சிவ செல்லையா
சப் இன்ஸ்பெக்டர்கள் தேர்வில் முறைகேடாக பணியில் சேர்ந்தவர்கள் மீதான லஞ்ச ஒழிப்பு துறையின் கிரிமினல் வழக்கில் வழக்கு ஆவணங்களை காணவில்லை என நீதிமன்றத்தில் அரசு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்ட சம்பவம் காவல் துறையில் பேரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் சம்பந்தப்பட்ட துறையில் பணியாற்றி வருவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இவர்களுக்கு நடத்தப்பட்ட தேர்வில் பலருக்கு கூடுதல் மார்க்குகளை தேர்வு கமிட்டி அதிகாரிகள் வழங்கி முறைகேட்டில் ஈடுபட்டதாக வழக்கு தொடர்ந்தனர். இதில் முறைகேடு நடந்திருப்பதாக 2002 -ம் ஆண்டு லஞ்ச ஒழிப்பு துறையும் போர்டு உறுப்பினர்களான காவல் துறை அதிகாரிகள் மீது வழக்கு தொடர்ந்ததால் அடிப்படையில் தேர்வுகுழு உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
மேலும் முறைகேடாக தேர்வு செய்யப்பட்டவர்களை டிஸ்மிஸ் செய்யும்படி கோர்ட் அதிரடி உத்தரவையும் பிறப்பித்தது. ஆனால் இவர்கள் பலரும் பணியில் சேர்ந்து பல ஆண்டுகளாகி விட்டதால் இவர்களது குடும்ப நலன் கருதி பணியில் தொடர அனுமதிக்க வேண்டும். இவர்கள் மீதான வழக்கை அரசு தொடர்ந்து நடத்தும் என தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ததால் கருணை அடிப்படையில் மோசடி செய்து பணியில் சேர்ந்தவர்கள் பணியில் தொடரவும், இவர்கள் மீதான மோசடி வழக்கை விரைந்து விசாரித்து தண்டனை வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாகியும் லஞ்ச ஒழிப்பு துறை தொடர்ந்த வழக்கு இன்னும் முழு விசாரணை நடத்தப்படாமல் தவறு செய்தவர்களை காப்பாற்றும் வகையில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் செயல்படுவதாக ஏற்கனவே குற்றச்சாட்டு உள்ளது.
இந்த வழக்கு கடந்த வாரம் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. கிரிமினல் வழக்கின் நிலை என்ன என்பது குறித்து ஐகோர்ட் நீதிபதி அரசு தலைமை வழக்கறிஞரிடம் கேட்டுள்ளார். அப்போது லஞ்ச ஒழிப்புத்துறை தனக்கு அளித்த அறிக்கையை படித்த அரசு வழக்குறைஞர் சம்பந்தப்பட்ட வழக்குகளின் ஆவணங்கள் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் இருந்து மாயமாகிவிட்டதாகவும், இதுகுறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் கூறியதைக் கேட்டு கோர்ட் வளாகமே அதிர்ச்சி அடைந்தது. காரணம் முன்னாள் முதல்வர்கள், முன்னாள், இன்னாள் அமைச்சர்களின் பல ஊழல் வழக்குகளை விசாரித்துவரும் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் இருந்து காவல்துறையில் நடத்தப் பட்ட தேர்வில் நடந்த முறைகேட்டில் தொடர்புடையவர்கள் தொடர்பான வழக்கு ஆவணங்கள் எப்படி மாயமானது? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
இதுபற்றி காவல்துறை வட்டாரத்தில் விசாரித்தபோது கிடைத்த அதிர்ச்சி தகவல். இந்த வழக்கில் மோசடி செய்து எஸ்.ஐ.க்களாக தேர்வானதாக குற்றம்சாட்டப்பட்டு அரசின் கருணையால் மீண்டும் பணியில் தொடர்பவர்களில் அனைவரும் தற்போது பதவி உயர்வில் காவல்துறையின் பல்வேறு பிரிவில் இன்ஸ்பெக்டர்களாக பணியாற்றி வருகின்றனர்.
குறிப்பாக வழக்கை விசாரித்து வரும் லஞ்ச ஒழிப்புத் துறையிலேயே கிட்டத்தட்ட 10 பேர் இன்ஸ்பெக்டர்களாக சென்னை லஞ்சஒழிப்புத்துறை தலைமை அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் பணியாற்றி வருகின்றனர். பாலுக்கு பூனையை காவல் வைப்பதைப்போல லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்திலேயே பணியாற்றுவதால் தங்கள் மீதான குற்ற வழக்கை நடத்த எவ்வாறு ஒத்துழைப்பு வழங்குவார்கள். மிகவும் பாதுகாப்பான லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் இருந்து இவர்கள் சம்பந்தப்பட்ட ஆவணங்கள் காணாமல் போயிருப்பதாக கூறப்படுவதில் பெரும் சந்தேகம் எழுந்துள்ளது. எனவே இந்த வழக்கை சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்கின்றனர்.
கடந்த திமுக ஆட்சியில் ஊழல் வழக்கில் சிக்கியவரை காப்பாற்றும்படி அப்போதைய பெண் அமைச்சர் அதிகாரிகளிடம் பரிந்நுரைத்த போன் கால் ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பானதைப் போல லஞ்ச ஒழிப்பில் பணியாற்றும் ஆய்வாளர்கள் மீதான ஆவணங்கள் மட்டும் காணாமல் போயிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது….