உள்ளாட்சி நிர்வாகத் துறையில் இன்ஜினியர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கு அண்ணா பல்கலை கழகத்தால் நடத்தப்பட்ட நுழைவுத் தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் பெற்றவர்களின் பட்டியலை முன் கூட்டியே பெற்று பேரம் பேசி ரூ. 25 லட்சம் முதல் 35 லட்சம் ருபாய் வரை லஞ்சமாக பெற்ற வழக்கில் அமைச்சர் நேரு உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யும்படி அமலாக்கத்துறை தமிழக பொறுப்பு டிஜிபிக்கு கடிதம் அனுப்பிய நிலையில் வழக்கு பதிவு செய்யாவிட்டால் நீதிமன்றம் மற்றும் அமலாக்கத்துறையிடம் சிக்கி அவப்பெயரை சந்திக்க நேரிடும் என்பதால் இடியாப்ப சிக்கலில் மாட்டி தவிக்கிறார் பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமன். தன்னை சிக்கலில் மாட்டிவிட்ட காவல்துறை அதிகாரிகள் மீது டிஜிபி கடும் கோபத்தில் உள்ளார் என்கிறது டிஜிபி அலுவலக வட்டாரங்கள்.
இந்த கடிதத்தை அமலாக்கத்துறை வேண்டுமென்றே ஆங்கில பத்திரிகை மூலம் லீக் செய்ததாக ஆளும்கட்சி குற்றச்சாட்டு வைத்தாலும், டிஜிபி அலுவலகத்தில் இருந்தே இந்த கடிதம் லீக் ஆகியிருக்கலாம் என தற்போது தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை கிளப்பியுள்ளது. இந்த முக்கிய கடிதத்தை ஆங்கில பத்திரிகைக்கு லீக் செய்தது யார் என்ற பெரிய சந்தேகம் எழுந்துள்ளது. அதோடு மோசடி நடந்திருப்பதற்கான அனைத்து ஆதாரங்களுடன் அமலாக்கத்துறை கடிதம் எழுதிய நிலையில் ஆளும் மேலிடத்தின் நெருக்கடியால் இப்போதைக்கு எப்.ஐ.ஆர் போடாமல் வைத்திருக்கும்படி டிஜிபிக்கு நெருக்கடி தரப்பட்டுள்ளது.
இதை ஆளும்கட்சி செய்யும் என்பதை உணர்ந்த முக்கிய எதிர்க்கட்சி அதிரடி திட்டம் ஒன்றை வகுத்துள்ளது. தேர்வை நல்லமுறையில் எழுதி இந்த மோசடியால் தேர்வு செய்யப்படாத தேர்வர்கள் மூலம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர திட்டமிட்டு தேர்வர்கள் 10 பேருக்கும் மேல் வழக்கு தொடர நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இவ்வாறு உயர்நீதிமன்றத்தில் வழக்கு வரும் பட்சத்தில் உயர்நீதிமன்றம் ஆதாரங்கள் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து மோசடி குறித்து விசாரிக்க வேண்டும் என்ற உத்தரவை கோர்ட்டு பிறப்பிக்கும்.
வழக்கு பதிவு செய்யப்பட்டதும் அமலாக்கத்துறை சட்டவிரோத பண பரிமாற்றம், ஹவாலா பண பரிமாற்றம் நடந்திருப்பதற்கான ஆதாரங்களை திரட்டி வைத்திருப்பதால் உடனடியாக உள்ளே நுழைந்து அதிரடி சோதனையை அமைச்சர் உள்ளிட்டோர் இடங்களில் நடத்தும். மேலும் அமைச்சரின் சகோதரர்கள், உதவியாளர்கள், புரோக்கர்கள், சில அரசு அதிகாரிகளையும் விசாரணை என்ற பெயரில் அழைத்து கைது செய்யும்.
இதனால் ஆளும்கட்சி பெரும் சங்கடத்திற்கு ஆளாகும். பொறுப்பு டிஜிபிதான் இதற்குக் காரணம் என்ற ரீதியில் தன்னை இந்த வழக்கில் முதல்வரிடம் போட்டுக் கொடுத்து விடுவார்கள். இதனால் தனது பதவிக்காலம் வரை இரு கட்சிகளிடமும் கெட்டபெயருடன் பணியாற்ற வேண்டிய சூழ்நிலையை உருவாக்கி விட்டனர் தனக்கு கீழே பணியாற்றும் இந்த உள்வட்ட அதிகாரிகள்.
இது குறித்து டிஜிபி அலுவலக வட்டாரங்கள் தரப்பில் கூறப்படுவதாவது:–
தனக்கு டிஜிபி பதவியே வேண்டாம் என ஆரம்பம் முதலே வெங்கட்ராமன் மறுத்த போதும் வலுக்கட்டாயமாக அவரை பதவியில் அமர வைத்ததுடன் தற்போது பல்வேறு வழக்குகளிலும் தன்னை கலந்து ஆலோசிக்காமல் உள்வட்ட அதிகாரிகள் எடுக்கும் முடிவுகளால் தனக்குத்தான் துறை ரீதியாக கெட்டபெயர். தன்னால் மாவட்ட எஸ்.பி. உள்ளிட்டடோரை கூட கட்டுப்படுத்த முடியவில்லை என மிகுந்த மனவேதனையில் தனக்கு நெருக்கமானவர்களிடம் புலம்பி தள்ளிவருகிறாராம் டிஜிபி வெங்கட்ராமன்.
அமலாக்கத்துறை வழங்கில் அடுத்தடுத்து என்னென்ன திருப்பங்கள் வருமோ என்ற பீதி ஆளும்கட்சி வட்டாரத்திலும் ஏற்பட்டுள்ளது. உள்வட்ட அதிகாரிகள் முதல்வருக்கு முழு உண்மையையும் கூறாமல் தவறான தகவல்களை கூறி அரசை பெரும் சிக்கலுக்கு ஆளாக்கி வருகின்றனர். பெரிய அளவில் ஆட்சிக்கு சிக்கல் ஏற்படும்போதுதான் இவர்களது ஆட்டம் வெளிவரும்” என்றனர் மனவேதனையோடு.