தனது அனுமதி பெறாமல் மாநகர எல்லைக்குள் துணை ஆணையர் நியமிக்கப்பட்டதால் பணியில் சேரவிடாமல் தடுத்த விவகாரம் பெரிதானதால் பணியில் சேர அனுமதி வழங்கிவிட்டு அரசு பிறப்பித்த உத்தரவுக்கு மாறாக பணியாளர் நலன் மற்றும் பாதுகாப்பு பிரிவுகளுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கி மாநகர ஆணையர் பிறப்பித்துள்ள உத்தரவால் மாநகர காவல்துறை அதிகாரிகள் மட்டுமின்றி தமிழக காவல்துறையில் பணியாற்றும் அனைத்து அதிகாரிகளும் மாநகர ஆணையரின் “துணிச்சலை ” பார்த்து வியந்து போய் உள்ளனர்.
இதே மாநகரில் ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி கொடுக்கப்பட்ட மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மாதக்கணக்கில் கிடப்பில் போட்டு பணியில் அலட்சியமாக இருந்த துணை ஆணையருக்கு பதில் என்ன நடவடிக்கை எடுக்கவேண்டும் என தொடர்ச்சியாக கடிதம் எழுதிய சட்டம் ஒழுங்கு உதவி ஆய்வாளரை நீதிமன்றத்தை திருப்திப்படுத்த காத்திருப்போர் பட்டியலில் வைத்துள்ள சம்பவமும் மாநகர காவல்துறையினரை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. அதிகாரிகள் செய்யும் தவறுக்கு தங்களைப்போல் கீழ்மட்டத்தில் ஒழுங்காக பணியாற்றும் அதிகாரிகளை பழிவாங்குவது என் என புலம்பல் அதிகமாகவே கேட்கிறதாம்.
தமிழக காவல்துறையில் பணியாற்றும் 70 எஸ்.பி.க்கள் முதல் டிஜிபி அந்தஸ்து வரையிலான காவல்துறை அதிகாரிகளுக்கு கடந்த டிசம்பர் மாதம் 30-ம் தேதியன்று இடமாறுதல் செய்து தமிழக உள்துறை செயலாளர் உத்தரவு பிறப்பித்தார். வழக்கமாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் உத்தரவு பகலில் வெளியாகும் நிலையில் ஐ.பி.எஸ். அதிகாரிகளின் இடமாறுதல் பட்டியல் மற்றும் இரவு 11 மணிக்குத்தான் உள்துறையால் வெளியிடப்பட்டது.
காரணம் பட்டியல் இறுதி செய்யப்பட்ட பிறகும் மாவட்ட அமைச்சர்கள் மற்றும் மேலிடத்தின் பரிந்துரையால் பலருக்கு பதவி மாற்றமும், மாற்றப்பட்ட சிலருக்கு இடமாறுதலை நிறுத்தியும் வைத்ததால் பட்டியல் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டதாக உள்துறை அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஒருவழியாக பட்டியல் வெளியாகி இடமாறுதல் செய்யப்பட்ட 70 பேரில் 69 காவல்துறை அதிகாரிகளும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் டிசம்பர் 31 மற்றும் ஜனவரி முதல் தேதிகளில் பொறுப்பேற்றுக்கொண்டனர். ஆனால் சென்னைக்கு அருகேயுள்ள மாநகரில் பணியாற்றி சென்னை மாநகரில் உள்ள முக்கிய பகுதிக்கு மாற்றப்பட்ட துணை ஆணையர் மட்டும் பதவி ஏற்கவில்லை.
தன்னிடம் ஆலோசனை நடத்தாமல், தன்னுடைய விருப்பம் இல்லாமல் உள்துறை செயலாளர் உத்தரவு போட்டுள்ளதால் புதிய பணியிடத்தில் சேர அனுமதிக்க முடியாது என மாநகர உயர் அதிகாரி கூறியதால் பணியில் சேர வந்த அதிகாரி தவித்துப்போனார். டிஜிபி, உள்துறை செயலாளரிடம் முறையிட்டும் இந்த அதிகாரிக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் பணியில் சேர அனுமதிக்க மறுத்துவிட்டார் மாநகர அதிகாரி.
