தொடர் நெருக்கடி? மருத்துவமனையில் பொறுப்பு டிஜிபி

கரூர் உயிரிழப்பு சம்பவம், திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விவகாரம் மற்றும் நகராட்சி நிர்வாக துறையில் பணி நியமனம் மற்றும் டெண்டர் விட்டதில் பல ஆயிரம் கோடி மோசடி வழக்கில் அமலாக்கத்துறையின் நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களிலும், கோவையில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட சம்பவங்களில் பொறுப்பு டிஜிபியாக இருந்தாலும் தனது விருப்பப்படி நடவடிக்கை எடுக்காமல் ஜூனியர் அதிகாரிகள் எடுக்கும் முடிவுகளால் இத்தனை ஆண்டுகள் எந்த அவப்பெயரும் ஏற்படாமல் பணியாற்றிவந்த தனக்கு ஏற்பட்டுள்ள பல்வேறு நெருக்கடிகளால் ஏற்பட்ட மனஉளைச்சல் காரணமாக பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமன் உடல்நல குறைவால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது தமிழக காவல்துறை அதிகாரிகளை ஒட்டுமொத்தமாக கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

தமிழக காவல்துறை டிஜிபியாக பணியாற்றிவந்த சங்கர் ஜிவால் ஆகஸ்ட் மாதம் 31ம் நீதி ஓய்வு பெற்றார். வழக்கமாக சட்டம் ஒழுங்கு டிஜிபி ஓய்வுபெறுவதற்கு 6 மாதத்திற்கு முன்பே புதிய டிஜிபி நியமனத்திற்கான ஆவணங்களையும், புதிய டிஜிபியாக யார் தேர்வு செய்யப்படவேண்டும் என்பதற்காக சீனியர் டிஜிபிக்களின் பட்டியலையும் டிஜிபி அலுவலகம் தயாரித்து உள்துறை செயலாளர், தலைமை செயலாளர் மூலம் மத்திய பணியாளர் தேர்வாணையத்திற்கு அனுப்பி வைக்கப்படுவது வழக்கம். ஆனால் இந்த வழக்கத்திற்கு மாறாக புதிய டிஜிபியை தேர்வு செய்வதற்கான சீனியர் டிஜிபிக்களின் பட்டியலை சங்கர்ஜிவால் ஓய்வு பெறுவதற்கு ஒரு நாள் முன்புதான் மத்திய பணியாளர் தேர்வாணையத்திற்கு அனுப்பி வைத்துவிட்டு பொறுப்பு டிஜிபியாக டிஜிபி சீனியரிட்டி பட்டியலில் 9-வது இடத்தில் இருந்த நிர்வாக பிரிவு டிஜிபி வெங்கட்ராமனை தமிழக அரசு நியமித்தது. இதன் பின்னணியில் காவல்துறையில் முக்கிய இடங்களில் பணியாற்றும் 3 ஐ.பி.எஸ். அதிகாரிகளும், ஐ.ஜி. அந்தஸ்திலான சில ஐ.பி.எஸ். அதிகாரிகளும் இருந்ததாக கூறப்­பட்­ட­து.

இது குறித்து டிஜிபி அலு­வ­லக வட்­டா­ரங்கள் கூறி­ய­தா­வ­து­:–
தற்போதைய சீனியர் டிஜிபி பட்டியலின்படி போலீஸ் அகாடமி டிஜிபியாக உள்ள சந்தீப்ராய் ரத்தோர்தான் புதிய டிஜிபியாக நியமிக்கப்பட்டி­ருக்க வேண்­டும். ­ஆ­னால் அவ­ர­து நியமனத்தை விரும்பாத 3 உயர் அதிகாரிகளும், சில ஐ.ஜி. அந்தஸ்திலான அதிகாரிகளுடன் சேர்ந்து முதல்வர், துணை முதல்வரிடம் போட்டுக்கொடுத்து சந்தீப் ராய் ரத்தோருக்கு கிடைக்க வேண்டிய பதவியை தட்டி பறித்து விட்­ட­னர்.

பொறுப்பு டிஜிபியாக நியமிக்கப்பட்ட வெங்கட்ராமன் சி.பி.ஐ. உள்ளிட்ட பல்வேறு மத்திய அரசு பணிகளிலும், லஞ்ச ஒழிப்புத்துறை உள்ளிட்ட தமிழக அரசின் முக்கிய பிரிவிலும் பணியாற்றி மிகுந்த அனுபவம் வாய்ந்தவர். நேர்மையான அதிகாரியான இவர் எந்த அதிகாரியுடனும் மோதல்போக்கை கடை பிடிக்காமல் நல்ல பெயர் எடுத்தவர். இவரை பொறுப்பு டிஜிபி பதவிக்கு நியமிக்க 3 முக்கிய அதிகாரிகளும் கேட்டபோதே இந்த பதவியை ஏற்க மறுத்துள்­ளார்.

