அரசு உத்­த­ரவு வந்தும் பணியில் சேர அனுமதிக்காத உயர் அதிகாரி: கல­க­லத்த காவல்­து­றை

தமிழக காவல்துறையில் 47 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு பதவி உயர்வு மற்றும் 23 அதிகாரிகளுக்கு இடமாற்றம் என 70 காவல்துறை அதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்ட நிலையில் தனது அனுமதி பெறாமல் துணை ஆணையரை நியமித்துவிட்டதாக ஆவேசமடைந்த உயர் அதிகாரி பணியில் சேரவிடாமல் தடுத்ததோடு, காத்திருப்போர் பட்டியலில் வைத்துவிட்டு பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்களை பதிவு செய்யும் பணிக்கு அனுப்பிய சம்பவம் காவல்துறையில் பெரும் புயலை ஏற்படுத்தி உள்ளது.

சமீ­பத்தில் வெளியான ஐபிஎஸ் டிரான்ஸ்பர் பட்­டி­யலில் தமிழகத்தின் தலைநகரான சென்னைக்கு மாற்றப்பட்ட ஒரு துணை ஆணையர் பழைய பதவியில் இருந்து விடுவிக்கப்பட்ட பிறகும் இதுவரை புதிய பணியிலும் சேர முடியாமல், பழைய இடத்திற்கும் செல்லமுடியாமல் அந்தரத்தில் தவிக்க விடப்பட்­டுள்­ளது காவல்துறையில் பெரும் புயலை கிளப்பிவிட்டது. இந்த எஸ்.பி, அந்தஸ்திலான அதிகாரி பக்கத்துக்கு மாநகரத்தில் கடந்த ஒண்டரை ஆண்டுகளாக பணியாற்றிய நிலையில் மாநகர ஆணையரகத்திற்கு நியமிக்கப்பட்டார். இவருக்கு பதிலாக நியமிக்கப்பட்ட அதிகாரிக்கும், மாநகர உயர் அதிகரிக்கும் கடந்த ஒண்டரை ஆண்டுகளாகவே முட்டல், மோதல் இருந்தாலும் மேலிட முக்கிய பிரமுகருடனான நெருங்கிய நட்பால் இவரை மட்டும் மாநகர உயர் அதிகாரியால் இடமாற்றம் செய்யமுடியவில்லை.

தற்போதைய இடமாறுதலில் மாநகருக்கு அருகில் உள்ள புதிய மாநகர ஆணையரகத்தில் தனக்கு நெருக்கமான முக்கிய மேலிட பிரமுகர் வசிக்கும் பகுதியில் உள்ள துணை ஆணையர் பதவியை பெற்றதோடு உடனடியாக மாநகர பதவியில் இருந்து தன்னை விடுவித்துக்கொண்டார். புதிய மாநகர ஆணையரகத்தில் இருந்து மாநகரத்திற்கு மாற்றப்பட்ட அதிகாரியும் விடுவிக்கப்பட்ட நிலையில் மாநகர உயர் அதிகாரியை நேரில் சந்தித்து புதிய பதவியில் தான் சேர வந்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

தன்னிடம் எந்த அனுமதியோ, ஆலோசனையோ பெறாமல் உங்களை மாநகரத்தின் முக்கிய பகுதிக்கு நியமித்துள்ளார். நான் விரும்பும் அதிகரித்தான் எனக்கு கீழே பணியாற்ற வேண்டும். என்னிடம் கேட்காமல் தலைமை செயலர், உள்துறை செயலாளர், டிஜிபி உள்ளிட்ட அதிகாரிகள் இடமாற்றம் செய்துள்ளதால் உங்களை இங்கு பணியில் சேர அனுமதிக்க மாட்டேன்.

எனவே நீங்கள் சில நாட்கள் காத்திருங்கள். வேறு பகுதிக்கு உங்களுக்கு இடமாற்றம் செய்துவிட்டு புதிய துணை ஆணையரை நியமிக்கிறேன் என கூறி பதவி ஏற்கச் சென்ற அதிகாரியை தடுத்து விட்டாராம். பழைய இடமும் பறிபோய், புதிய பதவியில் சேர முடியாத அதிகாரி தனக்கு நடந்த இந்த சம்பவம் குறித்து காவல்துறைக்கு பொறுப்பான அதிகாரியை நேரில் சந்தித்து குமுறித் தள்ளியுள்ளார். மாநகர அதிகாரி மேலிடத்திற்கு மிகவும் வேண்டப்பட்டவர். அவரை எங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள முடியாது. மேலிடத்தில்தான் நீங்கள் முறையிட்டு பதவியில் சேர முடியும் என பொறுப்பு அதிகாரி தன்னுடைய பொறுப்பை மேலிடத்திற்கு தள்ளி விட்டுவிட்டாராம்.