இந்த பிரச்சினை காவல்துறை அதிகாரிகள் மத்தியில் தீயாக பரவியது. துணை ஆணையர் அந்தஸ்தில் உள்ள அதிகாரிக்கு குறிப்பிட்ட இடத்தில பணியிடம் வழங்க முதல்வர் அனுமதி பெற்று உள்துறை செயலாளர் கையெழுத்திட்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பிறகும் தன்னை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் பணியில் சேர அனுமதிக்க முடியாது என மாநகர உயர் அதிகாரி பிடிவாதமாக இருப்பதாக தகவல் வெளியானதோடு, நமது நியூஸ் நவ் சானலிலும் செய்தி விரிவாக வெளியிடப்பட்டது.
இதனால் மேலிடத்தில் இருந்தும், தலைமை செயலாளர், உள்துறை செயலாளர் ஆகியோர் விளக்கம் கேட்டதால் அவசரமாக மாநகர பணியில் சேர அனுமதித்து விட்டு அவருக்கு ஒதுக்கப்பட்டிருந்த இடத்தில் பணியில் சேரவிடாமல் மாநகரில் காலியாக இருந்த பணியாளர் நலன் மற்றும் பாதுகாப்பு பிரிவு துணை ஆணையராக கூடுதல் பொறுப்பு வழங்கப்படுவதாக மாநகர அதிகாரி தனி உத்தரவை பிறப்பித்து உடனே பணியில் சேரவேண்டும் என உத்தரவு பிறப்பித்தார்.
உயர் அதிகாரியின் உத்தரவை மீறமுடியாமல் துணை ஆணையரும் இந்த பணியில் சேர்ந்தார். ஆனால் உள்துறை செயலாளர் பிறப்பித்த உத்தரவை மாநகர அதிகாரி செயல்படுத்தாமல் அந்த இடத்தை இன்னும் காலியாக வைத்துவிட்டு தான் கூறும் அதிகாரியை நியமித்தால் மட்டுமே காலிப்பணியிடத்தை நிரப்புவேன் என பிடிவாதமாக உள்ளாராம். இவரது துணிச்சலை கண்டு உயர் அதிகாரிகளே ஆச்சர்யப்படுகின்றனராம்.
இதேபோல மாநகரில் உள்ள பூவின் பெயர் கொண்ட வர்த்தக பகுதியில் உயர்நீதிமன்றத்திற்கு எதிரே உள்ள மெயின் ரோட்டில் ஏராளமான ஆக்கிரமிப்புகள் உள்ளன. அனுமதி பெறாமல் ரோட்டிலேயே கடைகளை வைத்தும், சரக்குகளை இறக்கிவைத்தும் பல வியாபாரிகள் வியாபாரம் செய்கின்றனர். இதனால் பொதுமக்கள் ரோட்டின் மீதே நடந்துசெல்ல முடியவில்லை. எனவே இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும் என கே.கே. நகரை சேர்ந்த பிரமிளா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் 2017-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார்.
இதன்படி ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி கடந்த ஆண்டு மார்ச் மாதம் சென்னை உயர்நீதிமன்றம் சென்னை மாநகர அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தது. ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி வடக்கு காவல்நிலைய ஆய்வாளர் விஜயகாந்த் என்பவர் தனது உயர் அதிகாரிகளான உதவி ஆணையர், துணை ஆணையர் ஆகியோருக்கு கடிதம் எழுதி உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்த தனக்கு அனுமதி வழங்கும்படி கேட்டுக்கொண்டார். ஆக்கிரமிப்பை அகற்ற பூக்கடை துணை ஆணையர்தான் அனுமதி வழங்க வேண்டும். ஆனால் உயர்நீதிமன்ற உத்தரவை கண்டுகொள்ளாமல் துணை ஆணையர் அலட்சியமாக விட்டுவிட்டதாக கூறப்படுகிறது.
உயர்நீதிமன்ற உத்தரவை மாநகர அதிகாரிகள் செயல்படுத்தவில்லை என கூறி நீதிமன்ற அவமதிப்பு வழக்கை பிரமிளா மீண்டும் உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்தார். இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி நீதிபதிகள் சுப்பிரமணியன், குமரப்பன் அடங்கிய பெஞ்ச் உத்தரவு பிறப்பித்தது. இதன்படி மாநகராட்சி சார்பில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், தாங்கள் ஆக்கிரமிப்பை அகற்ற பாதுகாப்பு வழங்கும்படி கடற்கரை காவல்நிலையத்திற்கு பலமுறை கடிதம் எழுதியும் பாதுகாப்பு வழங்க காவல்துறை ஒத்துழைக்கவில்லை.
