எஸ்.சி., எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தும் குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்காத டி.எஸ்.பி.யை நீதிமன்ற வளாகத்திலேயே கைது செய்த உத்தரவை உயர் நீதிமன்ற நீதிபதி ரத்து செய்ததோடு, விஜிலென்ஸ் பதிவாளர் விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் நத்தப்பேட்டையை சேர்ந்த சிவகுமார் என்பவர் பூசிவாக்கம் கிராமத்தில் டீ கடை மற்றும் பேக்கரி நடத்தி வருகிறார். இவரது கடைக்கு கடந்த ஜூலை மாதம் வந்த அதே கிராமத்தை சேர்ந்த முருகன் என்பவர் வாங்கி தின்ற கேக் நன்றாக இல்லை என குற்றம்சாட்டினார். இதனால் கடை உரிமையாளர் சிவகுமாருக்கு, முருகனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு ஒரு கட்டத்தில் கைகலப்பாகி இருவரும் அடித்துக் கொண்டனர். தன்னை முருகன் அடித்து விட்டதாக தனது மருமகனான போலீஸ்கார் லோகேஸ்வரனிடம் கூறியுள்ளார். ஆத்திரமடைந்த லோகேஸ்வரன் உடனே முருகனின் வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்டதோடு, முருகனின் மனைவி பார்வதியை ஜாதிப்பெயரை கூறி திட்டியதாகவும் கூறப்படுகிறது.
தன்னை ஜாதிப்பெயரை கூறி போலீஸ்காரர் லோகேஸ்வரனும், அவரது உறவினர்களும் திட்டியதாகவும், தாக்க முயற்சித்ததாகவும் பார்வதி வாலாஜாபாத் போலீசில் புகார் கொடுத்தார். இதையடுத்து போலீஸ்காரர் லோகேஸ்வரன், மாமனார் சிவகுமார் உள்ளிட்ட 4 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ததோடு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கிடப்பில் போட்டு விட்டனர்.
இது குறித்து பார்வதி முதல்வர் பிரிவு உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கும் புகார் அளித்தார். இந்த வழக்கு பற்றி தகவல் அறிந்த காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை நீதிபதி செம்மலுக்கு தெரிய வந்து தாமாகவே முன்வந்து விசாரணை நடத்தினார். இந்த வழக்கில் வாலாஜாபாத் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்காததால் காஞ்சிபுரம் டிஎஸ்பி சங்கர் கணேஷ் விசாரிக்க உத்தரவிட்டார்.
மேலும் பட்டியலின மக்களுக்கு எதிராக செயல்படுவதாக கூறி லோகேஸ்வரின் மற்றும் அவரது குடும்பத்தினரையும் அப்பகுதியில் இருந்து வெளியேற்றும் படியும் போலீசாருக்கு உத்தரவிட்டார். இந்த வழக்கில் குற்றவாளிகளை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்படி காஞ்சிபுரம் டி.எஸ்.பி சங்கர் கணேஷிற்கு உத்தரவிட்ட பிறகும் கைது செய்யாமல் நீதிமன்றத்துக்கு ஆஜராக வந்ததால் அவரையே கைது செய்ய உத்தரவிட்டார்.
போலீசார் கைது செய்ய முன்வராத நிலையில் நீதிமன்ற ஊழியர்கள் மூலம் கைது செய்து காஞ்சிபுரம் கிளை சிறையில் தன்னுடைய காரிலேயே அழைத்துச் சென்று அடைக்கவும் உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கை காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி. சண்முகம் முறையாக விசாரிக்க வில்லை. இவர் தனது கடமையை கண்டு கொள்ளவில்லை. இவரது நடவடிக்கை கண்டிக்கக் கூடியது எனவும் கண்டனம் தெரிவித்து உத்தரவு பிறப்பித்தார்.
இதன்படி நீதிமன்ற ஊழியர்கள் டி.எஸ்.பி. சங்கர் கணேஷை கைது செய்து கிளை சிறையில் ஒப்படைத்தனர். உடனே டி.எஸ்.பி. சங்கர் கணேஷ் தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறியதால் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். அங்கிருந்து செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டார்.
நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு ஆஜராக சென்ற குரூப் 1 டி.எஸ்.பி.யை மாவட்ட முதன்மை நீதிபதி செம்மல் கைது செய்ய உத்தரவிட்ட சம்பவம் தமிழகம் மட்டுமின்றி இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்தது. தமிழக காவல்துறையினர் ஒட்டுமொத்தமாக நீதித்துறைக்கே எதிராக குரல் கொடுக்க தொடங்கினர்.
ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு இந்த கைது சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பதட்டத்தையும் ஏற்படுத்திவிட்டது. எஸ்.சி., எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் காவல்துறை எஸ்.பி. முதல் டி.எஸ்.பி, ஆய்வாளர் உள்ளிட்ட யாரும் உரிய நடவடிக்கை எடுக்காமல் மற்றொரு தரப்புக்கு ஆதரவாக இருந்ததாக வெளியான செய்தி பெரும் பிரச்சினையை உருவாக்கிவிடும். டி.எஸ்.பி.யை சீருடையுடன் கைது செய்ததால் காவல்துறைக்கு பெரும் அவமானம் என கருதி அடுத்தகட்ட நடவடிக்கைக்காக உயர்நீதிமன்றத்தை நாடினர்.
உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் முன்னிலையில் வந்த இந்த வழக்கில் வன்கொடுமை தடுப்பு சட்டப்பிரிவு 10-ன் கீழ் புகார் மற்றும் காவல்துறை அறிக்கையில் திருப்தி அடைந்தால் மட்டுமே சிறப்பு நீதிமன்றம் இத்தகைய வெளியேற்ற உத்தரவை பிறப்பிக்க முடியும். பட்டியலினத்தவருக்கு எதிரான சம்பவங்கள் நடக்கும்போது மட்டுமே இதுபோன்ற வெளியேற்ற உத்தரவை பிறப்பிக்க முடியும்.
அதுபோன்ற சூழ்நிலை இல்லாதபோது மாவட்ட முதன்மை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தேவையற்றது. அரசு ஊழியருக்கு எதிராக வன்கொடுமை தடுப்பு சட்ட பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கும்போது நிர்வாக ஒப்புதல் பெற வேண்டும். எனவே டி.எஸ்.பி.யை கைது செய்ய பிறப்பிக்கப்பட்ட உத்தரவு, போலீஸ்காரர் லோகேஸ்வரனை வெளியேற்ற பிறப்பித்த உத்தரவுகள் ரத்து செய்யப்படுகின்றன.
காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி செம்மல், மாவட்ட எஸ்.பி. ஷண்முகம் இடையிலான வாட்ஸ் அப் உரையாடல்கள், எப்.ஐ.ஆர். பதிவு செய்ய வற்புறுத்தியது, லோகேஸ்வரன் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட சம்பவம், டி.எஸ்.பி.க்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள் குறித்து உயர்நீதிமன்ற விஜிலென்ஸ் பதிவாளர் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
இந்த வழக்கு வரும் 23-ம் தேதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தீர்ப்பு வழங்கினார். இதனால் டி.எஸ்.பி. சங்கர் கணேஷ் சிறைக்கு செல்லாமல் தப்பித்தார். இருப்பினும் டி.எஸ்.பி.யை கைதுசெய்து கிளை சிறை வரை கொண்டுசென்ற சம்பவம் போலீஸாரிடையே பெரும் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.
மாவட்டங்களில் பதிவு செய்யப்படும் வழக்குகளின் நிலைமை குறித்து 15 நாட்களுக்கு ஒருமுறை மாவட்ட எஸ்.பி. தலைமையிலும், மாதம் ஒருமுறை டி.ஐ.ஜி. தலைமையிலும், மண்டல ஐ.ஜி. தலைமையிலும் ஆய்வு செய்யப்படுகிறது.
இதுபோன்ற பிரச்சினைக்குரிய வழக்குகளில் நீதிமன்ற உத்தரவை கடைபிடித்திருந்தால் இதுபோன்ற தேவை இல்லாத சம்பவங்கள் நடந்திருக்காது. ஏற்கனவே பல்வேறு வழக்குகளில் வருடக்கணக்கில் குற்றப்பத்திரிகையில் கூட தாக்கல் செய்யப்படாதது குறித்து மதுரை உயர்நீதிமன்றம் கண்டனத்தை தெரிவித்துள்ளது.
வெறுமனே ஆய்வுக்கூட்டத்தை உயர் அதிகாரிகள் நடத்தாமல் உரியமுறையில் வழக்குகளின் தற்போதைய நிலை, எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், எடுத்த நடவடிக்கைகள் குறித்து தொடர்ச்சியாக கண்காணித்து இதுபோன்ற பிரச்சினைகள் வரும்காலத்தில் ஏற்படாமல் தடுக்க உயர் அதிகாரிகள் உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும்.