தமிழகம் வந்த பிரதமர் மோடியிடம் தமிழகத்தை சேர்ந்த 13 அமைச்சர்கள் தங்களது துறைகளில் பெரிய அளவில் ஊழல் செய்து பல கோடி பணம் சம்பாதிருப்பதால் மத்திய புலனாய்வு அமைப்புகள் மற்றும் வருமான வரித்துறை மூலம் விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட அமைச்சர்களை தண்டிக்க வேண்டும். தமிழகத்தில் தீவிரவாத கும்பலின் நடவடிக்கைகள் அதிகரித்துவிட்டதாகவும் பிரதமரிடம் தமிழக பாஜக பொதுச்செயலாளர் முருகானந்தம் நேரடியாக மனு கொடுத்திருப்பது ஆளும்கட்சி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பீகார் மாநிலத்தில் நடந்த தேர்தலில் பாஜக கூட்டணி பெரும் அளவில் வெற்றிபெற்று ஆட்சியை பிடித்த நிலையில் பாஜக கட்சியின் கண்பார்வை தமிழக சட்டசபை தேர்தலை நோக்கி திரும்பி உள்ளது. தமிழகத்தில் மணல் கொள்ளை, டாஸ்மாக் கொள்ளை மற்றும் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்டவைகளில் நடந்த பல்வேறு ஊழல் சம்பவங்கள் தொடர்பாக வருமான வரித்துறை, சி.பி.ஐ., அமலாக்க துறை உள்ளிட்டவை சோதனை நடத்தி பல்வேறு முக்கிய ஆவணங்களை கைப்பற்றி உள்ளது.
இருப்பினும் டாஸ்மாக் ஊழல், மணல் கடத்தல் உள்ளிட்டவைகளில் அமலாக்கத்துறையின் மேல் நடவடிக்கைகளுக்கு உச்சநீதிமன்றம் தடை போட்டுள்ளதால் இந்த வழக்குகளில் மேல் நடவடிக்கை எடுக்கவும் சம்பந்தபட்ட அமைச்சர்கள், அதிகாரிகள், திமுக மேலிடம் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாமல் பாஜக தடுமாறி வருகிறது. இதற்கு காரணம் உச்ச நீதிமன்றத்தில் தற்போது இருக்கும் தலைமை நீதிபதி பாஜகவிற்கு எதிராக இருப்பதாக ஒரு கருத்து நிலவுகிறது. வரும் 23-ம் தேதியுடன் உச்சநீதிமன்ற நீதிபதி ஓய்வு பெறுவதால் இதன் பிறகு இந்த வழக்குகளில் உச்சநீதிமன்றம் கண்டிப்பாக தடையை நீக்கும். இதன் பிறகு திமுகவிற்கும், ஆளும்கட்சிக்கும் எதிராக தீவிர நடவடிக்கையை தொடங்குவது என மத்திய பாஜக திட்டமிட்டுள்ளது.
வரும் சட்டசபை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள அதிமுகவும் திமுக மேலிடம் மற்றும் ஆளும் அமைச்சர்கள் மீதான ஊழல்களை வெளிக்கொண்டு வந்தால் மட்டுமே பொதுமக்களை ஆளும்கட்சிக்கு எதிராக திருப்பிவிட முடியும். மேலும் பல்வேறு ஊழல்கள் மூலம் அமைச்சர்களும், ஆளும்கட்சி மேலிடமும் பல ஆயிரம் கோடியை சம்பாதித்து பதுக்கி வைத்துள்ளனர். இந்த பணத்தை கண்டிப்பாக தேர்தலின்போது ஓட்டுக்கு பணம் கொடுப்பது மற்றும் பல்வேறு முறைகேடுகளில் ஆளும்கட்சியினர் பயன்படுத்துவர். இந்த பணபரிமாற்றத்தையும், வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதையும் தடுக்க வேண்டும்.
டெல்லியில் மதுபான ஊழலில் சிக்கி அரவிந்த் கெஜ்ரிவால் தனது ஆட்சியை இழந்ததைப்போல தமிழகத்திலும் டாஸ்மாக்கில் பல ஆயிரம் கோடி ஊழல் நடந்திருப்பதுடன் இந்த பணத்தை மேலிடமும், குறிப்பிட்ட 2 அமைச்சர்களும் பதுக்கி வைத்துள்ளனர். மேலும் பத்திரப்பதிவு துறை, உணவு வழங்கல் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் பல ஆயிரம் கோடி ஊழல் நடந்துள்ளது. இதையும் மத்திய புலனாய்வு அமைப்புகள், வருமான வரித்துறை, அமலாக்கத்துறை மூலம் கண்டறிந்து கையும் களவுமாக நிரூபித்து ஆளும்கட்சியை சிக்க வைத்தால் மட்டுமே தேர்தலில் அதிமுக, பாஜக கூட்டணி வெற்றிபெற முடியும் என எடப்பாடி பழனிசாமியும் பாஜக மேலிடத்திற்கு நெருக்கடி கொடுத்து வருகிறார்.
இந்த நிலையில்தான் பீகார் மாநில தேர்தல் முடிந்த நிலையில் கோவையில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்க பிரதமர் மோடி வந்தார். இவரை வரவேற்க முதல்வர் ஸ்டாலின் செல்லாமல் புறக்கணித்தார். இதைப்பற்றி பாஜக கலவைப் படவில்லை. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, இந்நாள் தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் விமான நிலையத்தில் சந்தித்தனர்.
