கர்­நா­ட­கா­விலும் டிஜிபி நிய­மன சர்ச்­சை: தமிழக நிரந்­தர டிஜிபி நிய­மனம் நடக்­குமா?

தமிழகத்தை போலவே கர்நாடக மாநிலத்திலும் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையாக ஜூனியர் அதிகாரிக்கு டிஜிபி பதவி உயர்வு வழங்கியதை எதிர்த்து நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கால் டிஜிபி பதவி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தமிழக டிஜிபி பதவியை பிடிக்க 2 டிஜிபிக்கள் அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழக டிஜிபியாக இருந்த சங்கர் ஜிவால் ஆகஸ்ட் மாதம் பதவி ஓய்வு பெற்ற நிலையில் நிரந்தர டிஜிபியை நியமிக்க மத்திய பணியாளர் தேர்வாணையத்துக்கு சீனியர் டிஜிபி பேனல் பட்டியல் அனுப்பபடவில்லை. தங்களுக்கு வேண்டப்பட்ட அதிகாரிக்கு டிஜிபி பதவியை வழங்க திட்டமிட்டு காய் நகர்த்திய முதல்வர் உள்வட்ட அதிகாரிகள் ஜூனியர் டிஜிபியான வெங்கட்ராமனை பொறுப்பு டிஜிபியாக நியமிக்க வைத்தனர்.

இதனால் கோபமடைந்த 8 சீனியர் டிஜிபிகளும் பொறுப்பு டிஜிபி பதவி ஏற்பு நிகழ்ச்சியையே புறக்கணித்து முதல்வருக்கும், டிஜிபி நியமனத்தை தடுத்த அதிகாரிகளுக்கும் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தனர். ஜூனியர் டிஜிபி என்பதால் இவரால் எந்த சீனியர் டிஜிபிக்களையோ, ஜூனியர் அதிகாரிகளை கூட அதிகார தொனியில் வேலை வாங்க முடியவில்லை.

இவர் பொறுப்பு டிஜிபி தானே? எத்தனை நாளுக்கு இவர் டிஜிபி பதவியில் இருக்க போகிறார் என்ற மனநிலை அனைத்து மாநகர ஆணையர்கள், மண்டல ஐ.ஜி.க்கள் முதல் எஸ்.பி.க்கள் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளின் மனநிலையாக உள்ளது.

இதற்கு ஏற்றாற்போல உச்சநீதிமன்றத்தில் பொறுப்பு டிஜிபி தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் நிரந்தர டிஜிபியை நியமிப்பதற்கான பட்டியலை தயாரித்து தமிழக அரசுக்கு அனுப்பி உடனடியாக டிஜிபியை நியமிக்குப்படி சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவை பிறப்பித்தது. இதன்படி நிரந்தர டிஜிபியை நியமிக்க வரும் 26-ம் தேதி மத்திய பணியாளர் தேர்வாணைய செயலாளர் தலைமையில் பேனல் கமிட்டி கூட்டம் நடத்தப்படுகிறது.

இந்த பேனல் கமிட்டி கூட்டத்தில் அடுத்த டிஜிபி யார் என்பதற்கான 3 பேர் பட்டியலை தயாரித்து தமிழக அரசிடம் வழங்கும். இந்த 3 பேர் பட்டியலில் இருந்துதான் ஒருவரை நிரந்தர டிஜிபியாக நியமிக்க அரசு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

தமிழகத்தில் சீனியர், ஜூனியர் பதவி பிரச்சினை எழுந்து­ள்­ள­ததைப் போலவே அருகில் உள்ள கர்நாடக மாநிலத்திலும் இந்த பிரச்சினை வெடித்துள்ளது. கடந்த காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் ஆட்சியின்போது பெங்களூரு மாநகர காவல் ஆணையராக இருந்தவர் அலோக் குமார். இவர் தற்போது போலீஸ் பயிற்சி பிரிவு டிஜிபி என்ற டம்மி பதவியில் இருந்து வருகிறார். இவர் பெங்களூரு ஆணையராக இருந்தபோது எதிர்க்கட்சி தலைவர்களின் போன்களை ஒட்டுக்கேட்டதாக பிரச்சினை எழுந்தது. ஆட்சி மாற்றத்திற்கு பிறகு இவர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இவர் அடுத்த டிஜிபி பதவி உயர்வுக்காக காத்துக்கொண்டிருந்தார். எதிர்பாராத விதமாக கடந்த ஆகஸ்ட் மாதம் துறை ரீதியிலான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவை எதிர்த்து அலோக்குமார் மத்திய பணியாளர் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

கடந்த 12-ம் தேதியன்று கர்நாடக மாநில அரசு பிறப்பித்த உத்தரவில் ஐபிஎஸ் அதிகாரி அலோக் குமாருக்கு ஜூனியர் அதிகாரிகளான அருண் சக்கரவர்த்தி, உமேஷ்குமார் ஆகிய இருவருக்கும் டிஜிபி அந்தஸ்து வழங்கி உத்தரவிட்டது. இது ஐபிஎஸ் அதிகாரி அலோக் குமாருக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்தது.

