திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகை திருநாளில் தீபம் ஏற்றம் நீதிமன்றமே அனுமதி கொடுத்த பிறகும் காவல்துறை மூலம் தடுத்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, உச்சநீதிமன்றத்தில் வழக்கு என சென்றுகொண்டிருக்கும் இந்த நேரத்திலும் காவல் நிலையத்திலிருந்து மேளதாளம் முழங்க பால்குடம் எடுத்து கேரள சிங்காரி மேளம் இசைக்க குமார கோயிலுக்கு பொதுப்பணி துறையினர் போலீசாருடன் சேர்ந்து யானை மீது காவடி எடுத்துச்செல்லும் பார்ப்பரிய நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நடந்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் பல ஆண்டுகளாக கேரளாவுடன் இணைந்திருந்து பின்னர் தமிழகத்துடன் இணைந்த மாவட்டமாகும். பல்வேறு போராட்டங்கள் நடத்திய பிறகே இந்த மாவட்டம் தமிழகத்துடன் இணைக்கப்பட்டது. 1956-ம் ஆண்டுதான் கன்னியாகுமரி மாவட்டம் கேரளாவை ஆண்டுவந்த திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்து பிரிக்கப்பட்டு தமிழகத்துடன் இணைக்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்தில் இணைந்து 69 ஆண்டுகளாகியும் இன்னும் கேரளா மாநில பாரம்பரிய முறைப்படி பல்வேறு நடைமுறைகள் செயப்படுத்தப்பட்டு வருகின்றன.
உதாரணமாக கேரளாவில் உள்ள கோயில்களில் பெரும்பாலும் ஆண்கள் சட்டை, பனியன் அணியாமல் வேஷ்டி, சட்டையுடன்தான் கோயிலுக்குள் சென்று வழிபட முடியும். இதே பாரம்பரியம் இன்னும் கன்னியாகுமரியில் உள்ள பெரும்பாலான கோயில்களில் கடைபிடிக்கப்படுகிறது. இதேபோல திருவிதாங்கூர் மன்னர்கள் காலத்தில் நாட்டில் குற்றங்கள் குறைந்து மக்கள் அமைதியாகவும், நிம்மதியாகவும் வாழவும், நீர்வளம் பெருகி விவசாயம் செழிக்க படைவீரர்கள் அரண்மனை அதிகாரிகளுடன் சேர்ந்து ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் கடைசி வெள்ளிக்கிழமை தங்களது பணி இருப்பிடத்திலிருந்த தக்கலை அருகேயுள்ள குமரக்கோயில் வெள்ளிமலை முருகன் கோயிலுக்கு காவடி எடுத்துச்சென்று வழிபடுவது வழக்கம்.
இந்த நடைமுறை தமிழகத்துடன் கன்னியாகுமரி மாவட்டம் இணைந்த பிறகும் தொடர்ச்சியாக தக்கலை காவல் நிலைய போலீசாரால் கடைபிடிக்கப்பட்டு வருகிரது. இதன்படி கார்த்திகை மாத கடைசி வெள்ளிக்கிழமையில் தக்கலை காவல் நிலையை போலீசாரும், பொதுப்பணித்துறை அதிகாரிகளும் தங்களது அலுவலகத்தில் விரதம் இருந்து காவடி கட்டி கேரளா சிங்காரி மேளம், நாதஸ்வரம் இசைக்க யானை மீது பால்குடம் வைத்து போலீசார் மேளதாளங்கள் முழங்க குமரக்கோயிலுக்கு ஊர்வலமாக செல்லும் வைபவம் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட நீதிபதிகள், பொதுப்பணித்துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகளும் பங்குபெறுவர். இந்த ஆண்டும் நீதிபதிகளும், காவல்துறையினரும் காவடி எடுக்கும் நிகழ்ச்சிகளில் பங்குபெற்று நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
சமீபத்தில்தான் மதுரை மாவட்டம் திருப்பரங்குண்டத்தில் உள்ள முருகன் கோயிலில் தீப திருநாளில் கோயிலில் உள்ள தீப தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதிக்க வேண்டும் என வழக்கு தொடர்ந்து நீதிபதியும் அனுமதி வழங்கினார். ஆனால் பல ஆண்டுகளாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள இந்த நடைமுறையை தாங்கள் அனுமதிக்க முடியாது என கூறி கோயில் நிர்வாக அதிகாரிகள் போலீசார் உதவியுடன் தீபம் ஏற்ற வந்தவர்களை தடுத்தி நிறுத்தி விட்டனர்.
இது தொடர்பாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தொடரப்பட்டு தலைமை செயலாளர், சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி ஆகியில் வீடியோ கால் மூலம் நீதிமன்றத்தில் வரும் 16-ம் தேதி ஆஜராக உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதை எதிர்த்து இந்து சமய அறநிலையத்துறை உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கோயிலில் தீபம் ஏற்ற அரசே தடை விதித்துள்ள நிலையில் மாவட்ட நீதிபதிகள், காவல்துறை அதிகாரிகள், பொதுப்பணி துறை அதிகாரிகள் இணைத்து காவல் நிலையத்தில் இருந்து காவடி எடுத்து முருகன் கோயிலுக்கு செல்லும் வைபவம் சிறப்பாக நடந்தது முருக பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.