டி.எஸ்.பி. கைது: எஸ்.பி.க்கு கண்டனம்: முதன்மை நீதிபதியின் “அதிரடி”யால் பீதி

எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில் கைது செய்ய நடவடிக்கை எடுக்காத காஞ்சிபுரம் டிஎஸ்பியை கோர்ட் வளாகத்திலேயே கைது செய்ய மாவட்ட முதன்மை நீதிபதி உத்தரவிட்டு கைது செய்ய வைத்தார். அதோடு இந்த வழக்கை கண்காணிக்க வேண்டிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷண்முகம் தனது பணியை செய்யாமல் அலட்சியப்படுத்தி உள்ளார் என காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை நீதிபதி செம்மல் குற்றம் சாட்டியுள்ள சம்பவம் காவல்துறை அதிகாரிகளிடையே பீதியை ஏற்படுத்திவிட்டது.

தினமும் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம், வீடியோ கான்பரன்ஸ் கூட்டம் நடத்தி பலமணி நேரத்தை கடத்தும் உயர் அதிகாரிகள் வெறுமனே கூட்டம் மட்டுமே நடத்துகின்றனர். இவர்கள் மக்கள் பிரச்சினைகளுக்கோ, நீதிமன்ற உத்தரவையோ மதிப்பதில்லை. இதன் எதிரொலியே மாவட்ட முதன்மை நீதிபதியின் அதிரடி நடவடிக்கை. இந்த நடவடிக்கையால் ஒட்டுமொத்த காவல்துறையும் தலை குனியும் அவலம் ஏற்பட்டுள்ளது. இந்த அவலத்திற்கு யார் பொறுப்பேற்க போகிறார்கள் என்ற பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் நாதம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சிவகுமார். இவர் வாலாஜாபாத் அருகேயுள்ள பூசைவாக்கம் கிராமத்தில் டீ மற்றும் பேக்கரி கடை நடத்தி வருகிறார். இந்த கடைக்கு ஜூலை மாத இறுதியில் பூசைவாக்கம் கிராமத்தை சேர்ந்த முருகன் என்பவர் கேக் வாங்கி சாப்பிட்டுள்ளார். கேக் நன்றாக இல்லை என முருகன் கடை உரிமையாளர் சிவகுமாரிடம் சத்தம் போட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றி கைகலப்பாகி ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.

இதுகுறித்து சிவகுமார் தனது மருமகனான போலீஸ்காரர் லோகேஷிடம் கூறியுள்ளார். தான் போலீஸ்காரர் என்ற கெத்தில் முருகனிடம் சென்று லோகேஷை மிரட்டியுள்ளார். இதை தட்டிக்கேட்ட முருகனின் மனைவியிடமும் லோகேசும், உடன் சென்றவர்களும் தகராறு செய்துள்ளனர். இந்த தகராறு குறித்து முருகனின் மனைவி பார்வதி வாலாஜாபாத் காவல் நிலையத்தில் சிவகுமார், லோகேஷ் உள்ளிட்ட 5 பேர் மீது தன்னை ஜாதி பெயரை கூறி திட்டியதாகவும், தாக்க முயன்றதாகவும் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் வாலாஜாபாத் போலீசார் சிவகுமார், போலீஸ்காரர் லோகேஷ் உள்ளிட்ட 5 பேர் மீது எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். பேக்கரி உரிமையாளர் சிவகுமார் கொடுத்த புகாரின் பேரில் முருகன் மீதும் வழக்கு பதிவுசெய்தனர்.

வழக்கு பதிவு செய்திருந்தாலும் சக போலீஸ்காரர் லோகேஷ் மற்றும் அவரது மாமனார் உள்ளிட்டோர் மீதான வழக்கு என்பதால் இவர்களை கைது செய்ய வாலாஜாபாத் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் முதல்வர் மற்றும் நீதிமன்றங்களுக்கு முருகன் மனைவி பார்வதி புகார் மனுக்களை அனுப்பியிருந்தார். காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி செம்மல் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரித்தார். இந்த வழக்கில் குற்றவாளிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? எஸ்.சி., எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் புகார்மனுவை சம்பந்தப்பட்ட சரக டி.எஸ்.பி. நேரடியாக விசாரித்த பிறகே வழக்கு பதிவு செய்ய முடியும். அப்படி காஞ்சிபுரம் சப் -டிவிசன் டிஎஸ்பி சங்கர்கணேஷ் விசாரணை நடத்தி அனுமதி கொடுத்துள்ளார்.

