டிஜிபி நியமனத்திலும் அரசியலா: கொந்தளிக்கும் ஐ.பி.எஸ். அதிகாரிகள்

தனக்கு வேண்டப்பட்ட நபரை டிஜிபியாக்க மத்திய அரசு முயலும் அடாவடிதான் டிஜிபி நியமனத்தில் தாமதம் ஏற்பட காரணம். மத்திய பணியாளர் தேர்வாணையம் முன் மொழிந்துள்ள 3 பேர் பட்டியலை தமிழக அரசு ஏற்காமல் விளக்கம் கேட்டு தமிழக அரசு கடிதம் அனுப்பியுள்ளது என சட்ட அமைச்சர் ரகுபதி விடுத்துள்ள அறிக்கையின் மூலம் டிஜிபி நியமனத்தில் அரசியலும், முதல்வர் உள்வட்ட அதிகாரிகளின் கைவரிசையும் இருப்பது தெள்ள தெளிவாகிவிட்டது.

உச்சநீதிமன்றத்தில் தலைமை செயலாளர் மீதான வழக்கு விசாரணைக்கு இம்மாதம் கடைசியில் எடுக்கப்படும்போது கண்டிப்பாக தமிழக அரசுக்கு கடும் கண்டனத்தோடு புதிய டிஜிபிக்கான உத்தரவை பிறப்பிக்கும் என்கின்றனர் ஐ.பி.எஸ். அதிகாரிகள். இதனால் டிஜிபி நியமனம் மேலும் தாமதமாகும். குறிப்பிட்ட அதிகாரி இந்த பதவிக்கு வந்துவிடவே கூடாது என கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படும் குறிப்பிட்ட அதிகாரிகளின் இந்த செயலால் சட்டம் ஒழுங்கு சீர்குலையும் சூழ்நிலையை உருவாகியுள்ளதாவும் குற்றசாட்டு எழுந்துள்ளது.

தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபியாக இருந்த சங்கர் ஜிவால் ஓய்விற்கு பிறகு புதிய டிஜிபியை நியமிக்காமல் பொறுப்பு டிஜிபியாக வெங்கட்ராமன் நியமிக்கப்பட்டார். ஏற்கனவே மதுரை உயர் நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் தொடரப்பட்டு புதிய நிரந்தர டிஜிபியை நியமிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பிறகு, மத்திய பணியாளர் தேர்வாணையம் கூட்டத்தை கூட்டி 3 சீனியர் அதிகாரிகளின் பெயர்களையும் பரிந்துரை செய்தது. இந்த பரிந்துரையில் இருப்பவர்களை நியமிக்கவே கூடாது. குறிப்பாக போலீஸ் அகாடமி இயக்குனராக உள்ள சந்தீப் ராய் ரத்தோர் டிஜிபி பதவிக்கு வந்துவிட கூடாது. இவர் பதவிக்கு வந்தால் தங்கள் பதவிக்கு சிக்கல் என கருதி கூடுதல் டிஜிபி அந்தஸ்தில் உள்ள 2 உயர் பதவியில் உள்ள அதிகாரிகளும், 3 ஐ.ஜி.க்களும் சேர்ந்து இவரது பதவி நியமனத்தை தடுத்து வருவதாக ஏற்கனவே காவல்துறை அதிகாரிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இத்தனைக்கும் கடந்த அதிமுக ஆட்சியில் 12 ஆண்டுகள் டம்மி பதவியில் இருந்தவர் சந்தீப் ராய் ரத்தோர். திமுக ஆதரவாளர் என குற்றம் சாட்டியே அதிமுக ஆட்சியில் இவருக்கு முக்கிய பதவி வழங்கப் படவில்லை. ஆனால் இவர் பதவிக்கு வராமல் தடுக்க நிலைக்கு அதிகாரிகள் அனைவருமே திமுக, அதிமுக ஆட்சிகளில் சட்டம் ஒழுங்கு, மாநகர ஆணையர் உள்ளிட்ட முக்கிய பதவிகளில் தொடர்ந்து கொண்டிருப்பவர்கள்தான் எனவும் ஐ.பி.எஸ். அதிகாரிகளே குற்றம் சாட்டுகின்றனர்.