காரணம் சீனியர் டிஜிபிக்கள் இந்த பதவிக்கு காத்திருக்கும்போது தான் இந்த பதவியை ஏற்றால் பல்வேறு சிக்கல்களை சந்திக்க நேரிடும். சீனியர் அதிகாரிகளின் அதிருப்தியோடு மூவர் கூட்டணியின் அதிகார துஸ்பிரயோகங்களுக்கு கட்டுப்பட்டு டம்மி டிஜிபியாகவே தான் பணியாற்ற நேரிடும் என்பதை முன்கூட்டியே உணர்ந்துதான் இந்த பதவிக்கு வர மறுப்பு தெரிவித்தார். வலுக்கட்டாயமாக இந்த பதவியை திணித்த மூவர் கூட்டணி பொறுப்பு டிஜிபி எண்ணியபடியே காவல்துறையின் ஒட்டுமொத்த அதிகாரங்களையும் தாங்களே எடுத்துக்கொண்டு இஷ்டம்போல செயல்பட தொடங்கினர். பொறுப்பு டிஜிபியாக வெங்கட்ராமன் பதவி ஏற்ற நாளிலேயே சீனியர் டிஜிபிக்கள் 8 பெரும் ஒட்டுமொத்தமாக இவரது பதவி ஏற்பு விழாவை புறக்கணித்து முதல் நாளிலேயே சீனியர் அதிகாரிகள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியது வெங்கட்ராமனை மிகவும் தர்மசங்கடத்திற்கு ஆளாக்கியது.

இதன் பின்னர் டிஜிபி அலுவலகத்தில் நடந்த காவலர் வீரவணக்க நாளின்போதும் சீனியர் டிஜிபிக்கள் விழாவில் பின்வரிசையில் நின்று பொறுப்பு டிஜிபிக்கு எதிராக தங்கள் அதிருப்தியை வெளிப்படையாக காட்டிய போதும் வெங்கட்ராமன் மிகவும் தர்மசங்கடத்தில் பதட்டத்துடன் நின்று கொண்டிருந்ததை சீனியர் ஐ.பி.எஸ். அதிகாரிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.

பொறுப்பு டிஜிபி பதவி ஏற்ற ஒருசில வாரத்தில் கரூரில் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி அப்பாவி பொதுமக்கள் 41 பேர் தங்கள் உயிரை இழக்க நேரிட்டது. நடிகர் விஜய் குறிப்பிட்ட நேரத்தில் பிரச்சார இடத்திற்கு வராததால் இந்த உயிரிழப்பு சம்பவங்கள் நடந்தததாக ஒட்டுமொத்த பழியையும் விஜய் மீது ஆளும்கட்சி தரப்பு போட்டாலும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கூடியிருந்த இடத்தில் வெறும் 336 போலீசாரை மட்டுமே ஆளும்கட்சி நெருக்கடியால் பாதுகாப்பிற்கு நிறுத்தியதுதான் முக்கிய காரணம் என்பது அப்பட்டமாக தெரியவந்தது.

இந்த சம்பவம் நடந்ததும் டிஜிபி வெங்கட்ராமனை சம்பவ இடத்திற்கு செல்ல விடாமல் தடுத்ததோடு, இந்த சம்பவம் குறித்து தலைமைச் செயலகத்தில் வருவாய்த்துறை செயலாளர் அமுதா தலைமையிலான குழு பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளிக்கும் போது டிஜிபியை முன்வரிசையில் உட்காரவிடாமல் பின் வரிசையில் அமர வைத்துவிட்டு கூடுதல் டிஜிபி டேவிட்சன் ஆசீர்வாதத்துடன் வருவாய் துறை செயலாளர் அமுதா அளித்த பேட்டியால்தான் இந்த வழக்கே சி.பி.ஐ. விசாரணைக்கு கொண்டு செல்ல காரணமானது.

இந்த விசாரணையை ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி அஜய் ரதோக்கி மேற்பார்வையில் நடைபெறும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு விசாரணை கிட்டத்தட்ட முடிவுபெற உள்ளது. இந்த நிலையில்தான் சி.பி.ஐ. விசாரணையை தடை செய்ய வேண்டும் என தமிழக அரசின் சார்பில் மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி மேற்பார்வையில் விசாரணை நடப்பதால் உச்சநீதிமன்றம் இதில் தலையிடாது என டிஜிபி கருத்து கூறியும் மூவர் கூட்டணி ஆலோசனையில் அரசு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது டிஜிபி வெங்கட்ராமனை காயப்படுத்தியது.

