மந்தி­ரிக்­காக தேரோட்டம் நிறுத்தம்: பக்தர்களுடன் தகராறு செய்த அமைச்சர்

வழக்கமாக தெய்வத்தை காண பக்தர்கள் காத்திருப்பது வழக்கம். ஆனால் சுசீந்திரம் தேரோட்டத்தின் போது அமைச்சர்கள் வருகைக்காக தேரில் அமர்ந்து வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க வேண்டிய உற்சவமூர்த்திகளை காத்திருக்க வைத்ததோடு, தேரோட்டத்தையும் குறிப்பிட்ட நேரத்தில் தொடங்காமல் அமைச்சர் தாமதமாக வந்து தொடங்கி வைத்ததால் அமைச்சருக்கு எதிராக சத்தம் போட்டவர்களை மிக தரக்குறைவான வார்த்தைகளால் அமைச்சர் திட்டிய சம்பவம் பக்தர்களை கடும் கோபத்திற்கு ஆளாக்கி உள்ளது. தெய்வங்களுக்காக இந்து சமய அறநிலையத்துறை செயல்படுகிறதா அல்லது அரசாங்கத்திற்காக தெய்வங்கள் உள்ளதா என்ற கேள்வியை எழுப்பி உள்ளனர். அமைச்சருக்கு எதிராக குரல்கொடுத்தவர்கள் மீதும் வழக்கு போட முயற்சித்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என முன்னாள் கவர்னர் தமிழிசை சவுந்திரராஜன் கொந்தளித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலையான் சுவாமி கோயில் இந்திய அளவில் மட்டுமின்றி உலக அளவிலும் மிகவும் புகழ்பெற்ற திருத்தலமாகும். ஒரே கோயிலில் சிவன், விஷ்ணு, பிரம்மா என மூன்று கடவுள்களும் ஒரே சிலையில் இங்குதான் காட்சி தருகின்றனர். இதனால் சுசீந்திரம் தாணுமாலையான் கோயிலில் நடக்கும் அனைத்து விழாக்களிலும் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த பக்தர்கள் மட்டுமின்றி கேரள மாநிலத்தை சேர்ந்த பல நூறு பக்தர்களும் கலந்துகொள்வது வழக்கம். தாணு மலையான் கோயிலில் மார்கழி பெருந்திருவிழா கடந்த 10 நாட்களுக்கு முன்பு தொடங்கியது. இந்த திருவிழாவின் 9-ம் நாளில் நடக்கும் தேரோட்டம் மிகவும் பிரசித்தி பெற்றது. தேரோட்டத்தை ஒட்டி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பொது விடுமுறை வழங்கப்படும். இந்த தேரோட்டத்தை காண உள்ளூர் மக்களும், பக்தர்களும், கேரளா மாநிலத்தை சேர்ந்த பல நூறு பக்தர்களும் திரண்டிருந்தனர்.

காலை 9.15 மணிக்கு தேரோட்டம் தொடங்கும் என ஏற்கனவே கோயில் நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டிருந்ததால் காலை 8 மணி முதலே ஏராளமான பக்தர்கள் கோயில் வளாகத்தில் குவிந்திருந்தனர். ஆனால் 10 மணி ஆகியும் தேரில் அமர்ந்து பக்தர்களுக்கு தரிசனம் தரவேண்டிய மும்மூர்த்திகளின் உற்சவர் சிலைகள் கொண்டுவந்து வைக்கப்படவில்லை. இதுபற்றி கூடியிருந்த பக்தர்கள் கோயில் நிர்வாகிகளிடம் கேட்டபோது இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு வருகை தந்து தேரோட்டத்தை தொடங்கிவைக்க உள்ளார். அவர் வருவதற்கு தாமதமாவதால் உற்சவர் சிலைகளை தேரில் எடுத்துவைக்கவில்லை என கூறியுள்ளனர் . இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த பக்தர்கள் கடவுளுக்காக மக்கள்தான் காத்திருக்க வேண்டும்.