டிஜிபி சீனியாரிட்டியில் முதல் இடத்தில் சீமா அகர்வாலின் கணவர் ஏ.கே. விசுவநாதன் கடந்த அதிமுக ஆட்சியில் 3 ஆண்டுகள் சென்னை மாநகர ஆணையராக இருந்ததால் இவரையும் அதிமுக ஆதரவாளர் என முத்திரை குத்திவிட்டனர். குற்றம் சாட்டுபவர்கள் எந்த ஆட்சியாக இருந்தாலும் முக்கிய பதவி வகித்துவிட்டு திமுக ஆட்சிக்கு வந்ததும் தங்களை திமுகவின் தீவிர விசுவாசிகளைப்போல காட்டி மேலிடத்தை ஏமாற்றி வருவதாகவும் ஐ.பி.எஸ். அதிகாரிகளே குற்றம்சாட்டி கின்றனர்.

உச்சநீதிமன்ற உத்தரவின்படி மத்திய பணியாளர் தேர்வாணையம் 3 பேர் பட்டியலை அனுப்பி 20 நாட்களாகியும் புதிய டிஜிபியை நியமிக்காமல், தேர்வாணையம் அனுப்பிய பட்டியலில் உள்ள 3 பேர் மீதும் புதிய குற்றசாட்டுகளை உருவாக்கி அவர்களை பட்டியலில் இருந்து நீக்கிவிட்டு ஜூனியர் அதிகாரியான வெங்கட்ராமனை நிரந்தர டிஜிபியாக நியமிக்க வேண்டும் என கூடுதல் டிஜிபி அந்தஸ்தில் உள்ள 2 உயர் பதவியில் உள்ள அதிகாரிகளும், 3 ஐ.ஜி.க்களும் சேர்ந்து கங்கணம் கட்டி செயல்பட்டு வருவதாக டிஜிபி அலுவலக வட்டாரங்கள் கூறுகின்றன.

இதற்கிடையே மதுரையைச் சேர்ந்த மக்கள் கண்காணிப்பகம் அமைப்பின் நிறுவனரும், வழக்கறிஞருமான ஹென்றி டிபேன் உச்சநீதிமன்றத்தில் தமிழக தலைமை செயலாளர் முருகானந்தத்திற்கு எதிராக டிஜிபி நியமனம் தொடர்பாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை கடந்த 16-ம் தேதி தொடர்ந்துள்ளார். இந்த மனுவை, உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக டிஜிபி நியமனம் செயல் தமிழக அரசு வேண்டுமென்றே காலம்தாழ்த்தி வருகிறது. எனவே தலைமை செயலாளருக்கு எதிராக நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியுள்ளார்.

