓட்டுநராக இருப்பவர் செந்தில். இவர் தாசில்தாரை அலுவலகத்திற்கு கொண்டுவந்து விட்ட பிறகு கோயில் வளாகத்தில் நுழைவாயில் பகுதியில் நின்று கொள்கிறார்.
தரிசனம் செய்ய வரும் பக்தரில் வசதியானவர் அல்லது வடமாநிலத்தவர்களை குறிவைத்து விரைந்து தரிசனம் கிடைக்க வேண்டுமா? நான் ஏற்பாடு செய்கிறேன் என பேச்சு கொடுப்பாராம். குழந்தைகள், வயதானவர்களுடன் வருபவர்களும் நீண்ட நேரம் வரிசையில் நிற்க முடியாது என்பதால் இவரை அணுகியதும் ஒரு நபருக்கு இத்தனை ரூபாய் என கேட்டு பணத்தை வாங்கிக்கொண்டு அறநிலையத்துறை ஊழியர்கள் உதவியுடன் பக்தர்கள் வெளியே வரும் பாதை வழியாக உள்ள அழைத்துச்சென்று அம்மன் தரிசனம் செய்ய வைத்துவிடுகிறார்.
தினமும் இதேபோல பல ஆயிரம் பணத்தை வசூலித்து தரிசனத்திற்கு ஏற்பாடு செய்வது வழக்கமாம். பக்தர்களிடம் பணம் வாங்குவதை பக்தர் ஒருவர் தன்னுடைய செல்போனில் படமெடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுவிட்டார். இதுதான் தற்போது கன்னியாகுமரியில் பரபரப்பாக பேசும் பொருளாகிவிட்டது. இந்த வீடியோ வெளிவந்தாலும் செந்தில் மீது எந்த நடவடிக்கையையும் அறநிலையத்துறை அதிகாரிகள் எடுக்கவில்லை. காரணம் தாசில்தாரின் ஓட்டுநர் என்ற பயம்தான்.
இதேபோலத்தான் திருச்செந்தூர், திருவண்ணாமலை உள்ளிட்ட கோயில்களிலும் ஆயிரக்கணக்கில் பணத்தை வசூலித்து குறுக்கு வழியில் தரிசனத்திற்கு அழைத்து செல்வது வழக்கமாகிவிட்டது. இதை தடுக்க வேண்டிய அதிகாரிகளுக்கும் பங்கு சென்றுவிடுவதால் கண்டுகொள்வதில்லை என்ற குற்றசாட்டை வைக்கின்றனர் பக்தர்கள். குறிப்பாக திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் வளாகத்தில் சுற்றித்திரியும் புரோக்கர்கள் ஆந்திர மாநில பக்தர்களை குறிவைத்து ஆயிரக்கணக்கில் வாங்கி குறுக்கு வழியில் உள்ளே அழைத்து சென்று விடுகின்றனர்.
இவர்கள் குறுக்கு வழியில் செல்லும் பாதையில் போடப்பட்டுள்ள பூட்டின் சாவியை வைத்துள்ள நபரை கையில் வைத்துக்கொண்டு இதுபோன்று முறைகேட்டில் ஈடுபடுவதாகவும், இதனால் வழக்கமான வழியில் செல்லும் பக்தர்கள் பல மணி நேரம் காத்திருக்க நேரிடுகிறது. அறநிலையத்துறை அதிகாரிகளோ கோயிலுக்கு வருமானம் வந்தால் போதும் என எண்ணி எதையும் கண்டுகொள்வதில்லையாம். தங்கள் கஷ்டத்தை போக்க இறைவனை தரிசிக்க எண்ணும் பக்தர்கள் இவர்களின் செயலால் மேலும் மனம் நொந்து திரும்பும் நிலைதான் தற்போது.