இவர்களோடு பாஜக மாநில செயலர்களில் ஒருவரான பிரதமர் மோடியை விமான நிலையத்தில் சந்தித்து மனு ஒன்றை கொடுத்தார். இவர் பிரதமரிடம் மனு கொடுத்தது பாஜக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இவர் எதற்காக பிரதமரிடம் மனு கொடுத்தார்? ஒருவேளை திருப்பூர் மற்றும் கோவை மாநகர நாள் திட்ட உதவிகள் கோரி மனு கொடுத்தாரா என கட்சியின் முக்கிய பிரமுகர்கள் கருதினர்.
ஆனால் பொதுச்செயலாளர் முருகானந்தம் தரப்பில் கேட்டபோது கூறிய தகவல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி ஆளும்கட்சி அமைச்சர்கள், முதல்வர் குடும்பத்தினர் ஊழல் குறித்தும், பல ஆயிரம் கோடி மோசடி நடந்திருப்பது குறித்தும் வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, சி.பி.ஐ. உள்ளிட்ட அமைப்புகள் மூலம் விசாரிக்க வேண்டும் என பிரதமரிடம் வலியுறுத்தியதை போலவே முருகானந்தம் கொடுத்த மனுவில் தமிழகத்தை சேர்ந்த 13 அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றசாட்டுகள் மற்றும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எந்த அளவிற்கு சீர்குலைந்து பொதுமக்களுக்கு பீதியை ஏற்படுத்தி உள்ளது என்பதற்கான ஆதாரங்களை கொடுத்ததாக தெரிகிறது.
இந்த தகவல் ஆளும் திமுக மேலிடத்திற்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காரணம் பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலைதான் திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் மீது ஊழல் புகார்களை கூறி அதற்கான ஆதாரங்களை வெளியிட்டார். இதன்பிறகு வந்த பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் ஆளும்கட்சி மீது குற்றச் சாட்டுகளை கூறினாலும் இதற்கான ஆதாரங்களை வெளியிடாததால் மக்களிடம் போய் சேரவில்லை என்ற கூறவேண்டும்.
இந்த நிலையில் 13 அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்கள் குறித்து ஆதாரங்களுடன் பிரதமரிடம் பொதுச்செயலாளர் முருகானந்தம் கொடுத்திருப்பது ஆளும்கட்சிக்கு மட்டுமின்றி, பாஜகவினருக்குமே கடும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
இந்த புகார் மனுவை பெற்றுக்கொண்ட பிரதமரும் மனுவை உதவியாளரிடம் கொடுத்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ள தாகவும் தெரிகிறது. இதுவும் ஆளும்கட்சி மேலிடத்திற்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளதாம். தற்போது அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களை தவிர கரூர் மாவட்ட முன்னாள் அமைச்சர்தான் கோவை மண்டல பொறுப்பாளராக இருப்பதால் இவர் அமைச்சராக இருந்த போது துறையில் நடந்த ஊழல்கள் குறித்த ஆதாரங்களையும் முருகானந்தம் குறிப்பிட்டுள்ளாராம். இதோடு உணவு வழங்கல் துறை, பத்திர பதிவு துறைகளில் அதிக அளவிலான ஊழல்கள் நடந்துள்ளது. மின்சார துறை, வனத்துறை, கனிமவல்துறை உள்ளிட்ட 13 துறை அமைச்சர்கள் பெரிய அளவிலான ஊழலில் ஈடுபட்டதற்காக ஆதாரங்களை பாஜக பொதுச்செயலாளர் முருகானந்தம் பிரதமரிடம் கொடுத்துள்ளாராம்.
சட்டசபை தேர்தல் நெருங்கும் இந்த வேலையில் பாஜக பொது செயலர் முருகானந்தம் பிரதமரிடம் ஊழல் புகார்களை ஆதாரங்களுடன் கொடுத்திருப்பது பெரும் பரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதோடு தமிழகத்தில் வெளிநாட்டு தீவிரவாத கும்பலுடன் தமிழகத்தை சேர்ந்த குறிப்பிட்ட அமைப்புகள் தொடர்பில் உள்ளனர்.
இவர்களுக்கு ஆளும் கட்சி கூட்டணியில் உள்ள சில தலைவர்கள் ஆதரவு அளிக்கின்றனர். வெளிநாட்டு தீவிரவாத கும்பலுடன் தொடர்பில் உள்ள தமிழக தீவிரவாத குழுக்கள் குறித்து தமிழக காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் சிறுபான்மை ஓட்டுக்களை பெறுவதற்காக அடக்கி வாசிக்கும்படி திமுக மேலிடம் காவல்துறை கையை கட்டிப்போட்டு வைத்துள்ளது. இதனால் தமிழகத்தில் தீவிரவாத குழுக்களில் நடவடிக்கைகள் அதிகமாகி விட்டது. எனவே மத்திய புலனாய்வு அமைப்புகள் மூலம் இந்த தீவிரவாத குழுக்களை கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பிரதமருக்கு கோரிக்கை வைத்துள்ளாராம் முருகானந்தம். இவரது புகார் மனு பிரதமருக்கே ஆச்சர்யத்தை வரவழைத்து விட்டதாம்.