தீபாவளி பண்டிகை விடுமுறை உச்சநீதிமன்றத்திற்கு விடப்பட்டுள்ளதால் வரும் 27ம் தேதிதான் மீண்டும் கோர்ட் திறக்கப்பட உள்ளது. இதன்பின் ஹென்றி டிபேன் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்போது கண்டிப்பாக தமிழக அறைக்கு எதிராகவும், தலைமை செயலாளருக்கு எதிராகவும் கண்டனம் வருவதோடு, மத்திய பணியாளர் தேர்வாணையம் அனுப்பியுள்ள பட்டியலில் இருந்து ஒருவரை தேர்ந்தெடுத்து நியமனம் செய்ய உத்தரவிடும். இதன்பிறகு வேறு வழியின்றி நியமிப்பதை விட இப்போதே டிஜிபி நியமனத்தை முடித்துவிடலாம் என தலைமை செயலாளர் தெளிவாக கூறியுள்ளார். இதையும் மீறி ஜூனியர் டிஜிபி வெங்கட்ராமனை நியமிக்க இந்த உள்வட்ட அதிகாரிகள் பல்வேறு யுக்திகளையும் கையாண்டு வருகின்றனர். இதன் எதிரொலியே தற்போது பட்டியலில் உள்ளவர்களை நீக்கிவிட்டு புதிய பட்டியலை அனுப்பும்படி தமிழக அரசு சார்பில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு மத்திய பணியாளர் தேர்வாணையத்திற்கு அனுப்பப்பட்ட விளக்க கடிதம். ஆனால் இந்த கடிதத்தை மத்திய பணியாளர் தேர்வாணையம் ஏற்காமல் திருப்பி அனுப்பும் என தெரிந்தும் காலதாமதப்படுத்த இந்த அதிகாரிகள் செய்யும் உள்ளடி வேலை எனவும் காவல்துறை அதிகாரிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

டிஜிபி நியமனத்தில் தமிழக அரசு வேண்டுமென்றே தாமதம் செய்வதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டியதற்கு பதிலடியாக தமிழக சட்ட அமைச்சர் ரகுபதி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கையில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு இருந்ததால் டிஜிபி நியமன பட்டியல் உரியகாலத்திற்குள் மத்திய பணியாளர் தேர்வாணையத்திற்கு அனுப்பப்படவில்லை. டிஜிபி நியமனம் தொடர்பாக மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்திய கூட்டத்தில் விதிகளுக்கு புறம்பாக சில பெயர்கள் முன்மொழியப்பட்டது. இதை தமிழக அரசு ஏற்கவில்லை. மாநில அரசு உரிமைகளை மதிக்கும் அரசு எதிர்க்கட்சி தலைவர் பழனிச்சாமி போல அமைதி காக்க முடியாது. தாங்கள் விரும்பியவர்களை முன்மொழிந்து மத்திய பணியாளர் தேர்வாணையம் பட்டியல் அனுப்பி உள்ளது. இதை ஏற்காத தமிழக அரசு அதற்கான காரணங்களை விளக்கி கடிதம் எழுதி உள்ளது. இதற்கான பதில் இன்னும் பெறவில்லை.

தனக்கு வேண்டப்பட்ட நபரை தமிழகத்தில் டிஜிபியாக அமர்த்த மத்திய அரசு முயலும் அடாவடிதான் இந்த பிரச்சினைக்கு கரணம் என கடிதத்தில் அமைச்சர் ரகுபதி குறிப்பிட்டுள்ளார். இந்த அறிக்கை மூலம் மத்திய பணியாளர் தேர்வாணையம் மத்திய அரசின் சொல்படி சீனியர் அதிகாரிகள் 3 பேர் பட்டியலை அனுப்பி அதில் இருந்து ஒருவரை தேர்வு செய்ய நிர்பந்திப்பதுபோல் அறிக்கை அமைந்துள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவின்படிதான் மத்திய பணியாளர் தேர்வாணையம் இந்த கூட்டத்தை கூட்டி இதில் தமிழக அரசு தலைமை செயலாளரும் கலந்துகொண்டு தனது கருத்தை கூறியுள்ளார். இந்த கூட்டத்தில்தான் 3 சீனியர் டிஜிபிக்கள் மீதும் புதிய குற்றசாட்டுகளை கூறி இவர்களை பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என பரிந்துரைத்துள்ளனர்.