இதனால்தான் ஆக்கிரமிப்புகளை அகற்றமுடியவில்லை என மாநகராட்சி ஆணையர் சார்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது. உடனே சென்னை மாநகர காவல் ஆணையர் பதில்மனு தாக்கல் செய்யும்படி உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். உயர்நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாத காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து அது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யும்படி நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.
இந்த வழக்கு 2 நாட்களுக்கு முன்பு நீதிமன்றம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சம்பந்தப்பட்ட காவல்நிலைய ஆய்வாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுவிட்டதாகவும் காவல்துறை சார்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது. இதுகுறித்து காவல்துறை அதிகாரிகளிடம் விசாரித்தபோது, நீதிமன்ற உத்தரவின்படி ஆக்கிரமிப்புகளை அகற்ற தனக்கு அனுமதி வழங்கும்படி வடக்கு கடற்கரை ஆய்வாளர் விஜய்காந்த் 3 மாதத்திற்கு முன்பே துணை ஆணையருக்கு கடிதம் அனுப்பியிருந்தார்.
இதுகுறித்து பல நினைவூட்டு கடிதம் அனுப்பியும் துணை ஆணையர் இதற்கான உத்தரவை வழங்காமல் இருந்துவிட்டார். ஆனால் நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு வந்ததும் அவசரமாக அனுமதி வழங்கிய துணை ஆணையர், இந்த உத்தரவை முறையாக கடைபிடிக்கவில்லை என கூறி வடக்கு கடற்கரை காவல் நிலைய ஆய்வாளர் விஜயகாந்தை காத்திருப்போர் பட்டியலில் வைக்கும்படி ஆணையருக்கு பரிந்துரைத்துள்ளனர். இதனால் ஆய்வாளர் விஜயகாந்த் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுவிட்டார்.
ஆய்வாளர் முறையாக அனுமதி கேட்டு பலமுறை கடிதம் அனுப்பியும் அதை அலட்சியமாக விட்டுவிட்டு நீதிமன்ற உத்தரவால் தனக்கு எந்த பிரச்சினையும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக ஆய்வாளரை காத்திருப்போர் பட்டியலில் வைத்து பலி கொடுத்து விட்டார் துணை ஆணையர். உயர் அதிகாரிகள் செய்த தவறுக்கு காவல் ஆய்வாளரை பலிகொடுத்து ஏன் என குமுறல் கேட்கிறது மாநகரத்தில் பணியாற்றும் சக ஆய்வாளர்களால் உயர் அதிகாரிகள் உரிய நேரத்தில் அனுமதி வழங்கி இருந்தால் இந்த பிரச்சினையே எழுந்திருக்காது.
ஆனால் தங்கள் மேலதிகாரிகளிடம் கேட்டு சொல்வதாக கூறி எந்த அனுமதியும் தராமல் பிரச்சினை ஏற்படும்போது கீழே பணியாற்றும் அதிகாரிகளை தண்டனையில் சிக்க வைத்துவிட்டு உயர் அதிகாரிகள் தப்பித்துக்கொள்கின்றனர். காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ள காவல் ஆய்வாளர் விஜயகாந்திற்கு எப்போது புதிதாக டம்மி பதவி வழங்கப்படுமா என்பதுகூட தெரியாது. ஒழுங்காக பணியாற்றியும் ஆய்வாளர் தண்டனை பெற்று அடுத்த பதவி உயர்வுக்கும் சிக்கலை ஏற்படுத்திவிட்டு தான் மட்டும் தப்பிக்கொண்ட துணை ஆணையர் செயலால் காவல் ஆய்வாளர்கள் கொந்தளித்துபோய் உள்ளனர். இதுகுறித்து உளவுத்துறை மூலம் உரிய விசாரணை நடத்தி ஆய்வாளர் மீதான தண்டனையை ரத்துசெய்ய வேண்டும் எனவும் காவல் ஆய்வாளர்கள் ஆணையருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். பாவம் ஒரு பக்கம்…. பழி ஒரு பக்கம் என்பது பழமொழி. இது இந்த பிரச்சினைக்கும் பொருந்துமோ….