பொதுவாக அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படும்போது அவர் புதிய பணியில் உடனடியாக சேரவேண்டும். இல்லையேல் பணி நியமனம் தொடர்பான உத்தரவிலேயே காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருப்பதாக உத்தரவு போடப்பட்டிருக்கும். ஆனால் புதிய பதவி ஒதுக்கப்பட்ட பிறகும் தனது விருப்பம் இல்லாமல் நியமிக்கப்பட்டதால் புதிதாக நியமிக்கப்பட்ட அதிகாரியை பணியில் சேரவிடாமல் தடுத்ததோடு மாநகர காத்திருப்போர் பட்டியலில் வைத்துவிட்டு மாநகர ஆணையரகத்திற்கு புகார் கொடுக்க வரும் பிரிவில் பொதுமக்களின் புகார்களை கேட்டு பதிவு செய்து ஆணையருக்கு அனுப்பும் பணியை செய்யும்படி உத்தரவு வந்ததாம்.

எஸ்.பி. அந்தஸ்திலான அதிகாரியை புகார் மனு வாங்கும் பிரிவில் வேலை செய்யும்படி உத்தரவு போட்டு காத்திருப்போர் பட்டியலில் வாய்த்த சம்பவம் காவல்துறையில் பெரும் பூகம்பத்தையே ஏற்படுத்தியுள்­ளது. காத்திருப்பில் வைக்கப்பட்ட அதிகாரியும் தனக்கு வேண்டப்பட்ட அரசியல் பிரமுகர்கள், அதிகாரிகளிடம் தனக்கு நேர்ந்த இந்த அவமானம் குறித்து கதறியுள்ளார்.

அவருக்கு ஆறுதல் கூறிய அதிகாரிகள் பொறுப்பு அதிகாரி மூலம் உள்துறை செயலாளர், தலைமை செயலாளர் ஆகியோருக்கு தகவல் கொடுத்து இந்த துணை ஆணையருக்கு வேறு பதவியாவது வழங்கும்படி பரிந்துரைத்துள்ளனர். ஏற்கனவே நடந்த இட மாறுதலில் காலியாக உள்ள திருச்சி சரகம் மற்றும் 2 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி மாவட்ட அமைச்சர்கள் உதவியோடு தங்கள் இடமாறுதலை தக்கவைத்துக் கொண்ட சில எஸ்.பி.க்கள், டம்மி பதவியில் நியமிக்கப்பட்ட சில எஸ்.பி.க்கள் நெருக்கடியால் புதிய பட்டியலை தயாரிக்க உத்தரவிட்டார். இதன்படி கிட்டத்தட்ட 15 எஸ்.பி.க்கள் மற்றும் டிஐஜிக்கள் இடமாறுதல் பட்டியலை பொறுப்பு உயர் அதிகாரி தயாரித்துள்ளாராம். இந்த பட்டியலை உள்துறை செயலாளர், தலைமை செயலாளர் மற்றும் முதல்வர் அனுமதிபெற்று ஓரிரு நாளில் வெளியிட உள்ளனர்.

பொதுவாக இடமாறுதல் டிஜிபி, உள்துறை செயலாளர், தலைமை செயலாளர், முதல்வரின் செயலாளர் அனுமதி பெற்று வெளியிடப்படுகிறது. சில முடிவுகளை முதல்வர் மற்றும் டிஜிபி, உள்துறை செயலாளர் உத்தரவின்படி தாங்களாகவே சிலரை இடமாறுதல் செய்வது வழக்கம். இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகளை தங்களுக்கு வேண்டாத அதிகாரியாக இருந்தாலும் பணியில் சேர அனுமதிப்பதுதான் உயர் அதிகாரிகளின் வழக்கம்.

ஆனால் கடைசி நேரத்தில் போலீஸ் அகாடமி எஸ்.பி., அடையார் துணை ஆணையர் உள்ளிட்ட 5 எஸ்.பி. அந்தஸ்து அதிகாரிகளின் இடமாறுதல் பட்டியல் சேர்க்கப்பட்டதால் மாநகர ஆணையர்கள் அனுமதி பெறாமல் இடமாறுதல் வழங்கப்பட்டதாம். மற்ற பிரிவுகளுக்கு மாற்றப்பட்ட 4 எஸ்.பி.க்களும் பணியில் உடனடியாக சேர்ந்து விட்ட நிலையில் மாநகருக்கு நியமிக்கப்பட்ட இந்த துணை ஆணையர் மட்டும் பணியில் சேராமல் தவித்து வருவது காவல்துறை அதிகாரிகளை ஒட்டுமொத்தமாக கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளது.

இந்த தகவல்தான் தற்போது காவல்துறை அதிகாரிகளிடையே ஹாட் டாபிக்­காக பேசப்படும் பொருளாகிவிட்டது. இந்த உத்தரவை பிறப்பித்த டிஜிபி, உள்துறை செயலாளர், தலைமை செயலாளர் மற்றும் இறுதியாக கையெழுத்திட்ட முதல்வரை விட இந்த அதிகாரி சர்வ அதிகாரம் கொண்டவராகி விட்டாரே என அனைத்து காவல்துறை அதிகாரிகளும் அதிர்ந்து போய் உள்ளனராம்.

Comments (0)
Add Comment