இதை மத்திய பணியாளர் தேர்வாணையம் ஏற்கவில்லை. துறை ரீதியாகவோ, வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தாலோதான் இந்த அதிகாரிகள் பெயர்களை நீக்க முடியும். இதற்கான எந்த ஆதாரங்களையும் கொடுக்காமல் வெறுமனே குற்றசாட்டுகளை கூறி பெயர் நீக்க செய்யும்படி கூறுவதை ஏற்க முடியாது என மத்திய பணியாளர் தேர்வாணையம் தெளிவாக கூறியே 3 பேர் பெயர்களையும் பரிந்துரைத்துள்ளது. இதில் மத்திய அரசின் அடாவடி எங்கு வந்தது என்பது புரியவில்லை என்கின்றனர் காவல்துறை அதிகாரிகள். உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் கூட்டம் நடத்தி பட்டியல் அனுப்பிய பிறகு இதில் மத்திய அரசை குற்றம் கூறி பட்டியலை திருப்பி அனுப்பி விளக்கம் கேட்டுள்ளதாக அமைச்சர் கூறியதன் மூலம் புதிய டிஜிபியை நியமிப்பதில் மேலும் தாமதப்படுத்த இந்த உள்வட்ட அதிகாரிகள் பின்னணியில் இருப்பது தெளிவாகிறது.

இந்த அதிகாரிகளின் சுயலாபத்திற்காக டிஜிபி நியமனத்தை கூட முடிவெடுக்க முடியாம தமிழக அரசு திணறும் சூழ்நிலை உருவாக்கி உள்ளது. இதனால் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு ஏற்படும் என்பதை அறிந்தும் இந்த அதிகாரிகள் பிடிவாதமாய் உள்ளனர். தற்போதைய பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமனும் இந்த பதவியில் இருந்து தன்னை விடுவித்தால் போதும். ஜூனியர் டிஜிபி என்பதால் சீனியர் அதிகாரிகள் தனக்கு ஏற்கனவே ஒத்துழைப்பு தருவதில்லை. பொறுப்பு டிஜிபி என கூறி கீழே உள்ள அதிகாரிகளும் ஒத்துழைப்பு தருவதில்லை.

வெறும் டிஜிபி என்ற பதவியை மட்டும் வைத்துக்கொண்டு இதனால் ஏற்படும் பாதிப்புகளுக்கு தான் மட்டுமே பொறுப்பேற்க நேரிடும் என வேதனையில் உள்ளாராம். 2 நாட்களுக்கு முன்பு காவலர் வீரவணக்க நாள் நிகழ்ச்சி டிஜிபி அலுவலகத்தில் நடந்த போது கூட சீனியர் டிஜிபி அதிகாரிகள் ஒதுங்கி நின்று கொண்டனராம். இதனால் நிகழ்ச்சியில் பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமன் ஒரு பதட்டத்துடன் இருப்பதை பார்க்க முடிந்ததாக அங்கிருந்த அதிகாரிகளே கூறுகின்றனர்.

மேலும் மத்திய அரசு தாங்கள் விரும்பு அதிகாரியை நியமிக்க நிர்பந்தம் செய்வதாக அறிக்கையில் அமைச்சர் ரகுபதி குற்றம் சாட்டுவது யாரை? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. குறிப்பிட்ட அதிகாரியை குறிவைத்து உள்வட்ட அதிகாரிகள் கூறிய கருத்துக்களையே சட்ட அமைச்சர் பிரதிபலிக்கிறார். இதன் மூலம் அதிகாரிகளிடையே ஒரு பிளவு ஏற்படும். மேலும் உச்சநீதிமன்றம் இந்த அவமதிப்பு வழக்கை எடுத்து அரசுக்கு எதிராக தீர்ப்பு வழங்கி டிஜிபி நியமனம் நடப்பது அரசுக்கு நல்லதல்ல. இதனால் ஆளும்கட்சிக்கு தான் அவப்பெயரும், சிக்கலும் என்ற புலம்பலும் அதிகம் கேட்கிறது டிஜிபி அலுவலக வட்டாரத்தில். மொத்தத்தில் முக்கிய பதவியான டிஜிபி நியமனத்தில் கூட அதிகாரிகள் கோஷ்டிகளாக செயல்படுவது வெட்டவெளிச்சமாகிவிட்டது.

Comments (0)
Add Comment