இதன் பிறகும் சம்பந்தப்பட்ட 5 பேரையும் கைது செய்யாதது ஏன்? இந்த வழக்கை வாலாஜாபாத் இன்ஸ்பெக்டர் விசாரிக்காமல் டிஎஸ்பி சங்கர் கணேஷ் நேரடியாக விசாரித்து 5 போரையும் உடனே கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதன்மை நீதிபதி செம்மல் உத்தரவிட்டிருந்தார்.

இதன் பிறகும் குற்றவாளிகளை கைது செய்ய டி.எஸ்.பி. சங்கர் கணேஷ் நடவடிக்கை எடுக்காமல் மெத்தனம் காட்டியுள்ளார். இதனால் கோபமடைந்த முதன்மை நீதிபதி செம்மல் இந்த வழக்கு தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் ஆஜராகும்படி உத்தரவு பிறப்பித்தார்.

இதன்படி டி.எஸ்.பி. சங்கர் கணேஷ் நீதிமன்றத்தில் ஆஜனானார். அப்போது முதன்மை நீதிபதி செம்மல் நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கை விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி டி.எஸ்.பி. சங்கர் கணேஷிற்கு உத்தரவு பிறப்பித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வழக்கில் புகாரளித்த பெண் கல்வி அறிவு இல்லாதவர். வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களை கைது செய்யவோ, உத்தரவு நகலை வழங்கவோ டி.எஸ்.பி. சங்கர் கணேஷ் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே டி.எஸ்.பி. சங்கர் கணேஷ் தனது கடமையை புறக்கணித்துள்ளார். இவர் வேண்டுமென்ற நீதிமன்ற உத்தரவையும் மதிக்காமல் இருந்துள்ளார்.

இந்த வழக்கை கண்காணித்து நடவடிக்கை எடுத்திருக்க வேண்டிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷண்முகம் இதுவரை நீதிமன்றத்தின் உத்தரவை மறுஆய்வுகூட செய்யவில்லை. இந்த வழக்கின் மீது எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கண்காணிக்கவில்லை. புகார் மனு கொடுத்து 27 நாட்களுக்கு பிறகுதான் வழக்கில் எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் 20-ம் தேதி சிவகுமார் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட பிறகு இந்த நாள்வரை குற்றவாளிகளை கைது செய்யவில்லை. வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவரை பாதுகாக்கவும், தடுப்பு மற்றும் தண்டனை நடவடிக்கைகள் வழங்கவும் உடனடியாக எஸ்.பி. நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்ட டி.எஸ்.பி. சங்கர் கணேஷ் இந்த நீதிமன்றத்தில் ஏற்கனவே ஆஜரானார். வழக்கில் நடவடிக்கை எடுக்கும்படி நீதிமன்றம் பலமுறை எச்சரித்தும் எந்த நிலை அறிக்கையையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை. எனவே தன்னுடைய கடமையை செய்ய தவறிய டி.எஸ்.பி. சங்கர் கணேஷை கைது செய்து நீதிமன்ற காவலில் வைக்க வேண்டும் என்ற அதிரடி உத்தரவை பிறப்பித்தார்.

நீதிபதியின் இந்த உத்தரவை கேட்டதும் நீதிமன்றமே ஒரு நிமிடம் ஸ்தம்பித்துபோனது. நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் ஆஜராக வந்த வாலாஜாபாத் போலீசாரும், டி.எஸ்.பி. சங்கர் கணேஷும் செய்வதறியாது திகைத்துப்போயினர். நீதிபதி டி.எஸ்.பி.யை கைது செய்ய உத்தரவிட்ட போதும் அவரை கைது செய்ய நீதிமன்றத்தில் இருந்த போலீசார் முன்வரவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த நீதிபதி செம்மல் டி.எஸ்.பி.யை கைது செய்து காஞ்சிபுரம் கிளை சிறையில் அடைக்கும்படியும், அவரை கைது செய்து தன்னுடைய காரிலேயே சிறைக்கு அழைத்து செல்லும்படியும் நீதிமன்ற ஊழியர்களுக்கு உத்தரவிட்டார். இதன்படி நீதிமன்ற ஊழியர்கள் டி.எஸ்.பி. சங்கர் கணேஷை கைது செய்து நீதிபதியின் காரில் காஞ்சிபுரம் கிளை சிறைக்கு அழைத்துச்சென்றனர்.

டி.எஸ்.பி.யை நீதிமன்ற ஊழியர்கள் கைது செய்து சிறையில் அடைக்க கொண்டுசெல்வதாக மாவட்டம் முழுவதும் உள்ள போலீசாருக்கு தகவல் பறந்தது. இதனால் பதட்டமடைந்த ஏராளமான போலீசார் காஞ்சிபுரம் கிளை சிறை அருகே குவிந்துவிட்டனர். நீதிபதி காரில் சீருடையுடன் அழைத்துவரப்பட்ட சங்கர் கணேஷை சிறைக்குள் அழைத்துச்செல்ல எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது கார் அருகே நின்றுகொண்டிருந்த டி.எஸ்.பி. சங்கர் கணேஷ் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தன்னுடைய ஜீப்பிற்கு ஓட்டமெடுத்தார். இவரை தொடர்ந்து போலீசாரும் ஓடிய நிலையில் டி.எஸ்.பி. தன்னுடைய ஜீப்பில் ஏறி வேகமாக சென்றுவிட்டார்.

இதனால் டி.எஸ்.பி. ஜீப்பில் ஏறி தப்பி சென்றுவிட்டதாக பெரும் பரபரப்பு ஏற்பட்டது. டி.எஸ்.பி. சங்கர் கணேஷ் ஜீப்பில் ஏறி தப்பி சென்றுவிட்டதாக நீதிபதி செம்மலுக்கு கோர்ட் ஊழியர்கள் தகவல் கொடுத்தனர். உடனே நீதிபதி செம்மல் உயர் காவல் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்ததுடன் டி.எஸ்.பி. சிறைச்சாலைக்கு வராவிட்டால் வேறுவிதமான கடும் நடவடிக்கை எடுக்க நேரிடும் என எச்சரித்ததாக கூறப்படுகிறது. ஒருமணி நேரம் கழித்து டி.எஸ்.பி. சங்கர் கணேஷ் மீண்டும் சிறைச்சாலை வளாகத்திற்கு வந்தார்.

டி.எஸ்.பி. சங்கர் கணேஷை மருத்துமனைக்கு கோர்ட் ஊழியர்கள் அழைத்துச்சென்று பரிசோதனை செய்துவிட்டு மீண்டும் கிளை சிறைச்சாலைக்கு அழைத்து வந்து சிறையில் அடைக்க நடவடிக்கை எடுத்தனர். வழக்கில் நடவடிக்கை எடுக்காமல் மெத்தனம் காட்டியதால் நேரடியாக டி.எஸ்.பி. தேர்வுபெற்ற சங்கர் கணேஷ் சீருடையுடன் கைதாகி சிறைக்கு செல்லவேண்டிய அவலம் ஏற்பட்டுவிட்டது. இது காவல்துறைக்கே பெரும் அவமானம் என காவலர்கள் கடும் மனவேதனை அடைந்தனர். இதுபோன்ற சம்பவங்களுக்கு உயர் அதிகாரிகளும் பொறுப்பேற்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யும்போது அதை மாவட்ட கண்காணிப்பாளர்தான் கண்காணித்து உடனடியாக கைதுசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றவாளிகளை கைதுசெய்யும்படி நீதிபதி உத்தரவிட்டும் நடவடிக்கை எடுக்காதது குறித்து நீதிபதி செம்மல் மீண்டும் உத்தரவு பிறப்பித்த பிறகும் குற்றவாளிகளை கைதுசெய்யாமல் வெறுமனே நீதிமன்றத்தில் ஆஜராக டி.எஸ்.பி. சென்றுள்ளார்.

