முதல்வர் ஆய்வு: அதிர்ச்சியில் அதிகாரிகள்

-சிவ. செல்லையா –

தமிழகத்தில் தற்போது நடக்கும் சட்டம் -ஒழுங்கு பிரச்னை, அண்ணா பல்கலை வளாகம் மற்றும் ஐஐடி வளாகத்தில் மாணவிகளுக்கு எதிரான பாலியல் வன்முறை உள்ளிட்ட சம்பவங்கள், காவல்துறை அதிகாரிகளுக்கான பதவி உயர்வில் ஏற்பட்டுள்ள பல்வேறு குளறுபடிகள் தொடர்பாக முதல்வர் தலைமையில் நாளை (30-ம் தேதி) தலைமைச் செயலகத்தில் நடக்கும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கும் அதிகாரிகள் பதட்டத்தில் உள்ளனர்.

தமிழகத்தில் சமீப காலமாக போதைப்பொருள் மாநகரம், நகரம் மட்டுமின்றி கிராமங்களில் கூட பரவி வருங்கால இளைய தலைமுறையை சீரழித்து வருகிறது என்றே கூறலாம். போதைப் பொருள் விற்பனையைத் தடுக்க மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு, போதைத் தடுப்புப் பிரிவு போலீசார் தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டாலும் போதை கடத்தல் கும்பல் போலீசாரின் கண்களில் மண்ணைத் தூவியும், சில இடங்களில் போலீசாரின் ஆசியோடும் போதை மருந்துகளை கடத்தி தாராள புழக்கத்தில் விட்டுள்ளதும் மறுக்க முடியாத உண்மை.

நவீன கலாசாரமாக பப், நவீன பார்கள் என்ற பெயரில் நடத்தப்படும் இடங்களில் போதை ஊசிகள், கொக்கைன், மெத்த பெட்டமைன், வலி நிவாரண மாத்திரைகள் தாராளமாக புழக்கத்தில் உள்ளன. இவற்றை போலீசாரால் தடுக்கவே முடியாத நிலையில் போலீசார் செய்வதறியாது திகைத்துப்போய் உள்ளனர்.

காரணம் இந்த பப்புகள், நவீன பார்களை நடத்துவது ஆளும்கட்சி பிரமுகர்களின் வாரிசுகள் பினாமி பெயர்களில் நடத்துவதுதான். மேலும் இந்த போதை பார்ட்டிகளில் பங்கேற்பதும் அரசியல் விஐபிக்கள், விவிஐபிக்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளின் வாரிசுகள்தான். இதனால் இந்த பார்கள் மற்றும் பப்புகளில் போலீசார் திரும்பிப் பார்க்க முடியாத அளவிற்கு மேலிட தலையீடு உள்ளது.

பெரும்பாலான அரசியல் விஐபிக்கள், விவிஐபிக்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளின் வாரிசுகள் ஆண், பெண் பேதமின்றி கலந்துகொடண்டு போதைப்பொருளுக்கு அடிமையாவது பல மடங்காக அதிகரித்துவிட்டது. கல்லூரி மாணவர்கள் மட்டுமின்றி, பள்ளி மாணவர்களும் போதை ஊசி, மாத்திரைகள், கஞ்சா உள்ளிட்டவைகளுக்கு அடிமையாகியிருப்பதுதான் வேதனைக்குரியது.

போதை மருந்து வாங்க பணம் இல்லாதபோது பணத்திற்காக தாய் மற்றும் அக்கம்பக்கத்தினரின் நகைகளை பறித்துச் செல்வதும், நகைக்காக கொலை செய்யும் சம்பவங்களும் அதிகரித்து விட்டன. மது போதைக்கு அடிமையாவதை விட இந்த போதைப்பொருட்களுக்கு இளைய தலைமுறை அடிமையாவதும் பல மடங்கு அதிகரித்துவிட்டது. இதனால் சமீப காலமாக கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

இதே போல இதுவரை இல்லாத வகையில் ஐபிஎஸ் அதிகாரிகள் முதல் கீழ்மட்ட போலீசார் வரை சீனியாரிட்டி வழங்குவது, பதவி உயர்வு உள்ளிட்ட பிரச்னைகள் அதிகரித்து நீதிமன்றங்களை நாடுவதும் அதிகரித்துவிட்டது. இதனால் கீழ்மட்டம் முதல் உயர் அதிகாரிகள் வரை பெரும்பாலானோர் அரசின் மீது கடும் அதிருப்தியில் உள்ளனர். சட்டம்- ஒழுங்கு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து முதல்வர் தலைமையில் தலைமைச் செயலகத்தில் இன்று (30-ம் தேதி) டிஜிபி, சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி, உளவுத்துறை ஐ.ஜி., துறை தலைவர்கள் தலையில் நடத்தப்படும் ஆலோசனை கூட்டத்தில் இப்பிரச்னைகள் குறித்து ஆலோசனை நடத்தப்படும் என தெரிகிறது.

முதல்வரிடம் உளவுத்துறை சார்பில் அளிக்கப்படும் பல்வேறு பிரச்னைகள் குறித்து முதல்வ்வர் கண்டிப்பாக விளக்கம் கேட்பார் என்பதால் பல துறை தலைவர்கள் சற்று பீதியில்தான் உள்ளனர். இந்த கூட்டம் முடிந்த பிறகு சரிவர செயல்படாத மாநகர கமிஷனர்கள், கூடுதல் டிஜிபிக்கள், ஐ.ஜி.க்கள், மாவட்ட எஸ்.பி.க்கள் கூண்டோடு மாற்றப்பட்டு அனுபவம் வாய்ந்த ஓரம் கட்டப்பட்ட திறமையான அதிகாரிகள் நியமிக்கப்படலாம் என்ற தகவலும் இந்த உயர் அதிகாரிகளை பீதியடையச் செய்துள்ளது.

அதே் நேரம் பாரபட்சம் இல்லாமல் உளவுத்துறை உண்மையான தகவல்களை முதல்வரிடம் கொண்டுபோய் சேர்க்க வேண்டும் என்பதும் நேர்மையான காவல்துறை அதிகாரிகளின் எதிர்பார்ப்பு. சமீபத்தில்கூட திருவள்ளூர் மாவட்டத்தில் காதல் விவகாரத்தில் கூடுதல் டிஜிபி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்ய உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்ட சம்பவம் குறித்து முதல்வரிடம் உரிய முறையில் கொண்டு செல்லாமல் காவல்துறையே ஒட்டுமோத்தமாக தலைகுனிய நேரிட்ட சம்பவம் முன்கூட்டியே முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

எனவே முதல்வர் தலைமையில் பெயரளவில் ஆய்வுக்கூட்டம் நடத்தாமல் உண்மை நிலவரங்களை விவரித்து மீண்டும் நடக்காமல் தடுப்பதில் உளவுத்துறையின் பங்கு மிக முக்கியம். இன்னும் ஓராண்டில் சட்டசபை தேர்தல் வரவுள்ள நிலையில் முதல்வர் தலைமையில் நடக்க உள்ள காவல்துறை ஆய்வுக்கூட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது….

Comments (0)
Add Comment