வீடுகளில் ஆர்டர்லிகள் ­நோ! பொறுப்பு அதிகாரியின் ‘கண்துடைப்பு’ உத்தரவு

தமிழக காவல்துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற உயர் அதிகாரிகள் மற்றும் தற்போது பணியாற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகளின் வீடுகளில் பணியாற்றும் ஆர்டாலிகளை உடனடியாக திருப்பி அனுப்ப வேண்டும். அதிகாரிகளின் வீடுகளில் காவலர்கள் ஆர்டலிகளாக பணியாற்றுகிறார்களா என மாநகர ஆணையர்கள், மண்டல ஐ.ஜி.க்கள், டி.ஐ.ஜி.க்கள், எஸ்.பி.க்கள் ஆய்வு செய்ய வேண்டும் என பொறுப்பு டிஜிபி அபய் குமார் சிங் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஆனால் பல காவல்துறை அதிகாரிகள் வளர்க்கும் நாய்களை பாதுகாக்கவே இன்னும் காவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ள நிலையில் இந்த உத்தரவு வெறும் கண்துடைப்பே என்கிறது காக்கிச்சட்டை வட்டாரங்கள்.

தமிழக காவல்துறையில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் போலீசார் பணியாற்றி வந்தாலும் பொதுமக்கள் தொகை எண்ணிக்கைக்கு ஏற்ப காவல்துறையினர் போதுமானதாக இல்லை. ஆண்டுதோறும் காவல்துறையில் ஏற்படும் காலிப்பணிடியிடங்களுக்கு ஏற்ப காவலர்கள் தேர்வு செய்யப்படுவதில்லை. ஒவ்வொரு காவல் நிலையத்திலும் ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள், சிறப்பு உதவி ஆய்வாளர்கள், தலைமை காவலர்கள், முதல்நிலை காவலர்கள், இரண்டாம் நிலை காவலர்கள் என கிட்டத்தட்ட 55 முதல் 65 பேர் வரை பணியாற்ற வேண்டும்.

பெரும்பாலான காவல் நிலையங்களில் பாதிக்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாகவே உள்ளது. இதற்கு காரணம் பல காவலர்கள் அதிகாரிகளின் வீடுகளில் பணியாற்றி வருவதுதான். ஆங்கிலேயர் காலத்தில் போலீசாரை தங்கள் வீட்டு பணிகளுக்கு பயன்படுத்தி வந்தனர். இவர்கள் ஆர்டலிகள் என அழைக்கப்பட்டனர். குறிப்பாக உயர் அதிகாரிகளின் வீடுகளில் பத்துக்கும் மேற்பட்ட காவலர்களை இந்த பணிக்கு பயன்படுத்துவது வழக்கம்.

இவர்கள் குறிப்பிட்ட காவல் நிலையங்களில் பணியாற்றுவதாக உத்தரவு பிறப்பித்துவிட்டு உயர் அதிகாரிகளின் வீடுகளில் ஓட்டுனர்கள், வீட்டு வேலைகள், உயர் அதிகாரிகளின் வீட்டு குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச்செல்லும் வேலை செய்வதுண்டு. உச்சகட்டமாக உயர் அதிகாரிகளின் வீடுகளில் வளர்க்கப்படும் நாய்களை வாக்கிங் அழைத்துசெல்லவும் இந்த காவலர்கள்தான் பயன்படுத்தப்பட்டு வருகின்றனர்.

காவல்துறை உயர் அதிகாரிகளின் வீடுகளில் பணியாற்றும் காவலர்களை மீண்டும் தங்கள் சொந்த யூனிட்டுக்கே அனுப்ப வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு பல்வேறு கட்ட விசாரணைக்கு பிறகு எந்த அதிகாரி வீட்டிலும் போலீசார் பணிக்கு அமர்த்தப்படவில்லை என டிஜிபி உத்தரவாதம் தர வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

டிஜிபியாக இருந்த சைலேந்திரபாபு உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி உயர் அதிகாரிகளின் வீடுகளின் பணியாற்றி வந்த காவலர்கள் திரும்ப பெறப்பட்டு தாங்கள் ஏற்கனவே பணியாற்றிய இடத்திற்கே திருப்பி அனுப்பப்பட்டுவிட்டதாக பாத்திரம் தாக்கல் செய்தார். இந்த நிலையில்தான் பொறுப்பு டிஜிபியான அபய்குமார் சிங் அனைத்து மாநகர காவல் ஆணையர்கள், மண்டல ஐ.ஜி.க்கள், டி.ஐ.ஜி.க்கள், எஸ்.பி.க்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் ஏற்கனவே உயர்நீதிமன்றம் உயர் அதிகாரிகளின் வீடுகள், ஓய்வுபெற்ற காவல் அதிகாரிகளின் வீடுகளின் பணியாற்றும் போலீசாரை திருப்பி அனுப்ப வேண்டும் என கடுமையான உத்தரவை பிறப்பித்துள்ளது.

