– சிவ. செல்லையா
தமிழக காவல்துறையில் நிர்வாகப்பிரிவு ஐ.ஜி.யாக பணியாற்றி வரும் வி. பாலகிருஷ்ணனை மத்திய எல்லை பாதுகாப்பு பிரிவு ஐ.ஜி.யாக நியமித்து மத்திய உள்துறை உத்தரவிட்டுள்ளது.
மகேஷ்குமார் அகர்வால்
தமிழக காவல்துறையில் பணியாற்றி வரும் பல ஐபிஎஸ் அதிகாரிகள் சமீபகாலமாக மத்திய அரசுப்பணிக்கு செல்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆயுதப்படை டிஜிபியாக பணியாற்றி வந்த மகேஷ்குமார் அகர்வால் மத்திய அரசின் பணிக்கு சென்று விட்டார். அவரையடுத்து சென்னை நகர போக்குவரத்து கூடுதல் கமிஷனராக இருந்த ஐஜி சுதாகர் மத்திய போதைப்பொருள் தடுப்புப் புலனாய்வுப்பிரிவுக்கு (NCB) மாற்றலாகி சென்று விட்டார். இவர்களைப் போலவே பல ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளும் மத்திய அரசுப் பணிக்கு டெபுடேஷன் பணியில் செல்ல ஆர்வம் காட்டி வருகின்றனர்.
பாலகிருஷ்ணன் ஆர். சுதாகர் பொன்னி
இந்த பட்டியலில் தற்போது டிஜிபி அலுவலகத்தில் நிர்வாகப் பிரிவு ஐஜியாக பணியாற்றி வரும் வி.பாலகிருஷ்ணனும் இணைந்துள்ளார். கோவை மாநகர காவல் ஆணையராக சிறப்பாக பணியாற்றி வந்த இவரை அவசர கதியில் டிஜிபி அலுவலக பணிக்கு மாற்றினர். காரணம் கோவை சரக டிஐஜியாக பணியாற்றி வந்த சரவண சுந்தருக்கு ஐ.ஜி.யாக பதவி உயர்வு வழங்கியபோது இவருக்கு கோவை மண்டலத்திலேயே பதவி வழங்க வேண்டும் என்பதற்காக பாலகிருஷ்ணன் இடமாற்றம் செய்யப்பட்டார்.
ரம்யாபாரதி
குற்றப்புலனாய்வு வழக்குகளை கண்டறிவதற்கான சிறப்பு படிப்பை லண்டன் சென்று படித்து வந்த பாலகிருஷ்ணனை சிபிசிஐடி உள்ளிட்ட பல முக்கிய வழக்குகளை விசாரிக்கும் முக்கியப் பணிக்கு மாற்றாமல் வேண்டுமென்றே நிர்வாக பணிக்கு மாற்றி கடும் மன உளைச்சலுக்கு ஆளாக்கினர். இவரைப்போலவே தங்களுக்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை என கூறித்தான் டிஐஜிக்களான பொன்னி, ரம்யா பாரதி இருவரும் ஒரே நேரத்தில் மத்திய அரசுப் பணிக்கு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மாறுதல் பெற்றுச் சென்றனர்.
இதனால் கடந்த ஒரு ஆண்டாக காஞ்சிபுரம் சரக டிஐஜி பதவி காலியாகவே உள்ளது. சட்டம், -ஒழுங்கு உள்ளிட்ட பணிகளில் சிறப்பாக பணிபுரியும் அதிகாரிகளை டம்மி பதவியில் நியமிப்பதால் பல மாவட்டங்களில் சட்டம் ஒழுங்கு பிரச்னைகளை சரிவர கையாள முடியாமல் தொடரும் அவலம் ஏற்பட்டுள்ளது. ஐ.ஜி. பாலகிருஷ்ணனைப் போலவே மேலும் பல ஐபிஎஸ் அதிகாரிகள் மத்திய அரசுப் பணிக்கு செல்ல விருப்பம் தெரிவித்திருப்பது காவல்துறையின் நிர்வாக சீர்கேட்டையே காட்டுவதாக வேதனைப்படுகின்றனர் நேர்மையான அதிகாரிகள்.
காவல்துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதல்வரின் கவனம் இப்பிரச்னைகளில் சற்று கவனமாக இருப்பது நல்லது என்கின்றனர் அதிகாரிகள். சமீபத்தில் கடத்தல் வழக்கில் கூடுதல் டிஜிபி அந்தஸ்தில் அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்ட தகவல் கூட முதல்வர் கவனத்திற்கு உடனடியாக கொண்டு செல்லப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே நேர்மையாகவும், திறமையாகவும் பணியாற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் மத்திய அரசு பணிக்கு தாவுவது காவல்துறையை மேலும் பலவீனப்படுத்துவதாகிவிடும் என்பதை உணர்வார்களா உயர் அதிகாரிகள்…?????