தேங்காய் எண்ணெயில் கலப்படம் செய்து குறைந்த விலைக்கு விற்பனை செய்த திமுக பேரூராட்சி தலைவியின் கணவருக்கு சொந்தமான எண்ணெய் ஆலைக்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். செக்கு தேங்காய் எண்ணையை ஆய்வுக்கு அனுப்பியதில் மாமிச கொழுப்பு மற்றும் பாமாயில் கலப்படம் செய்து விற்பனை செய்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சுத்தமான எண்ணெய் என நம்பி பயன்படுத்துவோர் இதனால் பீதியில் உள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளாக கடைகளில் விற்பனை செய்யப்படும் நல்லெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் ஆகியவற்றுக்கு பதிலாக பண்டைய காலத்தைப்போல செக்கு இயந்திரத்தில் ஆட்டப்படும் எண்ணையை இயற்கையானது, ஆரோக்கியமானது என நம்பி பலரும் வாங்கி பயன்படுத்த தொடங்கி உள்ளனர். கடந்த காலங்களில் மாடுகளை பயன்படுத்தி மரத்தாலான செக்கு இயந்திரம் மூலம் பருப்பு வகைகள், தேங்காய் உள்ளிட்டவைகளை அரைத்து சுத்தமான எண்ணெயால் உணவு பதார்த்தங்களும், உணவுகளும் தயாரிக்கப்பட்டது. ஆனால் இயந்திரங்கள் மூலம் இவை அரைக்கப்பட்ட பாக்கெட்டுகளில் பயன்பாட்டுக்கு வந்த பிறந்து இந்த மர செக்கு கருவிகள் பயன்பாடு முற்றிலும் நின்று போனது. ஆனால் இந்த மாற செக்கு கருவிகள் மூலம் தயாரிக்கப்படும் எண்ணெய் வகைகள் சத்தானது என வெளியான தகவலால் மீண்டும் இந்த மாற செக்கு எண்ணெய் வகைகளுக்கு மக்கள் திரும்ப தொடங்கினர்.
இதை பயன்படுத்தி மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் விற்பனை தொடங்கியது. ஆரம்பத்தில் நல்ல முறையில் தயாரித்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டாலும் சுகாதாரத்திற்காகத்தானே என நம்பி வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். நாட்கள் செல்ல செல்ல இதிலும் கலப்பட கும்பல் கைவரிசை காட்ட தொடங்கிவிட்டது. கன்னியாகுமரி மாவட்டம் கேரளா எல்லை பகுதிகளான பலுகள், மார்த்தாண்டம், களியக்காவிளை உள்ளிட்ட பல பகுதிகளில் செக்கு தேங்காய் எண்ணெய் என கூறி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பலுகள் பகுதியில் உள்ள செக்கு எண்ணெய் தயாரிக்கும் இடத்தில இருந்து கேரளா மற்றும் தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கு வி.எஸ். டிரேடர்ஸ் என்ற பெயரில் செக்கு தேங்காய் எண்ணெய் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆலையில் ஒரு லிட்டர் செக்கு எண்ணெய் 250 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்ததால் பொதுமக்கள் நேரடியாக உற்பத்தி செய்யப்படும் இடத்திற்கே வந்து வாங்கி செல்வது வழக்கம். மற்ற இடங்களில் இந்த செக்கு எண்ணெய் 400 ருபாய் முதல் 450 ரூபாய்க்கு விற்பனை செய்பட்டு வருகிறது.
இதேபோல பாறசாலையை சேர்ந்த சமூக ஆர்வலர் அருண் என்பவர் ஒரு லிட்டர் செக்கு தேங்காய் எண்ணெயை 250 ரூபாய்க்கு வாங்கி சென்றுள்ளார். மற்ற இடங்களில் கூடுதல் விலைக்கு விற்கும்போது இங்குமட்டும் எப்படி குறைந்த விலைக்கு விற்பனை செய்கின்றனர் என சந்தேகமடைந்து திருவனந்தபுரத்தில் உள்ள கேரளா உணவு பாதுகாப்பு துறை ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். ஆய்வகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தேங்காய் எண்ணையில் பல்வேறு கெமிக்கல் பொருட்கள் , மாமிச கொழுப்பு மற்றும் பாமாயில் கலந்து ஒரிஜினல் என்ற பெயரில் குறைந்த விலைக்கு விற்பனை செய்வது தெரிய வந்தது. இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலகத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் அதிகாரிகள் எண்ணெய் உற்பத்தி செய்யப்படும் இடத்தில் ஆய்வு செய்தபோது இந்த உற்பத்தி நிறுவனத்தை திமுகவை சேர்ந்த பலுகள் பேரூராட்சி தலைவி விஜியின் கணவரான விஜின் ஜெயபோஸ் மற்றும் இவரது தம்பி ஷாஜின் ஜெயபோஸ் இருவரும் சேர்ந்து நடத்திவரும் ஆலை என்பது தெரியவந்தது.
இதனால் ஆலை மீதும், உரிமையாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க முடியாமல் மாவட்ட முக்கிய திமுக பிரமுகர்கள் மூலம் நெருக்கடி வந்தது. ஆனால் இந்த செய்தி சமூக வலைதளங்களில் வெளியானதால் மாவட்ட அதிகாரி ஜெயராம் பாண்டியன் தலைமையில் சென்ற அதிகாரிகள் ஆய்வு செய்தபோது ஆலைக்கான உரிமம் ஏற்கனவே காலாவதி ஆகிவிட்டதும், லேபிள் ஓட்டத்தை 550 லிட்டர் தேங்காய் எண்ணெய் மறைத்து வைக்கப்பட்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ஆலைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். இந்த ஆலையிலிருந்து கலப்பட செக்கு தேங்காய் எண்ணெய் பல கோடிக்கு விற்பனை செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதேபோல பல தொழிற்சாலைகள் கலப்பட எண்ணெய்களை தயாரித்து விற்பதாகவும் புகார்கள் வந்துள்ளன. அதிகாரிகள் உரிய ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்