அரசரானாலும், ஆண்டியானாலும் தெய்வத்தின் முன்பு சமம். குறிப்பிட்ட நல்ல நேரத்தில்தான் தேரோட்டம் தொடங்க வேண்டும் என்பதை முன்னோர்கள் நல்ல நாள், நேரம் குறித்து கொடுத்துள்ளனர். இதன்படிதான் தேரோட்டம் தொடங்க வேண்டும். ஆனால் அமைச்சர் வர தாமதமாவதால் ஆண்டவனையும் தேரில் வைக்காமல் தாமதப்படுத்துவது எந்த வகையில் நியாயம் என பக்தர்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தனர். ஒருகட்டத்தில் பக்தர்கள் கூச்சல்போட தொடங்கியதால் சிறப்பு பூஜைகள் செய்து உற்சவர்களை தேரில் வைத்துவிட்டனர். ஆனால் தேரோட்டம் தொடங்குவதில் மீண்டும் தாமதம் ஏற்பட்டது. ஒருவழியாக அமைச்சர் சேகர் பாபு தனது குடும்பத்தினருடனும், மாவட்ட அமைச்சர் மனோ தங்கராஜுடனும் காலை 10.15 மணிக்குத்தான் வந்து சேர்ந்தார். அமைச்சருக்காக தேரோட்டம் தொடங்காமல் காத்திருந்ததால் ஆத்திரம் அடைந்த பக்தர்கள் அமைச்சருக்கு எதிர்க்க கோசம் போட தொடங்கினர்.

பக்தர்கள் தனக்கு எதிராக கோஷம் போட்டதால் ஆத்திரம் அடைந்த அமைச்சர் சேகர் பாபு பக்தர்களை திட்ட தொடங்கினார். இதனால் பக்தர்களுடன் பாஜக தொண்டர்களும், இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்பினரும் அமைச்சருக்கு எதிராக கோசம்போட்டதால் கடும் எரிச்சல் அடைந்த அமைச்சர் சேகர்பாபு அவர்களை பார்த்து “சோற்றை தின்குறியா… இல்லை வேறு எதாவது தின்கிறாயா” என அருவருக்கத்தக்க வார்த்தைகளால் திட்டியதை கேட்ட பக்தர்கள் மேலும் ஆவேசமைடைந்து “அல்லேலூயா பாபு ஒழிக ” என கோசம் போட்டனர். இந்த கோசத்தை கேட்டதும் அமைச்சர் சேகர் பாபு மேலும் ஆவேசமடைந்து பக்தர்களை திட்டத்தொடங்கினார் . இதனால் சம்பவ இடத்தில் பெரும் பதட்டம் ஏற்பட்டது. இருதரப்பினரும் தள்ளுமுள்ளு நடத்தியதால் பாதுகாப்பிற்கு வந்த போலீசார் அமைச்சரை பாதுகாக்க பக்தர்களை தள்ளிவிட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஒருவழியாக அமைச்சரை சமாதானப்படுத்திய அதிகாரிகள் தேரோட்டத்தை தொடங்கி வைக்க செய்தனர். தேரோட்டத்தை வடத்தை பிடித்து தொடங்கி வைத்த அமைச்சர் சேகர் பாபு ஒரு சில நிமிடங்களில் ஆவேசத்துடனும், கடும் கோபத்துடனும் புறப்பட்டு சென்றுவிட்டார். இவருடன் வந்த அமைச்சர் மனோ தங்கராஜூவும் பக்கதர்களுடன் சண்டை போட்டார். பதிலுக்கு பக்தர்கள் கத்தியதால் அவரும் விட்டால் போதும் என நகர்ந்து சென்றுவிட்டார். இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பும், பதட்டமும் உருவானது. வழக்கமாக அமைதியாகவும், பக்தர்களின் இறை கோசத்துடனும் புறப்படும் தேரோட்டம் சண்டையுடன் தொடங்கியது.

தேரோட்டம், கும்பாபிஷேகம் உள்ளிட்டவை குறிப்பிட்ட நல்ல நேரத்தில்தான் தொடங்க வேண்டும் என்பது ஐதீகம். அமைச்சர் வருகைக்காக தேரோட்டத்தையே தள்ளி வாய்த்த சம்பவம் தேரோட்டத்தை காண வந்த பக்தர்களை கடும் ஆவேசத்திற்கும், வேதனைக்கும் உள்ளாக்கிவிட்டது. இந்து சமய துறை என்பது இந்து கோயில்களை பராமரிக்க உருவாக்கப்பட்ட அரசு துறை. முழுக்க முழுக்க கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களின் காணிக்கை மற்றும் கோயிலுக்கு பொதுமக்களும், பக்தர்களும் எழுதிவைத்த நிலத்தின் மூலம் கிடைக்கும் வருமானம் மூலம்தான் இந்த துறையே செயல்படுகிறது. இந்த துறைக்கு அமைச்சராக இருப்பவர் சரியான நேரத்தில் நிகழ்ச்சியில் கலந்துகொண்டால்தான் பக்தர்கள் கோபத்திற்கு ஆளாகாமல் தப்பிக்க முடியும். அதை விடுத்து கோயில் தேரோட்டத்தில் பக்தர்களிடம் தரக்குறைவான வார்த்தைகளால் சத்தம்போட்டு அமைச்சர் சண்டைபோட்டு சம்பவம் பெரும் வேதனையை ஏற்படுத்திவிட்டது.

மாலையில் கோயிலுக்கு சாமி கும்பிட வந்த பாஜக மூத்த தலைவரும், தெலுங்கானா மாநில முன்னாள் கவர்னருமான தமிழிசை சவுந்தர ராஜன் கூறும்போது, பக்தர்களிடம் அமைச்சர் சேகர்பாபு ஆவேசமாக பேசியது தவறு. குறிப்பிட்ட நேரத்தில் தேரோட்டத்தை தொடங்கி வைக்காமல் காலதாமதமாக வந்ததால்தான் பக்தர்கள் சத்தம் போட்டனர். இதற்காக பதிலுக்கு பதில் அமைச்சர் சேகர் பாபு சண்டை போட்டதை ஏற்க முடியாது.

கோஷம் போட்ட பக்தர்கள் மீது போலீசார் மூலம் வழக்கு போட்டால் அரசு கடும் விளைவை சந்திக்க நேரிடும் என ஆவேசமாக கூறினார். கடந்த சில நாட்களுக்கு முன்பு வைகுண்ட ஏகாதசி நாளில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் நடந்த நிகழ்ச்சியில் தமிழிசை சவுந்திரராஜன் தனது கட்சி நிர்வாகிகளுடன் பங்கேற்க வந்திருந்தார். அப்போது வைகுண்ட ஏகாதேசி விழா பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்க்க வந்திருந்த அமைச்சர் சேகர் பாபுவிற்கும், தமிழிசை சவுந்தர ராஜனுக்கும் கோயிலுக்குள் நிர்வாகிகளை அழைத்துசெல்வதில் வாக்குவாதம் ஏற்பட்டது. முன்னாள் கவர்னர், மூத்த நிர்வாகி என்றுகூட பார்க்காமல் அமைச்சர் சேகர் பாபு திட்டியதை பக்தர்கள் வீடியோ படமெடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்தனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அமைச்சர் சேகர்பாபு பக்தர்களுடன் சண்டை போட்ட வீடியோ தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கார்த்திகை தீப நாளில் திருப்பரங்குன்றம் முருகன் கோயில் வளாகத்தில் உள்ள விளக்கு தூணில் மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டபோதும் அமைச்சர் சேகர் பாபு மற்றும் அரசு நிர்வாகம் பிடிவாதமாக தீபம் ஏற்ற அனுமதி மறுத்தது. மேலும் நீதிமன்றத்திலும் திருப்பரங்குன்றத்தில் இருப்பது தீப தூண் அல்ல என இந்துசமய அறநிலையத்துறை சார்பில் வாதாடியது இந்து மக்களை கடும் ஆத்திரத்திற்கு உள்ளாக்கியது.

இந்த நிலையில்தான் அமைச்சர் சேகர் பாபு தேரோட்டத்திற்கு தாமதமாக வந்ததுடன், அவருக்காக தேரோட்டத்தை தாமதப்படுத்தியது பக்தர்களை கடும் ஆத்திரத்திற்கு உள்ளாக்கி அவருக்கு எதிராக கோசம் போட வைத்துவிட்டது. இது அமைச்சரை கடும் ஆவேசப்படுத்தி தரக்குறைவாக பேச வைத்துவிட்ட வீடியோ வெளியாகி தற்போது வைரலாகிவிட்டது. இந்து கோயில்களை நிர்வாகம் செய்யவே இந்து சமய அறநிலையத்துறை உள்ளது. இதற்குத்தான் அமைச்சர் உள்ளார். தெய்வத்திற்காகவே பக்தர்கள் காத்திருக்க வேண்டும். தெய்வத்தை காத்திருக்க செய்வது பெரும் சிக்கலில் முடியும். தெய்வத்தின் கோபத்திற்கு ஆளாவது சரியல்ல என்கின்றனர் பக்தர்கள்.

Comments (0)
Add Comment