பொதுவாக எஸ்.சி., எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தை கண்காணித்து வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தர மாநில மனித உரிமை ஆணையத்தில் ஐ.ஜி. நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இதுபோன்ற வழக்குகளை மட்டுமே கண்காணித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க மாவட்ட எஸ்.பி. மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். ஆனால் மனித உரிமை ஆணைய ஐ.ஜி. சாமுண்டீஸ்வரி இந்த வழக்கை ஆய்வு செய்யாமல் அலட்சியமாக இருந்ததே டி.எஸ்.பி. கைது செய்யும் நிலைக்கு உள்ளாகி உள்ளது. இதேபோல மாவட்ட கண்காணிப்பாளர் ஷண்முகம், சரக டி.ஐ.ஜி. தேவாரணி, மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் உள்ளிட்டோரும் இதுபோன்ற வழக்குகள் குறித்து உடனுக்குடன் ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். முதன்மை நீதிபதி கண்டனம் தெரிவித்த பிறகும் இந்த உயர் அதிகாரிகள் கண்டுகொள்ளாததன் விளைவுதான் நேரடி டி.எஸ்.பி. சிறைக்கு செல்ல வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது.

பொதுவாக காஞ்சிபுரம் மாவட்ட கண்காணிப்பாளர் மற்றும் அதிகாரிகள் மீது கடந்த 2 ஆண்டுகளாகவே பல்வேறு குற்றசாட்டுகள் எழுந்தன. சாம்சங் தொழிற்சாலையில் தொழிற்சங்கம் அமைப்பது தொடர்பாக கம்யூனிஸ்ட் தொழிற்சங்கங்கள் மாதக்கணக்கில் போராட்டம் நடத்தி முற்றுகை நடத்தினர். இதனால் ஒருகட்டத்தில் தங்கள் தொழிற்சாலையை வேறு மாநிலத்திற்கு இடமாற்றம் செய்ய சாம்சங் நிர்வாகம் முடிவெடுத்தது. நீதிமன்ற தலையீட்டுக்கு பிறகே இந்த பிரச்சினை முடிவுக்கு வந்தது. இந்த பிரச்சினையை அப்போதைய ஸ்ரீபெரும்புதூர் டி.எஸ் .பி., மாவட்ட எஸ்.பி. உள்ளிட்ட யாருமே ஒழுங்காக கையாளவில்லை என சாம்சங் நிர்வாகம் குற்றம்சாட்டியது. ஆனால் மாவட்ட கண்காணிப்பாளருக்கு மேலிட அதிகாரி மிகவும் நெருக்க என்பதால் அவர்மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததோடு, அவரை இடமாற்றம்கூட செய்யாமல் இன்றுவரை பாதுகாத்து வருகின்றனர். எஸ்.பி.யிடம் நேரடியாக தரப்படும் பொதுமக்களின் புகார் மனுக்கள் மீது கூட மாவட்டத்தில் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. இதை எஸ்.பி.யும் கண்காணிப்பதில்லை என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்தது.

தினமும் வீடியோ கான்பரன்ஸ், வாரம்தோறும் மாவட்ட அதிகாரிகள் கூட்டம் நடத்தும் டிஜிபி அலுவலக உயர் அதிகாரிகளும் வெறுமனே கூட்டம் நடத்தி சில ஆலோசனைகளை கூறிவிட்டு அப்படியே விட்டுவிடுவதன் பலன்தான் இப்போது டி.எஸ்.பி. கைதுவரை சென்றுள்ளது என குற்றசாட்டு எழுந்துள்ளது. நீதிபதியின் இந்த அதிரடி நடவடிக்கை தமிழகம் முழுவதும் காவல்துறையினரிடையே கடும் பீதியை ஏற்படுத்திவிட்டது. இனியாவது வழக்குகளை உடனுக்குடன் தீர்க்கவும், பணியில் செயல்படாத மாவட்ட கண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் மீது உடனுக்குடன் நடவடிக்கையும் எடுப்பார்களா?

Comments (0)
Add Comment