டிஜிபி அந்தஸ்தில் முதல் இடத்தில் தான் இருக்கும் நிலையில் ஜூனியர் அதிகாரிகளுக்கு டிஜிபி பதவி வழங்கி தன்னை அரசு பழிவாங்கிவிட்டதாக கூறி மீண்டும் மத்திய பணியாளர் தீர்ப்பாயத்தில், உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள், இந்த மனு தொடர்பாக கர்நாடக அரசு பதில் மனு அளிக்க கோரி வழக்கை வரும் 23-ம் தேதிக்கு ஒத்திவைத்து. அதுவரை கர்நாடக அரசு 2 ஜூனியர் அதிகாரிகளுக்கு வழங்கிய டிஜிபி பதவி உயர்வை நிறுத்தி வைக்கும்படி அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. அரசியல் காரணங்களுக்காக ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு பதவி உயர்வுக்கு வழங்குவது, முக்கிய பதவிகளை வழங்குவது எல்லா மாநிலங்களிலும் உள்ள பிரச்சினையாகிவிட்டது.

வரும் 26ம் தேதி டெல்லியில் புதிய டிஜிபியை நியமிப்பதற்கான பேனல் கமிட்டி கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் தற்போதைய டிஜிபி வெங்கட்ராமன் பெயரும் பேனல் பட்டியலில் இடம்பெற்றுள்ளதால் அவர் டெல்லி செல்வது சந்தேகம் என்கின்றனர். தலைமை செயலாளர் மட்டும் இந்த பேனல் கமிட்டி கூட்டத்தில் கலந்துகொள்ள வாய்ப்பு உள்ளது. இதில் நிரந்தர டிஜிபி நியமிப்பதற்கான பட்டியல் இறுதி செய்யப்பட்டு தலைமை செயலாளர் வசம் ஒப்படைக்கப்படும்.

இதில் இருந்து ஒருவரை முதல்வர் தேர்வு செய்யவேண்டும். இருப்பினும் தங்களுக்கு வேண்டிய அதிகாரிக்கு டிஜிபி பதவி வழங்க வேண்டும் என முதல்வர் உள்வட்ட அதிகாரிகள் காய் நகர்த்திவருவதால் சீனியரிட்டி பட்டியலை ஏற்பார்களா? அல்லது இந்த பட்டியலை வேண்டுமென்றே நியமனம் செய்யாமல் தாமதப்படுத்துவார்களா? என்ற கேள்விக்குறியும் எழுந்துள்ளது. நியமனம் செய்யாமல் தாமதப்படுத்தி மீண்டும் வழக்கு உச்சநீதிமன்றத்திற்கு சென்றாலும் பட்டியலை இறுதி செய்வதாக கூறி தாமதப்படுத்த வாய்ப்புள்ளது. ஜனவரி மாதம் வரை இந்த பட்டியலை தாமதப்படுத்தி வேண்டப்பட்ட அதிகாரிக்கு பொறுப்பு டிஜிபி பதவி வழங்க தீவிர முயற்சி நடந்து வருகிறதாம்.

அதே நேரத்தில் தற்போதைய சீனியரிட்டி பட்டியலின்படி சீமா அகர்வால், சந்தீப் ராய் ரத்தோடு ஆகிய இருவரில் ஒருவர் நிரந்தர டிஜிபி பதவியில் நியமிக்க வாய்ப்புள்ளது. இதில் சீமா அகர்வாலின் கணவரும், ஓய்வுபெற்ற டிஜிபியுமான ஏ.கே. விஸ்வநாதன் டிஜிபி நியமனத்தில் தீவிரமாக செயல்படுவதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வரும் 2026ம் ஆண்டு ஜூன் மாதம் சீமா அகர்வால் பதவி ஓய்வு பெற உள்ளதால் தற்போது டிஜிபியாக நியமிக்கப்பட்டால் 2 ஆண்டுகள் முழுமையாக டிஜிபியாக பதவி வகிக்க முடியும்.

எனவே எப்படியாவது சீமா அகர்வாலை டிஜிபியாக நியமிக்க திமுக வட்டாரத்தில் மேலிடம் மூலம் காய் நகர்த்துவதாக தெரிகிறது. இதேபோல அடுத்த இடத்தில் உள்ள சந்தீப் ராய் ரத்தோரும் ஏற்கனவே கடந்த ஆட்சிக்காலத்தில் முக்கிய பதவியில் இல்லாமல் திமுக ஆதரவாளர் என முத்திரை குத்தப்பட்டு ஓரம்கட்டப்பட்டதால், இந்த முறை தனக்கு டிஜிபி பதவி வழங்க வேண்டும் என முதல்வருக்கு நெருங்கிய உறவினர் மூலம் பதவியை பிடிக்க முயற்சித்து வருகிறார்.

இவர்களை ஓரங்கட்டி ஜனவரி மாதம் வரை டிஜிபியை நியமிக்காமல் பொறுப்பு டிஜிபி மூலம் காவல்துறையை தங்கள் முழு கட்டுப்பாட்டில் வைத்திருக்க முதல்வர் உள்வட்ட அதிகாரிகள் ரகசியமாக செயல்பட்டு வருகின்றனர். எனவே டிஜிபி பேனல் கமிட்டி முடிந்து பட்டியல் வந்தாலும் நிரந்தர டிஜிபி நியமனம் நடக்குமா? என்பது தற்போதுவரை கேள்விக்குறியாகவே இருப்பதாக டிஜிபி அலுவலக வட்டாரங்கள் கூறுகின்றன

Comments (0)
Add Comment