ரூ. 2 கோடி மதிப்புள்ள நிலத்தை போலி ஆவணங்கள் தயார் செய்து அபகரித்த நபரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை பாலவாக்கத்தில், சேகர் என்பவருக்கு சொந்தமாக 2,400 சதுர அடிகள் கொண்ட சுமார் ரூ. 2 கோடி மதிப்புள்ள சொத்து உள்ளது. இதனை சிலர் கூட்டுச் சேர்ந்து போலியான ஆவணங்கள் தயார் செய்து மோசடி செய்து அபகரித்துள்ளனர். இதுகுறித்து கடந்த 19.10.2012 அன்று சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். கடந்த 13 ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வந்த புகார் குறித்து வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் நில மோசடி நடந்திருப்பது உண்மை என தெரியவந்தது. சென்னை நகர போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவின் பேரில் மத்தியக் குற்றப்பிரிவு கூடுதல் ஆணையாளர் ராதிகா வழிகாட்டுதலின்படி தனிப்படை அமைக்கப்பட்டது. அதனையடுத்து இந்த வழக்கில் தொடர்புடைய சென்னை மதனந்தபுரத்தைச் சேர்ந்த சுரேஷ் குமார் @ தனசூரியா (50) என்பவரை போலீசார் இன்று (03.09.2025) கைது செய்தனர். சுரேஷ்குமார் மீது 25-க்கும் மேற்பட்ட நிலமோசடி மற்றும் வங்கி மோசடி வழக்குகள் நீதிமன்ற விசாரணையில் உள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய தலைமறைவு குற்றவாளிகளைப் பிடிக்க காவல் குழுவினர் தீவிர தேடுதலில் ஈடுபட்டு வருகின்றனர்.