இதேபோல நிரந்தர டிஜிபியை நியமிக்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்ற கிளை மற்றும் உச்சநீதிமன்றங்களில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் அடிப்படையில் புதிய டிஜிபியை நியமிக்க மத்தியப் பணியாளர் தேர்வாணையம் கூட்டத்தை கூட்டி 3 சீனியர் டிஜிபிக்களின் பட்டியலை அனுப்பி இந்த பட்டியலில் இருந்து ஒருவரை நியமிக்கும்படி 2 மாதத்திற்கு முன்பே கடிதம் அனுப்பியது. இதை ஏற்காமல் தமிழக அரசு மத்திய பணியாளர் தேர்வாணையத்துக்கு மீண்டும் கடிதம் அனுப்பியபோதும் அதை ஏற்காமல் பழைய பட்டியலை தேர்வாணையம் அனுப்பியது.
இந்த பட்டியலில் இருந்த சந்தீப் ராய் ரத்தோரை நிரந்தர டிஜிபியாக நியமிப்பதுதான் நல்லது என டிஜிபி வெங்கட்ராமன் தலைமை செயலாளரிடம் தெரிவித்தும் மூவர் கூட்டணி மறுத்து உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் மனுதாக்கல் செய்ய வைத்தது. அதோடு சீனியர் டிஜிபிக்கள் 3 பேர் மீதும் பல்வேறு குற்றசாட்டுகளை கூறி அவர்களை பட்டியலில் இருந்து நீக்கிவிட்டு புதிய பட்டியலை அனுப்பும்படி மனு தாக்கல் செய்ததும் பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமனுக்கு கடும் அதிருப்தியையும், மன உளைச்சலையும் ஏற்படுத்தியது.

கோவையில் காதலனுடன் பேசிக்கொண்டிருந்த இளம் பெண்ணை 3 பேர் கும்பல் கடத்தி சென்று விடிய விடிய பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில் கோவை மாநகர காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுக்கவில்லை. இதை கோவை மாநகர ஆணையர் சரவணா சுந்தரே பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஒத்துக்கொண்டு பேட்டியளித்த சம்பவத்தினால் அதிர்ச்சி அடைந்த டிஜிபி வெங்கட்ராமன் அவரை இடமாற்றம் செய்யும்படி கோரினார்.

ஆனால் மூவர் கூட்டணியில் உள்ள முக்கிய அதிகாரிக்கு மிகவும் நெருக்கம் என்பதால் அவரை இடமாற்றம் செய்ய மறுத்து விட்டனர். அதோடு முதல்வரை நேரில் சந்தித்து பேச விரும்புவதாக முதல்வரின் உதவியாளரிடம் கேட்டபோது முக்கியமான விஷயமாக இருந்தால் தன்னிடம் கூறலாம். தான் முதல்வரிடம் தெரிவிப்பதாக கூறி முதல்வரை டிஜிபியே சந்திக்க விருப்பம் தெரிவித்தும் மறுப்பு தெரிவித்தது மேலும் மன உளைச்சலை ஏற்படுத்தியது. இதன் உச்சகட்டமாக சமீபத்தில் நடந்த இரண்டு சம்பவங்கள் டிஜிபி வெங்கட்ராமனை கடும் மன உளைச்சலுக்கு ஆளாக்கிவிட்டது என்றே கூறலாம்.

நகராட்சி நிர்வாக துறையில் கடந்த ஆண்டு நடந்த பணி நியமனத்தில் கிட்டத்தட்ட ரூ. 888 கோடி லஞ்சமாக அமைச்சர் மற்றும் உதவியார்கள், குடும்பத்தினர், அதிகாரிகள் வசூலித்ததற்கான முழு ஆதாரங்களுடன் அமலாக்கத்துறை டிஜிபிக்கு கடந்த நவம்பர் மாதம் கடிதம் ஒன்றை அனுப்பியது. இந்த ஆதாரங்கள் அடிப்படையில் அமைச்சர் உள்ளிட்டோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை மூலம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் எனவும் அமலாக்கத்துறை கோரியிருந்தது.

ஆனால் ஆளும்கட்சி தரப்போ இந்த கடிதத்தை கிடப்பில் போட்டு எந்த நடவடிக்கையும் எடுக்கவிடாமல் டிஜிபியை முடக்கி போட்டியிட்டது. ஆனால் அமலாக்கத்துறை கடந்த சில நாட்களுக்கு முன்பு மீண்டும் நினைவூட்டல் கடிதம் அனுப்பியதோடு இந்த துறையின் டெண்டர் விட்டதில் ஆயிரத்து 20 கோடி ரூபாய் லஞ்சமாக வசூலிக்கப்பட்டதற்கான ஆவணங்களையும் அனுப்பி, தாங்கள் கொடுத்த ஆதாரங்கள் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்யாவிட்டால் தலைமை செயலாளர், காவல்துறை டிஜிபி, லஞ்ச ஒழிப்பு துறை இயக்குனர் ஆகியோரும் இந்த ஊழலுக்கு துணைபோவதாக அமலாக்கத்துறை கருத நேரிடும் என நேரிடையாக டிஜிபிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியது.