இருப்பினும் சில அதிகாரிகள் மற்றும் ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரிகளின் வீடுகளில் ஆர்டர்லிக்கள் பணியாற்றுவதாக உயர்நீதிமன்றத்தில் புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அறிக்கை அனுப்பும்படி உயர்நீதிமன்றம் கடிதம் அனுப்பியுள்ளது.

எனவே மாநகர காவல் ஆணையர்கள் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் அனைவரும் தங்கள் சரகத்திற்கு உட்பட்ட மாநகரங்கள், மாவட்டங்களில் உயர் அதிகாரிகளின் வீடுகளில் காவலர்கள் பணியாற்றுகிறார்களா என்பதை உடனடியாக ஆய்வு செய்து அறிக்கை அனுப்ப வேண்டும். எந்த அதிகாரி வீட்டிலாவது காவலர்கள் பணியாற்றுவது தெரியவந்தால் அவரை உடனே திரும்பப்பெற வேண்டும் என சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து காவல்துறை வட்டாரத்தில் விசாரித்தபோது தற்போதைய டிஜிபி, ஓய்வுபெற்ற டிஜிபிக்களின் வீடுகளின் 5 முதல் 10 காவலர்கள் தற்போதும் பணியாற்றி வருகின்றனர். குறிப்பாக மாநகர ஆணையர்கள், ஐ.ஜி.க்கள், கூடுதல் டிஜிபிக்கள், டிஜிபிக்கள், ஓய்வுபெற்ற டிஜிபிக்கள், ஐ.ஜி.க்கள் வீடுகளில் குறைந்தபட்சம் 4 முதலும், அதிகபட்சமாக 15 காவலர்கள் கூட தற்போதும் பணியாற்றி வருகின்றனர்.

எந்த ஆர்டர்லிகளும் இல்லை என உயர் அதிகாரிகள் அறிக்கை கொடுத்தாலும் மாநகரங்களில் உள்ள காவலர்கள் காவல் கட்டுப்பட்டு அறையில் பணியாற்றுவதாக உத்தரவுபோட்டுவிட்டு பல்வேறு அதிகாரிகளின் வீடுகளில்தான் பணியாற்றிவருவதை கண்கூடாக பார்க்க முடியும். குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதியில் உள்ள உயர் அதிகாரிகளின் வீடுகளில் 15 முதல் 20 காவலர்கள் மட்டுமின்றி காவலர்களின் குடும்பத்தார் உடனும் செல்ல காவலர்கள்தான் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

இப்படி உத்தரவு போடும் அதிகாரி முதல் செயல்படுத்த வேண்டிய அதிகாரிகள் வரை அனைத்து அதிகாரிகளின் வீடுகளிலும் காவலர்கள் பணியாற்றும்போது வெறும் கண்துடைப்புக்கு இந்த சுற்றறிக்கையை பொறுப்பை டிஜிபி அனுப்ப வேண்டிய அவசியம் ஏற்பட்டது உயர்நீதிமன்றத்தின் கடிதமே காரணம். பொறுப்பு டிஜிபியாக நியமிக்கப்பட்டு தற்போது உடல்நல குறைவால் விடுமுறையில் சென்றுள்ள டிஜிபி வெங்கட்ராமன் மற்றும் குறிப்பிட்ட சில அதிகாரிகள் வீடுகளில் மட்டுமே எந்த காவலரையும் பணியில் அமர்த்துவதில்லை. சென்னையில் உள்ள உயர் அதிகாரியின் வீட்டில் வளர்க்கப்படும் 6 நாய்களை பாதுகாப்பாக வளர்க்கவே 12-க்கும் மேற்பட்ட காவலர்கள் பணியில் உள்ளார் என்கிறது காவல்துறை வட்டாரம். இப்படி பல நூறு காவலர்கள் இன்னும் உயர் அதிகாரிகளின் வீடுகளில் பணியாற்றி வரும் நிலையில் இந்த சுற்றறிக்கை வெறும் கண்துடைப்பே என்கின்றனர் போலீசார்.

Comments (0)
Add Comment