– சிவ.செல்லையா
போலீஸ் அதிகாரி சீருடையுடன் சமூக வலை தளங்களில் தங்கள் கருத்துக்களை வெளியிடக்கூடாது. குற்ற வழக்குகளின் தற்போதைய நிலை மற்றும் குற்றவாளிகள் குறித்த தகவல்களையும் எஸ்.பி. மற்றும் டிஐஜி உள்ளிட்ட அதிகாரிகள் டி.வி.க்களுக்கோ, சமூக வலைதளங்களுக்கோ பேட்டி அளிக்கக் கூடாது. தனியார் நடத்தும் நிகழ்ச்சிகளில் சீருடையுடன் பங்கேற்க கூடாது என காவல்துறை வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பறந்து போன கீழ்படிதல்
காவல்துறை என்றாலே கட்டுப்பாடான துறை என பெயர் பெற்றது. உயர் அதிகாரிகளின் உத்தரவை கண்மூடித்தனமாக எந்த எதிர்கேள்வியும் கேட்காமல் செயல்படுத்துவது காலம் காலமாக இருந்து வரும் நடைமுறை. ஆனால் கடந்த சில ஆண்டுகளாகவே காவல்துறையில் கட்டுப்பாடு, கீழ்படிதல் என்பதெல்லாம் காற்றில் பறந்துபோய்விட்டது என்கின்றனர் நேர்மை மற்றும் கடமை தவறாத அதிகாரிகள்.
பாவ புண்ணியம் பார்ப்பதில்லை
மேலிடத்திற்கு விசுவாசம்
ஆளும்கட்சி மேலிடம் அல்லது மேலிடத்துடன் மிகவும் நெருக்கமான நண்பர்கள் வட்டாரத்துடன் நெருக்கத்தை ஏற்படுத்திக்கொண்டு தங்களுக்கு வேண்டிய மாவட்டம், சரகங்களில் எஸ்.பி., டிஐஜி, ஐ.ஜி. பதவிகளைப் பெறுவதுடன் பதவி பெற்றுக் கொடுத்த விசுவாசத்திற்காக மேலிடம் விரும்பும் செயல்களோடு, மேலிடத்திற்கு நெருக்கமான நண்பர்கள் இடும் உத்தரவுகளையும் எந்த ஒரு பாவ புண்ணியமோ, காரண காரியங்கள், குற்றங்களே செய்யாவிட்டாலும் பொய் வழக்கு போட்டு சித்ரவதை செய்யவும் இந்த அதிகாரிகள் சிறிதும் தயக்கம் காட்டுவதில்லை.
இதன் பின்விளைவுகளைப்பற்றியோ, காவல்துறைக்கு தங்கள் செயல்களால் ஏற்படும் அவப்பெயர்களைப் பற்றியோ கவலைப்படாமல் தங்கள் விசுவாசத்தை பவர் சென்டர்களுக்கு பல மடங்காக காட்டி காவல்துறையையைம், உயர் அதிகாரிகளையும் தர்ம சங்கடத்தில் சிக்க வைப்பதே வாடிக்கையாக்கி கொண்டுள்ளனர்.
சீர்குலைந்த காவல் துறையின் கண்ணியம்
தமிழக காவல்துறை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு அரசியல் கட்சித் தலைவர் மற்றும் தொண்டர்களுடன் சமூக வலைதளத்தில் சவால், ஏட்டிக்கு போட்டியாக அறிக்கை விட்டு காவல்துறை உயர் அதிகாரிகளை முகம் சுழிக்கும் வகையிலும், இப்படியும் செய்யலாமா என அதிர்ச்சி அடையச் செய்தார் மாவட்ட உயர் அதிகாரி. சமூக வலைதளத்தில் இரு தரப்பும் போட்டுக் கொண்ட தகராறால் காவல்துறை அதிகாரிகளையே அரசியல் கட்சி தலைவர் தரக்குறைவாக விமர்சிக்கும் நிலைமை ஏற்பட்டது காவல்துறையின் கண்ணியத்தையும் களங்கப்படுத்தும் வகையில் அமைந்து பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மவுனமான டிஜிபி
இதனால் டென்ஷன் அடைந்த பல உயர் அதிகாரிகள் டிஜிபி சங்கர் ஜிவாலிடம் புகார் கூறியும் கூட துணையானவருக்கு நெருக்கமானவரோடு மிகுந்த நெருக்கம் காட்டியதால் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாமல் மவுனியாகவே இருக்க முடிந்தது டிஜிபியால். இதேபோல வட மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் பணியாற்றிய எஸ்.ஐ.க்கள், இன்ஸ்பெக்டர்கள் தங்கள் ஜாதி அடையாளத்தை வெளிப்படுத்தும் வகையில் சமுதாய தலைவரின் புகைப்படத்தோடு சமூக வலைதளங்களில் புகைப்படம் வெளியிட்டு தங்கள் பங்கிற்கு எரியும் தீயில் எண்ணெய் ஊற்றும் செயலில் ஈடுபட்டு வந்தனர்.
மேல் அதிகாரிகளை மிரட்டும் தொணி
மேலும் ஆளும் கட்சிக்கு நெருக்கமான பிரபல நிறுவனங்களின் நிகழ்ச்சிகளில் உயர் அதிகாரிகள் சீருடையுடன் பங்கேற்பது, துணைக்கு நெருக்கமான நபருடன் கிளப்புகளில் ஜாலியாக இருக்கும் புகைப்படங்களையும் சமூக வலைதளங்களில் அதிகாரிகள் வெளியிட்டு தங்களது ஆளும் கட்சி செல்வாக்கை காட்டி மேல் அதிகாரிகளை மிரட்டும் தொனியில் நடந்து கொண்டனர்.
எச்சரித்த டிஜிபி சுற்றறிக்கை
இந்த நிலையில்தான் டிஜிபி சங்கர்ஜிவால் மாநகர ஆணையர்கள், சரக ஐ.ஜி.க்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் மாவட்ட எஸ்.பி்.க்கள் மற்றும் இந்த பதவிக்கு மேல் கூடுதல் டிஜிபி அந்தஸ்தில் உள்ள காவல் ஆணையர்கள் வரை யாரும் காவல்துறை சீருடையுடன் சமூக
வலைதளங்களில் எந்த ஒரு கருத்தையும் வெளியிடக்கூடாது. இதே போல வழக்கு தொடர்பாகவோ, குற்றவாளிகள் தொடர்பான தகவல்களையோ சீருடையுடன் காவல்துறை அதிகாரிகள் டி.வி.க்கள், யூ-டியூப் சேனல்கள், சமூக வலைதளங்களில் பேட்டியளிப்பது சீருடைப்பணியாளர் சட்டப்படி தவறான நடைமுறையாகும் என டிஜிபி சுற்றறிக்கையில் எச்சரித்துள்ளார்.
டிஜிபியின் எச்சரிக்கையை பெரும்பான்மையான காவல்துறை அதிகாரிகள் வரவேற்றாலும் எதற்கும் “பணிய மாட்டோம்… நாங்கள் மேலிடத்துக்கு நெருக்கம்” என கூறிக்கொண்டு உயர் அதிகாரிகளையே துச்சமென கருதும் அதிகாரிகளை டிஜிபியின் இந்த சுற்றறிக்கை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருமா? என்பது தற்போது தமிழக காவல்துறையில் விடை தெரியாத கேள்வியாக தொக்கி நிற்கின்றது என்கின்றனர் காவல்துறையை உயிராக நேசிக்கும் காவல் அதிகாரிகள்.