ஏற்கனவே சி.பி.ஐ. உள்ளிட்ட பணிகளில் பணியாற்றிய முன் அனுபவம் இருந்ததால் இந்த மனுவை லஞ்ச ஒழிப்பு துறைக்கு அனுப்பி பெயரளவில் வழக்கு பதிவுசெய்துவிடலாம் என கூறியும் மேலிடம் கோபித்துக் கொள்வார்கள் என கூறி இவருக்கு கீழே பணியாற்றும் அதிகாரிகள் டிஜிபி வெங்கட்ராமனை முடக்கிப் போட்டதன் விளைவே அமலாக்கத்துறையின் இந்த நினைவூட்டல் கடிதத்திற்கு காரணம். இதன் பாதிப்பை தான்தான் நேரடியாக சந்திக்க நேரிடுமோ என்ற மனவேதனையில் இருந்தாராம் டிஜிபி வெங்கட்ராமன்.

இதைவிட திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் கார்த்திகை தீபம் ஏற்றம் மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமி தான் பிறப்பித்த உத்தரவை டிஜிபி ஆலோசனை பெறாமலேயே தடுக்கும்படி மதுரை மாநகர ஆணையர் லோகநாதனுக்கு 2 உயர் அதிகாரிகள் பிறப்பித்த உத்தரவால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைக்கு ஆளாக வேண்டியதாகி விட்டதே என்ற எண்ணமும் டிஜிபி வெங்கட்ராமனை கடும் மன உளைச்சலுக்கு ஆளாக்கி விட்டதாக கூறப்படுகிறது.

இந்த மன உளைச்சல்களில் இருந்த டிஜிபி வெங்கட்ராமனுக்கு நேற்று காலை திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதால் கிண்டியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு நடத்திய மருத்துவ பரிசோதனையில் டிஜிபி வெங்கட்ராமனுக்கு மாரடைப்பு ஏற்பட்டதற்கான அறிகுறி தென்பட்டதால் மேல்சிகிச்சைக்கு ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டு மீண்டும் உடல் பரிசோதனை நடந்தது.

இதில் டிஜிபி வெங்கட்ராமனுக்கு இத­யக்­கு­ழாய்­களில் 3 அடைப்புகள் இருப்பதால் ஸ்டண்ட் பொறுத்த வேண்டும் என மருத்துவர்கள் ஆலோசனை கொடுத்து அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்துவிட்டனர். இதனால் வரும் 16-ம் தேதி வரை விடுமுறை அளிக்கும்படி டிஜிபி உள்துறை செயலாளருக்கு கடிதம் அனுப்பிவிட்டார்.

நேர்மையான இந்த அதிகாரிக்கு ஏற்பட்ட பணிச்சுமை காரணமாகவும், பல்வேறு பிரச்சினைகள் காரணமாகவே இவர் இந்த நிலைமைக்கு ஆளானதாக ஐ.பி.எஸ். அதிகாரிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். பொதுவாக காவல்துறையில் பணிச்சுமை அதிகம் என்பதோடு உயர் அதிகாரிகளின் கடும் நெருக்கடி காரணமாக காவலர்கள் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவங்கள் நடந்துள்ளன.

கோவை மாநகர டிஐஜியாக இருந்தவரே பணி சுமை காரணமாக துப்பாக்கியால் தனக்குத்தானே சுட்டுக்கொண்டு உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவங்களும் உண்டு. ஆனால் காவல்துறைக்கு தலைமை பொறுப்பு வகிக்கும் அந்தஸ்தில் இருந்தும் சுய விருப்பு வெறுப்புகளுக்காக செயல்படும் சில காவல்துறை அதிகாரிகள் கொடுத்த நெருக்கடியால் உடல்நலம் பாதிக்கப்பட்ட சம்பவம் காவல்துறை அதிகாரிகளை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. உடல்நல குறைவு காரணமாக சிகிச்சை பெரும் நிலையில் மீண்டும் பொறுப்பு டிஜிபி பதவியை வெங்கட்ராமன் ஏற்பாரா என்பது சந்தேகமே என்கிறது டிஜிபி அலுவலக வட்டாரங்கள்….

Comments (0)
Add Comment