– சிவ.செல்லையா-
ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாறுதலில் உச்ச அதிகாரிகளிடையே ஏற்பட்ட மோதல்களால் இம்மாத முதல் வாரமே வரவேண்டிய இடமாறுதல் உத்தரவு தற்போது தாமதமாக வந்துள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் கிசுகிசுக்கிறது….
கொடி கட்டிப்பறக்கும் அதிகாரம்
திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு கடந்த 4 ஆண்டுகளாக எவ்வித தங்கு தடையின்றி நடந்து வருவது என்னவோ ஐஏஎஸ் அதிகாரிகள் டிரான்ஸ்பர் பட்டியல்தான்… காரணம் மேலிடத்தோடு மிகவும் நெருக்கமாக இருப்பதோடு ஆட்சியை நடத்துபவர்களே இவர்கள்தான் என மூத்த அமைச்சர்கள் முதல் பல சீனியர் ஐஏஎஸ் அதிகாரிகள் பொறாமைப்படும் அளவிற்கு குறிப்பிட்ட 5 ஐஏஎஸ் மற்றும் முதல்வர் நிழல் என கூறப்படும் அதிகாரியின் அதிகாரம் கொடிகட்டிப் பறக்கிறதாம்.
பவர் புல் பாண்டவர் குழு
பதவி மாறுதல்கள் உள்ளிட்ட அனைத்து விசயங்களிலும் இவர்கள் கையே ஓங்கி உள்ளது. இந்த பாண்டவர் குழுவில் உச்ச அதிகாரி, முதல்வர் அலுவலக அதிகாரிகள், நிதி தொடர்பான துறை அதிகாரிகள் அடங்குவர். இவர்களை மீறி அமைச்சராக இருந்தாலும், டிஜிபி உள்ளிட்ட காவல் அதிகாரிகளும் முதல்வரை சந்திக்க முடியாது என்பதே கோட்டை வட்டார ஹாட் டாபிக்.
லீக் ஆன திடுக் தகவல்கள்
இதனால் தங்களுக்கு வேண்டப்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகளை முக்கிய துறைக்கும், வேண்டாத அதிகாரிகளை ‘டம்மி’ துறைக்கும் பந்தாடுவது இவர்கள் ஸ்டைல். டிரான்ஸ்பர் சம்பந்தப்பட்ட விசயங்களில் ஒற்றுமையுடன் இருந்து வந்ததால் தொடர்ச்சியாக பல ஐஏஎஸ் இடமாறுதல் பட்டியல்கள் வெளியானது. ஆனால் கடந்த ஒரு மாதமாகவே எதிர்பார்க்கப்பட்ட ஐஏஎஸ் இட மாறுதல் பட்டியல் தாமதமானது ஏன் என கோட்டை வட்டாரத்தில் விசாரித்தபோதுதான் திடுக் தகவல்கள் லீக்கானது..
டிரான்ஸ்பர் பட்டியலை தடுக்கும் பனிப்போர்
தலைமைச் செயலக உச்ச அதிகரிக்கும், முதல்வரின் நம்பிக்கைக்குரிய உதய அதிகாரிக்கும் கடந்த சில மாதங்களாகவே பனிப்போர் இருந்து வந்தது. இந்த போர் இஸ்ரேல், ஈரான் போரைப்போல உக்கிரமடைந்து வருவதாக கூறப்படுகிறது. இதன் எதிரொலியாக பணத்துறைக்கு பொறுப்பானவர் அனுப்பிய சில அதிகாரிகள் பட்டியலை தலைமையானவர் ஏற்க மறுத்து விட்டாராம். இதனால் தனக்கு மிகவும் “வேண்டப்பட்ட அதிகாரிகளை” முக்கிய பதவிகளில் உட்கார வைத்து அழகு பார்க்க விரும்பும் ஐஏஎஸ் அதிகாரி டிரான்ஸ்பர் பட்டியலை தன் செல்வாக்கை பயன்படுத்தி தடுத்தாராம் …
கொந்தளித்த உதயமானவர்
கிட்டத்தட்ட சென்னையைச் சுற்றியுள்ள பல மாவட்ட கலெக்டர்கள் உள்ளிட்ட பல அதிகாரிகளின் டிரான்ஸ்பர் பட்டியல் இவர்களது “அதிகார மோதலால்” தடைபட்டதாம். நாம்தான் இவருக்கு உச்ச அதிகாரியாக்க பரிந்துரைத்தோம். பதவிக்கு வரும்வரை பணிவை காட்டி விட்டு பதவி கிடைத்ததும் நம்மை அலட்சியப்படுத்தி வருகிறாரே என்ற கோபத்தில் உதயமானவர் கொந்தளித்துப் போய் உள்ளாராம். இவர்களது மோதல் எங்குபோய் முடியுமோ என்கின்றனர் ஓரங்கட்டப்பட்ட சீனியர் அதிகாரிகள்..
பட்டியல் தாமதத்துக்கு காரணம்
இதைப்போலவே காவல்துறையிலும் பல முக்கிய இடங்களுக்கான இடமாறுதல் பட்டியலும் நால்வர் அணியிடம் சிக்கித் தவித்து வருகிறதாம்… தான் பதவி ஓய்வில் செல்லும் முன் தனக்கு வேண்டப்பட்ட அதிகாரிகளுக்கு நல்ல பதவிகளை வாங்கிக் கொடுத்துவிட வேண்டும் என உச்ச அதிகாரி பட்டியல் தயாரிக்க இதைத் தடுத்து தங்களுக்கு வேண்டப்பட்ட அதிகாரிகள் பட்டியலை சேர்க்க 3 பேர் அணி தீவிரமாக இருந்ததால் ஜுன் முதல் வாரமே முன் கூட்டியே வரவிருந்த ஐஏஎஸ் டிரான்ஸ்பர் பட்டியல் இன்று 23.06.2025 வௌியாகி உள்ளதாக முனுமுனுக்கின்றனர் கோட்டை வட்டார அதிகாரிகள்…
சாட்டையை சுழற்றுவாரா முதல்வர்
காலுக்கு செருப்பை வாங்காமல் செருப்புக்கு காலை தேடுவதைப் போல நிர்வாக நலனை கருத்தில் கொள்ளாமல் தங்கள் நலனுக்காக அதிகாரிகளை நியமிப்பதால் தடுமாறுவது ஆட்சி நிர்வாகமும், ஆளும்கட்சி நிர்வாகமும்தான்…. முதல்வரோ, துணை முதல்வரோ சாட்டையை சுழட்டினால் மட்டுமே இந்த குழப்பத்துக்கு முற்றுப்புள்ளி ஏற்படும் என்கின்றனர் மூத்த நிர்வாகிகள்….